Tuesday, September 1, 2015

திரைப்பட வியூகத்தில் வளரும் நாவல்
வ சி க ர ப்  பொ ய் க ள்

எஸ். சங்கரநாராயணன்
த்தியாயம் 12
கடந்த காலம். வங்கி. மேனேஜர் கிருஷ்ணராஜ் எப்பவுமே சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குத் தவறாமல் வருகிறவர். உள்ளே நுழையும் போதே வெளியே காத்திருக்கும் அந்தத் துரு துரு பெண்ணைப் பார்த்தபடியே நுழைகிறார். இந்த அதிகாலையில் வங்கியில் இவளுக்கு என்ன தேவை இருக்கிறது, என அவருக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. பணம் தேவை என்றால் கூட ஏடியெம் இருக்கிறது வெளியே. எடுத்துக் கொண்டு போய்ட்டே இருக்கலாம்.
அவளைத் தாண்டிப போகையிலேயே ஒரு நறுமணம் அவரைச் சூழ்கிறது. அதை அனுபவித்து மூச்சிழுத்தபடியே தன் இருக்கைக்கு வருகிறார். வந்து தன் இடத்தில் அமர்ந்து மேசைக் கம்பியூட்டரை ஆன் செய்கிறார். பிறகு எழுந்து போய் தன் அறை விளக்குகளை, மின் விசிறியைப் போடப் போகிறார். முதுகுப் பக்கமாய் அந்த வாசனை மீண்டும் எழுகிறது. ஹா… என அனுபவிக்கிறார். சிரிப்புடன் திரும்புசிறார். அறைக்கு வெளியே அந்தப் பெண்.
“எஸ்?“
“குட் மார்னிங் சார்.“
“வெரி குட் மார்னிங்.“
“உள்ள வரலாமா சார்.“
“வாங்க வாங்க…“ என மேசைக்கு இந்தப் பக்க இருக்கையைக் காட்டுகிறார். “YES. WHAT YOU CAN DO FOR ME?“
அவள் அழகாகச் சிரிக்கிறாள். “நீங்க வேடிக்கையா இப்பிடிச் சொன்னாலும்… உங்க கேள்வியும், எதிர்பார்ப்பும் சரியானது தான் சார்.“
“I DON’T GET YOU.’’
அவள் மேலும் சிரிக்கிறாள். “ஸ்வீட் எடுத்துக்கோங்க.“ அவள் ஒரு இனிப்புப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.
“என்ன விசேஷம்மா.“
“இன்னுமா GUESS பண்ண முடியல உங்களால?“
“முடியுது. ஆனால்…“
“ஆனால் என்ன சார்?“
“நான் எதாவது தப்பா GUESS பண்ணிட்டால்?“ என்று சிரிக்கிறார். “அதுனால… WHY TO TAKE CHANCES? நீயே சொல்லிடு…“
“இந்த பிரான்ச்ல எனக்கு வேலை போட்டிருக்காங்க சார். இன்னில இருந்து… I AM AT YOUR SERVICE“ என்றபடி அவள் ஒரு  பணி ஆணைக் காகிதத்தை அவரிடம் தருகிறாள்.
“ஓ.? மகா லெட்சுமி?“
“இல்ல சார். நான் எம் மகா லெட்சுமி.“
“ஓ“
“இல்ல சார் எம்.“
“ம். அதை விடும்மா. நேத்தே எனக்கு FAX வந்தது. இப்ப நல்ல நேரம் தானா?“
“உங்ககிட்ட வேலை செய்ய வந்திருக்கேனே, அதுவே எனக்கு நல்ல நேரம் தான் சார்.“
“முதல் நாள். நல்லாப் பேசறே. இப்படிப் பேசற எத்தனையோ ஆள் என்னைக் கவுத்தி யிருக்காங்க.“
“நான்?“
“முதல்நாளே கவுத்திட்டே“ என்று சிரிக்கிறார்.
“நான் அப்படி இல்லை சார்…“ என்கிறாள் மகா லெட்சுமி. “என் சீட்….“
“வேலைக்கு உன் ஆர்வத்தை நான் பாராட்டறேன். இது கால காலத்துக்கும் தொடருமா தெரியல்ல… பரவால்ல. அதைப்பத்தி இப்ப பேச வேண்டாம். இனிதான் நம்ம ஸ்டாஃப் ஒவ்வொருத்தரா வருவாங்க.“
“மணி இன்னும் அஞ்சி நிமிஷம் இருக்கே சார்.“
“நீ சீக்கிரம் வந்திட்டியே?“
“நான் இடம் தேடி கண்டுபிடிச்சி வர வேண்டாமா சார்?“
“நாளைலேர்ந்து லேட்டா வருவேன்றியா?“
“அப்படி இல்லை சார்.“
“வெரி குட்.“
“மத்தவங்களைப் பாத்துட்டு, அதும்படி நானும் வருவேன்“ என திரும்பவும் மயக்கத் தக்க அளவில் ஒரு சிரிப்பு சிரிக்கிறாள்.
காதில் குண்டலங்கள். கழுத்தில் அலங்காரமான டிசைனில் நெக்லெஸ். கண்ணுக்கு மை தீட்டி யிருந்தாள். அழகான பெண் இவள், என நினைத்தார். அழகாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவள், என்று நினைத்தார். எல்லாரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளும் பாந்தமான குணம் உள்ள பெண் என நினைத்தார். தான் எந்தப் பெண்ணைப் பற்றியும் பார்த்த முதல் பார்வையில் இவ்வளவு  யோசித்ததே கிடையாது, என நினைத்துச் சிரித்துக் கொண்டார்.
பியூன் ரத்தினம் உள்ளே வருகிறான். கிருஷ்ணராஜ் அவனிடம் “ராதிகா வந்துட்டாளா?“ என்று கேட்கிறார்.
“வந்தாச்சி.“
“கூப்பிடுய்யா.“
ராதிகா வருகிறாள். “இவங்க…“
“இவன்னே கூப்பிடலாம் சார்“ என்று சிரிக்கிறாள் மகா லெட்சுமி. மயக்கத்தக்க சிரிப்பு.
“இவ…“
“மகா லெட்சுமி?“ என்று ஒற்றை விரலை நீட்டிக் கேட்கிறாள் ராதிகா. இவளது ஒயிலைப் பார்த்ததும் அவளுக்கே ஒரு பெண்மையின் அலட்டல் வருகிறாப் போலிருந்தது.
“ஆமாம் மேடம்.“
“நான் ராதிகா. இங்க ஹொம் லோன்ஸ் அத்தோட கிளயரிங் பார்க்கிறேன்…“ என்று கையைப் பிடித்துக் கொள்கிறாள். “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே…“ என பிரியமாய் அவள் தோளைத் தொடுகிறாள்.
“தேங்ஸ் மேடம்.“
“மேடம் வேணாம். ராதிகா. எங்க அப்பாம்மா எதுக்குப் பேர் வெச்சிருக்காங்க? கூப்பிடத்தானே?“
“அப்பாம்மா வீட்ல உங்களை எப்பிடிக் கூப்பிடுவாங்க?“
“அது எதுக்கு?“
“சொல்லுங்க.“
“சுச்சுக் குட்டி… ஒவ்வொருவருக்கும் வீட்ல செல்லப் பேர் ஒண்ணு உண்டே. அதெல்லாம் கூப்பிடக் கூடாது“ என்கிறாள் ராதிகா. இருவரும் கலகலவெனச் சிரிக்கிறார்கள்.
மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்க்கிறார் மேனேஜர். ராதிகா அவரைப் பார்த்தபடியே “எங்க மேனேஜர் ரொம்ப கண்டிப்பு“ என்கிறாள்.
“அப்படியா சார்?“ என்று மகா லெட்சுமி திரும்பி அவரைப் பார்க்கிறாள். “அதெல்லாம் முதல் நாளே எதுக்கு?“
“உங்களைப் பத்தி நான் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கேன் சார்.“
“அப்படியுமா இந்தக் கிளைக்கு வந்தே?“ என்கிறாள் ராதிகா. மேனேஜர் முறைக்கிறார். “JUST KIDDING’’ என்று சிரிக்கிறாள் ராதிகா.
“என்னன்னு கேள்விப்பட்டாய்?“ என்று மேனேஜர் மகா லெட்சுமியைக் கேட்கிறார்.
 இந்தக் கிளைக்கு BEST PERFORMANCE AWARD வந்திருக்கே. உங்களாலதானே?“ என்று புன்னகை செய்கிறாள் மகா லெட்சுமி.
“YOU ARE SOMEBODY’’என்கிறார் மேனேஜர்
ரமேஷ் வேலைக்கு என உள்ளே வருகிறான். கையில் ஹெல்மெட். அவன் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அவள். மகா லெட்சுமி. “ஹாய்“ என்கிறாள் கண்ணில் சிரிப்புடன். குழப்பமாய் அவன் ராதிகாவைப் பார்க்கிறான். “புதுசா நம்ம கிளைக்கு வேலைக்கு வந்திருக்கா. பேர்…“
“மகா லெட்சுமி“ என்கிறாள் மகா லெட்சுமி. இனிப்புப் பெட்டியை அவன் பக்கம் நீட்டுகிறாள். “உன்னை விட இனிப்பா உலகத்தில் என்ன?“ என்றபடியே அவன் ஒரு கட்டி இனிப்பு எடுத்துக் கொள்கிறான். “சுருக்கமா மகா. ரைட்?“ என சிரிக்கிறான் ரமேஷ். பிறகு ராதிகா பக்கம் திரும்பி “ராது உனக்கு டெபாசிட் காலி“ என்கிறான்.
‘மகா லெட்சுமி சிரிக்கிறாள். “FIXED டா, RECURRING கா?“
“என்னது?“
“டெபாசிட்“ என்கிறாள் மகா லெட்சுமி. எல்லாரும் சிரிக்கிறார்கள்.
“முதல்ல எளிமையான வேலை, கிளயரிங்… கத்துக்கோ இவளே“ என்கிறாள் ராதிகா. மகா லெட்சுமி தலையாட்டுகிறாள்.
ஒருவர் மேனேஜர் அறைக்குள் எட்டிப் பார்க்கிறார். “என்ன வேணும்?“
“லாக்கர்…“
“தோ. ராமு?“ என்று சத்தம் தருகிறார் மேனேஜர்.
“வந்திருவார் சார்…“ என்கிறான் ரமேஷ். பின் மகா பக்கம் திரும்பி, “நம்ம மேனேஜர் எப்படியாவது ராமுவைச் சரியான நேரத்துக்கு ஆபிசுக்கு வர வைக்கப் பார்க்கிறார்… அவரால முடியல்லியே“ என்று சிரிக்கிறான். மகா ஒப்பனை அறையைக் கேட்டுக்கொண்டு போகிறாள்.
ராதிகா ரமேஷைப் பார்த்துச் சிரிக்கிறாள். “மேக் அப் கொஞ்சம் கலைஞசால் கூட உடனே போயி சரி பண்ணிக்குவாளாட்டம் இருக்கு. அவ கைப்பையில் மேக் அப் சாமானே முழு இடத்தையும் பிடிச்சிக்கும் போலருக்கு…“
ராமசாமி வேலைக்கு வருகிறான். கிருஷ்ணராஜ்  கோபப்படுகிறார். “அடிக்கடி இப்பிடி லேட்டா வரியேய்யா?“
“உங்க மனைவி பரவால்ல சார். நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர். சரியா காலைல உங்களுக்கு என்ன வேணுமோ பார்த்து பண்ணி பக்குவமா அனுப்பிர்றா… எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும் சார்.“
“காலைல ஆரம்பிக்காதே… போ. வேலையைப் பார். அப்பறம்…“
“அதை அப்பறம் சொல்லுங்க சார். நான் வேலையைப் பார்க்கிறேன்.“ ராமசாமி வெளியே போகிறான். “சார் லாக்கர்…“ என ஒருவர் எழுந்து நிற்கிறார்.
“வாங்க எடுத்திர்லாம்…..“ அவர் கூடவே வருகிறார். கிடுகிடுவென்று லாக்கர் ரிஜிஸ்டரில் அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். அவரை உள்ளே அழைத்துப் போகிறான். அவருக்கான லாக்கர் அறையைத் தன் சாவியால் திறந்து விட்டுவிட்டு “பாத்துக்கோங்க சார்…“ என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறான்.
தன் இருக்கையில் வந்து அமர்கிறான். “பஸ்ல ஒரே கூட்டம் இவனே…“ என்கிறான் ரமேஷைப் பார்த்து.
“அதெல்லாம் சரிடா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்“ என்கிறான் ரமேஷ்.
“என்ன?“
“கண்டுபிடி.“
“தெர்லயே…“என அவன் சொல்லுமுன் காற்றில் மிதந்து வருகிறது நறுமணம். அந்த வாசனையை உள்ளிழுக்கிறான். மகா லெட்சுமி வருகிறாள். “ஹாய்“ என்கிறாள் மகா லெட்சுமி.
அவளைப் பார்த்ததும் அவன் முகம் சட்டென மாறுகிறது. ரமேஷே எதிர்பார்க்கவே யில்லை. ராமசாமியின் முகத்தைப் பார்த்து விட்டுக் குழப்பம் அடைகிறான்.
“ஹலோ…“ என்கிறாள் மகா லெட்சுமி.
“ராங் நம்பர்ன்றப் போறான்“ என்கிறான் ரமேஷ். “உன் அழகு அசத்திட்டது அவனை.“
அவனிடம் வந்து இனிப்புப் பெட்டியை நீட்டுகிறாள் மகா லெட்சுமி. “வாழ்த்துக்கள்“ என்கிறான் சுரத்தே இல்லாமல்.
“இன்னும் உற்சாகமாச் சொல்லேண்டா“ என்கிறான் ரமேஷ்.
சிறு கட்டி இனிப்பை எடுத்துக் கொண்டு “போதும்“ என்கிறான். “உங்களுக்கு டயபடீசா?“ என்கிறாள் மகா.
“அப்பிடியாடா?“ என்கிறான் ரமேஷ்.
“என் பேர்…“ என்கிறாள் மகா லெட்சுமி.
“மகா லெட்சுமி“ என்கிறான் ராமசாமி.
ஆச்சர்யத்துடன் “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?“ என்கிறாள் மகா லெட்சுமி
“சுருக்கமா மகா“ என்கிறான் ராமசாமி.
“ஆகா.இவன் முக்காலமும் அறிஞ்சவன்“ என்கிறான் ரமேஷ்.. “போன வாரம் என்னாச்சி தெரியுமா? இவன் நம்ம ராதிகாவுக்குப் பெண் பார்க்க வராங்கன்னு கரெக்டா சொன்னான். ராதிகாவுக்கே அதில் ஆச்சர்யம்…“
“எனக்கு எப்ப கல்யாணம் சார்?“ என மகா கண்ணை மலர்த்திக் கேட்கிறாள். ராமசாமி காதில் விழாத மாதிரி எழுந்து போகிறான்.
“அவன் வீட்ல என்னவோ பிரச்னை போல இருக்கு“ என்கிறான் ரமேஷ். “ரொம்ப ஜாலியான ஆளுதான்.“
ராமசாமி ஒரு லெட்ஜருடன் திரும்பி வருகிறான். யாருடனும் பேசாமல் கடகடவென வேலை செய்கிறான். அவனது மௌனம் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருக்கிறது.
மகா லெட்சுமியின் கையெழுத்து அழகாய் இருக்கிறது. ராதிகா அவளைப் பாராட்டுகிறாள். “எங்க ஆபிஸ்லயே மோசமான கையெழுத்து நம்ம ராமுவோடதுதான். அவன் கையெழுத்தை அவனாலயே திரும்ப வாசிக்க முடியாது…“
“அவ கேட்டாளா?“ என்கிறான் ராமசாமி. “இவங்களை ரொம்ப நம்பாதே மகா. எப்ப வேணா உன்னையும் இப்பிடிக் கவுத்துவாங்க…“
“அப்பா, சார் பேசிட்டார்…“ என அழகாகச் சிரிக்கிறாள் மகா.
மாலை அலுவலகம் முடிந்து வெளியே கிளம்புகிறார்கள். “நான் கொஞ்சம் கடற்கரைக் காத்து வாங்கிட்டு அப்பறமா வீட்டுக்குப் போகலாம்னு பார்க்கறேண்டா“ என்கிறான் ரமேஷிடம்.
“அது சரி. அவளை உனக்குத் தெரியுமா முன்னாலேயே?“
“யாரை?“
“மகாவை.“
“தெரியாது.“
“பின்னே அவ பேரைக் கரெக்டா சொன்னியே?“
“ஒரு GUESS தான். அவள் பார்க்க மகா லெட்சுமி மாதிரிதானே இருக்கா?“
“சுருக்கமா மகான்னியே…“
“நீ அப்பிடிச் சுருக்குவேன்னு எதிர்பார்த்தேன்… அது சரிதானே? ராதிகாவை ராதுன்னு நீதானே ஆரம்பிச்சே?“
“இல்லடா… நீ எதையோ மறைக்கறே.“
“ஏன்?“
“அவளை உனக்கு முந்தியே அறிமுகம் ஆயிருக்கு.“
“அப்படியா?“
“அவளைப் பார்த்ததில் எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். நம்ம ஆபிசே அவ வந்ததுல களை கட்டிட்டது. நீதான் சரியா அதை என்ஜாய் பண்ணலியோன்னு இருக்கு…“
“இருக்கலாம்.“
“ஏன்?“
“அது இப்ப எதுக்கு. அவள் வந்ததில் எல்லாருக்கும் சந்தோஷம்னா, நீங்க சந்தோஷமா இருங்களேன்…“
“நீயுந்தான் சந்தோஷப் படேன் படவா.“
“ஈஈஈ“ என்கிறான் ராமசாமி.
“‘ராமு ஒண்ணு சொல்வேன். தப்பா நினைச்சிக்கக் கூடாது…“
“என்ன?“
“எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்குடா.“
“சரி.“
“நான் அவளை லவ் பண்ணலாம்னு பார்க்கிறேன்.“
“வேணாம்.“
“ஏன்டா?“ என நின்று அவனைப் பார்க்கிறான் ரமேஷ்.
“அவ ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்றா.“
“அவளை உனக்குத் தெரியாதுன்னியே?“ என்று கேட்கிறான் ரமேஷ். “உனக்குத் தேவையானதை மாத்திரம் சொல்றேன்… உன்னைக் குழப்ப வேணாம்னு பார்க்கிறேன். நான் பீச் போயி கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரேன்.“
“என்ன பீச். திடீர்னு?“
“மனசு சரியில்லை.“
“எனி பிராப்ளம்?“
“இப்ப உனக்குத் தெரிய வேணாம்.“
“நீ அவளைப் பார்த்ததில் இருந்தே என்னவோ போல ஆயிட்டே. நான் கவனிச்சேன்.“
“அப்படி யெல்லாம் நீயா கற்பனை பண்ணிக்க வேணாம்.“
“அவளைப் பத்தி உனக்கு எதோ முக்கியமான விஷயம் தெரியும்.“
ராமசாமி நிற்கிறான். “தெரியும்“ என்கிறான்.
“என்னடா அது?“
“உனக்கு அது வேணாண்டா.“
“வேணும். நான் அவளை லவ் பண்றேன்…“ என்கிறான்  ரமேஷ்.
“அதான் சொன்னேன்… அவள் ஏற்கனவே ஒருத்தனை விரும்பறா.“
“அதெப்பிடி உனக்குத் தெரியும்?“
“தெரியும். விடுறா. இப்ப… அவளை ஒருத்தன் விரும்பறான், அவளும் அவனை விரும்பறாள்னு தெரிஞ்சிட்டதா இல்லியா…“
“ம்.“
“அப்பன்னா நம்ம ஆபிஸ் ஆம்பிளைங்களுக்குள்ள சண்டை வரப் போவது இல்லை  நல்ல விஷயம் தானே?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“சரி. வேளை வரும்போது சொல்லு.“
“நான் என்ன சொல்றது. வேளை வந்தால் நீங்களே தெரிஞ்சிக்க மாட்டீங்களா?“ என்கிறான் ராமசாமி. கடற்கரைக்கு பஸ் வருகிறது. “பாப்பம்டா“ என ஓடிப் போய் ஏறுகிறான்.
·       
தொடர்கிறேன்

MOB 91 97899 87842 

No comments:

Post a Comment