Tuesday, September 8, 2015

updated everyday - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத். 18



வசிகரப்
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்


அத்தியாயம் 18
கிருஷ்ணன் வீடு.
உத்திரத்தில் ஒரு கயிறு வீசப் படுகிறது. எட்டவில்லை. ரெண்டாம் முறை, மூணாம் முறை. எட்டி விடுகிறது.
உத்திரத்தில் இருந்து ஒரு குருவி, கயிறு வந்ததால் சீண்டப்பட்டு வெளியே பாய்கிறது. சர்ரென்று அது அவன் தலையைத் தாண்டிப் பறக்கிறது. ச்சீ, என பயந்து நடுங்கி விலகுகிறான் கிருஷ்ணன்.
திரும்ப அது அதே உத்திரத்தில் வந்து வந்து அமர்கிறது. “ஏய் குருவி தள்ளிப் போ. நான தற்கொலை பண்ணிக்கப் போறேன்“ என்கிறான் கிருஷ்ணன்.
குருவி வாலை ஆட்டி ட்வீட் ட்வீட் என்கிறது. “அதுல உனக்கு என்ன டவ்ட்?“ என்கிறான் கிருஷ்ணன்.
“பார்த்தா வெள்ளையும் சொள்ளையுமா ஆபிசராட்டம் இருந்தார் அவர். சாகத் துணிஞ்சவனைக் கடல்லேர்ந்து பிடிச்சி வெளியே இழுத்தார். என்னைப் பார்க்க வரேன்னார். வந்து என் காதலியோட என்னைச் சேர்த்து வைக்கிறேன்னார். சும்மா அப்பசத்திக்கு சமாதானப் படுத்தினா, நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு நினைச்சிட்டார் போல… என்னைப் பத்தி அவருக்குத் தெரியாது.“
“ட்வீட் ட்வீட்“ என்கிறது குருவி.
“நான யார்னு அவருக்குக் காட்டறேன்…“ என்கிறான்  குருவியிடம்.
குருவி மெல்ல சன்னலுக்கு வெளியே பறக்கிறது. “யப்பா…“ என நிம்மதியாய் அவன் நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறான். சன்னலைச் சாத்தப் போகிறான்.
தெருவில் சாத்துக்குடி விற்று வருகிறாள் பெண் ஒருத்தி. “சாத்துக்குடி வேணுமா?“ “வேணாம்“ என்கிறான். “நாக்குல உரிச்சிப் போட்டா ஜம்னு கரையும். ஒரு சுளை இனாமா வாங்கிச் சாப்பிட்டுப் பார்…“
“வேணாம்..“
“ஏன?“
“நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்…“
“ஐயோ.“
“நிசம்மா.“
“சரி. அப்பன்னா சாகு முன்னாடி என் கிட்ட ஒரு அரைக் கிலோ சாத்துக்குடி போணி பண்ணு. போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும் இல்லே?“
“ஏய் கிழவி. நான் சாகிறது முக்கியம் இல்லே. உனக்கு சாத்துக்குடி விக்கிறது முக்கியமா?“
“உன்னைப் பத்தி நாளைக்குப் பேப்பர்ல பாத்துக்கறேன்“ என்றபடி அவள் தாண்டிப் போகிறாள். “சாத்துக்கு…டீ…“ என்று நீண்ட ஊளையாய்ச் சத்தம்.
ஆத்திரத்துடன் சன்னல் கதவைப் படாரென்று உள்பக்கமாக சாத்துகிறான்.
உத்திரத்தில் போட்ட கயிற்றை இழுத்து கனம் தாங்குமா என்று பார்க்கிறான். கயிறு பட்டென்று அறுந்து கையோடு வருகிறது. “இப்ப என்ன பண்ண?“ என்று திகைக்கிறான். “நல்லவேளை. இதுல தூக்கு போட்டுத் தொங்கினாலும் அறுந்து விழறாப்ல ஆயிருக்கும்“ என்று சொல்லிக் கொள்கிறான்.
அப்போது வாசல் கதவு தட்டப் படுகிறது. போய்த் திறக்கிறான். எதிர்வீட்டுப் பெண். “காலி சிலிண்டர் இருக்கா?“
“காஸ் சிலிண்டரா?“
“ஆமா. காஸ் காரன் வரேன்னிருக்கான். எனக்கு இன்னும் தீரல்ல. உங்ககிட்ட காலி இருந்தால்… கை மாத்தா குடுத்தால்…“
“இல்ல“ என எரிச்சலுடன் சொன்னவன், சட்டென சிரிப்புடன், “தரேன். உங்க வீட்ல நல்ல இறுக்கமான தாம்புக் கயிறு இருக்கா?“ என்கிறான்.
“எதுக்கு?“
“தற்கொ… இல்ல. கிணற்றுக்குள்ள வாளி விழுந்திட்டது. எடுக்கணும்.“ என்கிறான்.
“வரேன்“ என்று அவள் கொண்டு வரப் போகிறாள்.  கிருஷ்ணன் காலி சிலண்டரை உருட்டி வரவும் அவள் தாம்புக் கயிறை அவனிடம் தருகிறாள்.
“உறுதியா இருக்குமா?“
“அதென்ன அப்பிடிக் கேட்டுட்டே. எங்க மாமா பையன் பரிட்சைல தோத்தப்ப இதுலதான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.“
“சூப்பர்.“
“என்ன சூப்பர்?“
“இதை அவங்க வீட்ல இருந்து  நீங்க எதுக்கு எடுத்திட்டு வந்தீங்க?“
“பத்திரமா அவன் ஞாபகமா இதை வெச்சிருக்கேன்.“
“டேங்கப்பா. ஞாபகமா புடவையை வெச்சிப்பாங்க. பேனா, கண்ணாடி அப்டின்னு வெச்சிப்பாங்க. உங்க ஞாபகம் ஆச்சர்யமா இருக்கே. நாளைக்கு நமக்கும் பிரயோசனப் படும்னு முன் யோசனை போல. அதைப் பத்தி என்ன… ராசியான கயிறு போல.“
“தற்கொலைக்கு என்ன ராசி வேணும் தம்பி?“
“தெரியல. நான் சிம்ம ராசி“ என்கிறான் கிருஷ்ணன். “சில பேருக்கு எல்லாம் நெருங்கி வர்ற அந்த சமயத்தில் யாராவது வந்து காப்பாத்தி விட்டுருவாங்க.“
அவள் போனதும் திரும்ப தூக்குக் கயிறை வீசுகிறான். வாசலில் அழைப்பு மணி அடிக்கிறது.
“சிலிண்டர் தான் குடுத்திட்டேனே“ என்கிறான் கிருஷ்ணன்.
“கிருஷ்ணா?“ என்று வாசலில் ஆண் குரல்.
“யாரு?“
“நான் ராமசாமி.“
“சார். எப்பிடி சார் கரெக்டா நான் சாக முடிவெடுத்தா வந்திர்றீங்க. மத்த நேரம் வருவீங்கனு எதிர்பார்த்தால் நீங்க வர்றதே இல்லை…“ என்று சொல்லியபடியெ வந்து வாசல் கதவைத் தாள் திறக்கிறான்.

“சில ஆளுங்க கிட்ட டொனேஷன் வாங்கப் போனால், அப்பறம் வா, அப்பறம் வான்னு திருப்பி அனுப்பிட்டே யிருப்பாங்க. அதைப்போல எமன் என்னைத் திருப்பி அனுப்பிர்றான் சார்...“
ராமசாமி உள்ளே வந்து வீட்டின் நிலவரத்தைப் பார்க்கிறான். தாம்புக் கயிறை உருவிக் கீழே போடுகிறான். சன்னலைத திறக்கிறான்.

“நீ உத்திரத்தில் கயிறை வீசறது இல்லைடா விஷயம். எமன் உன் மேல பாசக் கயிறை வீசணும்.“

சர்ர்ரென்று குருவி திரும்ப உள்ளே வந்து உத்திரத்தில் அமர்ந்து வாலாட்டி, ட்வீட் ட்வீட், என்கிறது.
“குருவி அப்பத்திலேர்ந்தே டவுட் டவுட்னே கத்துது…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அது உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்கு…“ என ராமசாமி சிரிக்கிறான்.
“சிரிக்காதீங்க சார். எனக்கு ரொம்பக் கோபம் உங்க மேல. .“
“அதுனால சாகத் துணிஞ்சியா?“
“நீங்க என்ன சார் சொன்னீங்க?“
“அதான் வந்திட்டேனே…“
“வந்து? என்னை சாகாதேன்னு அறிவுரை சொல்வீங்க. அப்பறம் கிளம்பிப் போயிருவீங்க.“
“இன்னொண்ணு இருக்கு.“
“என்ன அது?“
“கிருஷ்ணா கபே“ என ராமசாமி சிரிக்கிறான்.
“விளையாடாதீங்க சார்.“
“இல்ல கிருஷ்ணா. நிசம்மாதான். கிளம்பு. பேசிக்கிட்டே போகலாம்.“
“நான் வரல்ல சார்.“
“அட வா.“ ராமசாமி அவனை தன்னோடு இழுத்துக் கொள்கிறான். வெளியே வரும்போது எதிர்வீட்டுப் பெண் கேட்கிறாள்.
“வாளிய எடுத்தாச்சா?“
“வாளிய எடுத்தாச்சி. கயிறு தான் எதிர்பாராம கிணத்துல் விழுந்துட்டது“ என்றபடி கிருஷ்ணன் ராமசாமியுடன் கிளம்புகிறான்.
கிருஷ்ணா கபே. சர்வர் அவர்களைப் பார்த்ததும் தலையாட்டியபடியே போகிறான்.  “அவனுக்கே என் முகம் பழகிட்டது கிருஷ்ணா.“
“‘சார். என் பேர் கிருஷ்ணன். ஆனால் கூப்பிடட குருலுக்கு உடனே என் முன்னால நீங்கதான் கிருஷ்ணனாட்டம் வந்து நின்னுர்றீங்க.“
“நிறைய வேலை இருக்கு கிருஷ்ணா. இன்னாலும் உன் ஞாபகம் வந்ததும் வந்திட்டேன்.“
“தேங்ஸ் சார்.“
“சொல்லு உனக்கு என்ன பிரச்னை?“
“என்னை ஒருத்தி…“ அவன் முகம் மாறுகிறது. “பிடிக்கலன்னுட்டா சார்.“
“உன்னையா? உன்னைப் போயி யாராவது பிடிக்கலைன்னு சொல்வாங்களா கிருஷ்ணா?“
“உங்களுக்குத் தெரியுது சார்.அவளுக்குத் தெரியல்லியே.“
யாருக்கு?“
“அவளுக்கு.“
“அவ பேர் என்ன கிருஷ்ணா?“
“அவ பேரைச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு சார்.“
“பொம்பளைங்க தான் அதும் அந்தக் காலத்துல கணவன் பேரைச் சொல்ல வெட்கப் படுவாபங்க. ஆம்பளைங்க, அதுவும் இந்தக் காலத்துல… சும்மா சொல்லு கிருஷ்ணா?“
“கிருஷ்ணவேணி.“
“அவ உன்னைப் பிடிக்கலைன்னுட்டாளா?“
“ஆமா சார்“ என அவன் முகம் சுருங்குகிறது.
““ஏன்?“
“எனங்ககு என்ன சார் குறைச்சல்?“
“இப்ப்டி திடீர்னு நீ கேட்டால்… நான் அவசரப்பட்டு எதாவது சொல்லிருவேன்.“
அவன் முகம் மாறுகிறது.
“அதில்ல கிருஷ்ணா. உன்கிட்ட என்ன இருக்குன்னு நீ நினைக்கறே? அதுவே எனக்குத் தெரியல்லியே…“
“காபி ஆறிரும் சார். குடிச்சிக்கிட்டே பேசலாமா?“
“பேசவே வேணாம். காபி குடிச்சிட்டுக் கிளம்பினாலும் ஓ.கே.“

ராமசாமி காபியை வாய்க்கு உயர்த்துகிறான். “யாராவது சாகப் போறேன்னால்.... பேசாமல் விட்டுறணும் போல இருக்கு“

“என்ன சார் அப்பிடிச் சொல்லிட்டீங்க?“

“எனக்குத் தெரியாமல் நீ என்ன வேணா பண்ணிக்கலாம். நானும் அழுது மூக்கைச் சிந்திட்டுப் போயிறலாம். என் கண் முன்னாலேயே தற்கொலை அது இதுன்னால்... தாள முடியல்லியே கிருஷ்ணா.“

“நீங்க ரொம்ப நல்லவர் சார்.“

“அதுதான என் பிரச்னையே.“
காபியை அவன் குடித்து டம்ளரை டக்கென்று வைக்கிறான்.
“அவளை முதல்ல எங்க பார்த்தே கிருஷ்ணா?“
“இங்க தான் சார். இதே ஹோட்டல்ல.“
“ஆகா. அப்பன்னா உன் கால்யாண ரிசப்ஷனையும் இங்கியே, இதே ஹோட்டல்லியே வெச்சிறலாம் கிருஷ்ணா. வெட்கத்தைப் பாரு…“
கிருஷ்ணனின் சிரித்த முகம் மாறுகிறது. “எனக்கு என்ன சார் கொறச்சல்ர? அழகு இல்லியா? அறிவு இல்லியா?“
“உனக்கே சந்தேகம் வந்தா மாதிரி என் கிட்டே கேக்கக் கூடாது கிருஷ்ணா. பொருளாதாரமே அந்த சப்ளை அன்ட டிமான்ட் ஒத்துப் போகாதபோது தான் தள்ளாடுது.“
“என்ன சார் சொல்றீங்க?“
“போற வழில கடைல கேட்டுப் பார்த்து கிடைச்சா வாங்கிக்கலாம் கிருஷ்ணா.“
“என்னால அவளை மறக்க முடியல்ல சார்.“
“எங்க வேலை பார்க்கிறாள் அவள்?“
“சத்யா ஸ்டோர்ஸ்.“
“எனன கடை?“
“ஜவுளி.“
“நீ?“
“நான் ஆம்பளைச் சிங்கம் சார். உட்கார்ந்து சாப்பிடுவேன்.“
“ஏன் நின்னுகிட்டே சாப்பிட்டால் செரிக்காதாக்கும்?“ என்கிறான் ராமசாமி. “ஆக அவள் பெர் என்ன, வேலை எங்க பார்க்கிறாள் அது இதுன்னு தெரிஞ்சிக்கிட்டு ரொம்ப பாதுகாப்பா லவ்ல இறங்கியிருக்கே.“
“பின்னே? எனக்கு அறிவு இல்லியா என்ன?“
“நிறைய இருக்கு. டூ மச். த்ரீ மச்.“‘
“என் காதல் புனிதமானது“ என்றவன் ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீங்க தான் சார் எங்களைச் சேர்த்து வெக்கணும்…. என்கிறான்.
“அது சரி கிருஷ்ணா. நீ சொல்றதையெலலாம் வெச்சிப் பார்த்தால், அவள் உன்னை….“ என ராமசாமி நிறுத்துமுன் சட்டென உதடு துடிக்க கிருஷ்ணன் எழுந்து கொள்கிறான்.
“அட என்ன எழுந்திட்டே. உட்காரு. அவள் அப்பிடிச் சொன்னால் நாம விட்டுர்றதா?“
“தேங்ஸ் சார்“ என அசடடுச் சிரிப்புடன் உட்கார்கிறான் கிருஷ்ணன்.
““அதுல ஒரு விஷயம். அவளோ வேலை பார்க்கிறாள். நீ… உனக்கு இன்னும் வேலை கிடைக்கல்ல. அதாவது நீ ஆம்பளைச் சிங்கம். வேலையே இல்லாத உன்னை…. என்ன எழுந்திட்டே“ என ராமசாமி எழுந்து அவனை தோளை அழுத்தி திரும்ப உட்கார்த்துகிறான். “அப்டின்னு அவள் சொன்னாலும் நாம விட்டுற முடியாதுன்றே நீ. அப்பிடித்தானே?“
“அப்படியே தான் சார்.“
“எனக்கே தலை சுத்துதுடா கிருஷ்ணா.“
“சிருஷ்ணர் சார் நீங்க. உங்க கையில தான் சக்கரம் சுத்தணும். உங்க தலை சுத்தக் கூடாது.“
“முயற்சி பண்றேன் கிருஷ்ணா.“
“உங்களுக்கு இந்தக் காதலைப் பத்தி என்ன தோணுது சார்?“
“அன்னிக்கு நான கடல்கரைக்குக் காத்து வாங்க வந்தேனே…“
“ஆமா சார்.“
“அங்கதான் விதி என் வாழ்க்கைல ஓவரா விளையாடிட்டது.“ ஹா ஹா என திடீரென்று சிரிக்கிறான் ராமசாமி.

“என்ன சார் சிரிக்கறீங்க?“

“உனக்காக நான் 2016 லேர்ந்து வரணுமா?“

“என்ன சொல்றீங்க?“

“ஒண்ணில்ல.ஒண்ணில்ல. விதி. விதி...“

“இல்ல சார். 2016ன்னு என்னவோ சொன்னீங்க?“

“அப்பிடியா சொன்னேன்?“
“2016 லேர்ந்து வந்தால்... நீங்க நிச்சயம் அவதார புருஷன் சார். உங்களை சந்திச்சது என் பாக்கியம் சார்…“ என அவன் கையைப் பிடித்துக் கண்ணில் ஒத்திக் கொள்கிறான் கிருஷ்ணன்.
“உன் வாழ்க்கையின் நல்ல தருணத்தில் நீ என்னை சந்திச்சதா நினைக்கறே. என் வாழ்க்கையின் மோசமான தருணமா அது தெரியல்ல. ஹ்ம்“ என பெருமூச்செடுக்கிறான் ராமசாமி.
காபி சாப்பிட்ட பில் வருகிறது. “நான் குடுக்கறேன் சார்“ என கைநீட்டுகிறான் கிருஷ்ணன்.
“சரி.“
“அதெல்லாம் இல்ல நாந்தான் குடுப்பேன்னு நீங்க சொல்லணும் சார்.“
“சரி அதெல்லாம் இல்ல“ என்கிறான் ராமசாமி. “நீயே குடு…“
வெளியே வருகிறார்கள். “தினசரி அவள் ராத்தரி பத்து மணி வாக்கில் வேலை முடிஞ்சி இந்தத் தெரு வழியா தான் வருவா சார்.“
“சரி.“
“அப்பதான் சார் நான் அவளைப் பார்ப்பேன்.“
“காலைல எத்தனை மணிக்கு வேலைக்குப் போறா? அதையும் நோட் பண்ணியிருப்பியே?“
“குறும்புக்காரர் சார் நீங்க… காலை எட்டரை எட்டே முக்லுக்கு இந்த பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்குவா.“
“அவள் வீடு எங்க?“
“அது தெரியல்ல சார். கல்யாணத்துக்குப் பிறகு அவள் வீடு திருவல்லிக்கேணி.“
“ஓ உன் வீடு…“
“போங்க சார் எனக்கு வெட்கமா இருக்கு.“
ராமசாமி அப்படியே நிற்கிறான். “அவளை எப்படியாவது நான் சந்திச்சிப் பேசறேன் கிருஷ்ணா.“
“நீங்கதான் அவகிட்ட என்னைப் பத்தி எடுத்துச் சொல்லணும்.“
“அவ கேட்டுப்பாளா…“
“அவள் மாட்டேன்னா… தற்கொலை. எனக்கு வேற வழி இல்லை சார்.“
“அவளை சந்திச்சிப் பேசிப் பார்க்கறதைத் தவிர எனக்கும் வேற வழி இல்லை போலுக்கே.“
“ரொம்ப நல்ல பொண்ணு சார் அவள்.“
“சரி சரி… ஆ வூன்னா தற்கொலைன்றே. இல்லாட்டி வெட்கப் படறே… வித்தியாசமான நெளிசல் கேசுய்யா நீ. உங்க அப்பா எங்க வீட்ல இல்லியே?“
“எதோ கோவில் உத்சவம்னு போனார். வர லேட்டாகும்.“
“அவர் என்ன சொல்றார் உன் காதலைப் பத்தி?“
“உன்னால எதையுமே செய்ய முடியாது. இதையாவது ஒழுஙகாச் சொய்யின்னார்…“
“நல்ல குடும்பம்டா இது. சரி செய்யி. என் பஸ் வருது கிருஷ்ணா.“
“நான உங்களைத் தான் நம்பியிருக்கேன் சார்.“
“நான்… என்னைக் காப்பாத்த கடவுளைத் தான் நம்பியிருகிகேன்…“ என ஓடிப்போய் பஸ்சில் ஏறுகிறான் ராமசாமி..

தொ ட ர் கி றே ன்

91 97899 87842

2 comments:

  1. ராமாவதாரம் கிருஷ்ணாவதாரத்தைக் காப்பாற்றுமா? ராமர் கிருஷ்ணருக்கு முந்தைய காலமோ? பார்க்கலாம்!

    ReplyDelete
  2. ராமசாமியை அவதாரம் ஆக்கி வசனம் சேர்த்து விட்டேன். நன்றி.

    ReplyDelete