Sunday, September 27, 2015

அத் 37 -திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்.

updated everyday

வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 37
S O N G  N O  - 6
வரிசையாக வாசல் கதவுகள் போல கட் அவட்கள். எல்லாவற்றிலும் சின்னக்கனி நடந்து வருகிறாப் போல. கை ஆட்டுவது போல. அலைபேசியில் பேசுவது போல. ரெண்டு கையும் தலை மேல் தூக்கி கும்பிடுவது போல. முழு கட் அவ்ட் இரட்டைக் கதவாக மூடிக் கிடக்கிறது.
“சின்னவன் வந்தானடி…“ என சின்னக்கனி பற்றிய பாடல். பல்லவிக்கு முந்தைய தொகையறா. வாழ்த்து எடுப்பு. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கட் அவ்ட் உள் பக்கமாகத் திறந்து உள் வாசலில் இன்னொரு கட் அவ்ட் தெரிகிறது. கடைசியில் கழுத்தில் கர்ச்சிஃப் கட்டிய சின்னக் கனி. கையில் அரிவாள்.
பாட்சா ஸ்டில். கீழிருந்து தூக்கிய கேமெரா கோணத்தில் பெரிய சோபா நாற்காலியில் ரஜினி அமர்ந்திருக்கிறார். கூட வேட்டை நாய்.
அதேபோல சின்னக்கனி. சாதா சேரில். கூட  தெரு நாய் ஒன்று.
ஏழைகளின் தலைவா வாழ்க. எங்கள் வேந்தே வாழ்க… என்கிறதாகப் பாராட்டுக்கள். மலர் தூவி யிரைத்தல்.
ஒரு பெண் அவனை வர்ணித்துப் பாடுதல். அவன் இணைந்து கொள்ளுதல்.
நானே சூரன்டா. நல்லமுத்து பேரன்டா. வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரன்டா.
இது எங்கள் நீதி. இது எங்கள் தர்மம். மயில் போடாது இறகுகள். தட்டினால் திறக்காது கதவுகள்… இது எங்கள் பூமி. இது எங்கள் ராஜ்ஜியம்.
கையில் கட்டுப் போட்டவன் ஒருவன் சின்னக்கனியிடம் வருகிறான். அவனை விசாரித்து ஆறுதல் சொல்லி பணம் தந்து அனுப்புகிறான் சின்னக்கனி. காலை விந்தி விந்தி ஒருவன் வருகிறான்… அவனையும் அணைத்துக் கொண்டு, அவன் கண்ணீரைத் துடைத்து பணம் தந்து அனுப்புகிறான்.
“என்ன தலைவர் இப்பிடி நிதி உதவியெல்லாம் செய்யறாரு?“ என்று இடையே சிகாமணி அருகில் இருக்கும் ஒருவனிடம் விசாரிக்கிறான். “அதுவா… எல்லாம் ஜெயில் அடி, போலிஸ் அடி தம்பி. கையைக் கால உடைச்சி அனுப்பிர்றாங்க… அண்ணான் அப்பிடி அடி பட்டு வர்றவங்க யாரா இருந்தாலும் பாத்து விசாரிச்சி கருணையோட நிதி உதவி வழங்குவார்…“
“64 வியாதிக்கும் ஆர் எஸ் பதி மருந்துன்னு எங்க ஊர்ல வசனம். இங்க சின்னக்கனி… அடிக்கும் அவன்தான். அடிக்கு மருந்தும் அவன்தான்…“ என்கிறான் சிகாமணி.
வயதான கிழவி ஒருத்தி வருகிறாள். அவளால் நடக்க முடியவில்லை. இவனே தன் இருக்கையில் இருந்து எழுந்து போய் அவளை வரவேற்கிறான். நீ நல்லா இருக்கணும்… என அவனை ஆசி வழங்குகிறாள் கிழவி. ஒரு மூளை வளர்ச்சி அற்ற குழந்தை. அவனைப் பார்த்து கண்ணை உருட்டி உருட்டிச் சிரிக்கிறது. அவன் அந்தக் குழந்தையை அப்படியே தன் தோளுக்கு உயரே தூக்குகிறான்… எல்லாரும் கை தட்டுகிறார்கள். கெக் கெக் கெக் என்று குழந்தை சிரிக்கிறது.
இது எங்கள் பூமி. இது எங்கள் ராஜ்ஜியம்.
அந்தப் பெண் சுழன்று சுழன்று ஆடுகிறாள். முதலில் பரத நாட்டியம் போன்ற ஒரு பாணி. அப்படியே முதுகு காட்டி திரும்பும்போது உடைகள் மாறி யிருக்கின்றன. சின்னக்கனி பற்றிய காதல் பாடல். என் நெஞ்சுக்குள் ஒளியாய் வந்தாய். பர்சுக்குள் பணமாய் வந்தாய்… பிறகு திரும்ப முதுகு காட்டி திரும்புகிறாள். வேறு உடை அலங்காரம். அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாடல்.
சிகாமணி ராமசாமியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “நல்ல நேரத்தில் தான் நாம அவனைப் பார்க்க வந்திருக்கம் அத்தான்…“ என்கிறான் மெதுவாய். “அவன் இவன்னு சொல்லாதே… அவன் இங்க தெய்வம் மாதிரி“ என்கிறான் ராமசாமி. “ஆனால் நீங்க?“ என்று சிகாமணி சிரிக்கிறான். “அவனுக்கே நீங்க தெய்வம்.“
“இன்னும் அவர் நம்மை கவனிக்கலைடா…“ என்கிறான் ராமசாமி வருத்தமாய். “ஆமாம் அத்தான். இப்ப பார்ப்பார். என்ன கூட்டம்?“
“நிதி உதவில்லாம் வேற வழங்கறானே…“
“நாயகன் பார்ட் ட்டூ… பிச்சி உதறிட்டேன் அத்தான்“ என்கிறான் சிகாமணி.
விறுவிறுப்புடன் ஆட ஆட அவள் தங்கள் பக்கம் வரும் போதெல்லாம் ஹுங்கரிக்கிறது கூட்டம். “என்ன வாழ்க்கை வாழறானப்பா“ என வியக்கிறான் சிகாமணி. “நல்லாதான் ஆடறா இல்லே?“ என்று ராமசாமியிடம் சொல்கிறான்.
பாடல் முடிந்து எல்லாருமாய் சின்னக்கனியைப் பார்க்க கை கொடுக்க அவன் அருகில் போகிறார்கள். சிலர் பொன்னாடை போர்த்துகிறார்கள். கூட புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். “இப்ப கவனிப்பான்… இப்ப பார் வேடிக்கையை…“ என்கிறான் ராமசாமி. “அவன் இவன்னு சொல்லாதீங்க…“ என எச்சரிக்கிறான் சிகாமணி. “நீங்க சொல்லலாம்“ என திருத்திக் கொள்கிறான். “நீங்க அவன் தெய்வம் ஆச்சே…“
“வெய்ட் அன்ட் சீ… பையா. WAIT AND SEE MY WEIGHT!“ என்கிறான் ராமசாமி. சிலர் அவனுக்கு மாலை போடுகிறார்கள். “உங்களுக்குப் பொன்னாடையா மாலையா அத்தான்?“ என்கிறான் சிகாமணி. “ANYTHING IS OKAY. MAY BE BOTH“ என சிரிக்கிறான் ராமசாமி. “உங்களுக்கு ஆனாலும் பேராசை அத்தான்…“
அந்தப் பெண் ஆடி முடித்த அலுப்பில் அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் அமர்கிறாள். “கர்ச்சீஃப் துணியிலேயே ஜாக்கெட் தெச்சிக்கிட்டா போலருக்கேய்யா…‘ என்கிறான் சிகாமணி. கைக் குட்டையால் முகத்தில் கழுத்தில் வழிந்த வியர்வையை ஒற்றி வழித்துத் துடைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
தற்செயலாக சின்னக்கனி அவர்கள் பக்கம் திரும்புகிறான்.
நம்பிக்கையுடன் புன்னகை செய்கிறான் ராமசாமி.
சின்னக்கனியின் முகம் மாறுகிறது. பற்களை ஆத்திரமாய்க் கடிக்கிறான். “யார்றா இவங்க?“ என்று கத்துகிறான். ராமசாமிக்கு நடுக்கம் எடுக்கிறது. சட்டென நகரப் பார்க்கிறான். “என்ன அத்தான்…“
“மாட்டிக்குவம் போலருக்குடா. வாடா… போலாம்.“
“என்னாச்சி அத்தான்?“
“கூப்பிடுங்கடா அவங்களை…“ என சின்னக்கனி போட்ட அதட்டலில் சிகாமணிக்கே நடுங்குகிறது. “என்ன கனி அணணே?“ என அவன் புன்னகைக்க முயல்கிறான்.
“யாருடா அண்ணே? அண்ணனைப் பேர் சொல்லியாடா கூப்பிடுவே… நாயே“ என அவன் தாடையில் ஒருவன் அடிக்கிறான்.
“என் பேர் இவனுக்கு எப்பிடிடா தெரியும்?“ என்கிறான் சின்னக்கனி.
“அதான் போஸ்டர் அடிச்சிருக்கோம். கட் அவ்ட் மானாவாரியா வெச்சிருக்கமே அண்ணே… நானே பத்து வெச்சேன் அண்ணே…“ என ஒருவன் அவனைப் பார்த்து இளிக்கிறான்.
“எங்களுக்கு ரெண்டு வருஷமா உங்க பேர் தெரியும்…“ என சிரிக்கிறான் சிகாமணி.
“பொறந்ததுல இருந்தே என் பேர் கனிதாண்டா… இவன் ஒருத்தன்“ என்கிறான் சின்னக்கனி.
அடி வாங்கியதில் வலிக்கும் நாடியை அசைத்துப் பிடித்துக் கொள்கிறான் சிகாமணி. “ஒவ்வொரு இயக்குநரின் வெற்றிக்குப் பின்னாலும் இப்படி எத்தனையோ துன்பங்கள். துயரங்கள்…“ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
“வாடா பேயிறலாம்..“ என ஓட ஆரம்பிக்கிறான் ராமசாமி. “இருங்க அத்தான்…“ என அவன் எழுந்து கொள்ளுமுன் அவனைப் பிடித்துக் கொள்கிறார்கள். ராமசாமி விறுவிறுவென்று ஓடப் பார்ககிறான். “பிடிங்கடா அவனை…“ என பெரிதாய்ச் சத்தம் போடுகிறான் சின்னக்கனி.
ரெண்டே நிமிடத்தில் அவனை நெருங்கி வழி மறித்து விடுகிறார்கள் சின்னக்கனியின் ஆட்கள். “வேணாம்… தொடாதீங்க…“ என கூசுகிறான் ராமசாமி. “நானே வர்றேன்.“
“பின்ன ஏண்டா ஓடினே?“ என்கிறான் வழி மறைத்து நின்றிருந்த ஒருத்தன்.
“பயந்து கெடக்குல்ல..“ என்கிறான் ராமசாமி. “டாவெல்லாம் வேணாம்… கொஞ்சம் மரியாதை…“
“உனக்கு என்னடா மரியாதை பேமானி.“
“அதுக்கு டாவே தேவலை.“
“சரி. மரியாதையா திரும்பி நட.“
“மரியாதையா நடக்கறதுன்னா எப்பிடி? அவரு கும்பிட்டுக்கிட்டே வரணுமா?“ என்று அங்கிருந்தே கேட்கிறான் சிகாமணி. “நீ வேற. மாட்டிவிட்டுட்டு கேள்வி வேற கேட்கற நீ“ என்கிறான் ராமசாமி.
“இல்ல அத்தான். சரியா கேட்டுக்கறது நல்லது இல்லியா? அப்பறம் அடிச்சிறக் கிடிச்சிறப் போறாங்க…“
“அவங்க சும்மா இருந்தாலும் நீ அடி வாங்கிக் குடுத்திருவே போலுக்கே.“
“வெட்டிப் பேச்சு பேசாதேடா… போ“ என ஒருவன் முதுகில் தள்ளுகிறான்.
“நான் எதுக்கு?“
“இங்க எதுக்கு வந்தே?“
“தெரியாம வந்திட்டேன்…“
“அத்தான் இங்க வந்துருங்க…“ என சிகாமணி கூப்பிடுகிறான். ஏற்கனவே அவனைச் சுற்றி ஆட்கள் வளைத்து நிற்கிறார்கள். அவன் பக்கமாக வந்து நிற்கிறான் ராமசாமி. ‘எல்லாம் உன்னாலதான்…“
“தெய்வம் கிய்வம்னீங்களே அத்தான். தெய்வம் பலி கேட்குதா?“
“பயமுறுத்தாதேடா…“
“சினிமாவுல இப்ப ஜும்பர ஜும்பான்னு பாட்டு வைக்கலாம் அத்தான்.“
“நீ உதை பட்டே சாகப் போறே…“ என்கிறான் ராமசாமி.
இருவரையும் சின்னக்கனி முன்னால் நிறுத்துகிறார்கள்.
“யார்றா நீங்க?“
ராமசாமி அவனைப் பார்க்கிறான். “சின்னக்கனி… சின்னக்கனி சார்… என்னைத் தெரியல?…ங்களா?“ என நம்பிக்கையுடன் புன்னகை செய்கிறான்.
“நீ என்ன பெரிய பிஸ்தாவா? போலிசா?“
“சாருக்கு ரெண்டு பேரைத் தவிர யாரையும் தெரியாது போலுக்கு…“ என்கிறான் சிகாமணி.
“இவன் யார்றா? ஜோக்கர் மாதிரி இருக்கான்…“ என்று சின்னக்கனி திரும்புகிறான் அவனிடம்.
“ஒரு படம்…“
“படமா? என்ன படம்?“ என்கிறான் சின்னக்கனி.
“அதாவது… ரெண்டு வருஷம் முன்னால…“ என ராமசாமி ஆரம்பிக்கிறான். “நீங்க மறந்துட்டீங்க…“ என சிரிக்கிறான்.
“நான் என்னத்தடா மறக்கறது?“ என்கிறான் சின்னக்கனி. “நான் மறந்துட்டதுல உனக்கு என்னடா சிரிப்பு?“
“இல்ல. சிரிக்கல…“
“எங்க வந்தீங்க?“
“இல்ல. பரவால்ல. உங்களுக்கு ஞாபகம் இல்லன்னா பரவால்ல… நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்...“
“ஏன்டா என்னைப் பார்த்தால் என்ன கேனப் பயல் மாதிரி தெரியுதா?“
“வேணாம். நான் எதாவது சொல்லிறப் போறேன்…“ என்கிறான் ராமசாமி.
“எப்பிடித் தெரியுது சொல்லு…“
“இல்ல பரவால்ல. நாங்க வர்றோம்…“
“நீங்க பாட்டுக்கு வருவீங்க. கேட்டால் கிளம்பறோம்ன்றீங்க…“
“அதான் உங்களுக்கு ஞாபகம் இல்லியே…“
“எது ஞாபகம் இல்லை?“
“அந்த… ரெண்டு வருஷம் முந்தி…“
“அதாவது…“ என சிகாமணி எடுத்துக் கொடுக்கிறான். “நீங்க மறந்துட்டீங்க. பரவால்ல. பெரிய மனுசங்க மறந்துர்றது சகஜந்தான். சின்ன மனுசங்க தான் அதை ஞாபகப்படுத்தி எடுத்துக் குடுக்கணும்…“
“என்னடா ரெண்டு வருஷம் ரெண்டு வருஷம்ன்றாங்க… கீறல் விழுந்த ரெகார்டாட்டம்…“
“ஒரு தடவை பீச் பக்கம்…“
சின்னக்கனி யோசிக்கிறான். “அதான்… சாருக்கு ஞாபகம் வந்திட்டது. நான் இங்க உட்கார்ந்துக்கவா?“ என்கிறான் ராமசாமி.
“ஞாபகம் வரல…“ என்கிறான் சின்னக்கனி.
“அப்ப சரி நின்னுக்கறேன்.“
“ஆயிரம் விஷயம் நடந்திருக்கும்… எப்பிடி ஞாபகம் வெச்சிக்க முடியும்?“
“இருந்தாலும்… பீச்ல உங்களை மடக்கி, அடிக்கப் பார்த்தாங்க. இல்லியா?“
“அதுவும் அடிக்கடி நடக்கறது தான்… இரு. என்ன சொல்றே நீயி?“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“எந்த பீச்சு?“
“மெரினா பீச்சு.“
“அட ஆமடா ஆமடா…“ என்கிறான் சின்னக்கனி.
“நான் சொல்லல. சாருக்கு ஞாபகம் வந்திட்டது. இப்ப நான் உட்கார்ந்துக்கலாமா?“
“வேணாம் நில்லு…“
“நின்னுக்கலாமே? ஓ எஸ்…“ என்கிறான் ராமசாமி. “உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதுவே சந்தோஷம்.“ ராமசாமி சிகாமணியைப் பார்க்கிறான். “ரொம்ப வழியறீங்க அத்தான்…“ என்கிறான் சிகாமணி. “எனக்கு இதெல்லாம் தேவையாடா நாயே… வீட்டுக்கு வா உன்னை வெச்சிக்கறேன்…“ என கடுப்புடன் கிசுகிசுக்கிறான் ராமசாமி.
“சரி. நீ என்னமோ கதை சொல்றே. சொல்லு…“ என்கிறான் சின்னக்கனி.
“நான் சொல்றேன்… லேசா இருட்டறா மாதிரி இருக்கு பொழுது. மழை வரலாம்னு ஒரு எதிர்பார்ப்பு தர்ற வானம். சரியா. அப்ப… பீச். அங்க ஒராளு மெல்ல தள்ளாடி நடந்து போறாரு…“ என்கிறான் சிகாமணி.
“என்னடா சினிமாவா இங்க எடுக்கறாங்க?“ என்கிறான் சின்னக்கனி.
“எடுக்கப் போறோம்…“ என்கிறான் சிகாமணி.
“என்ன படம்?“ என்று கேட்கிறான் சின்னக்கனி. “நாயகன் பார்ட் ட்டூ.“
“என்னடா இவன் உளர்றான்…“
“ரெண்டு பேருமே உளர்றாங்க தலைவா.“
“பைத்தியம் மாதிரி நடிக்கறாங்களா?“ என்று ராமசாமி பக்கம் திரும்புகிறான. மூணு விரலைக் காட்டி… இது எத்தனை?“ என்கிறான்.
“எட்டு“ என்கிறான் ராமசாமி.
“அத்தான். எங்க போனாலும் உங்க மூணு எட்டு பிரச்னை உங்களைத் துரத்துதே…“ என்கிறான் சிகாமணி.
“அந்தக் கையும் சேர்த்து எட்டு“ என்கிறான் ராமசாமி.
“என்ன சொல்ல வரீங்க. சட்னு சொல்லுங்க…“
“ரெண்டு வருஷம் முன்னாடி… உங்களை யாரோ தாக்க வந்தாங்க…“
“எங்க?“
“பீச்ல.“
“சரி.“
“அப்ப அந்தப் பக்கமா நான் வந்தேனா…“
“நீ ஏன் அங்க வந்தே?“
“அது தனிக் கதை… இன்டர்வெல் பிளாக்…“ என்கிறான் சிகாமணி.
“என்ன படம்?“
“வசிகரப் பொய்கள்.“
“இவனைத் தனியா கட்டி வெச்சி உதைக்கணும்டா…“ என்கிறான் ஒருத்தன்.
“அப்பதான்…“ என சிரிக்கிறான் ராமசாமி. “இப்ப ஞாபகம் வருதா உங்களுக்கு?“
சின்னக்கனி யோசிக்கிறான். “ம். பீச். மெரினா. என்னை அட்டாக் பண்ண ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டி யாருன்னு இதுவரை தேரியல்ல…“
“அப்டிதான் என்கிட்டவே நீங்க சொன்னீங்க…“
“நானா?“
“ம்.“
“உங்கிட்டியா?“
“ஆமாம்.“
“நான உன்னைப் பார்த்ததே இல்லியே…“
“இப்ப இல்ல. ரெண்டு வருஷம் முந்தி…“ என்கிறான் ராமசாமி. “அடுத்து நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டால், நீங்க அப்பிடியே உருகீருவீங்க…“
“எங்க சொல்லு. உருகறேனான்னு பார்ப்பம்.“
“வந்த பார்ட்டிங்க… நான்தான் நீ… நீங்க… அதாவது நான்தான் சின்னக்கனின்னு நினைச்சி, என்னைத் தலைல… போட்டுத் தள்ளிட்டாங்க.“ என்றபடி சின்னக்கனி முகத்தை ஆர்வமாய்ப் பார்க்கிறான்.
“இதை எவனாவது காதுல பூ வெச்சவன் கிட்டப் போயிச் சொல்லுங்கடா…“ என கத்துகிறான்.
“என்னை யாருடா கை வைக்க முடியும்?“ என்று கூக்குரல்  இடுகிறான். “டேய் மாரி… மணி… காளிதாஸ்…“
“மணி… மணி இருக்காப்லியா? கூப்பிடுங்க கூப்பிடுங்க…“
“என்னை உங்களுக்குத் தெரியுமா?“ என வருகிறான் மணி.
“அட மணி… இவ்ள நேரம் இங்கியா இருந்தே.“
“யார் நீங்க?“
“சுத்தம்…“ என்கிறான் சிகாமணி.
“பரவால்ல. உங்க யாருக்குமே நினைவு இல்லை. ரெண்டு வருஷம் முந்தி. பரவால்ல. பரவால்ல. நாங்க வர்றோம் சார்… தேங்ஸ் ஃபார் எவ்ரிதிங்…“
“என்னடா சொல்றான் இவன்?“ என மணியைக் கேட்கிறான் சின்னக்கனி.
“ரெண்டு வருஷம் முன்னால் உங்களை மெரினா பீச்ல ஒரு கும்பல் அட்டாக் பண்ண வந்தது அண்ணே… இல்லியா?“
“ஆமடா.“
“அதைத்தான் இவங்க சொல்றாங்க.“
“அது சரி. இது இவங்களுக்கு எப்பிடித் தெரிஞ்சது?“
“தெரியாமல் என்ன… அது உங்களுக்கு விழ வேண்டிய அடி. நான் வாங்கிக்கிட்டேன்…“ என்கிறான் ராமசாமி. “பரவால்ல“ என்கிறான்.
“என்னடா பரவால்ல… என்னவோ என் உயிரையே நீ காப்பாத்தினா மாதிரியும்  இல்லாட்டி நான் இன்னிக்கு இருக்கவே மாட்டேன்றா மாதிரியும்… கதை விடறே?“
“அத்தான் சுத்தமா அவருக்கு ஞாபகமே இல்லை…“ என்று உதட்டைப் பிதுக்குகிறான் சிகாமணி.
“இப்ப பார்… இதோ பார்…“ ராமசாமி சட்டென்று தன் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்துக் காட்டுகிறான். “இது உன்னிது தானே? உங்கது தானே? இதாவது ஞாபகம் இருக்கா? ..குங்களா?“ ராமசாமி புன்னகையுடன் சின்னக்கனியைப் பார்க்கிறான்.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk chapters please visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment