Monday, September 14, 2015

வசிகரப் 
பொய்கள்

அத்தியாயம் 24


லுவலகம் கிளம்பும் வேளை. திலகா அவன் கன்னத்தை வருடி “உங்க மனசு சமனப்படட்டும். கேட்டீங்களா? நோ மைனஸ் 1“ என்கிறாள்.
“ஏன்?“
“இன்னுங் கொஞ்ச நாளைக்கு… சரியா? சாயந்தரம் உற்சாகமா நீங்க வீடு திரும்பயணும்னு எதிர்பார்க்கிறேன். சரியா?“
அவன் சிரிக்கிறான். “எனக்கே இந்த மேனேஜர் ராமகிருஷ்ணனைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிட்டதுன்னு இருக்குடி.“
“GOOD BOY“ என்கிறாள் அவன் மூக்கைத் திருகி.
வீட்டுக்கு வெளியே வந்து லிஃப்ட்டை அடைகிறான். அது சமத்தாய் மைனஸ் 1 காட்டுகிறது. சிரித்தபடி ஸீரோ அழுத்துகிறான். லிஃப்டில் இருந்து இறங்குகிறான். வெளியே ஸ்கூட்டரை எடுக்கிறான். ஒரே உதையில் அது சொன்னபடி கிளம்புகிறது.
தெருவில் அந்த வண்டி மெக்கானிக்கைத் தாண்டிப் போகிறது வாகனம்.
அலுவலகம். ரமேஷ் அவனைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறான். “இரு வந்திட்டேன்…“ என்றபடி மேனேஜர் அறைக்குள் நுழைகிறான். நிகழ்கால மேனேஜர். ராமகிருஷ்ணன். “வாய்யா மாப்ள பார்ட்டி… நினைச்சா வேலைக்கு வரீங்க.“
“பாட்டி செத்துட்டாங்க சார்“ என்று சிரிக்கிறான்.
“போன வாரம் தான் பாட்டி செத்தான்னு லீவு சொன்னே?“
“எங்க தாத்தாவுக்கு ரெண்டு பெண்டாட்டி சார்.“
“காரணம் சொல்ல ரூம் போட்டு யோசிப்பீங்களாய்யா?“
“லீவு கீவு போட்டாலும் அடுத்த நாள் வந்து இருக்கிற மொத்த வேலையையும் முடிச்சிருவேன் சார். கவலைப் படாதீங்க…“ என்றபடி வெளியே வருகிறான்.
வருடக் கணக்காக நடையாக நடக்கும் அந்த லோன் பார்ட்டி வெளியே காத்திருக்கிறான். “என்ன வேணும் சார்?“
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“லோன் விஷயமாவா?“
“ஆமா சார்.“
“எந்த மேனேஜர் வந்தாலும் உனக்கு கதை ஆக மாட்டேங்குதேய்யா… போய்ப் பாரு.“
“மேனேஜர் நல்ல மூடுல இருக்காரா சார்.“
“இருக்கார். அதை நீதான் போய்க் கெடுக்கப் போறே. போ…“
அவன் உள்ளே போகிறான்.
“என்னடா? திரும்பவும் ஆபிசுக்கு ஜுட் விட ஆரம்பிச்சிட்டே.“
“நோ கன்ஃபியூஷன். நாம வேலை பார்ப்பமா?“ என்கிறான் ராமசாமி. வெளியே டோக்கன் ஒன் செவன் ட்டூ, என டெல்லர் கவுன்ட்டரின் ஒலிப்பதிவுக் குரல்.
பியூன் ரத்தினம் வருகிறான். “சார். ஆபிஸ் நினைவு வந்திட்டதாக்கும்?“
“நீ ஒருத்தன் தானப்பா கேட்காத ஆள்… நீயும் கேட்டுட்டே. உனக்குக் கடன் குடுக்க ஆள் இல்லை. உன் கவலை உனக்கு…“ ரத்தினம் சிரிக்கிறான். “நிறைய செக் ரிடன் இருக்கு. கொரியர் ரிடர்ன் இருக்கு… அதெல்லாம் சார்ட் அவ்ட் பண்ணச் சொல்லி மேனேஜர் சார் சொல்லி விட்டார்.“
பாத்திறலாம். பாத்திறலாம்….“

செக் ரிடன் ஆன கணக்குகளை கம்பியூட்டரில் தேடி அவற்றின் தொலைபேசி எண்களைப் பிடித்து தகவல் சொல்கிறான்... பரபரப்பாக வேலை ஓடுகிறது. வேலை முடித்து கையைத் தலைக்கு மேலே உயர்த்தி சோம்பல் களைகிறான்.

மேனனேஜரின் குரல். “ஆயிட்டதாய்யா?“
“ஓ எஸ்… ராமசாமிக்கு இன்னொரு பேர் பம்பரம் சார்.“
“அப்ப போயி… மீனரேலாசனி பாவம்… நகைக் கடனில் திண்டாடுறா. கூட உதவி செய்யி.“
“அவசியம் சார். லீவு மட்டும் கேட்டா குடுத்துருங்க…“
“முதல்ல அங்க போப்பா. அவங்க ஏற்கனவே உதவி கேட்டுட்டாங்க. அரைமணியில ஆள் தர்றேன்னு சொன்னேன்…“ என்று கை காட்டுகிறார். “இல்லாட்டி நீங்க லீவு போடறதே இல்லியாக்கும்…“ என அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே, நகைக் கடன் கவுன்டர் பக்கம் போகிறான்.
“குட் மார்னிங் சார்…“ என்று புன்னகை செய்கிறாள் மீனலோசனி.
“சூப்பர் மார்னிங். நான் பாத்துக்கறேன். நீ இந்த நகைகளை சுருக்குப் பையில் போட்டு அரக்கு சீல் வைக்கிறதைப் பார்… இன்னிக்கு என்ன இவ்ள கூட்டம்?“
“தெரியல்ல சார். என் ராசியோ என்னவோ?“ என்கிறாள் மீனலோசனி.
“பத்து மணிக்குள்ள அப்ளிகேஷன் குடுக்கறதை நிறுத்திட்டீங்க இல்ல?“
“அதுவே இவ்வளவு சார்…“ என்கிறாள் மீனலோசனி. “நெக்ஸ்ட்“ என கவுன்டர் உள்ளே யிருந்து அடுத்த அப்ளிகேஷனுக்குக் கையை நீட்டுகிறான்.
வேலை மும்முரமாகப் போகிறது. மணி பன்னிரெண்டரை தாண்டுகிறது. கவுன்டர் கதவைச் சாத்தப் போகிறான்.
கவுன்டரில் எட்டிப் பார்க்கும் ஒரு ஏழை முகம். “என்னம்மா?“
“நகை கொண்டு வந்திருக்கேன் சார்.“
“நான் கேக்கவே இல்லியேம்மா?“ என்கிறான்.
“இல்ல சார். வெச்சி… பணம் வேணும்…“
“இப்ப வந்திருக்கியே? இப்ப மணி என்ன?“
“ஒரு அவசரம் ஐயா.“
“பத்து மணிக்குள்ள வந்தா தான் நகை வைக்கவே முடியும் அம்மா. இதுல நாங்க செய்ய எதுவும் இல்லை…“
சட்டென மடிந்து அழப் போனவள் அப்படியே நிறுத்தி அவனைக் கும்பிடுகிறாள். “என்னம்மா என்ன இது?“ என்று அவன் பதறுகிறான்.
“ரொம்ப நெருக்கடி ஐயா.“
“அதுக்கு நாங்க என்னம்மா பண்ண முடியும்? எங்களுக்கு ஒரு நேரம் இருக்கு இலலே? விடிய விடிய யார் வர்றாங்கன்னு வட்டிக்கடைக் காரன் வேணா காத்திருப்பான். நாங்க காத்திருக்க முடியுமா?“
“அவன்கிட்ட வட்டி கட்ட முடியாமலேயே என் பாதி நகை போயிட்டது ஐயா. இப்ப… ஒரு அர்ஜென்ட்…“
ராமசாமி அவளையே பார்க்கிறான்.
“என் வீட்டுக்காரருக்கு ஒரு ஆபரேஷன். உடனே செய்யணும்னு சொல்றாங்க… எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல… இந்தாங்க…“
அவன் மறுக்கப் பார்க்கிறான். அவள் கடகடெவென்று செயல்படுகிறாள். கையில் கொண்டு வந்த நகையை டங்கென்று கவுன்டரில் வைக்கிறாள்., ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றி வைக்கிறாள்., காது நகை. யோசிக்கிறாள். பிறகு சட்டென அப்படியே தாலிக் கொடியையும்…
“இரும்மா. இரும்மா. என்ன பண்றே?“
“அம்பதாயிரம் கட்டச் சொல்றாங்க… இதுல எவ்வளவு கிடைக்கும்னே தெரியல்லியே“ என்கிறாள்.
“தாலியையே கழட்டிக் குடுத்திட்டியே…“ என்கிறான் ராமசாமி.
“அவரு…“ என அவள் அழுகிறாள். “உயிருக்குப் போராடறார். அவர் கட்டிய தாலி… இப்ப அவருக்கே அது பயன்படல்லன்னால் எனக்கு வேற எதுக்குங்க ஐயா.“
மீனலோசனியே அவள் பேச்சைக் கேட்டுத் திகைக்கிறாள். “என்னம்மா?“ என்று அவளைப் பார்க்கிறான் ராமசாமி. “நாம என்ன சார் பண்ண முடியும்?“ என்கிறாள் மீனலோசனி.
‘கவுன்ட்டருக்கு வெளியே வருகிறான் ராமசாமி. “அழாதம்மா. உனக்கு உதவ முடியுமா பார்க்கிறேன்…“ அவனே போய் மேனேஜரிடம் சொல்லி பேசி அப்ளிகேஷன் வாங்கி அவனே நிரப்புகிறான். அவள் தந்த நகைகளை வரிசைப் படுத்தி பட்டியல் போடுகிறான். திரும்ப உள்ளே போய் எடை போடுகிறான். “நாற்பத்தி மூணாயிரம். அவ்ளதாம்மா வரும். இதுவே நாங்க வாங்கக் கூடாது…“
அவள் தலையாட்டுகிறாள். சுற்றி எல்லாரும் வேடிக்கை பார்க்கிறதே அவளுக்கு என்னவோ போலிருக்கிறது. பணத்தை அப்படியே எண்ணக் கூட செய்யாமல் வாங்கிக்கொண்டு புடவை முந்தானையில் முடிச்சிட்டுக் கட்டி வைத்துக் கொள்கிறாள். அவனைப் பார்த்து “வரேன். என் தம்பி மாதிரி நீங்க. ஆபத்து சமயத்தில் உதவினீங்க. நீங்க நல்லா யிருக்கணும்.“ கிளம்பிப் போகிறாள்.
“ரொம்பப் பெரிய மனசு சார் உங்களுக்கு…“ என்கிறாள் மீனலோசனி.
“இப்படியான அவசரத்துல உதவறது தாம்மா வேலை. தினசரி வந்தம் லெட்ஜரை நிரப்பினோம்னு… அது இல்லை வேலை…“ என்கிறான் ராமசாமி.
மதிய உணவு இடைவேளை. ரமேஷ் வருகிறான். “எப்பிடிடா இருக்கான் உங்க அண்ணன்?“ என்று டிபன் பாக்ஸைத் திறக்கிறான் ராமசாமி.
“நீ… உனக்கு எப்பிடிடா எங்க அப்பா உயில் எழுதிய விஷயம் தெரிஞ்சது?“ என்று பக்கத்தில் வந்து உட்கார்கிறான் ரமேஷ்.
“சில விஷயங்கள் எனக்கே தெரியாமல் என்னை இணைச்சிக்கிட்டு நடக்குது ரமேஷ். சொன்னால் நீ நம்ப முடியாது… IN FACT நீ சொன்னால் நானே நம்ப மாட்டேன். நல்லது நடந்தால் எடுத்துக்க வேண்டியது தானே? என்ன சொல்றே?“
“நீ திடீர்னு காணாமல் போயிர்றே. அதை விசாரிச்சி வீட்டுக்கும் வர வேண்டாம்னுட்டே. உன் மனைவி… அவளை எப்படி சமாளிக்கறே?“
“அவ பாவம்டா. நான் வேலைக்கு வரல்லைன்னு தெரிஞ்சி அவள் குழம்பினால், நான் அதுக்குச் சொல்ற விஷயம் கேட்டு இன்னும் குழம்பறாள்…“
“என்ன ஏதுன்னு கேட்டால் சஸ்பென்ஸ்ன்றே?“ என்கிறான் ரமேஷ்.
அது வேளை வந்தால் சொல்றேன்… இப்பசத்திக்கு சஸ்பென்ஸ்சாகவே இருக்கட்டும். உங்க அண்ணன் கதை பேசலாம்… எப்பிடி இருக்கான் அவன்?“
“கைல சல்லிக் காசு தர மாட்டேன்னுட்டேன். காசு இருந்தா அடுத்த ஷணமே போயித் தண்ணி யடிச்சிட்டு வந்து வீட்ல தகாராறு பண்ண நிக்கிறான்…“‘
“அவன் பொண்டாட்டியும் பொண்ணும் என்ன சொல்றாங்க…?“
“நான் அவங்க கிட்ட அழுத்தமாச் சொல்லிட்டேன். அண்ணன் பொண்ணை நல்லபடியா வளர்த்து படிக்க வெச்சி கல்யாணம் வரை பண்ணித் தருவேன். என் பொறுப்பு அது. ஆனால் இனியும் அவன் சொல்றதுக்கெல்லாம் பயந்து பயந்து தலையாட்டினீங்கன்னா, எனக்குக் கோபம் வரும்னுட்டேன்…“
“அது சரி. உங்க அப்பா சொத்தை அவன் அழிச்சான். அவங்களுக்கு அதுல என்ன செஞ்சான்? எல்லாத்தையும் சீட்டாடினான். குடியில தொலைச்சான்… “
“இவங்களும் வேற வழி இல்லாமல் அவனுக்கு வளைஞ்சி கொடுக்க வேண்டியதாப் போச்சு…“
“இப்ப நீ நிமிர்ந்திட்டே…“
“எவ்ளவு நாள்தான் குனிய முடியும்? அப்பா நல்ல காரியம் பண்ணினார்… முன்னாடியே அவர் மத்த சொத்தையும் இப்பிடி மாத்தி விட்டிருக்கலாம்.“
“அட அது முடியாதுடா. அவனுக்கு முன்னமேயே இது தெரிஞ்சிருந்தால் அவரை அவன் என்ன பண்ணிருப்பானோ… அதுவே தெரியாது.“
“சரி. நடந்தது நடந்தவரை சந்தோஷம் ராமு…“
“உனக்கு தான் ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டார் பாவம். அது… வாய்க்கல்ல.“
“பாப்பம் பாப்பம். கல்யாணத்துக்கு முந்தி பேங்க எக்சாம் C A I  I B எழுதி பாஸ் பண்ணிட்டேன்னு வெச்சிக்கோ. நல்லா யிருக்கும். கிளாசுக்குப் போயிட்டிருக்கேன்“ என்கிறான் ரமேஷ்.
“அதைச் செய்யி. உருப்படியான காரியம்…“ டிபன் பாக்ஸைக் கழுவுகிறான் ராமசாமி.
மாலை. ரமேஷும் அவனுமாய் வீடு திரும்புகிறார்கள். ரமேஷ் ராமசாமியின் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கிறான்.
“நீ எங்க போறே, என்ன பண்றே… உன் கதை எனக்குத் தெரியும் பாஸ்“ என மெதுவாக ஆரம்பிக்கிறான்.
“எனக்கே தெரியாதேடா…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“நோ மோர் சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ்.
“அப்படியா?“ என வண்டியை நிறுத்துகிறான் ராமசாமி. “என்ன அது சஸ்பென்ஸ? சொல்லு…“
“லிஃப்ட்.“
“லிஃப்டா?“
எனக்குத் தெரியும்டா.“
“அதான் எப்பிடி ரமேஷ்?“
“சிகாமணி கிட்ட கேட்டேன்.“
“ஓ“ என்கிறான் ராமசாமி. “அந்த உயில் விஷயம்… எனக்கு அது எப்பிடித் தெரிய வந்ததுனனு பேசிருப்பே இல்லே?“
“எஸ். நோ மோர் சஸ்பென்ஸ்.“
“நாட் எனி மோர்…“
“ஆனால், இந்த மாதிரி கற்பனைகளை நான் கேள்விப்பட்டிருக்கேன் ராமு… நாட்ல எவ்வளவோ ஆச்சர்யங்கள் இருக்கு. சில பேர் செத்த பின்னால திரும்ப உசிரோட பல மணி நேரம் கழிச்சி எழுந்து உட்கார்ந்திருக்காங்க. அவங்க எம தர்மன், அது இதுன்னு கதை சொல்றதும் நான் பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்…“
“ஆகா…“ என வண்டியை ஒரு ஹோட்டல் வாசலில் நிறுத்துகிறான் ராமசாமி. “வா எதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…“
‘உள்ளே நுழைகிறார்கள். “அதாவது… இதை இதுவரை யாருமே நம்பல. அவங்க நம்பறா மாதிரி தலையாட்டறாங்க. ஆனால் நம்பினதாத் தெரியல. அதை அவங்க உள் வாங்கின மாதிரியே தெரியல…“
“நான் இப்படிக் கதைகள் வாசிச்சிருக்கேன்…“
“வெரி குட்.  நான் இப்படி யெல்லாம் இதுவரை கேள்விப் பட்டதே கிடையாது. சொல்லு சொல்லு…“
சர்வர் வருகிறான். “என்ன சாப்பிடறே ரமேஷ்?“
“வேணாம். வீட்ல போயி சாப்பிடணும். தினசரி அண்ணி நல்ல சாப்பாடு போடறா இப்ப. அவங்க நிமிர்ந்துட்டாங்க. அண்ணனை நெளிசல் எடுக்கறது அவங்க வேலைன்னு நான் சொல்லிட்டேன்“ என்று சிரிக்கிறான்.
“உங்க அண்ணன்… கைல காசு இருக்கற வரை தான் அவனைச் சுத்தி ஆளுங்க நிப்பாங்க. இப்ப திடீர்னு அவனுக்கு ஆள் துணை யாருமே இல்லை. இவன் பணத்தில் கூட உட்கார்ந்து கும்மாளம் அடிச்ச எவனுமே இவனுக்கு இப்ப செலவு பண்ணத் தயார் இல்லை…“
சர்வர் அப்படியே நிற்கிறான். “ரெண்டு காபி“ என்கிறான் ராமசாமி. சர்வர் போகிறான்.
“இது… என் விஷயம்… அது பத்தி உனக்கு என்ன தோணுது?“
“நினைக்க வேடிக்கையாத்தான் இருக்குடா.“
“என்ன?“
“இப்ப பார்க்கிற சில ஆட்கள் அந்த முந்தைய காலத்துலயும் இருப்பாங்க இல்லியா? டபுள் ஆக்ஷன் போல…“
ராமசாமி புன்னகை செய்கிறான். “ஆமாம். YOU GOT IT. எனக்கு ரெண்டு ரமேஷைத் தெரியும்…“
“அதேதான். நீ நினைச்சால் இப்ப சந்திக்கிற எல்லாரையும் அப்பவும் சந்திக்கலாம்…“
“ஹா… இறந்து போன என் அப்பாவைத் திரும்பப் பார்த்தேனே..“
“என் அப்பா செத்துப் போன அப்பறம் அவரை நீ உயிரோட பார்த்துப் பேசியிருக்கே…“
“ம்.“
“இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாருக்கும் கிடைக்காதுடா ராமு. இது ஒரு ALTERNATE REALITY. குழப்பம் இல்லாமல் இதை அனுபவிக்கணும்…“
“இதுல எல்லா நினைவுகளும் சம்பவங்களும் நல்லதாகவே அமையும்னு இல்லை…“
“ஆமாம். இதுல எதுவும் சங்கடமான சம்பவம் அமைஞ்சதா?“
“ஏன் இல்லாமல்?“
காபியை வாயில் ஊற்றிக் கொள்ளப் போனவன் நிறுத்துகிறான் ரமேஷ். “என்னாச்சி?“
“நம்ம பாங்க்கின் கனவுக் கன்னி…“
“யாரு?“
“யாரு? நீயே சொல்லு…“
“ஆ… மகா. மகாதானே?“
“அவளை நான் நேரில் பார்க்கிறேன்டா…“
“நல்ல விஷயம் ஆச்சே. எனக்கே அவளை இப்ப பார்க்கணும் போல இருக்கு.“
“ஆனால்… அவளது முடிவு… அது எனக்குத் தெரியும் இல்லியா?“
“அட அதை மறந்துட்டு அவகூட சந்தோஷமா சிரிச்சிப் பேசு இவனே.“
“முடியல்லயேடா.“
“நான் சொல்றேன்.. அவ கூட நீ சந்தோஷமா முகத்தை வெச்சிக்கிட்டுப் பேசு. அந்தக் காலங்கள் திரும்பக் கிடைக்குமானால்… அது தாண்டா கடந்த காலத்தின் அதிர்ஷ்டம்.“
“அப்டின்றே?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“என் பெண்டாட்டி இப்பதான் காலைல… நீங்க கடந்த காலத்துக்குப் போக வேணாம்னு அனபுக் கட்டளை இட்டாள்.“
“இதுவும் அன்புக் கட்டளை தான்…“ என்கிறான் ரமேஷ்.
“என்ன?“
“அருமையான அனுபவம். இதை நீ விட்றக் கூடாது.“
“சரி…“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ராமசாமி. “என்னவோ சொன்னியே?“
“என்னது?“
“ம். ALTERNATE REALITY. அது பத்திச் சொல்லுடா…“
“நான் படிச்சதைச் சொல்றேன்… சும்மா சுவாரஸ்யமா இருக்கும் அவ்ளதான்.“
“எப்ப சொல்றே?“
“சஸ்பென்ஸ்“ என்று சிரிக்கிறான் ரமேஷ். “இப்ப என் முறை… வா கிளம்பலாம்.“
“எனக்கு உன் வாழ்க்கை பொறாமையா இருக்குடா“ என்கிறான் ரமேஷ் நடந்தபடியே. ஸ்கூட்டரை உதைக்கிறான் ராமசாமி. பின்னால் ரமேஷ் அமர்கிறான். “இனி நடக்கிறதை யெலலாம் யார்ட்டயும் வெளிப்படையாப் பேசாதே. அது குழப்பம்தான் தரும்…“
“சரி.“
“என் அப்பா விஷயம்… நடக்கலைன்னால் நானே இதை நம்பியிருக்க மாட்டேன்.“ அவன் முன் குனிகிறான் ரமேஷ். “நீ நினைச்சால் என் அபபாவைப் போயிப் பார்க்கலாம் இலலியா ராமு?“
“ம்.“
“அவர் எடுத்த முடிவை நான் பாராட்டினேன்னு அவர்கிட்ட சொல்றியா?“
“இப்பதானே நாமளா எல்லார்கிட்டயும் போயி வேண்டாததைப் பேசி குழப்ப வேணாம்னு நீ சொன்னே…“
“பாயின்ட்“ என்கிறான் ரமேஷ். வண்டி தெருவில் ஓட ஆரம்பிக்கிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

(for bulk chapters please visit
vasikarapoikalplus.blogspot.com

updated on Tuesday and Friday)

No comments:

Post a Comment