Sunday, September 6, 2015

updated everyday - அத்தியாயம் 17

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வ சி க ர ப்  பொ ய் க ள்


எஸ். சங்கரநாராயணன்

ழைய காலம். மேனேஜர் கிருஷ்ணராஜ்.
ரமேஷ் இன்னும் அலுவலகம் வந்திருக்கவில்லை. அந்த இருக்கை காலியாக இருக்கிறது. மேனேஜர் ராமசாமியின் இடத்துக்கு வருகிறார். வந்து சாக்லெட் தருகிறார்.
“அடேடே என்ன சார் விசேஷம்?“
“ஒரு விசேஷமும் இல்லை. இப்பல்லாம் ஹோட்டல்னாலும் கடைன்னாலும் சில்லரை இல்லைன்னா சாக்லெட் எடுத்துக் குடுத்துர்றான். எனக்கு டயபெடிஸ்“ என்கிறார்.
“GOOD THAT YOU REMEMBERED ME SIR“ என்கிறான் ராமசாமி பக்கத்தில் இருக்கும் ராதிகாவைப் பார்த்துக்கொண்டே. “உங்களுக்கு முந்தி நேத்திக்கே எனக்குக் குடுத்துட்டார்“ என்று சிரிக்கிறாள் ராதிகா.
“உன் FIANCY பேசறாரா?“ என்று கேட்கிறார் மேனேஜர். ராதிகா அழகாக வெட்கப்பட்ட படியே தலையாட்டுகிறாள்.
“எப்ப நிச்சயதார்த்தம்? தேதி குறிச்சாச்சா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“ஹா கல்யாண மண்டபமே சொன்னீங்க. நிச்சயதார்த்தத் தேதி உங்களுக்குத் தெரியாதா?“ என்று சிரிக்கிறாள் ராதிகா.
‘‘தேதி தெரியாது. ஆனால் ஹைதராபாத் மாப்பிள்ளை. ஒல்லியா ஒத்த நாடியா இருப்பார். முழுக்கை சட்டையை சின்னதாய் மடித்து விட்டிருப்பார். அதெல்லாம் தெரியும் எனக்கு…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எப்படி… அவரைப் பார்க்காமலேயே… இத்தனை விவரம் சொல்றீங்க“ என அவள் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து அழகாக ஆச்சர்யப்படுகிறாள்.
“உண்மையா இல்லியா?“
சரிதான், என்கிறாப் போல அவள் தலையாட்டுகிறாள். “கல்யாணம்னதும் நீங்க எல்லாப் பொண்ணுகளும் தனி அழகா ஆயிடறீங்களே, அது எப்பிடி ராது?“ என்று மேலும் சீண்டுகிறான் ராமசாமி.
அப்போது மேனேஜர் அறையில் அவர் மேசையில் இருக்கும் பூ ஜாடியில் புதிய மலர்களை மாற்றுகிறான் பியூன் ரத்தினம். குனிந்து நின்றாலும் அந்த வாசனை சார்ந்து அவன் முகத்தில் மாற்றம் இல்லை. திடீரென்று நிமிர்கிறான். அப்படியே வாசனையை இழுத்தாப் போல பின்னால் திரும்புகிறான். திரும்பா விட்டாலும் அவனுக்குத் தெரியும். மகா அலுவலகம் வந்தாகி விட்டது.
மஞ்சள் உடையில் ஜொலிக்கிறாள் மகா. கண்ணுக்கு மை தீட்டி. புருவம் வரைந்து. நக பாலிஷ் கூட மஞ்சளாய் அணிந்து கொண்டிருக்கிறாள். தோள்ப் பட்டையில் பட்டாம் பூச்சி டிசைனில் கண்ணாடி ப்ரூச். கனிந்த பலாச் சுளை போலிருக்கிறது அவளைப் பார்க்க.. மேனேஜர் அறையில் ரத்தினம் மஞ்சள் ரோஜாவைத் தான் மாற்றி வைத்திருக்கிறான். அதையும் இவளையும் ஒரு முறை ஒப்பிட்டாப் போல பார்க்கிறான் ரத்தினம்.
“ஹல்லோ“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. இது எல்லோ“ என்று அழகாய்ச் சிரிக்கிறாள் மகா.
“புடவையின் ஃப்ளீட்ஸ் அசையறப்ப நீ அகாடின் வாத்தியம் மாதிரி இருக்கே“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நீ ஆபிஸ் லேட்.“
“ஆமாம். வர்ற வழியில் டிராஃபிக் ஜாம்.“
“மகா வர்ற வழின்னா டிராஃபிக் ஜாம் ஆகத்தான் செய்யும்…“ என்கிறான் ராமசாமி. ராதிகாவே சிரிக்கிறாள் அதைக் கேட்டு.
“யு லுக்  ஸோ ச்வீட் அடி கண்மணி“ என்று கிட்டேவந்து அவள் கன்னத்தை ராதிகா கிள்ளுகிறாள். “இதையெல்லாம் எவன் அடக்கி ஆளப் போறானோ?“
பெண்கள் கலகலக்கிறார்கள். மேனேஜரே அறை வாசலில் இருந்து அவர்களை ரசிக்கிறார். பெண்கள் சிரித்தபடி வளைய வரும் இடத்துக்கே தனி அழகு தன்னைப் போல அமைந்து விடுகிறது, என அவர் நினைத்திருக்கலாம்.
“நம்ம மேனேஜரே இப்ப அத்தனை சிடுசிடுப்பா நடந்துக்கறது இல்லை“ என்கிறான் ராமசாமி. “தினப்படி மண்டகப்படி. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நான் திட்டு வாங்குவேன் அவர்கிட்ட…“
“இப்ப?“
“வீட்ல மாத்திரம் தான் திட்டு வாங்கறான்…“ என்றபடியே உள்ளே ரமேஷ் வருகிறான்.
“என்னடா ஆபிஸ் லேட்?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“டிராஃபிக் ஜாம்“ என்கிறான் ரமேஷ். மூவருமே சிரிக்கிறார்கள்.
“இனிமே நீ மகா வரு முன்னால வந்துறணும். இல்லாட்டி டிராஃபிக் ஜாம் தான்“ என்கிறான் ராமசாமி.
“லாக்கர்…“ என்று யாரோ வந்து மகாவிடம் கேட்கிறார்கள். அவள் மஞ்சள் நகப்பூச்சு பூசிய விரல்களால் நளினமாக ராமசாமியைக் காட்டுகிறாள்.
உள்ளே போகிற போதே ராமசாமி கிண்டல் செய்கிறான். “நீங்க அடிக்கடி வர்ற ஆள்தானே? என்கிட்ட தானே வருவீங்க…“ அந்த நபர் சிரிக்கிறான். “பிறகு அங்க போயி ரொம்ப அவசியமா விசாரிக்கறீங்க?“
அந்த நபர் “கல்யாணம் ஆயிருச்சா?“ என்று கேட்கிறான்.
“ஆயிருச்சி…“
“ஆ“
“என்ன ஆ?“
“பாத்தா தெரியல்லியே.“
“பாத்தா தெரியணுமா?“
“கழுத்துல தாலி இல்லியே?“
“அட ஆம்பளைங்க தாலி கட்டிப்பாங்களா?“
“என்ன சொல்றீங்க? யாருக்குக் கல்யாணம் ஆயிட்டதுன்னீங்க…“
“எனக்கு“ என்றபடி லாக்கரைத் திறந்து விட்டுவிட்டு வெளியே வருகிறான் ராமசாமி.
ரமேஷும் ராமசாமியும் வெளியே நின்றிருக்கிறார்கள். தூரத்தில் மகா. மும்முரமாய் கம்பியூட்டரில் வெண்டைக்காய் போன்ற விரல்களால் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள்.
“இதை அப்படியே வரையணும்னு கை துறுதுறுக்குதுடா“ என்கிறான் ராமசாமி.
“அடேய் ஓவியா, அவ அழகை வர்ணி பார்க்கலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“சில அழகு கிளர்ச்சி தரும். சில அழகு அப்படியே அள்ளிக்கச் சொல்லும். சில அழகு பயம் தரும்.“
“இவள்?“
“எல்லாருக்கும் பிடிச்சா மாதிரியான இப்பிடி ஒரு அழகு… மகா அபூர்வம் அது.“
இவர்கள் தன்னைத் தான் பார்க்கிறார்கள். தன்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்பது மகாவுக்குத் தெரிகிறது. அங்கேயிருந்து திரும்பிப் பார்த்து கண் மலர கையாட்டிச் சிரிக்கிறாள்.
மதிய உணவு இடைவேளை. எல்லாரும் ஒண்ணாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். மகா வேலை என்று வந்து சேர்ந்ததற்குப் பிறகு, சாப்பிட கூட மேனேஜரும் வந்து விடுகிறார். மகா கை மணமே தனி ருசி, என்று இருக்கிறது எல்லாருக்கும். மகா தன் டிபன் பாக்சில் இருந்து ஸ்பூனால் எடுத்து எல்லாருக்கும் பரிமாறுகிறாள். “பீன்ஸ் பிடிக்குமா?“ என்று மேனேஜரைக் கேட்கிறாள். “நீ உன் கையால பரிமாறினால் பிடிக்காமல் என்ன?“ என்கிறார் மேனேஜர்.
“கிண்டல் பண்ணாதீங்க சார்…“ என அழகாய்ச் சிரிக்கிறாள் மகா. சாப்பிடும் போது புரையேறுகிறது அவருக்கு. சட்டென அப்படியே அவர் தலையில் தட்டுகிறாள் மகா. “யார் நினைச்சிக்கறா? உங்க மனைவியா?“ என மகா சிரிக்கிறாள். “அவகிட்ட உன்னைப் பத்திச் சொல்லிருக்கேன். ஒருநாள் எங்க வீட்டுக்கு வரணும் மகா…“ என்றபடியே அவர் தண்ணீர் குடிக்கிறார்.
“எப்ப உனக்கு பர்த் டே மகா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“அடுத்த மாசம் வருது சார்.“
“அதை விசேஷமாக் கொண்டாடிருவோமா?“ என்று கேட்கிறான் ராமசாமி. எல்லாரும் ஆமோதிக்கிறார்கள்.
“ராது என்ன வெச்சிருக்கே?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“மகா வந்த பிறகு என்னை எங்க கண்டுக்கறீங்க?“ என்று சிரிக்கிறாள் ராதிகா. என்றாலும் அதில் கோபம் இல்லை.
“இல்லம்மா. நீ அடுத்து ஹைதராபாத்துக்குப் போயிருவே… இனிமே மகா தான் எங்களுக்கு ஃப்ரெண்ட். இல்லியா?“
“அடப்பாவி. என்னை வெட்டறாப்ல மகாவைப் பிடிச்சிக்கறே?“ என்கிறாள் ராதிகா. எல்லாரும் சிரிக்கிறார்கள்.
தனியே போய்க் கை கழுவுகிறான் ராமசாமி. பின்னால் காத்திருக்கிறான் ரமேஷ். ராமசாமி திரும்பும்போது பார்க்கிறான் ரமேஷ். ராமசாமி அழுது கொண்டிருக்கிறான்.
“டேய் என்னாச்சி?“ என்று பதறுகிறான் ரமேஷ். “ஒண்ணில்ல ஒண்ணில்ல“ என்கிறான் ராமசாமி.
“டேய் சொல்லுடா…“
“ஷ்“ என்கிறான் ராமசாமி. “பொண்ணுக காதுல விழுந்துறப் போகுது…“
“சாயந்தரமா இதைப் பேசலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“எதை?“
“நீ எதையோ எங்க கிட்ட மறைக்கிறே இவனே.“
“அப்பிடில்லாம் இல்லை.“
“இப்ப திடீர்னு ஏன் உனக்கு அழுகை வந்தது?“
“எனக்கே தெரியல்ல.“
“உனக்குத் தெரியும்.“
“தெரியாது.“
“சரி. சாயந்தரமாப் பேசறேன்“ என்றபடி ரமேஷ் வாஷ் பேசினுக்குப் போகறின்.
அலுவலகம் திரும்ப சுறுசுறுப்பாகிறது. தேய்ந்த குரலில் மேனேஜர். “அந்த FD ப்ரீ குளோஸ்யூர் வந்ததே… அதை முடிச்சாச்சா?“ – ராமசாமியின் பதில் குரல். “அதை குளோஸ் பண்ணி அவங்க SB அக்கவுண்ட்லயே போட்டாச்சு சார்.“ – ஒரு தொலைபேசி அழைப்பு. “ஹல்லோ… ஆமா சார். நாளைக்கு கிரெடிட் ஆயிரும் சார். நான் மெசேஜ் குடுத்திருக்கேன். ஈ மெய்ல்தான்…. ஆமாம். மெய்ல் பாக்கச் சொல்லி ஃபோனிலும் சொல்லிட்டேன். நாளைக்கு நீங்க பணம் எடுத்துக்கலாம் சார்… சரி. வாங்க வாங்க.“
கடிகாரத்தில் மணி நாலரை. ஒவ்வொருவராய் அலுவலகம் முடிந்து கிளம்ப ஆயத்தம் ஆகிறார்கள்.
வங்கி வாசலில் ஒரு பைக் வந்து நிற்கிறது. ராமசாமி ரமேஷிடம் கண் காட்டுகிறான். “என்ன?“ என்கிறான் ரமேஷ்.
“ஆள் சும்மா சல்மான் கான் மாதிரி இருக்கானே?“
உள்ளே ஒப்பனை அறைக்குப் போயிருந்த மகா அங்கேயிருந்தே அவனைப் பார்த்திருக்க வேண்டும். கடகடவென திரும்ப வருகிறாள். ஹை ஹீல்ஸ் டக் டக் என சத்தம் எழுப்புகிறது.
வேகமாய் அவனிடம் போகிறாள். அவன் கையில் வண்டிச் சாவியைச் சுழற்றியபடியே எதோ பேசுகிறான். சட்டென சிரித்து அவன் இடுப்பைக் கிள்ளுகிறாள் மகா. தன் கூலிங் கிளாசை தலைமேல் ஏற்றி விட்டிருக்கிறாள் அவள். அதைத் திரும்ப கண்ணுக்குத் தள்ளிக் கொள்கிறாள்.
வண்டியை அவன் உதைக்கிறான். பின் சீட்டில் அவள் ஜம்மென்று ஏறி அமர்கிறாள். ராமசாமி ரமேஷ் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவளுக்குத் தெரிகிறது. அங்கேயிருந்தே அவள் இருவருக்கும் கை காட்டுகிறாள். பிறகு அவன் இடுப்பைப் பற்றிக் கொள்கிறாள். ர்ர்ர் என உருமுகிறது பைக். அவர்கள் பார்வையில் இருந்து மறைகிறார்கள்.
“நான் சொல்லலடா?“ என்கிறான் ராமசாமி. “சொன்னே“ என்கிறான் ரமேஷ். “உன் வில்லனா?“ என்கிறான் ராமசாமி. “இல்லை“ என்கிறான் ரமேஷ். “ஆனால் அதிர்ஷ்டக்காரன்…“ என்கிறான் ரமேஷ்.
“இல்லை. அதிர்ஷ்டங் கெட்டவன்“ என்கிறான் ராமசாமி. முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.
சடரென்று எழுந்து அவன் பக்கம் வருகிறான் ரமேஷ். “எனக்குத் தெரியும்டா…“
“தெரிஞ்சா விடேன் இவனே.“
“இல்ல. உனக்கு அவளைப் பத்தி. எதோ தெரியும்னு எனக்குத் தெரியும். ஆனால் சொல்ல மாட்டேங்கறே.“
“வேணாம்.“
“அது உன்னியே இந்தப் பாடு படுத்துதே இவனே. அந்த ரகசியம் எனக்கு வேணாம். ஆனால் அதை வெச்சிக்கிட்டு நீ படற பாடு…“
“அது என் விதிடா… சில ரகசியங்களைச் சொல்ல முடியாது இவனே…“ என்கிறான் ராமசாமி. “நேத்தி கூட… உன் அப்பா…“
“அப்பாவைப் பாத்தியா?“
“ரகசியம். இப்ப அது உனக்கு வேணாம்“ என்கிறான் ராமசாமி. “இப்போது சிரிப்பு மீண்டிருக்கிறது.
“என் அபபாவைப் பார்த்து எதோ பேசி யிருக்கே. என்கிட்டியே அதைச் சொல்ல மாட்டேங்கறே…“ என்றவன் சட்டென பிரகாசமாகி “ஏய் பொண்ணு எதும் எனக்குப் பார்த்து அப்பாக்கிட்ட சொன்னியா?“ என்கிறான்.
“அந்த மாதிரி யெல்லாம் இல்ல.“
“பின்ன என்னடா?“
ராமசாமி பதில் சொல்லவில்லை.
“எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கே. ஆனால் எதையும் சொல்ல மாட்டேங்கறே.“
“என்னால மத்தவங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிற செய்திகள்னா சொல்லலாம். நானே சொல்வேன்…“ என்கிறான் ராமசாமி. “நம்ம ராது கல்யாணம் பத்திக் கேளு. விலாவாரியாச்சொல்றேன்… எனக்குத் தெரியும்.“
“மகா பத்தியும் உனக்குத் தெரியும்.“
“மறந்துரு அதை.“
“எதைடா?“
“எனக்குத் தெரியும்ன்றதை“ என்கிறான் ராமசாமி. தன்னைப்போல திரும்ப புன்னகை வருகிறது.
“திடீர்னு அழறே… திடீர்னு சிரிக்கறே, உன்னை எப்படி எடுத்துக்கறதுன்னே புரியலடா எனக்கு…“ என்கிறான் ரமே.ஷ்.
“புரியாத வரை உனக்கு நிம்மதி.“
“சரி. இப்ப எதுக்குச் சிரிச்சே? அதையாவது சொல்லு…“
“இல்ல. இல்ல… எனக்கு ஒரு வேலை இருக்கு“ என்று கிளம்புகிறான் ராமசாமி.
·       

தொடர்கிறேன்
91 97899 87842



No comments:

Post a Comment