Friday, September 4, 2015

updated every day - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் அத்தியாயம் 15

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் 
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்

வாசலில் டாக்டர் சண்முகசுந்தரம் மன நல மருத்துவர் என்று பெயர்ப் பலகை. பார்த்து விட்டு ராமசாமி உள்ளே நுழைகிறான். உள்ளே நிறையப் பேர் அமர்ந்திருக்கிறார்கள். டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.
“டாக்டர்?“ என்று அங்கிருந்த உதவியாளைக் கேட்கிறான்.
“வர்ற டயம்தான் சார். நீங்க டோக்கன் வாங்கிட்டீங்களா?“
“இல்ல. என வாங்கிக் கொள்கிறான் ராமசாமி.
“டோக்கன் நம்பர் எத்தனை?“
“இருபத்தி ஆறு சார்.“
“யப்பா… நாட்ல இத்தனை பைத்தியங்கள் இருக்கா?“
“இன்னிக்குக் கம்மி தான் சார்.“

“அமாவாசைன்னா அதிகம் வரும் போல...“
பக்கத்தில் ஒரு நபர் அவனையே உற்றுப் பார்க்கிறான். திடுதிப்பென்று தன்னியல்பாய் அவன் கண்களும் இவன் கண்களும் சந்தித்துக் கொள்கிற ஜோரில் ஒரு அதிர்வு வெட்டுகிறது அவனை. பார்வையை சட்டென மீட்டுக்கொண்டு வேறு யோசனை எதுவும் செய்ய முயல்கிறான். என்றாலும் அந்த நபர் தன்னைத் தொடர்ந்து பார்க்கிறதான குறுகுறுப்பு அவனில் இருக்கிறது. திரும்ப அவனைப் பார்க்கிறான் ராமசாமி. அவனோ விடாமல் இவனையே உற்றுப் பார்த்துக் கெண்டிருக்கிறான். திடீரென்று அவன் இவனைப் பார்த்து ஒரு விகாரச் சிரிப்பு சிரிக்கிறான். தூக்கிவாரிப் போடுகிறது. இது என்னடா இம்சை, என ராமசாமி நாற்காலியை விட்டு எழுந்து அவன் பார்வைக்கு மறைவாக தள்ளிப் போய் நின்று கொள்கிறான்.

அங்கே ஏற்கனவே தனியே நின்றபடி ஒரு பெண் முங்க முங்க அழுது கொண்டிருக்கிறாள். அவனைப் பார்த்ததும் உதட்டைப் பிதுக்குகிறாள். கையால் தாமரை மலர்கிறாப் போல விரிக்கிறாள். ச்... என்கிறாள். மீண்டும் அழ ஆரம்பிக்கிறாள்.
அருகே ரெண்டு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “ஏய் இந்த டார்ச் அடிக்கிறேன். இதுலேர்ந்து வெளிச்சம் மேல வரை போகுதே… அதில் ஏறி நீ மேல போவியா?“
‘ஐயோ நான் மாட்டேன்.“
“ஏன்?“
“நான் மேலே போகிற போது நீ டார்ச்சை அணைச்சிட்டேன்னா நான் பொத்னு விழுந்துருவேன்…“
பயத்துடன் ராமசாமி இன்னும் தள்ளிப்போய் நிற்கிறான். மனசுக்குள் மெல்ல, டாக்டர் சீக்கிரம் வந்துறக் கூடாதா நீங்க?... என முணுமுணுக்கிறான்.
‘அப்போது இன்னொருவன் அவன் அருகே வருகிறான். “சார் உங்ககிட்ட பத்து ரூபாய்க்குச் சில்லரை இருக்குமா?“
“தரேன்“ என்கிறான் ராமசாமி.
“ஆனால் எங்கிட்ட பத்து ரூபா இல்லியே…“ என கையை இப்படி அப்படி, இல்லை, என அசைக்கிறான் அவன்.
“பின்ன எதுக்குய்யா சில்லரை கேட்டே?“
“உங்க கிட்ட இருக்கான்னு தெரிஞ்சிக்கத்தான்.“
“ஜெனரல் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்றாரு இவரு…“
“தேவைன்னா வரேன்“ என அவன் போகிறான்.
“உனக்குச் சில்லரை தேவை இல்லை. முதல்ல பத்து ரூபாயே தேவை.“
அவன் பக்கமாக இன்னொருவன் வருகிறான். “பயப்படாதீங்க. நானும் உங்களை மாதிரிதான் சார்“ என்கிறான் அவன்.
“என்ன, உங்களை மாதிரிதான்? என்னப்பத்தி உனக்கு என்ன தெரியும்?“
“தெரியாது சார்.“
“பின்ன? உன்னை மாதிரின்னா என்ன அர்த்தம்?“
“நானும் பைத்தியம் இல்லைன்னு சொல்ல வரேன் சார்.“
“நான் பைத்தியம்“ என்கிறான் ராமசாமி. அவனை ஒரு மாதிரி பயத்துடன் பார்த்து விட்டுப் போகிறான் அவன்.

டாக்டர் வந்தாகி விட்டது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ஒரு பெண் டாக்டருக்கு, அட்டென்ஷன் போட்டு சல்யூட் அடிக்கிறாள். யாரையுமே கவனிக்காமல் கடகடவென்று அவர் உள்ளே போகிறார்.
அவனைப் பார்த்தவுடன் விகாரச் சிரிப்பு சிரித்த அந்த நபர் முதலாவதாக உள்ளே போகிறதைப் பார்த்ததும், அவனை உள்ளே வழிப்படுத்துகிறாப் போல கைகாட்டி,  நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “அவனுக்கு முன்னாடியே நான் வந்திட்டேன்“ என ஒருத்தர் போய் முறையிடுகிறார். அவரை ராமசாமி நிறுத்துகிறான். “அந்த ஆள் இங்க இருக்க இருக்க உங்களுக்குத் தான் பிரச்னை. போட்டும்…“ என்கிறான்.
கிளினிக் உதவியாள், “ஆமா சார். போனதடவை அவன் வந்திருந்தப்போ யாரோடவோ சண்டை. பாய்ஞ்சி அவன் மூக்கைக் கடிச்சிட்டான்…“ என்கிறான். ஆட்சேபம் சொன்னவர் தன் இருக்கையில் திரும்ப உட்கார்கிறார்.
உள்ளே போனவன் வெளியே வருகிறான். ஆட்சேபம் சொன்னவர் பக்கத்தில் வருகையில் திடீரென அவன் எதற்கோ நிற்கிறான். பயந்தவராய் அவர் சட்டென தன் மூக்கை மறைத்துக் கொள்கிறார். அவன் கூட அவன் அப்பா வந்திருக்கிறார். அவரைச் சுரண்டி அவன் ஆட்சேபம் சொன்னவரின் சட்டைப் பையில் உள்ள போனாவைக் காட்டுகிறான். “அப்பா எனக்கு இந்தப் பேனா வேணும்…“ என்கிறான்.
“ஷ். அவர் தர மாட்டார்…“
“தருவேன்“ என அவர் அவசரமாய் எடுத்துத் தருகிறார். ”மூக்கைத் தவிர என்ன வேணா கேளு தம்பி“ என்கிறார். “இருக்கறது ஒரே ஒரு மூக்குதான்.“

“சார் கிட்ட ரெண்டு பேனா இருக்காப்ல இருக்கு.“ அவர் திரும்பிப் பார்க்கிறார்.

“அதான்... ஒண்ணைக் குடுத்திட்டீங்க.“
அவர்கள் போகிறார்கள். அடுத்த நபர் உள்ளே போகிறார். உதவியாளிடம் ராமசாமி “ஒரு ஆளுக்கு எத்தனை நேரம் எடுத்துக்கறாரு?“
“கேசைப் பொருத்து சார்“ என்கிறான் அவன். “உங்களுக்கு என்ன சார் பிரச்னை?“ என்று கேட்கிறான். அருகே இருந்த ஆட்சேப ஆசாமி ஆர்வமாய் இவனைப் பார்க்கிறார்.
“அதை உள்ளே போய்ச் சொல்லிக்கறேன்…“ என்கிறான் ராமசாமி. அவர் ஏமாற்றத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறார்.
அப்போது புதிய நோயாளியுடன் ஒருவர் உள்ளே நுழைகிறார். (அவர்களை அவனுக்குத் தெரியாது. என்றாலும் நமக்கு அறிமுகம் உள்ளவர்கள் அவர்கள்.)
அவர்கள் வந்து இவன் அருகே அமர்கிறார்கள். “இவருக்கு என்ன பிரச்னை சார்?“ என வந்தவரிடம் கேட்கிறான் ராமசாமி.
“அம்னீஷியா.“
“அப்படி ஒரு பிரச்னை நாட்ல இருக்கறதையே. நான் மறந்தே போயிட்டேன்…“
“இது எந்த வருஷம்?“ என அந்த நோயாளி கேட்கிறான்.
“2016“ என்கிறான் ராமசாமி.
“இல்லை. 2012“ என்கிறான் அவன்.
“சார் நீங்க என்ன சொன்னீங்க?“
“2016. ஏன்?“
“பழைய ஞாபகம் இருக்கறது அம்னீஷியா. உங்க கேஸ் புதுசா இருக்கே….“
“புரியல சார்“ என்கிறான் ராமசாமி.
“அதுக்குதான் டாக்டர் கிட்ட வந்திருக்கீங்க?“ என்கிறார் கூட வந்தவர். “இவனுக்கு ரெண்டு வருஷமா இதே பிரச்னை சார்…“
“என்ன பிரச்னை?“
“அம்னீஷியா.“
“நாலு வருஷமா“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. ரெண்டு வருஷமா“ என்கிறார் கூட வந்தவர். “டாக்டர் சொல்வார் எல்லாம். நாமளா என்ன முடிவு பண்றது. இல்லிங்களா?“ என்கிறார் சிரித்தபடி.
“வருஷத்தைக் கூட டாக்டர் தான்சொல்லணுமா?“

மணி ஒன்ப்து. அவன் முறை வருகிறது. கடைசியாக அவர்கள் தான். 

டாக்டர் வெளியே எட்டிப் பார்த்து விட்டு “அவ்ளதானா? ஸ்ரீதர், இனிமேல் யார் வந்தாலும் நாளைக்கு வரச் சொல்லு…“ என்றபடி இருவரையுமே உள்ளே அழைக்கிறார்.
ராமசாமி ஒரு ஸ்டூலிலும், டாக்டர் அருகே மற்றொரு ஸ்டூலில் அம்னீஷியாக்காரனும் அமர்கிறார்கள்.
“டாக்டர்“ என ராமசாமியும், அவனும் ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள்.
“யாராவது ஒருத்தர் பேசுங்க.“
“சரி“ என ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் சொல்கிறார்கள். இவன் அவனைப் பார்த்து, அவன் இவனைப் பார்த்து “நீங்களே பேசுங்க“ என்று ஒரே சமயத்தில் சொல்கிறார்கள். டாக்டர் கையால் அமர்த்தி, ராமசாமியைக் காட்டி “நீங்க முதல்ல பேசுங்க“ என்கிறார்.
“என் பிரச்னை என்னன்னால் எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வந்திட்டாப்ல தோணுது டாக்டர்.“
“எனக்கும் அப்பிடிதான்…“ என்கிறான் அடுத்தவன்.
“அப்பிடியா?“ என்கிறார் டாக்டர். “சரி பண்ணிறலாம். சரி பண்ணிறலாம்…“

“தேங்ஸ் சார்.“
“என்னாச்சி? எப்பிடி இப்பிடி ஆகுது?“
எங்க லிஃப்ட்ல…“
“சரி பண்ணிறலாம். சரி பண்ணிறலாம்.“
“லிஃப்ட்டை சரி பண்ணப் போறீங்களா?“
“இல்லை. உங்களை“ என்கிறார் டாக்டர்.
“எல்லாரும் என்னைப் பைத்தியம்ன்றாங்க டாக்டர்… என்கிறான் அடுத்தவன்.
“யார் அப்பிடிச் சொல்றது? நீங்க ஒண்ணும் பைத்தியம் இல்லை“ என்கிறார் டாக்டர்.
“அப்ப எங்க கிட்ட ஏன் டாக்டர் ஃபீஸ் வாங்கறீங்க?“
“ஹா ஹா“ என டாக்டர் சிரிக்கிறார். “இவ்ள அழகா பேசறீங்க. உங்களைப் போயி யாராவது பைத்தியம்னு சொல்வாங்களா? உங்களுக்கு அபபறம் வரேன். இப்ப இவரை விசாரிக்கலாம்… சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி.“
“இப்ப எந்த வருஷம்?“
டாக்டர் அவனைப் பார்க்கிறார். “நாஙகதான்  கேள்வி கேட்போம். நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்கக் கூடாது.“
“2012“ என்கிறான் அடுத்தவன்.
“இப்ப நடக்கறது 2016 தானே டாக்டர். எனக்கு இது 2014 மாதிரி எல்லாமே நடக்குது…“
“2014 மாதிரி நடக்குதா?“
“ஆமாம் டாக்டர்.“
“இது 2014ப் படி நடக்கிறது. அதுல எதும் பிரச்னை இருக்கா?“
“இல்லை டாக்டர்.“
“ஆகா உங்க பிரச்னை தீர்ந்தது…“
“எப்பிடி டாக்டர்?“
“ஏன்னா?- இந்த வருஷம் 2014 தான்.“ என்று டாக்டர் சிரிக்கிறார்.
“2012“ என்கிறான் அடுத்தவன்.
“நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு அடுத்து வர்றேன்…“
“ஆகா“ எனகிறான் ராமசாமி.“நான்தான் சார் பழைய காலத்துலேயே தப்பா டாக்டரைப் பார்க்க வந்திட்டேன் போலருக்கு…“
“தப்பா டாக்டரைப் பார்க்க வந்தீங்க. தப்பான டாக்டர்கிட்ட வரல்ல“ என்கிறார் டாக்டர் சிரித்துக் கொண்டே.
“ஓ. கே. டாக்டர். ஐம் சாரி.… உங்க ஃபீஸ்?“
“உங்களுக்குப் பிரச்னை எதுவும் இல்லை. யுவார் நார்மல்… போயிட்டு வாங்க“ என்கிறார் டாக்டர்.
வெளியே வந்து மணி பார்க்கிறான். பின் விறுவிறுவென்று பஸ் நிறுத்தம் நோக்கி நடக்கிறான்.
பஸ்சுக்குக் காத்திருக்கிற நேரம் “ராமு?“ என்று குரல் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். “ரமேஷ்-அப்பா? எங்க இந்தப் பக்கம்?“
“கடை வரை வந்தேன்ப்பா“ என்கிறார். “நானே உன்னைப் பார்த்து ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.“ மெலிந்த உடல். ஜிப்பா அணிந்திருக்கிறார். முகத்தில் நாலு நாள் தாடி.
“ரமேஷ் வேலை முடிஞ்சி வந்திட்டானா?“
“வந்திட்டான். அப்பவே வந்திட்டான். என்னாலயும் முன்னைப் போல முடியல. அடிக்கடி உடம்பு படுத்துது. இவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கடான்னா ஒண்ணு ரெண்டு வருஷம் போகட்டும்ன்றான்…“
“ஐய. கல்யாணம் எவ்வளவு தள்ளிப் போகுதோ, அவ்வளவுக்கு ஆம்பளைங்க அதிர்ஷ்டசாலிகள்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “கல்யாணம் எவ்ள சீக்கிரம் நடக்குதோ அவ்வளவுக்கு பொம்பளைகள் அதிர்ஷ்டசாலிகள்.“
“நீ உன் இடக்குப் பேச்சை விட மாட்டியே…“ என்கிறார் ரமேஷ்-அப்பா. “என் காலத்துக்குப் பிறகு அண்ணன் இவன் கல்யாணத்தை நல்லபடியா பண்ணி வைப்பானா? இவனைக் கூட வெச்சிப்பானான்னே பயமா இருக்குடா எனக்கு…“ என்கிறார்.
“ஆமாமா. ஆனால் ரமேஷ் நல்ல பையன்.அண்ணாவைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டான்.“
“அதான் அண்ணனுக்கு இவன் மேல் அத்தனை அதிகாரம். போதாக்குறைக்கு அவனுக்கு வாய்ச்ச பெண்டாட்டி… அவ இவனுக்கும் மேல சிலிர்த்துக்கிட்டு நிற்கிறா.“
“அப்பிடிப் பார்த்தால் நீங்களே பாத்து ரமேஷுக்கு ஒரு பொண்ணை முடிச்சு போட்டு விட்டால் நல்லது தான். ஆனால் அண்ணன் மனைவியைப் பார்த்து தான் அவன் தன் கல்யாணத்தைப் பத்தி பயப்படறானோ என்னமோ… அதையும் பார்க்கணும்.“
அவர் மௌனமாய் நிற்கிறார் எதோ சொல்ல வருகிறாப் போல.
“காபி சாப்பிடறீங்களா ?‘
“இல்ல வேணாம். அப்பறம் ராத்திரி தூக்கம் கெட்டுரும்…“ என்கிறார்.
“உங்களை லீட்ல விட்டுட்டுப் போறேன். இருட்டாயிட்டதே…“
“இல்லை. உனக்கு நேரம் ஆகல்லியா?“
“பரவால்ல….“ என்கிறான் ராமசாமி. “அப்பறம் மாமா… ரமேஷ்….“ என பேசிக்கொண்டே அவருடன் ராமசாமி நடக்கிறான். ஒலிகள் தேய்கின்றன.
தெருவில் அவன் மாத்திரம் நடந்து கொண்டிருக்கிறான். தூரத்தில் அவன் அடுக்ககம் தெரிகிறது. இரவில் அதன் சில வீடுகளில் மாத்திரம் விளக்கு எரிகிறது. லிஃப்ட். மாடியில் ஏழாவது தளத்தில் வெளியே வருகிறான். கணபதி வீடடில் தொலைக்காட்சி சத்தம். பிரதமர் மோடியின் பெருங் குரல். எந்த நாட்டில் இருந்து பேககிறாரோ தெரியவில்லை.
கதவைத் தட்டுகிறான் திலகா வந்து திறக்கிறாள். கூடவே சிகாமணி.
“அத்தான் உங்களுக்கு போன் வந்தது…“
“யார்?“
“ரமேஷ்.“
“ரமேஷா?“ என்று திரும்பிப் பார்ககிறான்.
“இப்பதான் உள்ள வரார். கைகால் கழுவி ஆசுவாசப் பட்ட்டும்“ என்கிறாள் திலகா.
“எதுவும் சொன்னானா?‘ காரணம் இல்லாமல் இந்நேரம் கூப்பிட மாட்டானே?“
“நீங்க சாப்பிட வாங்க…“
“சாப்பிடலாம். சாப்பிடலாம்…“ என்கிறான் ராமசாமி. “என்ன விவரம் சொல்லுங்களேன் சனியங்களா?“ என்று திடீரென்று கத்துகிறான்.
“சே எதுக்கு இத்தனை கோபம் உங்களுக்கு? கோகுல் முழிச்சிக்கப் போறான். இப்பதான் படிச்சிட்டு…“
“உங்கிட்ட திட்டு வாங்கிட்டு தூங்கறானா?“ என்கிறான் ராமசாமி.
“ரமேஷ் எதுக்குடா கூப்பிட்டான். எனக்கு என்னவோ கெட்ட சேதி சொல்லப் போறீங்கன்னு இருக்கு.“
“ஆமாம்.“
“ச். என்னாச்சி?“
“ரமேஷோட அப்பா இறந்திட்டார்.“
“ம்“ என சட்டை பட்டனைக் கழற்றப் போனவன் அப்படியே நிற்கிறான். “உடனே போயி என்ன ஏதுன்னு பார்க்கணும்“ என்கிறான்.
“மணி பத்து ஆகுது. காலைல போயிக்கலாம் அத்தான்.“
“உனக்குத் தெரியாதுடா. என் அப்பா காலமாகும் போது, கூடவே அவன் இருந்தான் பாவம்…“
“அவரே காலைல வந்தால் போதும்னு சொன்னார்“ என்கிறாள் திலகா.
“அப்பிடியா?“ என்று திரும்பி அவளைப் பார்த்தான் ராமசாமி. “பணம் கிணம் எதும் வேணுமான்னு கேட்டியா அவன்கிடட?“
“காலைல நீங்க வந்தால் அப்பறம் உங்க கிட்டியே கேட்டுக்கறாராம். இப்ப முக்குக்கு முக்கு பிள்ளையாருக்கு பதிலா ஏ டி எம் வந்தாச்சி.“
திலகாவைப் பார்க்கிறான். பிறகு சற்று ஆசுவாசமாய்ப் புன்னகை செய்கிறான்.

“ஏ டி எம் வேற. பிள்ளையார் சன்னிதி வேற...“

“ஆகா.“

“ஆமாம். ஏ டி எம் னா நாம பணம் எடுப்போம். பிள்ளையார் சந்நிதின்னா உண்டியல்ல நாம காசு போடுவோம்.“

அதில் சிகாமணியும் சேர்ந்து கொள்கறின். “உண்டியல்ல இருந்து காசு எடுக்க முடியாது.“

“ஏ டி எம் மைக் கும்பிடவும் முடியாது.“
“சரி. காலைலயே போகலாம்…“ என சட்டை மீதி பட்டன்களைக் கழற்றுகிறான். வேடிக்கை என்னன்னால்…“ என்று சொல்ல வந்தவன் நிறுத்துகிறான். அவன் மனதில், ரமேஷ் அப்பாவுடன் பேசிக் கொண்டே நடந்து போன காட்சிகள் அலையடிக்கின்றன.

“இப்பதான் அவரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன்...“

“யாரை?“

“ரமேஷ் அப்பாவை.“

“எப்போ?“

“ஜஸ்ட். கொஞ்சம் முன்னாடி....“

“அவர் சாயந்தரமே இறந்துட்டார்“ என்கிறாள் திலகா.

அவன் தலையாட்டுகிறான்.
“சாவுல என்ன வேடிக்கை அத்தான்?...“
“பொணத்தை வெச்சிக்கிட்டு தண்ணியப் போட்டுட்டு ஆடறானுங்களே. சாவுல அதான் வேடிக்கை“ என சொல்ல வந்தவன், பிரசாகமாகி, “சிகாமணி… வேடிக்கை இருக்கு. நாளைக்கு நீயும் என் கூட வா ரமேஷ் வீட்டுக்கு“ என்கிறான்.
“நானும் ஒரு நடை வந்து பார்க்கணும்“ என்கிறாள் திலகா.
“அத்தான் கிட்ட ஒரு வேடிக்கை சொல்லணும்னு இருந்தேன்… ச். இப்ப வேணாம்…“ என்கிறான் சிகாமணி.
“நானுங் கூட சொல்லணும்‘ என்கிறான் ராமசாமி.
“இது நம்பவே முடியாத கதை அத்தான்.“
“இதுவும் தான்…“
“‘அத்தான். இன்னிக்கு நான் ஒரு அம்னீஷியா பேஷன்டடைப் பார்த்தேன்…“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“நீயுமா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.

தொடர்கிறேன்

91 97899 87842

No comments:

Post a Comment