Saturday, September 5, 2015

updted everyday - எஸ். சங்கரநாராயணன் அத்தியாயம் 16

திரைப்பட வியூகத்தில் 
ஒரு நாவல்

வ சி க ர ப் 
பொ ய் க ள்



மேஷ் வீடு. காலை மணி ஒன்பது.
வாசலில் ஷேமியானா. நாலைந்து நாற்காலிகள் காலியாய். ஒண்ணு ரெண்டு நாற்காலிகளில் ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்
வீட்டின் உள்ளே அவன் தந்தை மாலையெல்லாம் போட்டு நடுக் கூடத்தில் கண்ணாடிப பெட்டிக்குள் கிடத்தப்பட்டு இருக்கிறார். உறவினர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அமைதியான அமைதி.
ரமேஷின் அண்ணன் தினகரன் ஒரு பக்கமாக சேரில் கண் சிவக்க உட்கார்ந்திருக்கிறான். குடித்திருக்கிறான் என அவனைப் பார்த்தாலே தெரிகிறது. சட்டை காலர் நெகிழ்ந்து கிடக்கிறது. சற்று பின்பக்கமாக விரைத்து அமர்ந்திருக்கிறான். யார் கிட்ட வந்தாலும் கடித்துக் குதறி விடும் ஆவேச வெறி.
பிணத்தை எடுத்துப் போக எல்லாம் தயார் நிலையில். வாசலில் பல்லக்கு நிற்கிறது. ஓதுவார் தயாராய் இருக்கிறார். “யார் காரியம்லாம் பண்ணணும்?“ என ஓதுவார் ரமேஷைக் கேட்கிறார். ரமேஷ் ரொம்ப கவலையுடன் இருக்கிறான். அண்ணனைக் கை காட்டுகிறான்.
“தம்பி, வரீங்களா, ஆரம்பிக்கலாமா?“ என அவர் அண்ணனைப் பார்த்துக் கேட்கிறார்.
“யார் நீ?“ என அண்ணன் எழுந்து நிற்கிறான் கோபமாய். நிற்க முடியவில்லை. தள்ளாடுகிறது. அண்ணனின் மனைவி அவசர அவசரமாக வந்து அவனைத் தாங்குகிறாள். “நீ போடி. நான் பாத்துக்கறேன்…“ என அவளை எகிறுகிறான் தினகரன்.
“ரெண்டும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. ஜாடிக்கு மூடின்றா மாதிரி“ என யாரோ சொல்கிறார்கள்.
ரமேஷ் ஓடி வருகிறான். “அவர் ஓதுவார் அண்ணா. அவர்தான் எல்லாம் நடத்தித் தரணும்…“
“டேய் நம்ப அப்பன் எனக்காக இதுவரை சல்லிக்காசு செலவழிச்சது இல்லை…“
“ஆனால் இவனா திருடினது லட்ச லட்சமா…“ என ஒரு பெண் கூட்டத்தில் சொல்லியபடி கன்னத்தில் கை வைக்கிறாள். “தகராறு வலிக்கணும்னு எப்பிடி நிக்கிறான் பார்டி இவன்.“
“தென்னையைப் பெத்தா இளநீரு. பிள்ளையப் பெத்தா கண்ணீருன்னு பேரியவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க.“
“எந்த ஆஸ்பத்திரில பிரசவத்தில் தென்னை எவளுக்குப் பிறந்ததோ தெரியல“ என்கிறாள் ஒருத்தி. மத்தவள். “ச்சீ இழவு வீடுடி. சிரிப்புக் காட்டாதே“ என வாயைப் பொத்திக் கொள்கிறாள்.
‘அப்பா இருக்கும் கண்ணாடிப் பெட்டியைக் காட்டுகிறான் தினகரன். “இந்தாளு சாக மாட்டாம இது வரை மருந்துக்கு அதுக்கு இதுக்குன்னு எனக்குச் செலவு வெச்சான். இப்ப செத்தும் செலவு வைக்கிறான்…“
“ஒரு ஆஸ்பத்திரிக்கும் போக விடல்ல. வீட்லயும் டாக்டரை வரவழைக்கல்ல. தம்பியையும் அப்பாவை வெளியே கொண்டு வெச்சிப் பாத்துக்க விடல்ல இவன்… என்ன திட்டம் வெச்சிருந்தானோ?“ என்கிறாள் அந்த முதல் பெண்.
“அதெல்லாம் எதுக்கு அண்ணா. இப்ப அப்பா காரியத்தை நாம நல்லபடியா முடிப்பம்…“
“ஏண்டா சொல்ல மாட்டே? என்னை அவன் நடத்தின கூத்துக்கு… உன்னைப் படிக்க வெச்சான். நல்ல வேலைல உக்காத்தி வெச்சான். என்னை? என்னை என்ன படிக்க வெச்சான்?...“
“நீ படிக்கல அண்ணா. அப்பா என்ன செய்வாரு?“
“சரி. எனக்குப் படிப்பு வரல்ல இல்லே? அப்ப கை வெலை, சொந்தத் தொழில்னு எங்கியாவது என்னை ஏற்பாடு பண்ணி விடணும் இல்லே?“
“கொடுத்த காசை யெல்லாம் நீ சீட்டாடினே… தண்…“ என்றவன் அப்படியே நிறுத்துகிறான். “வாண்ணா. இன்னிக்கு  ஒரு பொழுது உன் கைல தான் இருக்கு. எல்லாரும் காத்திட்டிருக்காங்க…“
“அட போடா. எனக்கு இவன் பண்ணின கொடுமைக்கு, நான் இவனுக்குத் தான் பொறந்தேனான்னு இருக்கு…. த்தூ“ என்று பக்கத்தில் துப்புகிறான்.
“ஐயோ செத்துப் போனவங்களைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதீங்க“ என்கிறார் ஓதுவார்.
“வாய்யா. தர்மபுத்திரனுக்குத் தத்துப் பிளளையா நீயி? இந்த மனுசன் இருக்கற வரை என்னா கொடச்சல் குடுத்தான் தெரியுமா உனக்கு? காசு விஷயத்துல மகா கெட்டி. துட்டை எல்லாம் பெட்டிக்குள்ள வெச்சிப் பூட்டிக்கிட்டு, சாவியைத் தலையணைக்கு அடியில வெச்சித் தூங்கின மனுசன்…“
தினகரன் தள்ளாடுகிறான். ரமேஷ் அவனது நெகிழ்ந்த வேட்டியைக் கட்டி விடுகிறான். “இப்ப அதெல்லாம் எதுக்கு அண்ணா. அப்பா காலம் முடிஞ்சது. அவரை நல்லபடியா கரை சேக்கறது நம்ம கடமை இல்லியா?“
“கடமையா? யாருக்குடா? என்னைக் கடைசிவரை அவன் தன் புள்ளையாவே மதிக்கவே இல்லியேடா? ஒரு அப்பனா அவர் என்னை மேல தூக்கி விடவே இல்லியேடா? அவருக்குக் கடமை இல்லியா? அதைச் செஞ்சாரா அவரு?“ நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான். “அதெல்லாம் எனக்கு மறக்குமா?“
“ரொம்ப ஆக்டிங் குடுக்கறானே? இதெல்லாம் எதுக்கோ தெரியலியே“ என்கிறார் கூட்டத்தில் ஒருவர்.
“உனக்கு என்னதான் வேணும் அண்ணா?“
“அப்பிடிக் கேளு. தம்பி. அப்பா இருக்கும் போதே… இந்த வீடு இருக்குதே, அதுக்கு நல்ல கிரயம் வந்தது.“
“வீட்டை விக்கறதா?“
“அக்ஹ்“ சிரிக்கிறான். “நாம ரெண்டு பேருக்கு எதுக்கு இத்தனாம் பெரிய வீடு தம்பி? அதும் நீ தனிக்கட்டை. எனக்குதான் பொண்ணு பெறந்து வளர்ந்து பள்ளிக் கூடம் போகுது. இனி அது காலேஜ் போணும். அதை நான் கட்டிக் குடுக்கணும்…“
“அதான். நான் சொல்லல? மனசுல என்னமோ வெச்சிக்கிட்டு தான் பேசறான் இதெல்லாம்….“ என ஆண்கள் கூட்டத்தில் சலசலப்பு.
“அப்பா இருக்கறவரை அவர் கிட்ட ஆன மட்டும் சொல்லிப் பார்த்தேன். அவர் காதுல போட்டுக்கவே இல்லை. மனுசன் அப்படியே சாதிச்சி மண்டையப் போட்டுட்டான். அட பத்திரத்தையே காணல்ல. எங்க வெச்சிருக்கானோ… இந்தாளை நம்பி நான் அட்வான்சு வாங்கிட்டேன்…“
“அட்வான்சா?“
“‘பொய்யாய் இருக்கும்…“ என்று கிசுகிசுப்பு கிளம்புகிறது. “பத்திரமும் இல்லை. இவன் பேச்சை நம்பி ஆரு அட்வான்சு குடுப்பா?“
“அப்பன் காலம் முடிஞ்சது. இப்ப பிரச்னை உனக்கும் எனக்கும் தான்… கேட்டியா?“ தினகரன் திரும்பி யாரையோ கூப்பிடுகிறான். “கேசவா?“ யாரோ “அண்ணே?“ என ஓடி வருகிறான்.
“அட இவனா? இவன் கூட சீட்டு கீடடு ஆடியிருப்பானோ?“
“வீட்டை வெச்சே கூட ஆடுவாம்ப்பா இவன். எமகாதகப் பயல்…“
“தபார். இதுல ஒரு கையெழுத்துப் போடு…“
“என்ன இது?“
“இந்தச் சொத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு எழுதிக் குடு.“
“ஐயோ போடாதே. இவனை நம்பவே கூடாது நீ“ என அப்பாவின் தம்பி வந்து மறிக்கிறார். தினகரனைப் பார்த்து “எல்லாம் எங்க அண்ணன் சுய சம்பாத்தியம்டா. அதை அழிக்கன்னே நீ பாவ வித்தா வந்து பொறந்திருக்கே…“
“வாங்கடா எல்லாரும்… செத்த வீட்டுக்கு வந்தால், வந்தமா அழுதமா இழவுச் சோத்தைத் தின்னமான்னு கிளம்பிறணும். பஞ்சாயத்து கிஞ்சாயத்து வெச்கிக்காதீங்க.“
“உன் கையில சோறு வாங்கி மனுசன் திம்பானா. பெத்த அப்பன் சாவுல கலாட்டா பண்ணிக்கிட்டு நிக்கறே? தம்பி நீ கையெழுத்துப் போடாதே.“ சித்தப்பா தினகரன் பக்கம் திரும்புகிறார். “கையெழுத்து போடாட்டி?“ என்கிறார்.
“அப்பன் இங்கயே இப்பிடியே நாறிக்கினு கெடக்க வேண்டிதான்…“ என்று இளிக்கிறான் தினகரன்.
சித்தப்பா ரமேஷ் பக்கம் திரும்புகிறார். “டேய் இவன் சரிப்பட்டு வராட்டி பரவால்ல… நீயே கொள்ளி வெய்யி அப்பாவுக்கு.“
“அதெப்பிடி? மூத்த பிள்ளை நான் இருக்கறச்ச, அப்பிடி என்னைத் தாண்டி எடுத்திட்டுப் போவீங்களா?“
“என்னடா கழுதைப் பிறவியா இருக்கே? முன்னாடி போனா முட்டும் பின்னாடி போனா எத்தும்ன்ற கதையா…“
ரமேஷ் அழுதபடியே “அதெல்லாம் அப்பறமாப் பேசிக்கலாம் அண்ணா. மொத்ல்ல…“
“ஆகா, நான் என்ன விரல் சப்பற பப்பான்னு நினைச்சியாக்கும்? பார்ட்டி ரெடியா இருக்கு. ம்…“ என காகிதத்தை நீட்டுகிறான்.
“அவனுக்கு அப்பன் தேவை இல்லை.அப்பனோட பணம் மட்டும் வேணும் பாரேன்“  என்கிறாள் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி.
அதற்குள் இழவு மேளம் வருகிறது. கடகடவென்று அவர்கள்  தப்பு அடிக்க ஆரம்பிக்கிறார்கள். “ஏய் நிறுத்து நிறுத்து“ என எரிச்சலில் கத்துகிறான் தினகரன். “என்ன தம்பி சொல்றே?“
ரமேஷ் மௌனமாய் நிற்கிறான்.
“இவங்க இருக்காங்கன்னு பாக்காதே. எல்லாரும் சோத்துக்கு வந்த பசங்க. வக்கணையாப் பேசிட்டு நாளைக்கு பஸ் பிடிச்சி ஓடிருவாங்க.“
“உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது அண்ணா. அப்பாவோட எல்லா சொத்தையும் அவர் கையெழுத்தையே கள்ளக் கையெழுத்தாப் போட்டு நீ அழிச்சிட்டே. இப்ப அப்பாஞாபகமா மீதி இருக்கறது இது ஒண்ணுதான்…“
“இந்த வீட்டுப் பத்திரம் தான் என் கைக்குக் கிடைக்கல்ல. ச்சே“ என்கிறான் தினகரன். தம்பி பக்கம் திரும்புகிறான். “அட போடா. அப்பனே போயிட்டான். அப்பாஞாபகமாகவது வெங்காயமாவது? உங்க அப்பனை… கைல வெச்சிருக்கியே செல் ஃபோன். அதுல க்ளிக் – ஒரு ஃபோட்டோ எடு. கைல வெச்சிக்கோ. அவ்ளதான். அப்பாஞாபகம்னு இத்தனாம் பெரிய வூட்டை எடுத்துப் பையில வெச்சிக்கப் போறியா?“ என்று தன் சட்டைப் பையில் வைத்துக் கொள்வது போலக் காட்டுகிறான். அந்தக் கேசவன் சிரிக்கிறான்.
ரமேஷ் மௌனமாக நிற்கிறான். “நாழியாறது“ என்கிறார் ஓதுவார்.
“உனக்கு என்னய்யா? எவ்வளவு நேரம் இருக்கியோ துட்டு கேட்டு வாங்கிக்கப் போறே…“
ரமேஷ் தினகரனின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.
“அண்ணா சீக்கிரம்…“
“கையெழுத்து...“
“முடியாது.“
“கிழவன் அழுகி நாறட்டும்… சனிப் பிறவி வாழும் போது தான் என்னைக் கழுத்தறுத்தான். செத்தும் கொடுத்தான் சீதக்காதிம்பாங்க. செத்தும் கெடுத்தான். எங்கப்பன்.“
அப்போது ராமசாமியும் சிகாமணியும் உள்ளே நுழைகிறார்கள். நிலவரம் பார்த்ததுமே ராமசாமிக்கு தினகரன் கலாட்டா செய்கிறான் என்று விளங்கி விட்டது.
அவனைப் பார்க்க ரமேஷ் ஓடிவருகிறான். “வா ராமு…“
“என்ன உங்க அண்ணன் கலாட்டா பண்றானா?“
“ஆமாம். வீட்டை விக்க ஏற்கனவே சொல்லி வெச்சிருக்கான் போல.“
“ஐயோ.“
“அப்பா இருக்கும் போதே அவரை மிரட்டி கையெழுத்துப் போட வெச்சிறணும்னு பாத்தான் போல இருக்கு. அது நடக்கல்ல. பத்திரமும் கெடைக்கல்ல.“
“பத்திரம் எங்க தெரியுமா?“
“தெரியல. அப்பா அதை ரகசியமா வெச்சிருக்கார் எங்கியோ.“
“எனக்குத் தெரியும்“ என்கிறான் ராமசாமி
மனசில் பழைய காட்சி ஒன்று. ரமேஷ் அப்பாவை வீடு வரை பேசிக்கொண்டே கொண்டு விடும் காட்சி வருகிறது.
“அத்தான் இந்த சீன்ல நீங்கதான் ஹீரோ போல இருக்கு…“ என்கிறான் சிகாமணி சிரித்தபடி.
“உனக்கு எப்பிடித் தெரியும்?“ என்று ரமேஷ் அவனைக் கேட்கிறான். “பத்திரம் உன்கிட்ட இருக்கா?“
“இல்லை. அது இருக்கற இடம் இப்ப தெரிஞ்சிரும். இப்ப என்ன நிலைமை இங்க?“
“அப்பா காலமும் ஆயிட்டது. என்னைக் கையெழுத்துப் போடுன்னு மிரட்டறான்…“
“எதுக்கு?“
“வீட்டை விக்கப் போறானாம். எனக்கு இந்த வீடு சம்பந்தம் இல்லைன்னு எழுதிக் கேட்கிறான்…“
“போட்டுட்டியா?“
“இல்லை.“
“நல்லவேளை“ என்கிறான் ராமசாமி. “அட்வகேட் முரளியை வரச் சொல்லியிருக்கேன். இப்ப வந்திருவார்…“
“அட்வகேட்டா? எதுக்கு?“
“அவர் வந்தால் உங்க அண்ணன் கொட்டம் அப்படியே அடங்கிரும்.“
“என்ன சொல்றே?“ என்கிறான் ரமேஷ். “பொறு பையா பொறு“ என்கிறான் ராமசாமி. அப்போது வாசலில் கார் ஒன்று வந்து நிற்கிறது. அதில் இருந்து அட்வகேட் இறங்குகிறார்.
“செம சீன் அத்தான்“ என்கிறான் சிகாமணி. “யார் இவரு?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“இப்ப பார் வேடிக்கையை…“ என ராமசாமி சிகாமணியிடம் சொல்கிறான். “சினிமா மாதிரி இருக்கு அத்தான்.“
முரளி கூட ஒரு உதவியாளரும் வருகிறார். “இங்க யார் தினகரன்?“
“யார் நீங்க? கருப்பு கவுன்? ஓ சாவுக்குன்னு துக்கமா வந்திருக்கீங்களா?“ என்கிறான் தினகரன். “ஐம் அட்வகேட் முரளி.“
“நாங்க வீட்டை விக்க வேற லாயர் வெச்சிருக்கோம் . என்ன கேசவா?“
“இவர் வேண்டாம் சார். இவர் பார்வையே சரி இல்லை. ஃபிராடு மாதிரித் தெரியுது.“
“யாரு நாங்களா?“ என்று கோபப் படுகிறார் முரளி. “சங்கர், அந்த உயிலை அவர்கிட்ட குடுங்க.“
“உயிலா? டேய் இவர் என்னவோ சொல்றார்றா?“ என சட்டென விரைப்பாகிறான் தினகரன். அவனுக்கு போதையே அடங்கி விட்டது.
சிகாமணி அந்த இழவு மேளகாரனைப் பார்த்து சைகை காட்டுகிறான். கெட்டி மேளம், கெட்டி மேளம் என்பதைப் போல. கடகடவென்று மழை போல சத்த இரைச்சல். “டேய் டேய் நிறுத்து நிறுத்து“ என கத்துகிறான் தினகரன்.
“கிழவன் எம காதகன் போல இருக்குப்பா…“ என்கிறான் கேசவனிடம். ‘அட்வகேட் பக்கம் திரும்பி “இதுல என்ன எழுதியிருக்கு சார்?“
“இந்த வீடு திருவாளர் கல்யாணசுந்தரத்தின் சுய சம்பாத்தியம். அது அவரது முழு விருப்பப்படி தனது இளைய மகன் ரமேஷுக்கே போய்ச் சேர வேண்டும்னு எழுதியிருக்கு.“
கூட்டத்தில் சலசப்பு. இழவு மேளம் வாசிக்கிறார்கள். “யேய் நில்லுங்கடா. ஆ வூன்னா ஆரம்பிச்சிருவீங்க. நீங்க போடற அளப்பரைல செத்தவனே எழுந்துக்குவான் போலருக்கு…“ என்கிறான் தினகரன்.
சித்தப்பா வருகிறார். “சரியான நேரத்தில் வந்தீங்க“ என அவர் முரளியிடம் கை குலுக்குகிறார்.
“சினிமால அதெல்லாம் சரியா வருவாங்க. வந்து இ. பி. கோ. நம்பர்லாங் கூட சொல்லுவாங்க“ என்கிறான் சிகாமணி.
“என் அண்ணன் செஞ்சது சரிதான்.“ சித்தப்பா முரளியிடம் சொல்கிறார். “இருக்கிற சொத்தில் பாதிக்கு மேல் இவன் ஊதாரித்தனத்திலேயே அழிச்சிட்டான். இந்த வீடாவது தம்பிக்குப் போகணும்னு அவன் நினைச்சதுல என்ன தப்பு இருக்குது?“ தினகரனைப் பார்க்கிறார். “இது குடுத்தாலும் அழிச்சிடடு தான் வந்து நிப்பான். இப்பவே விக்க ஏற்பாடு பண்ணினவன் தானே இவன்? பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் குடுக்கவா விக்கறான் இவன்?“
‘திடீரென்று அந்த உயிலை அப்படியே சுக்கு நூறாகக் கிழித்து எறிகிறான் தினகரன். அவன் அதைக் கிழித்து முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார் முரளி. “வேற காபி, ஒரிஜினல், இந்த வீட்டுப் பத்திரம் எல்லாம் எங்கிட்ட லாக்கர்ல பத்திரமா இருக்கு…“ என்கிறார்.

தினகரன் அவரையே பாரக்கிறான். சட்டென திரும்பிப் பார்க்கிறான். கூட இருந்த கேசவன் சட்டென பதுங்கி பம்மி காணாமல் போகிறான்.
“இப்ப என்ன சொல்றீங்க?“ என்கிறான் தினகரன் அட்வகேட்டிடம்.
“நீங்க இனியும் கலாட்டா பண்ணினால் போலிஸ் வரும். வீடு மொத்தமும் அவருக்கு. அப்படித்தான் உயில்ல இருக்கு. “
“சித்தப்பா எங்களை வெளிய அனுப்பிறாதீங்க…“ என தினகரனின் பெண் ரமேஷிடம் வந்து கையைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் கூட தினகரனின் மனைவி. கண்ணாலேயே இறைஞ்சுகிறாள்.
தினகரனைப் பார்த்து அவன் மனைவி பேசுகிறாள். “இத்தன்னாள் இந்த மனுசன் செஞ்ச அக்கிரமத்தை யெல்லாம் தட்டிக் கேட்கவே ஆள் இல்லாமல் ஆச்சே… சரியாத்தான் சொல்லியிருக்காங்க… ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வராமலா போயிரும்.“
“டேயப்பா, சட்னு எல்லாரும் எப்படி கட்சி மாறிட்டாங்க…“ என உள்ளங் கையில் குத்திக் கொள்கிறான் தினகரன்.
கூட்டத்தில் ஒரு பெண். “அண்ணன்காரன் சொத்தைப் பிடுங்கிக்கிட்டு தம்பியை வெளிய அனுப்பப் பார்த்தான். இப்ப பார் நிலைமை. அப்படியே உல்ட்டா. தம்பி சொன்னால் அண்ணனே வெளியே போயிற வேண்டிதான்… கடவுள் எல்லாத்தையும் பாத்திட்டே இருக்கான் இல்லே?“
 “அட்றா…“ என்கிறார் சித்தப்பா. இழவு மேளம் முழங்குகிறது.
“இப்ப என்ன சொல்றே?“ என்று சித்தப்பா தினகரனைப் பார்க்கிறார். “என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிறாதே ரமேஷ்…“ என்கிறான் தினகரன் சுரத்து அடங்கி. இழவு மேளம் ஒலிக்கிறது. சிறிது மௌனம்.
“மாட்டேன் அண்ணா“ என்கிறான் தம்பி. மீண்டும் இழவு அதிரடிகள் கேட்கின்றன.
“வாங்க. நேரம் ஆச்சி“ என்கிறார் ஓதுவார்.
“ஏன்யா அவசரப் படறே? உமக்கு வேற இழவு தயாரா இருக்கா?“ என்று கேட்கிறான் தினகரன்.
வழியில் ராமசாமியைப் பார்க்கிறான். “நீ வர்ற வரைக்கும் கதை நல்லாப் போயிட்டிருந்தது… எல்லாம் உன் ஏற்பாடு தானா?“ என்கிறான்.
“எல்லாம் உங்க அப்பா ஏற்பாடு“ என்கிறான் ராமசாமி.
அவர்கள் தாண்டிப் போனதும், சிகாமணி “அத்தான். இந்த விஷயம் ரமேஷுக்கே தெரியல்லே. உங்களுக்கு எப்பிடித் தெரிந்தது?“ என்கிறான்.
“அவரே சொன்னாரு.“
“யாரு?“
“ரமேஷ் அப்பா…“
“எப்போ?“
அவன் மனதில் அந்தக் காட்சி வருகிறது – ரமேஷ் அப்பாவும் அவனும் தெருவில் இரவில் நடந்து போகிறார்கள். “அண்ணனை நம்ப முடியல்ல ராமு. னக்கும் வயசாயிட்டு வருது. என் சொத்தை ஒண்ணொண்ணா என் கண் எதிர்லியே இவன் விக்கப் பார்க்கிறான். சில சமயம் கள்ளக் கையெழுத்து போட்டே கூட வித்துர்றான். போலிசுக்குப் போலாம். இவன் ஜெயிலுக்குப் போவானேன்னு இருக்கு. எனக்கும் தானே அது அசிங்கம்… அதுனால…“
ராமசாமி திரும்பி ரமேஷ் அப்பாவைப் பார்க்கிறான். “அதுனால?“
“முரளின்னு ஒரு அட்வகேட். அவரை வரச் சொல்லியிருக்கேன். பேசாமல் இந்த வீட்டை ரமேஷ் பேர்ல எழுதி வெச்சிறப் போறேன். எல்லாம் என் சுய சம்பாத்தியம். தினகரன் ஒண்ணும் செய்ய முடியாது. முன்னாடியே இந்த யோசனை இல்லாமல் போச்சு… இன்னாலும் தினகரன் சட்னு கண்டு பிடிச்சிருவான்… அந்த பயம் வேற. இதை மட்டும் பத்திரத்தையும் குடுத்து உயிலையும் கொடுத்து வைக்கலாம்னு ஒரு யோசனை…“
அப்படியே இருளில் உருவங்கள் கரைகிறாப் போலிருக்கிறது.
“இது எப்ப அத்தான்?“
“நேத்தி.“
“அதாவது ரெண்டு வருஷம் முன்னால?“ என்கிறான் சிகாமணி.
“அதாவது நேத்தி“ என்கிறான் ராமசாமி.
“உங்களை நம்பறதா வேணாமான்னே புரியல்லியே“ என்கிறான் சிகாமணி.
பிணத்தை எடுத்துப் போகும் வண்டியைப் பார்க்கிறார்கள். சப்பரம் அசைகிறது. படபடவென்று வேட்டு சிதறுகிறது. ஒரே புகை மண்டலம். 
தொடர்கிறேன்

91 97899 87842
storysankar@gmail.com




No comments:

Post a Comment