Wednesday, September 16, 2015

updated everyday - அத்தியாயம் 26 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 26
ங்கியில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. நிறைய DD கேட்டு ஆட்கள் வருகிறார்கள். எல்லாரும் கல்லூரி இளைஞர்கள். வேலை செய்தபடியே ராமசாமி ரமேஷைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “என்னடா இன்னிக்கு வேலை கையை ஒடிச்சிரும் போலுக்கே.“
“நீயா எழுதறே? கம்பியூட்டர்ல தட்டறே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
மகா அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். “பிறந்த நாள்னு அசத்திட்டியே மகா…“ என்கிறான் ராமசாமி.
“அதான் மகா“ என்கிறான் ரமேஷ்.
“நீங்க உங்க மனைவியோட வந்திருக்கலாம் சார்“ என்கிறாள் மகா ராமசாமியைப் பார்த்து.
“அவளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆச்சி. அவளுக்கும் வரணும்னு இருந்தது“ என்கிறான் ராமசாமி.
“ஃபோன்ல பேசினாங்க“ என்று சிரிக்கிறாள் மகா.
“எவ்வளவு வேலைன்னாலும் மகா அலுத்துக்கறதே இல்லை“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி. “மேசை நிறைய வேலை வெச்சிக்கிட்டு நான் பக்கத்தில் பேசினாலே அதோ உட்கார்ந்திருக்கிற கஸ்டமர்ஸ் முறைக்கறாங்க“ என்று சிரிக்கிறான்.
“கல்லூரி அட்மிஷன் ஆரம்பிச்சிட்டது இல்லியா? பணங் கட்ட டிராஃப்ட் எடுக்க வந்து குவியறாங்க…“ என்கிறான் ரமேஷ்.
“கரெக்ட். இன்னும் ஒரு வாரம் பத்து நாள் இப்பிடிதான் கூட்டம் அலை மோதும்னு நினைக்கிறேன்.“
கிருஷ்ணராஜ் அறையில் இருந்தே “ரத்தினம்?“ என்று கூப்பிடுகிறார். “இதோ வரேன் சார்…“ என போகிறான். வழியில் ராமசாமி அவனைப் பார்த்துச் சிரிக்கிறான். “டக்கு டக்குனு டென்ஷன் ஆயிர்றாரு சார். ரீஃபில் எழுதலைன்னா கூட. ரத்தினம்?...னு ஒரு சவுண்டு விட்டுர்றாரு. நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க?“
“நீ எப்பவும் எல்லா கலர்லியும் ரீஃபில் பேனா தயாரா கைல வெச்சிக்க“ என்கிறான் ராமசாமி.
“ரத்தினம்?“ என்று மீண்டும் குரல். “வந்திட்டேன் சார்“ என உள்ளே ஓடுகிறான்.
மதியம் ஒரு மணி. ராமசாமியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி அணைக்கப் படுகிறது. “வழக்கமா பன்னிரெண்டரையோட டிராஃப்ட் கூட்டம் குறைஞ்சிரும். இன்னிக்கு இப்பதான் அடங்குது…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி. “ரமேஷ் சாப்பிடப் போகலாம். வரியா?“
“நான் இன்னிக்குக் கொண்டு வரல்ல ராமு.“
“சரி. வா நானும் உன் கூட வெளிய சாப்பிட வரேன்….“
“அப்ப உன் சாப்பாடு?“
“ரத்தினத்து கிட்ட குடுத்திர்றேன்.“
“இதோ ஒரே நிமிஷம்… கிளம்பலாம்“ என்கிறான் ரமேஷ்.
“மகா, ரத்தினம் வந்தால் சொல்லிர்றியா?“ என்கிறான் ராமசாமி. அவளும் வேலையில் மும்முரமாய் இருக்கிறாள். கம்பியூட்டரைப் பார்த்தபடியே இவர்களைப் பார்க்காமல் தலையாட்டுகிறாள்.
வெளியே வருகிறார்கள். ரமேஷ் வண்டி எடுக்கிறான். அவன் வண்டிக்கு அருகே மகாவின் வண்டி. பச்சை நிற ஸ்கூட்டி பெப். அதைப் பார்த்ததும் மெல்ல ஒரு பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. அந்த வண்டி திடீரென்று அப்படியே சப்பளிந்து உருக் குலைந்து கிடக்கிறாப் போகிறாப் போல ஒரு கற்பனை வருகிறது அவனுக்கு.
“பாவம்….“ என அவன் வாய் முணுமுணுக்கிறது.
“என்னடா?“
“ஒண்ணும் இல்ல.“
“வர வர நீ அடிக்கடி இந்த ஒண்ணும் இல்லையைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டே. ஏன்?“
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல“ என்கிறான் ராமசாமி.
“இது மாதிரி ஒரு ஜோக் கேள்விப் பட்டிருக்கியா?“ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
“என்ன?“ என்கிறான் ராமசாமி.
“மனைவி கணவனிடம் குறைப்பட்டாள். நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேசறீங்களே?...ன்னாளாம். அப்டில்லாம் ஒண்ணும் இல்லியே…ன்னானாம் கணவன். பாருங்க. இப்ப கூட மறுத்தே தான் சொல்றீங்க…ன்னாளாம் அவள்.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “நல்ல ஜோக். சிரிப்பு தான் வரல்ல ரமேஷ்.“
“இன்னொரு ஜோக்…“
“வேணாம்“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நிறைய டிராஃப்ட் எழுதினேன் இல்லியா?“
“அதுக்கென்ன?“
“சொல்றேன்“ என ஹோட்டலில் இறங்கிக் கொள்கிறான் ராமசாமி. வண்டியை வெளியே நிறுத்தி விட்டு ஏ/சி அறைக்குள் நுழைகிறார்கள்.
“என்னவோ சொல்ல வந்தியேடா?“
“என்ன?“
“அதையே மறந்திட்டியா?“ என கை கழுவுகிறான் ரமேஷ்.
“ம். அதான்… இன்னிக்கு நிறைய DD எழுத வேண்டியிருந்ததா? திரும்பத் திரும்ப ஒரே தேதி… போட வேண்டி யிருந்தது இல்லியா?“
“ஆமாம்“ என்றவன் பயந்து போய் “முன்னால ஒரு தடவை கையால டிராஃப்ட் எழுதும் போது வருஷம் தப்பா போட்டுட்டியே. அதுமாதிரி எதுவும் குழப்பமா இவனே?“
வந்து மேசை பார்த்து அமர்கிறார்கள்.
“இல்ல இல்ல…“
“அப்ப வருஷக் குழப்பம் உனக்குத் தீர்ந்திட்டதா?“
“அப்டின்னும் சொல்ல முடியாது…“
“நீ அநேகமா எங்க ஒவ்வொருத்தரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் போறேன்னு தோணுது… ஏற்கனவே….“
“சொல்லு.“
அதற்குள் சரவர் வந்து நிற்கிறான். “ரெண்டு மீல்ஸ்“ என்றவன் அவனைப் பார்த்து “சொல்லிட்டேன்“ என்று சிரிக்கிறான்.
“சில பேருக்கு இந்த மாதிரி எதிர்காலம் முன்னாலயே நடகக்ப் போறது மாதிரிச் சொல்லியிருக்காங்க.“
“நம்ம மரத்தடி சோசியன் பத்திச் சொல்லிறியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“ஆ அவன் பாவம். அவன் பிழைப்பு அது. வேற வேலை என்ன தெரியும் அவனுக்கு?“
மீல்ஸ் வருகிறது. தட்டு சாதத்தை ஒரு கையால் கொஞ்சம் தள்ளிக் கொண்டு சாம்பார் கிண்ணத்தை அதில் கவிழ்த்திக் கொள்கிறான் ராமசாமி.
“எனக்கே வேலை அதிகம் ஆனதால வெளிய எங்காவது புதுக் காத்தா அனுபவிச்சிட்டு வரலாம்னு ஆயிட்டதுடா.“
“அது சரிதான்“ என்று ஒரு வாய் சாப்பிடுகிறான் ரமேஷ்.
“பொதுவா நீ வேலைக்கு அலுத்துக்க மாட்டியே?“
“இல்ல. அந்தத் தேதி… அது என்னை இம்சைப் படுத்துது.“
“இந்தக் குழப்பம் இதுவரை உனக்கு வந்தது இல்லியேடா…“
“அதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு.“
“டெலிபதின்னு ஒரு விஷயம்… நிறையப் பேருக்கு அப்பிடி நடந்திருக்குடா. டெலிபதின்னா… வீட்ல இருப்பான். ஐயோ எங்க அப்பா… அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லைம்பான். அவன் அப்பா உடம்பு பத்தி விசாரிக்க ஃபோன் பக்கம் போனால் அப்ப ஃபோன் அடிக்கும். அம்மா கிட்டேர்ந்து வரும்… அதில் சேதி…“
“அப்பாவுக்கு முடியல. கிளம்பி வா…ன்னு அம்மா சொல்வாங்க…“ என்கிறான் ராமசாமி. “நானும் அது மாதிரி கேள்விப் பட்டிருக்கேன்.“
“எதிர்காலம், அதில் நடக்கப் போற நிகழ்ச்சிகள்… இன்னிக்கு நீங்க அந்த ஃப்ளைட்ல போக வேணாம்னு தடுத்து நிறுத்தி யிருப்பார் ஒருவர். பாத்தால், அந்த ஃபிள்ட் விபத்துக்கு உள்ளாகி யிருக்கும்…“
“ம். ம்.“
“அது மாதிரிதான். உனக்கும் எதிர்காலம் பத்தி எதோ மூளைல தட்டுதோன்னு நினைக்கிறேன் நான்“ என்கிறான் ரமேஷ்.
“அதுபோல நினைக்கறதும் ஒருவகை விளக்கம் தான்…“ என்கிறான் ராமசாமி. “ஆனால் என் நிலைமை வேற… அதாவது, உன் கணக்குப் படி நான் எதிர்காலத்தில் இருந்து இந்த நிகழ்காலத்துக்கு வந்து உன் கூட இப்ப சாப்பிட்டுக் கிட்டிருக்கேன்… ஒண்ணு சொல்லவா?“
“ம்.“
“இப்ப சாப்பிடறோமே இந்த மீல்ஸ், என்ன விலை இப்ப? 80 ரூபாய் இல்லியா?“
“எதுக்குக் கேக்கற?“ என்கிறான் ரமேஷ்.
“என் கணக்குப் படி, ரெண்டுநாள் முந்தி, இங்க சாப்பிட்டேன்…“ சிரிக்கிறான். “பயப்படாதே. ஆனால் உண்மை. உன் கூடத்தான். மீல்ஸ் 110 ரூபாய்.“
“டெலிபதில ஒரு மாதிரி இது. இப்படியெல்லாம் தோணுது. குழப்பம் விளையாத அளவில் கட்டுக்குள்ள வெச்சிக்க ராமு.“
“மனசு தானா சுதாரிக்குதுடா. சில தாண்டி வந்த கட்டங்கள்… சட்னு பழைய காலம் நடந்ததை நினைவு படுத்தி விட்டுட்டால் என்ன பண்றது?“
“அது சரிதான். ஆனால் நீ தாண்டி வரவே இல்லை. அந்தக் காலம் எதிர்காலம். அதுல நடக்கப் போகிற விஷயங்களை  பேசறே.“
“ம். உங்க கணக்கு அது. உதாரணத்துக்கு… மகா. அவளோட முடிவு. அது எனக்குத் துல்லியமாத் தெரியுது…“
“மனுச மனத்துக்கே சில கெட்ட சிந்தனைகள் உள்ளே ஓடிட்டே யிருக்கறது சகஜம்தான். வக்கிரங்கள் வரும். பயத்தினால் ஏற்படற இடைஞ்சல்கள் அவை. உதாரணமாச் சொன்னால்… எத்தனையோ தடவை…  நான் சோபாவில் உட்கார்ந்திருப்பேன். தலை மேல ஃபேன் அப்படியே இறக்கை முறிஞ்சி விழறாப் போலத் தோணியிருக்கு. அது மாதிரி இதைச் சொல்ல முடியாதா?“
“ஹா. வெறும் மகா விஷயம்னு பார்க்கறே நீ இதை. நம்ம மேனேஜர் கிருஷ்ணராஜுக்கு மைசூருக்கு மாற்றல் வரும். போகும்போது அவர் நம்மை எல்லாரையும் கூப்பிட்டு, நான் கண்டிப்பா நடந்துக்கிட்ட மாதிரி உங்களுக்குத் தோணும்…“
“கண்டிப்பாத் தோணும்…“
“ஆனால் இந்த மாதிரி ஒரு co operative வான staff என் சர்விசில் பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டுக் கிளம்புவார்.“
“மைசூர்னு சொன்னியே, அதுதான் இதில விஷயம். மத்தது எல்லாம் நாம கற்பனை பண்ணிக்கலாம்…“
“அந்த மகேஷ். ராதிகாவைக் கட்டிக்கப் போறவன்… அவனைப் பார்க்கும் முன்னாலேயே நான் அவனைப் பத்தி, உருவம், எப்பிடி டிரஸ் பண்ணிப்பான்… எல்லாம் சொல்லல்லியா?“
“கல்யாண மண்டபம் கூட சொன்னியே…“
“எனக்கு அதெல்லாம் அப்படியே காட்சியா கண் முன்னால நிக்கறதே. சில சம்பவங்களை, ரெண்டு வருஷத்துக்கு உள்ளாக மறந்துற முடியாது. எப்பிடி முடியும்?“
பில் வருகிறது. “80 நான் தர்றேன். 110 பில் வரும் போது நீ குடு. சரியா?“ என பிடுங்கிக் கொள்கிறான் ரமேஷ். சிரிக்கிறார்கள்.
பணத்தை பில்லோடு அந்த உறையில் வைத்து விட்டு திரும்ப பர்சை பின்பாக்கெட்டில் செருகிக் கொள்கிறான் ரமேஷ்.
“அதை விட்டுறலாம்… பேசப் பேச தெளிவு அல்ல குழப்பம் தான் வருது. இன்னிக்குத் தேதின்னு என்னவோ சொன்னே….“
“ஆமாம். இன்னிக்கு என்ன தேதி?“
“ஜுலை ஒன்பது.“
“ம். 2014. இன்னிக்கு என்னவோ என் வாழ்க்கைல நடந்திருக்கறதா மனசு படபடன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டது.“
“பிரமைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தேன்னா பிறகு அது உன்னையே முழுங்கிரும். பேய் மாதிரி பிரமைகள் ஆளையே காலி பண்ணிரும். இல்லியா?“
“எனக்குத் தெரியும். டிடி வாங்க வந்தானே, அந்தக் கடைசிப் பையன்… நீலச் சட்டை. வித்தியாசமான பேர் அவனுடையது. விஷ்வக்சேனன். அந்த சலானை நான் பார்க்கவில்லை. டிராஃப்ட் எழுதிட்டேன். தலையை நிமிர்த்திப் பார்த்தால்… அந்தப் பையன் நிற்கிறான். நீலச் சட்டை. சட்னு உடனே பொறி தட்டியது. இவன் பேர் வித்தியாசமா இருக்குமே… யோசிச்சி யோசிச்சிப் பார்த்தேன்.  போன வருஷம் கடைசியா அவன்தான் வந்து என் முன்னால நின்னான். அது தெரிஞ்சிட்டது. விஷ்ணு. அது இது… மண்டைய உடைச்சிக்கிட்டேன். கடைசியா சலானைப் பார்த்தேன். விஷ்வக்சேனன்.“
“ஆள் பார்க்க வித்தியாசமா இருந்தால் இப்பிடி யோசனைகள் ஓடறது ஆச்சர்யம் இல்லை ராமு.“
ராமசாமி தலையாட்டுகிறான்.
“சோசியம் மாதரி… சில சமயம் மனசு ஒண்ணை நம்பிட்டால் அதை அனுசரிச்சு சிந்தனைகள் ஓட ஆரம்பிச்சிரும்…“
“நம்ம மேனேஜர் குரல் ரத்தினம்னு கேட்டதுடா உள்ளுக்குள்ள. அப்பறம் நிசமாவே அவர் குரல். ரத்தினம் அதைக் கேட்டு ஓடறான்.“
“உன் பிரச்னை முத்திட்டு வருதா?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“எனக்கு இது கூட பயமாய் இல்லை. இந்த நாள் எனக்கு ஓரளவு உள்ளே ஞாபகம் இருக்கிறதுன்னு தோணுது. அதை நான் தோண்டி எடுப்பேன்…“
“நடந்த பிறகு அதை கம்ப்பேர் பண்ணிக்கலாம். ஏன் மனசை இப்பிடிப் போட்டு அலட்டிகக்றே ராமு?“
வண்டியைக் கிளப்புகிறான்.
வங்கி. உள்ளே நுழைகிறார்கள்.. ரத்தினம் குனிந்து ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறான். “நில்லு ரமேஷ்…“
“என்ன?“
“இப்ப பார். இவன் தண்ணீர் பிடிக்கிறானா? நிமிர்ந்து தம்ளரை எடுத்துக் கொண்டு மூணு தப்படி, தம்ளரைக் கீழே போடுவான்.“
“பார்க்கலாம்.“
ரத்தினம் திரும்புகிறான். ஒண்ணு. ரெண்டு. மூணாவது தப்படியில் தம்ளரை நழுவ விடுகிறான். ப்ளாங் என்று சத்தம்.
“அதாண்டா. இந்த நாள் எனக்கு ஸ்பஷ்டமா தெளிவாயிட்டே வருது….“
“ஓ. பயமா இல்லியா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“பயம் கியம் ஒண்ணுங் கிடையாது. ஒரு மாதிர் நெஞ்சு கனம்மா இருக்கு. படபடப்பா இருக்கு…“
“போய் சீட்டில் உட்காரு. ஃபேனைப் போடறேன்.“
“சரி. நீ என் கூடவே இரு ரமேஷ்.“
“கண்டிப்பா.“
“ஆனால் யார் கிட்டயும் இது பத்தி மூச்சு விடாதே…“
“மூச்சு விடாட்டி நான் செத்திருவேன்.“
“பழைய ஜோக். இப்ப… அடுத்தது. ராதிகா இப்ப உள்ள நுழைவாள். வந்து கர்ச்சிஃப் எடுத்து முகத்தைத் துடைப்பாள். அப்பறமா, எனக்கு எதும் ஃபோன் வந்ததான்னு கேப்பாள்.“
ஒரு நிமிடத்தில் ராதிகா வெளியே எங்கோ போய்விட்டு உள்ளே வருகிறாள். வந்து தன் இருக்கை மேசையில் கைப் பையைப் போடுகிறாள். கர்ச்சிஃபால் முகத்தைத் துடைக்கிறாள். அவன் பக்கம் திரும்புகிறாள். “ராமு சார்?“
“கேக்கலியே?“ என்கிறாப் போல ரமேஷ் சிரிக்கிறான்.
“சொல்லு ராது?“
“எனக்கு ஃபோன் எதுவும் வந்ததா?“
ரமேஷ் ஆச்சர்யப் படுகிறான்.
“பயமா இருக்கா?“ என்று கேட்கிறான் ராமசாமி. “இல்ல“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அப்போது மேனேஜர் கிருஷ்ணராஜ் வெளியே வருகிறார். “நேரா உன் கிட்ட வந்து எந்த ஹோட்டல்ல சாப்பிட்டேன்னு கேட்கப் போறார்“ என்கிறான் ரமேஷ். ராமசாமி சிரித்தபடி “உன்கிட்டதான் டெல்லிக்கு மெய்ல் அனுப்பிட்டியான்னு கேட்பார்“ என்கிறான்.
மேனேஜர் ராமசாமி அருகே நிற்கிறார். “என்ன ராமு? எங்க வெளியே சாப்பிட்டியா?“ என்கிறார். இருவரும் சிரிக்கிறார்கள்.
“என்ன சிரிப்பு?“
“எங்களுக்குள்ள ஒரு கேம் சார்… நீங்க வெளிய வந்து யார் கூட என்ன கேள்வி கேட்கப் போறீங்கன்னு ஒரு போட்டி“ என்கிறான் ரமேஷ். மேனேஜர் தலையாட்டி விட்டு, “டெல்லி மெயில்… அனுப்பிட்டியாய்யா?“ என்கிறார்.
ரமேஷ் ஆச்சர்யப் படுகிறான். “மாப்ள… எப்பிடிறா?“ என வியப்புடன் கையை விரிக்கிறான் ரமேஷ்.
“அதான் சொன்னேனே… இந்த நாள் சம்பவங்கள் எனக்கு அப்படியே நினைவில் மோதுது. ஒருவித படபடப்பு… சட்டென சுதாரித்து “ஒரு அவசரம் சார். நான் ஒரு நாலு மணிக்கா கிளம்பறேன்“ என்கிறான் மேனேஜரிடம். “என்ன விஷயம்?“ என்று கேட்டவர், “வேணாம். நீ பொய் மன்னன். போயிட்டு வா… நான் கிளம்பறேன் ரமேஷ். ஹெட் ஆபிஸ் போயி ஏ ஜி எம் கூட ஒரு மீட்டிங் இருக்கு…“
“போயிட்டு வாங்க சார்.“
அவர் போனதும், “உன்னை நம்பறதா வேணாமான்னே குழப்பமா இருக்குடா“ என்கிறான்.
“ஹா…“ என மூச்சிழுக்கிறான் ராமசாமி. “எனக்கு இந்த நாள் நினைவு வந்திட்டது முழுசா…“ அப்படியே நாற்காலியில் பின்பக்கமாகச் சாய்கிறான்.
“என்ன?“
“இன்னிக்கு ரமேஷ். நாலரை மணிக்கு… எனக்கு உன் பக்கத்துத் தொலைபேசியில் சேதி வரும்…“
“சேதியா?“
“ஆமாம்.“
“என்ன சேதி?“
“என் அப்பா… பாத் ரூம்ல வபக்கி விழுந்திட்டார்னு என் மனைவி ஃபோன் பண்ணுவா.“
“ஓ“ என்கிறான் ரமேஷ் பதறி. “அப்பறம்?“
“ச்“ என நெற்றியைத் துடைத்துக் கொள்கிறான் ராமசாமி. “நான் ஓடுவேன். போயி அப்பல்லோல அப்பாவைச் சேர்ப்போம். நினைவில்லாமல் கிடப்பார். தலைல அடி. ரெண்டு நாள் கழிச்சி… கண்ணைத் திறந்து என்னை அப்பா பார்க்கிறார். அவரால எதுவும் பேச முடியல்ல. நான் அழறேன். அவர் கை நடுக்கத்தோட என்னைக் கிட்டே அழைக்கிறார். என் கண்ணைத் துடைத்து விடறார்…“
“பெரிசா யோசிக்கறியேடா…“
“ஆமாம். இன்னிக்கு என்ன தேதி? ஜுலை 9 இல்லியா? பதிமூணாம் தேதி….“
அழ ஆரம்பிக்கிறான். “என்னடா என்னடா?“ என அவன் தோளைத் தொடுகிறான் ரமேஷ். “அப்பா இறந்தது பதிமூணாம் தேதிடா. சில விஷயங்களை மறக்கவே முடியாது.“
எங்கோ பேயிருந்த ராதிகா திரும்ப சீட்டுக்கு வருகிறாள். சட்டென தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான் ராமசாமி. பேசாமல் வேலையை ஆரம்பிக்கிறான்.
கடிகாரம் ஓடுகிறது. மணி நாலு. சட்டென எழுந்து கொள்கிறான் ராமசாமி. “நான்… நாலரை. ஃபோன் வரும் ரமேஷ்… சேதியை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இல்லை. நான் கிளம்பறேன்…“
“எங்க போறே?“
“எங்கியோ… இந்த சேதி கேட்காத இடத்துக்கு…“
“நானும் வரேண்டா…“
“வேணாம் வேணாம். இது என் பிரச்சினை…“
“ராமு… ஒரு நிமிஷம்…“
அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளிய போகிறான். மனம் குலுங்குகிறது. தள்ளாடி நடக்கிறான் மணி பார்த்துக் கொள்கிறான். தளர்வுடன் நடக்கிறான். கால்கள் தன்னைப் போல கடற்கரைப் பக்கம் அவனைக் கொண்டு சேர்த்திருக்கிறது.
திரும்ப மணி பார்த்துக் கொள்கிறான். அப்படியே கடற்கரை மணலில் படுத்துக் கொள்கிறான். அந்தப் பக்கம் லேசாய் மங்கலான வெளிச்சம். திடீரென யாரோ ரெண்டு மூணு பேர் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள்.
அதில் ஒருவன் ராமசாமியை ஒரு கட்டையால் பின் மண்டையில் அடிக்கிறான். ராமசாமி இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியே தலையைப் பிடித்துக் கொள்கிறான். மல்லாக்க விழுகிறான் அவன். இன்னொருவன் கட்டையை ஓங்கிய நிலையில் ராமசாமியைப் பார்க்கிறான்.  அரை குறை வெளிச்சம். “டேய் இவன் இல்லடா நம்ம ஆள்“ என்று கத்திவிட்டு ஓடுகிறான்.
ராமசாமி அப்படியே மயங்கிக் கிடக்கிறான். மெல்ல இருட்டு கவிகிறது.

இ டை வே ளை
91 97899 87842
For bulk update of chapters pls visit
vasikarapoikalplus.blogspot.com


No comments:

Post a Comment