Friday, September 18, 2015

அத். 28 updated everyday திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப்
பொய்கள்
அத்தியாயம் 28
ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். அவன் கூடவே வருகிறாள் திலகா. “இந்த மாதிரி கல்யாணமான புதுசுலதான் கீழே வரை வந்து நீ வழியனுப்பினேடி… மீண்டும் அந்த நாட்கள் ஆரம்பிச்சால் அது நல்ல விஷயம் தான்… வா.“
லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள். அது மைனஸ் 1 காட்டவில்லை. பூஜ்யம் முதல் எட்டு வரை தான் காட்டுகிறது. திலகா அவனைப் பார்க்கிறாள். “கூட நீ இருக்கியே… அதான் நோ மைனஸ் 1“ என்கிறான். “BECAUSE YOU ARE PLUS IN MY LIFE…“ என்று சிரிக்கிறான்.

“அப்ப கோகுல்?“

“பிளஸ் 1.“
“வேடிக்கை யெல்லாம் வேணாம். நீங்க இனிமேல் மைனஸ் 1 போக வேணாம். சரியா?“ என அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு கேட்கிறாள் திலகா. லிஃப்ட் இறங்கிக் கொண்டிருக்கிறது. “நானும் நீயும் தனியா… ஹி ஹி…“
“HE யும் இல்லை SHE யும் இல்லை. பேச்சை மாத்தக் கூடாது…“
அதற்குள் தரைத் தளம் வந்து விடுகிறது. வெளியே வருகிறார்கள். “இப்ப… நீ போன பிறகு திரும்ப நான் வந்து முயற்சி பண்ணினால்?“ என்று சிரிக்கிறான். அவள் முகம் மாறுகிறது. “சொன்னால் கேட்க மாட்டீங்களா?“ என்கிறாள். “அந்த ரௌடிப் பசங்க திரும்பவும் வருவாங்க… அப்டின்னு எனக்கு பயம்மா இருக்கு.“
“வேற யாருக்கோ விழ வேண்டிய அடி அது.“
“திரும்ப அதே ‘வேற யரோ‘ன்னு உங்களையே இன்னொரு வாட்டி அவங்க தாக்க வந்தால்?“

“உனக்கு இப்பிடி ஒரு ஆசையாடி?“ என சிரிக்கிறான். “ஆனால் என்னகம்? திரும்ப கந்த சஷ்டி கவசம்…  எட்செட்ரா எட்செட்ரா“
“இப்ப என்ன சொல்றீங்க?“
“வெரி சிம்ப்பிள். இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்கு நான் இறந்த காலத்துக்குப் போக மாட்டேன்…“
“திருந்திட்டீங்களா? பரவால்லியே…“
“ஏன்னால்…“
“ஏன்?“
“இது ‘எனக்கு‘ இறந்த காலம் அல்ல. என் அப்பாவுக்கு இறந்த காலம்…“ என சிரிக்க நினைக்கிறான். “BAD JOKE. எனக்கே சிரிப்பு வரல்ல.“

கொஞ்ச நேரம் மௌனமாகப் போகிறது.
“வேணாம். அதைத் தவிர்க்கறது நல்ல விஷயம் தான். இப்ப சத்திக்கு உங்களைப் பற்றி எனக்கு பயம் இல்லை.“ அவன் பக்கமாய் உரசினாப் போல வந்து ஒட்டிக் கொள்கிறாள். “அப்பா ஞாபகம் ரொம்ப இடைஞ்சல் பண்ணாமல் பாத்துக்கங்க. நல்ல மனுசன். என்னை அவர் தன் பொண்ணா தான் நடத்தினார்.“
“ஒரு ஜவுளிக்கடை குமாஸ்தா. என்னையும், மாதுவையும் இவ்ள தூரம் தூக்கி விட்டதே ஆச்சர்யம். சரி. அப்பா கதை வேணாம்… ஓ. கே.“ சிரித்தபடி போய் வண்டியைக் கிளப்புகிறான். “திலகா, வந்து ஆபிஸ்ல என்னை விட்டுட்டுப் போறியா? உனக்குதான் வண்டி ஓட்டத் தெரியுமே?“
“வேணாம். உங்களை நம்பறேன். டாட்டா“ என்று காட்டுகிறாள் திலகா.
வண்டி காம்பவுண்டை விட்டு வெளியேறுகிறது.
வங்கி. மதியம் பன்னிரண்டரை. ரமேஷ் வேலையாய் இருக்கிறான். “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமேடா?“ என்கிறான் ராமசாமி.
“ஒரு மணி வாக்கில் சாப்பாட்டு நேரத்தில் பேசலாமே?“
“ம். எனக்கு தான் வேலையே ஓடல்ல.“
“ஏன்?“
“பழைய காலம்… உள்ளே பார்த்தால் எனக்கு கிருஷ்ணராஜ் உட்கார்ந்திருக்கறா மாதிரியே இருக்கு.“
“ரெண்டு வாட்டி மகாவைப் பார்க்கறது அதிர்ஷ்டம்னால்… ரெண்டாவது வாட்டி கிருஷ்ணராஜை சமாளிக்கறது… பாவம்டா நீ“ என்று ரமேஷ் சிரிக்கிறான். “எனிவே நான் வேலையைப் பார்க்கிறேன்.“
“கொரியர் சார்…“ என்று ஒருவன் வர, அவனிடம் கையெழுத்திட்டு கவர்களை வாங்கியபடியே, அவனது தாளில் அலுவலக சீல் நச்சுகிறான்.
“தம்பி?“ என்று குரல் கேட்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். நகை அடகு வைத்துப் போன அந்த ஏழைப் பெண்.
“வாம்மா…“ என அவளை அருகே அழைக்கிறான். அவளைப் பார்க்கப் பாவமாய் இருக்கிறது. அவள் கணவனைப் பற்றிக் கேள்வி கேட்க நினைக்கிறான். எப்படிக் கேட்க எனத் தயக்கமாய் இருக்கிறது. அவளையே பார்க்கிறான்.
“நீங்க உபகாரம் பண்ணினீங்க தம்பி. ரொம்பப் பெரிய விஷயம்…“ என்கிறாள்.
“இருக்கட்டும்“ என்கிறான் அடக்கமாக.
“ஆனால்….“
“சொல்லுங்கம்மா.“
“அவர்… இறந்துட்டாரு.“
அவள் அழவில்லை. அழுது தீர்த்திருப்பாள் என்று காட்டுகிற முகம். தவிரவும் பொது இடத்தில் அழுவது பற்றி அவள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கலாம். ஓரளவு அவள் அவர் சாவை எதிர்பார்த்தும் இருக்கலாம்.
“ஐயோ“ என்கிறான் மெல்லமாய். இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
“ஓரளவு டாக்டர்மாரே ஆபரேஷன் பண்ணிப் பாக்கலாம்னு தான் சொன்னாங்க. அத்தனைக்கு நம்பிக்கையாச் சொல்லல…“
“அப்படியும் நீங்க நல்லபடியா முயற்சி எடுத்து அவருக்கு உங்களால எவ்வளவு முடியுமோ அதைப் பண்ணினீங்க…“ என்கிறான் ராமசாமி.
“ரொம்ப நல்ல மனுசன் அது….“ என்கிறாள் அவள். “அவரு வீட்டுக்கு வரும்போது நான் கட்டாயம் வீட்ல இருக்கணும். இல்லாட்டி தேடிக்கிட்டு பக்கத்து வீடு எதிர் வீடுன்னு வந்து பாக்கும்…“ அதைச் சொல்ல அவள் வெட்கப் படுகிறாள்.
“ம். நல்ல ஒத்துமையா இருந்தீங்க போல…“ என்கிறான் புன்னகையுடன்.
“வேளை வந்திட்டது. அவர் போயிடடாரு. ஆனால்… நான் முன்ன போயிருந்தால்… அது கண்டிப்பா தூக்குல தொங்கிருக்கும். நிச்சயம்“ என்கிறாள். “என் மேல அவருக்கு உசிரு.“
அதற்கு மேல அவனுக்கு என்ன பேச தெரியவில்லை. அவளையே பார்த்தபடி இருக்கிறான்.
“தம்பி. அவரு போயிட்டாரு. போயி நாலு நாளு ஆயிட்டது.“
“சொல்லுங்க“ என்று தலையாட்டியபடி அவளையே கூர்ந்து பார்க்கிறான் கருணையுடன்.
“எனக்கு ஒரு உதவி வேணும் தம்பி.“
“சொல்லுங்க. சொல்லுங்க.“
“எவ்வளவோ செஞ்சிட்டீங்க நீங்க. எப்பிடிக் கேட்கறதுன்னு தான் தெரியல…“
“வந்தாச்சி. கேளுங்க. முடிஞ்சா செய்யறேன்.“ அவனுக்கு அவளுக்கு உதவ வேண்டும் பொல் இருக்கிறது. சற்று இதமான பார்வை பார்க்கிறான்.
“அதான். அவர் போயி… பத்தா நாள்…“
“அதுக்கு…“
“நான் தாலியறுக்கணும்“ என நேரே அவள் அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அதில் துக்கம் இல்லை. எல்லாம் கடந்த நிமிர்வு அது. அவனுக்கே அவள் அப்படி பட்டென்று பேசியது என்னவோ போலிருக்கிறது. வெறுமனே தலை யாட்டுகிறான்.
“தாலி இல்லை.“
அவளையே வெறித்துப் பார்க்கிறான்.
“அது இங்க இருக்கு. அடகுல…“
அப்போது தான் அவனுக்கு அவள் கேட்டதே உறைக்கிறது. அவனுக்கு ரொம்ப வருத்தமாய் இருக்கிறது.
“நகையை மீட்டுதான் வெளிய எடுக்க முடியும்.“
“என்கிட்ட பணம் இல்லியே.“
“அப்பன்னா நாங்க என்ன பண்றது?“ என அவளைப் பார்க்கிறான். அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருக்கிறது.
திடீரென்று அவள் அழுவதைப் போல ஆரம்பித்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறாள். “ஏழைங்களுக்கு சடங்ககுகள் கூட  பெரிய இம்சையா இருக்குது தம்பி. இது கௌரவப் பிரச்னை எங்களுக்கு…“
அவன் அவளையே பார்க்கிறான். “சரி தம்பி ஆவறது படி ஆவட்டும்…“ என ஒரு தீர்மானம் போல எழுந்து கொள்கிறாள்.
“இருங்க“ என்கிறான் அவன். அவள் கண்கள் விளக்கேற்றிக் கொள்கின்றன.
“எத்தனையோ உதவி செய்திருக்கேன் நான் என் வாழ்க்கையில். இது மாதிரி ஒரு உதவி நான் செய்ததே இல்லை. யாரும் கேட்டதும் இல்லை.“
“அந்தத் திருமாங்கல்யம்… அது மட்டும் போதும் தம்பி…“ என்கிறாள். “உன்னைப் பார்த்துக் கேட்கலாம்னு பட்டுது நீ கேலியடிக்க மாட்டே…ன்னு இருந்தது.“
“சரி. அப்படி உட்காருங்க“ என அவன் உள்ளே போகிறான். “மத்த நகை… எதுவும் வேணாம். திருமாங்கல்யம் மாத்திரம் தந்தா போதும். அதையும் திரும்ப நான் கொண்டாந்து தந்திர்றேன். இப்ப சத்திக்கு…“
சரி சரி, என்று தலையாட்டியபடியே அவன் ஒரு செக் கிழித்து கையெழுத்திட்டு எடுத்துக் கொள்கிறான். உள்ளே போகிறான்.
மதிய உணவு இடைவேளை. “ஏய் மகா பொறந்த நாளை நீ தானேடா சூப்பரா வழி நடத்தினே. உனக்கு ஞாபகம் இருக்கா?“ என்றபடியே டிபன் பாக்ஸைப் பிரிக்கிறான் ராமசாமி.
“தினப்படி இங்க எல்லாரும ஒண்ணா உட்கார்ந்து அரட்டை யடிச்சிக்கிட்டே சாப்பிடுவோமேடா. அது ஒரு காலம். அந்தப் பையன் ஸ்ரீநிவாஸ் அவனும் அருமையான பையன். அட கடைசில அவளுக்கு இப்பிடி ஆனப்ப அவனைத் தான் பார்க்கவே சகிக்கல்ல…“
“துரும்படியில் யானை படுத்திருக்கும்னு சொல்வார்கள். எந்த சின்ன நொடிக்குப் பின்னால எத்தனை பெரிய விபரீதம் இருக்குன்னு நம்ம யாருக்குமே தெரியறது இல்லை.“
“சூப்பர்“ என்றபடியே ரமேஷ் வந்து உட்கார்கிறான். “அண்ணன் பொண்ணு சியாமளா… இந்தப் பரிட்சைல நல்ல மார்க்கு. படிப்புல எப்பவுமே அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு.“
“வெரி குட். வெரி குட். நல்லா படிக்கட்டும். அவளுக்கு நீதான் படிக்கட்டு.“
“நீ எவ்வளவு வேணாப் படி. செலவு கிலவுன்னு கவலை வேணாம். நல்லா படிச்சா வெளி நாட்டுக்கே உன்னை அனுப்புவேன்னு சொல்லியிருக்கேன்…“
“எப்பிடி இருக்கான் உங்க அண்ணா?“
“அவன் கதைய விடு. வீட்டுக்குத் தலைவன் அவன். தறுதலை-வனா இருக்கான். கார் வாங்கினியே எப்பிடி இருக்குன்னு கேட்டானாம். ஹாரனைத் தவிர எல்லாத்திலயும் சத்தம் கேட்குது-ன்னானாம் அடுத்தவன். அந்தக் கதை.“
“வெண்டைக்காய் சாம்பார். கொஞ்சம் ஊத்திக்கறியா?“
“போடு போடு. நீ வெண்டைக்காய்னா உருகிருவியே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ். “என்னவோ பேசணும்னியே ராமு?“ என எடுத்துக் கொடுக்கிறான்.
“ஆ… ஆமா… இங்க பாத்தியா?“ என்று தலையைக் காட்டுகிறான்.
“என்ன?“
“கிட்ட வந்து பார்…“
வந்து பார்க்கிறான். “ஐயோ ரத்தம் கட்டியிருக்கு. எங்கயாவது இடிச்சிண்டியா?“
“இல்ல. ஒருத்தனை என்னை ஒரு கட்டையால நச்னு…“
“ஐயய்யோ. எப்போ?“
“நேத்தி…“
“நீ நேத்தி வேலைக்கே வரில்லியேடா.“
“நான் வந்திருந்தேன்.“
“எங்கன்னால், இங்கியே இருந்தேன். உன் கூடவே இருந்தேன். அதாவது ரெண்டு வருஷம் முந்தி – அப்டிம்பே.“
“கரெக்ட்.“
“பாங்க்குக்கு உள்ள வந்து உன்னை ஒருத்தன் அடிச்சானா?“
“அது வேற கதை… சொல்றேன்.“
“ஏய் நம்ம பாங்க்ல ஒரு ROBBERY … நடந்ததே. உனக்கு ஞாபகம் இருக்கா?“ என கண் சிரிக்கக் கேட்கிறான் ரமேஷ்.
“அதை அப்பறம் பேசலாம். நான் நேத்தி சாயந்தரம் கடற்கரையில் இருந்தேன்.“

“கடற்கரைக்கு ஏன்டா போனே?“

“ரமேஷ். உனக்கு ஞாபகம் இருக்கா? நேத்தி ஜுலை ஒன்பது. சாய்ந்தரம் நாலரை மணி வாக்கில் தான் அந்த சேதி வந்தது... ஃபோனில். அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அடி பட்டுக்கிட்டார்.“

“ம். ம். ஞாபகம் இருக்கு.“

“ரெண்டாவது வாட்டி அந்தத் தகவலைக் கேட்க வேணாம்னு நான் பாங்கைகை விட்டு வெளியே வந்திட்டே.ன...“

“கடற்கரைக்கு....“ என்கிறான் ரமேஷ்.

“ம்“ என தலையாட்டுகிறான் ராமசாமி. “அப்பதான்... யாரோ ஒருத்தன்னு என்னைத் தப்பா புரிஞ்சிக்கிட்டு என்னைத் தாக்க வந்தாங்க…“
“எத்தனை பேர்?“
“மூணு பேர்.“
“ஐயோ.“
“அதில் முதல் அடி போட்டவன் திரும்ப ரெண்டாவது அடிக்கு கம்பை வீசுமுன் நான் அவனைப் பார்த்தேன். அவன் முகம் என்க்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.“
“பரவாயில்லை. அதை வெச்சி என்ன பண்ணப் போறே?“
“அடுத்தவன் என் பக்கமா வந்தான். அவன்தான் என் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தது. இது வேற ஆளுடா.. ஆள் மாறிப் போச்சி…ன்னு கத்திக்கிட்டே அவங்க ஓடிட்டாங்க.“
“நல்ல வேளை பின்ன எப்பிடியோ நீ வீடு வந்து சேர்ந்திட்டே. இது மாதிரி விஷயங்கள் ஏன் நடக்குது? அதுதானே உன்னோட கேள்வி?“
“அதுவேதான். நீ இப்படி விஷயம்லாம் எங்க படிச்சிட்டு வரே. அதுவே எனக்கு ஆச்சர்யம். இன் ஃபாக்ட், நீ என்னை நம்பவே மாட்டியோன்னு எனக்கு இருந்தது.“
“இப்பவும் நம்பல“ என்று சிரிக்கிறான். “இது உன்னோட இல்யூஷனா இருக்கலாம்‘…“ என்றவன், “உன் கூட நான் இப்ப பேசிட்டிருக்கேனே? இது என்னோட இல்யூஷனாகக் கூட இருக்கலாம்னு படுது எனக்கு.“
“அன்னிக்கு டெலிபதின்னே. இன்னிக்கு இல்யூஷன்றே. இதுக்கு நோ செல்யூஷனா இருக்கு.“
“வாழ்க்கைல நிறையப் புதிர்கள் இருக்கு ராமு. நிறைய விஷயங்கள் அதில் விளக்க முடியாமலேயே நடந்து முடிஞ்சும் ஆயிருது. ஏன்னா மூளை எல்லாத்தையும் தன் அனுபவப் படி அறிவுத் தளத்தின் படி உள் வாங்கிக்குது. அதன் கோணம் மாறும் போது குழப்பம் தான் வருது.“
“மோர் குடிக்கிறயா?“
“வேணாம். ஏற்கனவே தொண்டை கட்டினாப் போல இருக்கு. எல்லாம் அனுபவங்கள்னு போயிட்டே இருக்கறது நல்லது.“
“நீ என்னவோ ALTERNATE REALITY அது இதுன்னு என்னவோ சொன்னியேடா. இப்ப சிகாமணி சொல்றான். நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அனுபவிக்காத சம்பவம் இது. ரௌடிங்க கிட்ட அடி வாங்கியது. இதுனால திரும்ப நான் பழைய காலத்துக்குப் போகும் போது திரும்ப உனக்குத் தெரியாத சம்பவங்கள்லாம், பழைய காலத்தில் நடக்காதது எல்லாம் நடக்கும். அது வேற உலகம். இன்னொரு உலகம்.... அப்டின்றான்.“
“சரியாத் தான் படுது. கண்ணா…“ என கை கழுவி விட்டு அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். “ஒரே விஷயம் ரெண்டாவது தடவை வந்தாலே அது முன் தந்த அதே அனுபவத்தைத் தர்றது இல்லை. ஏன்னா அது உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச அனுபவம்தானே? அதுவே ALTERNATE REALITY தானே?“
“விட்டால் பேயே ALTERNATE REALITYன்னுருவீங்கடா நீங்க“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
உணவு முடிந்து வெளியே வருகிறார்கள். மேனேஜர் ராமகிருஷ்ணன் “என்னன்னவோ பேசறீங்க? எதும் கண்ட கண்ட ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கறீங்களாக்கும்?“ என்று கேட்கிறார்.
சிரித்தபடி அவரைத் தாண்டிப் போகிறார்கள்.
அப்போது அலைபேசி அழைப்பு. எண் பார்க்கிறான்.
“ஹலோ…“
மறுமுனையில் திலகா. “ஹலோ.“
“எடுக்கறானா தொடர்பு எல்லைக்கு வெளியேயான்னு பாக்கறியா திலக்?“
“தொடர்பு எல்லைக்கு உள்ளே… அப்பிடியே இருங்க“ என்று போனை வைக்கிறாள் திலகா.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

bulkchapters updated every Tuesday / Friday – visit vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment