Wednesday, September 30, 2015

அத். 40 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

updated everyday
வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 40
மெடிகல் ஷாப். கிருஷ்ணன் கையில் டாக்டர் சீட்டு. அதை வாங்கிப் பார்க்கிறான் கடைக்காரன். “இது தூக்க மாத்திரை ஆச்சே…‘‘ என்கிறான். “ஆமாம்“ என்கிறான் கிருஷ்ணன்.
“யாருக்கு?“
“அப்பாவுக்கு…“
“எவ்வளவு வேணும்?“
“எவ்வளவு வேணாலும் குடுங்க…“
“கரெக்டாச் சொல்லுய்யா… இதை டாக்டர் சீட்டு இல்லாமல் தரவே கூடாது…“
“ஏன்?“
“இதை எக்குத் தப்பா அதிகமா போட்டுக்கிட்டா இந்தத் தூக்க மாத்திரை ஆளையே தூக்கற மாத்திரையா ஆயிரும்.“
“வெரி குட்.“
“என்ன வெரிகுட்?“
“இல்ல. அத்தனை பவர்ஃபுல்லான்னு கேட்டேன்…“
“எத்தனை மாத்திரை?“
“டாக்டர் எவ்வளவு எழுதியிருக்கார்?“
“ஒரு மாசத்துக்கு..“
“அப்ப ஒரு மாசத்துக்குக் குடுங்க.“
கடைக்காரன் மாத்திரை எடுக்க உள்ளே போகிறான். “தூக்கம் வராதவங்க இதைப் போட்டுக்கிட்டால் தூக்கம் வரும்.“
“தூக்கம் வர்றவங்க இதைப் போட்டுக்கிட்டால்?“
“ஒரேடியாத் தூங்கிற வேண்டிதான்…“ என கடைக்காரன் சிரிக்கிறான்.
“எக்ஸ்பிரி டேட் பார்த்து எடுங்க…“
“மருந்துக்குன்னா சொல்றேன். போட்டுக்கற ஆளுக்குன்னா எனக்குத் தெரியாது…“
“மாத்திரையை மொத்தமா போட்டுக்கிட்டால் அதுதான் அவருக்கு எக்ஸ்பிரி டேட்…“ என்கிறான் கிருஷ்ணன்.
“என்னய்யா சொல்றே நீ? வந்ததில் இருந்து விவகாரமாப் பேசறே…“
“இல்ல. ஒண்ணில்ல.“
“வயசாளிகள், சில நோயாளிகள்… மனக் குழப்பம் இருக்கற பட்சம், தூக்கம் வராத பட்சம் தேவைப்பட்டால் மாத்திரை போட்டுக்கலாம்… அவ்வளவுதான். பாத்து ஜாக்கிரதையா பயன்படுத்தணும்…. யாருக்குன்னு சொன்னே?“
“அதான் சீட்டுல போட்டிருக்கே…“
“வேங்கடசுப்ரமணியன்.“
“எங்க அப்பாதான்…“
மருந்தை வாங்கிக் கொண்டு வீடு வருகிறான் கிருஷ்ணன். தெருவில் இருந்து வீட்டுக்குள் நுழையுமுன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறான். பின் ஆவேசமாய்க் கதவைச் சாத்துகிறான். எதிர்வீட்டுக்காரி, தாம்புக் கயிறு தந்தவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.
உள்ளே போய் கதவின் தாள் போடுகிறான். மேசையில் அந்த மாத்திரைக் குப்பியை வைக்கிறான். போய்த் தண்ணீர் எடுத்து வருகிறான். தண்ணீர் தம்ளரை மேசையில் வைக்கிறான். மேசை அருகே நாற்காலியில் உட்கார்கிறான். மணி பார்க்கிறான். “சாவப் போற நேரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப்போறே….“ என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப கதவுப் பக்கம் போகிறான். இரண்டாவது தாள் போடுகிறான். வந்து நாற்காலியில் அமர்கிறான். மாத்திரை பாட்டிலை உடைக்கிறான். அதில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து மேசையில் வைக்கிறான். பின் ஆவேசம் வந்தாப் போல கடகடவென்று கையில் நிறைய மாத்திரைகளைக் கொட்டிக் கொள்கிறான். அதில் ஒன்று இரண்டு தரையில் விழுகிறது. குனிந்து அந்த மாத்திரைகளையும் எடுத்து மேசையில் வைக்கிறான். தம்ளர் தண்ணீரைப் பார்க்கிறான். போய் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து வருகிறான். உட்கார்ந்தவன் திரும்ப எழுந்து கொள்கிறான். அரை கேன் தண்ணீர் இருக்கிறது ஸ்டூலில். அப்படியே கேனையே கொண்டு வந்து மேசையில் மாத்திரைகளுக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்கிறான்.
அப்போது வாசல் கதவு தட்டப்படுகிறது. “யாரு?“ என்கிறான். பதில் இல்லை. “நான் முக்கிய வேலையா இருக்கேன்… அப்பறமா வந்து கதவைத் திறக்கிறேன்…“ என்கிறான். “அப்பறமான்னா எப்ப? செத்த அப்பறமா?“ என தானே கேட்டுக் கொள்கிறான். திரும்ப கதவு தட்டப் படுகிறது. “போயிட்டு அப்பறமா வாங்க…“ என்கிறான். “அப்பறம்னா எப்ப?“ என சத்தமாய்த் தனக்குள்ளேயே கேட்டுக்கொள்கிறான்…
ச்சே… ஒரு மனுசன் இந்த உலகத்தில் நிம்மதியா சாக முடியுதா?... என அலுத்துக் கொண்டே வந்து கதவின் முதல் தாள் திறக்கிறான். இரண்டாவது தாள் திறக்கிறான். கதவைத் திறக்கிறான். வெளியே யாரும் இல்லை. வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து பார்க்கிறான்…
எதிர் வீட்டுப் பெண் “என்ன தம்பி? யாரைத் தேடறே?“ என்று கேட்கிறாள்.
“இங்க யாரும் வந்தாங்களா?“
“ஏன்? யாரும் வரணுமா?“ என்று அவள் திரும்பிக் கேட்கிறாள்.
அவன் அவளையே பார்க்கிறான். “GAS  காரன் வரணும்னு காத்திருக்கியா தம்பி?“ என்கிறாள் அவள்.
அவன் பதில் சொல்லாமல் திரும்ப உள்ளே வருகிறான். ச்சே, பிரமை… என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப ஒரு தாள் போட்டு விட்டு வந்து மேசையில் உட்கார்கிறான். ஒரு பெருமூச்சு எடுக்கிறான். அழுகை வருகிறாப் போல முகம் மாறுகிறது. “யாரும் வர மாட்டாங்கடா…“ என உரக்கச் சொல்கிறான். “வந்தாலும் நான் கதவைத் திறக்க மாட்டேன்…“ என்று கத்துகிறான். விறுவிறுவென்று போய் இரண்டாவது தாள் போடுகிறான். வந்து மேசையில் உட்கார்கிறான். மாத்திரைகளைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி அழுகிறான். திரும்ப ஆவேசம் வந்தாப் போல பாட்டில் மாத்திரை அனைத்தையும் அப்படியே மேசையில் கவிழ்த்துகிறான். பிறகு தலையாட்டி மறுத்தபடியே கொஞ்சம் மாத்திரைகளை எடுத்து திரும்ப பாட்டிலில் போடுகிறான்.
மணி பார்க்கிறான். “என்னடா மணி பார்க்கறே? முகூர்த்த நேரம் தவறிப் போறா மாதிரிதான்…“ என்று தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான். “அவளுக்கும் எனக்கும் கல்யாண முகூர்த்தம் இல்லை. கல்யாணம் நடக்கப் போவது இல்லை. அது தான் தவறிட்டது. ஆகவே…“ என்றவன் அவசர அவசரமாக பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்க்கிறான். உரக்க வாசிக்கிறான். “அன்பான தினத்தந்தி ஆசிரியர் அவர்களுக்கு… என் படத்தை கலரில் போடவும்.“
வெரி குட், என்று சொல்லிக் கொள்கிறான். மாத்திரையைப் பார்த்துக் கொண்டபடியே தம்ளர் தண்ணியை எடுத்து மட மடவென்று குடிக்கிறான். “ஐயோ மாத்திரை சாப்பிடாமலேயே தண்ணியை மட்டும் குடிச்சிட்டேன்…“ என்கிறான்.
கதவு தட்டப் படுகிறது. பிறகு மௌனம். சே பிரமை… என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்கிறான். திரும்ப கதவு தட்டப் படுகிறது. “யாரது?“ என்கிறான். “நாந்தான்“ என்கிறது குரல்.
“நாந்தான்னா?“ என்கிறான். அவனுக்குத் தெரிகிறது. அது ராமசாமியின் குரல்.
“நான் ராமசாமி. உன் கிருஷ்ணா கபே ஃப்ரென்ட்…“
“அதை என் சார் ஞாபகப் படுத்தறீங்க?“
“என்ன பண்ணிட்டிருக்கே கிருஷ்ணா? கதவை வேற தாள் போட்டுக்கிட்டிருக்கே…“
“ரெட்டைத் தாழ்ப்பாள்.“
“எந்த விபரீத முடிவும் எடுக்கல்லியே…“
“அது எப்பிடி சார்? நான் தற்கொலைன்னு ஆரம்பிச்சால் நீங்க சரியா வந்திர்றீங்க?“
“நான் ஊருக்கெல்லாம் ராமசாமி உனக்குதான் கிருஷ்ணசாமி.“
“விட்டுருங்க சார் என்னை. எனக்குத் தேவை கீதை அல்ல. கிருஷ்ணவேணி.“
“அட அவசரப் படாதே கிருஷ்ணா…“
“நான் நிறையத் தரம் அவசரப் பட்டுட்டேன் சார். ஒண்ணும் நடக்கல்ல. இனியும் நீங்க என்னை அடக்கி வைக்க முடியாது…“
“ஐயோ கிருஷ்ணா… சொன்னால் கேளு.“
கடகடவென்று பாட்டில் தண்ணீர் குடிக்கிறான். பிறகு தலையில் அடித்துக் கொள்கிறான். “ச்சே திரும்பவும் மாத்திரை சாப்பிட விட்டுட்டது…“
“கதவைத் திற கிருஷ்ணா…“
“இல்ல சார். அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு வெறுத்திட்டது சார். போதும் சார். இனிமேல் இந்த உலகத்தில், அவள் இல்லாத உலகத்தில் எனக்கு வாழவே பிடிக்கல்லை சார். எனக்கு இந்த உலகத்தில் எதுவுமே வேணாம் சார்…“
“கிருஷ்ணா கபே காபி?“
“அட அது ஒரு மேட்டரா சார். நான் மாத்திரை வாங்கிட்டு வரும்போதே காபி சாப்பிட்டுட்டுதான் சார் வந்தேன்…“
“மாத்திரையா?“
“தூக்க மாத்திரை…“
“ஐயோ கிருஷ்ணா என்ன காரியம் பண்ணிட்டே…“
“இன்னும் பண்ண ஆரம்பிக்கலை சார்…“
“வேணாம் கிருஷ்ணா…“
“அவள் என்னை வேணான்னுட்டாளே சார்.“
“அவ சொல்ல மாட்டாள் கிருஷ்ணா.“
“இப்பிடித்தான் என்னை ஏமாத்தறீங்க. அவ என்னடான்னா என்னை எப்பவுமே தூக்கி யெறிஞ்சி பேசறா. மதிக்கவே மாட்டேங்கறா… எனக்கு… வேற வழி இல்லை சார். என்னை விட்டுருங்க சார்…“
“கதவைத் திற கிருஷ்ணா…“
“மாட்டேன்.“
“அவசரப் படாதே கிருஷ்ணா…“
மாத்திரைகளைக் கையில் எடுக்கப் போனவன் முன் குனிந்தாப் போல வளைகிறான். “ஓவரா தண்ணி குடிச்சிட்டேன் போல…“ என்கிறான்.
கதவுக்குப் பின்புறம் இருந்து இப்போது ஒரு பெண் குரல் கேட்கிறது. “கிருஷ்ணா?“
அவனுக்கு ஆச்சர்யம். “யாரு?“
ஒரு நிமிடம் மௌனம். “யாரு?“ என அதட்டுகிறான் கிருஷ்ணன். பிறகு அந்தப் பெண் குரல் பேசுகிறது. “நாந்தான்…“
“நாந்தான்னா?“
தயக்கமாய் அந்தக் குரல். “கிருஷ்ணவேணி…“
அவன் முகம் ஆச்சர்யத்தால் வீங்குகிறது. பிறகு முகம் மாறுகிறது. “சார்? பொம்பளைக் குரல்ல பேசறீங்களா?“
“இல்ல கிருஷ்ணா…“
கதவுக்கு மறுபுறம் கிருஷ்ணவேணியும் ராமசாமியும் நின்றிருக்கிறார்கள். கிருஷ்ணவேணி பதறி யிருக்கிறாள். “நான் சொன்னேனே? நீ நம்பினியா? அவன் பண்றதெல்லாம் வேஷம் நடிப்புன்னு சொன்னே… இப்ப பாத்தியா? நிசம்மாவே…“
“ஆமா சார்…“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “பாவம் சார் அவர்“ என்கிறாள். “கிருஷ்ணா?“ என அவளே முன்னால் போய் கதவைத் தட்டுகிறாள்.
“சார்… நீங்கதான் பொம்பளைக் குரல்ல பேசறீங்க…“ என்கிறான் கிருஷ்ணன். “என்னை ஏமாத்த முடியாது…“
“நானும் சாரும் வந்திருக்கோம் கிருஷ்ணா?“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“இப்ப பார் ரெண்டு பேரும் பேசறோம்…“ என்கிறான் ராமசாமி. “கிருஷ்ணா…“ என ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
உள்ளே யிருந்து சத்தமே இல்லை. பயந்து போகிறார்கள். “கதையை முடிச்சிக்கிட்டானோ படுபாவி…“ என மெல்ல முணுமுணுக்கிறான் ராமசாமி. “ஐயோ“ என அழுகை வருகிறது அவளுக்கு. திரும்ப ரெண்டு பேரும் ஒரே குரலில் “கிருஷ்ணா…“ என கத்துகிறார்கள்.
உள்ளே பாத்ரூமில் தணணீர் சிதறும் சத்தம் கேட்கிறது.
“என்ன சத்தம் இது?“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “பாத்ரூம்ல சத்தம் கேட்கிறாப்ல இருக்கே?“ என்கிறான் ராமசாமி.
“கதவைத் திற கிருஷ்ணா…“
“மாட்டேன்…“
“எந்த அவசர முடிவுக்கும் வந்திராதே கிருஷ்ணா…“ என்கிறாள் கிருஷ்ணவேணி. அதற்கும் பதில் இல்லை. “உன் பேர் கிருஷ்ணன். என் பேர் கிருஷ்ணவேணி… என்ன பொருத்தம். இல்லியா கிருஷ்ணா…“ என்கிறாள். அதற்கும் பதில் இல்லை. திரும்ப பாத்ரூம் சத்தம்.
“அவன் இங்க இல்லை. பாத்ரூம்ல இருக்கிறான்…“ என்கிறான் ராமசாமி.
“கதவைத் திறக்காமல்  இப்பிடிப் படுத்தறாரே சார்… நான் என்ன பண்ணட்டும்?“ என தலையில் கை வைக்கிறாள். அழுகிறாள். “அவர் எம் மேல இவ்வளவு பிரியம் வெச்சிருப்பார்னு நான் நம்பவே இல்லை சார்…“
சட்டென திரும்ப கதவை ஓங்கித் தட்டுகிறாள். “கிருஷ்ணா… ஐ லவ் யூ கிருஷ்ணா… வெளியே வா… அவசரப் படாதே…“
“நான் அவசரப் பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கு. இங்க நிலைமை அப்பிடி…“ என்று உள்ளே யிருந்து கிருஷ்ணன் சொல்கிறான்.
“என்ன சொல்றே கிருஷ்ணா?“
“நான பாத்ரூம்ல இருக்கேன்…“
“என்ன பண்றே கிருஷ்ணா?“
“தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி குடிச்சிட்டேன். அதான்… “
வெளியே ராமசாமி சிரிக்கிறான். அவனையே பார்த்தபடி நிற்கும் கிருஷ்ணவேணி சிரிக்கிறாள். “ஒன் பாத்ரூம் முட்டிக்கிடடது போல…“ என்கிறான் ராமசாமி. “நாம வராம இருந்தாலும் இப்படி அவன் எழுந்து போயிருப்பான் போல…“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
கதவு திறக்கிறது. “வேணி…“ என வருகிறான் கிருஷ்ணன்.
“என்ன காரியம் பண்ணப் போயிட்டே கிருஷ்ணா?“
“அதை அடக்க முடியாது வேணி…“ என சிரிக்கிறான். “அதான் வந்திட்டேனே வேணி…“ என அவளை அணைத்துக் கொள்கிறான்.
“எங்க வந்தே… பயமுறத்திட்டே கிருஷ்ணா… “ என்கிறான் ராமசாமி. “கிருஷ்ணவேணி கிடைக்காத ஆத்திரம் சார் முனனால…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அப்பறம்?“ என சிரிக்கிறான் ராமசாமி.
கிருஷ்ணவேணி ராமசாமி பக்கம் திரும்புகிறாள். “சார் நீங்க சொன்னப்ப நான் இவர் இத்தனை தீவிரமா என்னைக் காதலிப்பார்னு நம்பல சார்…“
“இப்ப?“
“அதான் நேர்லியே பாத்திட்டேனே…“ என வெட்கப் படுகிறாள். உள்ளே அவன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிய அறைக்குள் போகிறார்கள். “எதுக்கு இவ்வளவு தண்ணி கிருஷ்ணா?“ என தண்ணீர் கேனைக் காட்டுகிறான் ராமசாமி.
“ஒரு மாத்திரை கூட சாப்பிடலை சார்…“ என்கிறான் கிருஷ்ணன். “எப்பிடியும் சார் வந்திருவீங்கன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்…“
“அப்ப என்னை எதிர்பார்க்கலியா கிருஷ்ணா?“ என்று கோபமாய்க் கேட்கிறாள்  வேணி.
“இல்ல வேணி. அவர் வர்றார்னா, ஒவ்வொரு வாட்டியும் அவர் உன்னை அழைச்சிக்கிட்டு வர்ற மாதிரியே இருக்கும். எனக்கு…“ என்கிறான். “அப்பறம் தான் ஏமாத்தமா இருக்கும்…“
“அப்ப கிருஷ்ணா…இனி தற்கொலை… கிற்கொலைன்னு உளராமல் இருப்பியா?“
“தற்கொலையை விட்டுட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டேன் சார்“ என்கிறான் கிருஷ்ணன்.
“வெரி குட்.“
“எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டீங்களே சார்“ என நெகிழ்கிறாள் கிருஷ்ணவேணி.
“சாரை நமஸ்காரம் பண்ணுடி…“ என்கிறான் கிருஷ்ணன்.
“இருக்கட்டும் இருக்கட்டும்…“ என நெளிகிறான் ராமசாமி. “சண்டை சச்சரவு இல்லாமல் ஒத்துமையா இருங்க…“
அப்போது வாசலில் சரசரப்பு கேட்கிறது. “அப்ப வர்றார்…“ என்கிறான் கிருஷ்ணன்.
குரல் மாத்திரம் கேட்கிறது. “கிருஷ்ணா?“
“இருக்கேன்ப்பா…“
“என்ன பண்ணிட்டிருக்கே?“
“லவ் பண்ணிட்டிருக்கேம்ப்பா…“
“அதையாவது ஒழுங்காப் பண்ணு…“
அவர்கள் மூணு பேருமே சிரிக்கிறார்கள்.
* * *
*
தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk 5 chapters please visit
vasikarapoikalplus.blogspot.com



No comments:

Post a Comment