Saturday, September 12, 2015

அத். 22 - updated every day

Updated every day

வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
அத்தியாயம் 22

ங்கி. பழைய காலம். வாசல் ஏ டி எம் பிசியாக இருக்கிறது. பணம் எடுக்க நீள் வரிசை. அதை ஊடறுத்து மேனேஜர் கிருஷ்ணராஜ் ஸ்கூட்டரைச் செலுத்தி உள்ளே போகிறார்., பின்சீட்டில் ராமசாமி. “போக வர வழி விட்டு இப்பிடி வரிசைகட்டி நின்னீங்கன்னா நல்லது“ என்று செக்யூரிட்டி ஒதுக்கி நிற்க வைக்கிறான். பின் சீட்டில் இருந்து ராமசாமி இறங்குகிறான். பேசிக் கொண்டே உள்ளே போகிறார்கள்.
“நல்ல வேளை. சரியான வேளையில இன்ஸ்பெக்ஷன் போனம் சார். இல்லாட்டி பார்ட்டி நம்மைப் பூட்டு போட விட்டிருக்க மாட்டான்…“ என்கிறான் ராமசாமி. “லோன் வாங்கும் போது நடையா நடக்கறாங்க. அப்பறம்னா வட்டி கூட கட்டறது இல்லை. கேட்டால் எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும். நீங்க பண்றதைப் பண்ணுங்க. நானும் என்ன பண்றீங்கன்னு பார்க்கறேன்... அப்டினு நம்மளையே மிரட்டறாங்க…“ என்கிறார் மேனேஜர் கிருஷ்ணராஜ். அப்படியே வாட்டர் கூலரில் தண்ணீர் குடிக்கிறார்.
“பார்ட்டி கூல்டிரிங் சாப்பிடுங்க. அது இதுன்னு என்னமாக் குழையறான். நாம கண்டுக்காமல் விட்டுட்டுப் போனால் பெரிய பெரிய GIFT லாம் கூட தருவான்ப்பா“ என சிரிக்கிறார்.
தன் இருக்கையில் உட்கார்கிறான் ராமசாமி. “அவனுங்க ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டாங்க. செல்லுல பேசினால் வெளியூர்ல இருக்கேன்னு பொய் சொல்லுவாங்க. சொல்லாமல் கொள்ளாமல் குடோனைப் பூட்டிக்கிட்டுப் போயிருவாங்க. ஸ்டாக்கை இடம் மாத்திருவாங்க… எல்லாம் நாம சமாளிக்கணு1ம். விரட்டி அவனைப் பிடிக்கறது நம்ம பொறுப்பு. ஆனால் நாம அவனைப் பார்க்கப் போகணும்னால் பக்காவா நோட்டிஸ் கொடுத்து தான் போக வேண்டியிருக்கு சார்.“
“எனக்கு முந்தி இருந்தாரே ஒரு மேனேஜர் அவரு இவனை கொஞ்சம் தளர்வா விட்டுட்டார். அதான் எனக்கு கொஞ்ச்சம் சிரமமா இருக்கு.“
பியூன் ரத்தினம் அவரது ஹெல்மெட்டையும் சூட்கேசையும் உள்ளே எடுத்துப் போய் அவர் அறையில் வைக்கிறான்.
“மகா? அப்சரா அன்ட கோ வந்து O D பணத்தைக் கட்டிட்டானா?“ என்று கேட்டபடியே மேனேஜர் தன் அறைக்குப் போகிறார்.
“பேசினாங்க சார். பணத்தோட ஆளை அனுப்பிட்டாங்களாம். இப்ப வந்திருவாங்க சார்“ என்கிறாள் மகா. முழுக்க தாவரப் பச்சையில் இன்று மிளிர்கிறாள் மகா லெட்சுமி. கண்ணின் மேல் இமைகளிலேயே லேசான பசு மஞ்சள் பூச்சு மினுங்குகிறது.
“கேட்டால் நீங்க எங்க O D போறீங்க, நாங்க எங்க O D போறோம்னு வசனம் பேசுவாங்க…“ என்கிறான் ரமேஷ்.
ராமசாமி அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “என்ன சார்?“ என அவளும் புன்னகைக்கிறாள்.
“வாழ்க்கையை என்னமாய்க் கொண்டாடறே நீ?“
“கொண்டாடக் கூடாதா சார்?“
“நிச்சயம் கொண்டாட வேண்டிதான். வாழ்றதுன்றது ஒரு முறை தானே?“
“வாழ்றது ரெண்டு முறைன்னால் கூட…“ என நிறுத்துகிறாள் மகா. “நான் ரெண்டு முறை கொண்டாடத் தயார் சார்.“
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “கவலையற்ற வயசு உனக்கு. நேரா காலேஜ் முடிச்சே. வேலைக்கு வந்தாச்சி…“
“கவலைப் படணுமா சார்?“ என அவள் சிரிக்கிறாள்.
“ஐயோ வேணாம். நீ சிரிச்சிக்கிட்டே இரு மகா. எங்களுக்காகவாவது…“
“சரி சார்…“ என்றவள் சிரித்து, “நான் சந்தோஷமா இருக்கேன். அவ்ளதான் சார்… IT IS AS SIMPLY AS IT IS“ என்று கண் மலர்த்திச் சிரிக்கிறாள்.
“இப்படிச் சொல்ல வாய்க்கிறதே ஒரு வரம் தான்“ என்கிறான் ராமசாமி.
“இந்த பிரின்டர் கொஞ்சம் தகரார் பண்ணுது சார். உள்ள பேப்பர் எதோ கிழிஞசி மாட்டிட்டிருக்கு போல…“ என்கிறாள் மகா.
ராமசாமி போய் பிரின்டரின் மேல் பக்கக் கதவைத் திறந்து கேட்ரிட்ஜை வெளியே எடுக்கிறான். உள்ளே சிக்கியிருந்த காகிதத்தை நீக்குகிறான். திரும்ப கேட்ரிட்ஜை வைக்கிறான். திரும்ப அதை இயக்க ஸ்விட்சை ஆன் செய்கையில் அது ர்ர்ர் என தன்னிலை மீள்கிறது.
“தேங்ஸ் சார்.“
“இட்ஸ் ஓகே.“
ராமசாமிக்கு போன் வருகிறது. ரமேஷ்தான் எடுக்கிறான். “டேய் உனக்குதான்டா.“
“எனக்கா?“
“ஆமாம்.“
“யாரு?“
“உங்க அப்பா….“
“எனக்கு ஏதுடா அப்பா? அவர் போயச் சேர்ந்திட்டாரே…“ என சிரிக்கிறான். பின் முகம் மாறி, “ஓ அப்பாவா…“ என பாய்ந்து போய் எடுக்கிறான்.
“அப்பா? எப்பிடிப்பா இருக்கீங்க?“
“டேய் காலைல தான் வீட்லயிருந்து கிளம்பும் போது பாத்துட்டுப் போனே… அதுக்குள்ள காத்துல கரைஞ்சிருவேனா?“ என்று அப்பாவின் கேலி கேட்கிறது.
“இல்லப்பா. இல்லப்பா. இங்க வேலைல ஒரு சின்ன குழப்பம். திடீர்னு உங்க குரலை போன்ல கேட்டது, ஒரு இதுவா ஆயிட்டதுப்பா.“
“ஒரு இதுவும் இல்லை. சேதி என்னன்னா… நல்ல சேதிதான். நம்ம மாப்ளை பேசினார்.“
“யாரு மாது வீட்டுக்காரரா? என்னவாம்? எதுவும் கம்பிளெயின்ட்டா…“
“அது பொதுவாச் சொல்றது. நீங்க ரொம்பச் செல்லங் குடுத்து வளர்த்திட்டீங்க, அது இதும்பார். இம்முறை… நல்ல சேதி…“
“நான் GUESS பண்ணிட்டேன் அப்பா.“
“அதான். இதைக் கேட்க உங்க அம்மா இல்லியேன்னு இருந்தது. சேதி கேட்டதும் உடனே உனக்குச் சொல்லலாம்னு தோணித்து.“
“அதுனாலதான் இத்தனை வருஷம் கழிச்சி உங்க குரலை நான் கேட்க முடிஞ்சது அப்பா.“
“மணின்னு சொல்லு, வருஷம்னியே?“
“ரெண்டு வருஷம்.“
“இல்ல ரெண்டு மணி.“
“அப்பறமா அவன், மாதுவோட புருஷன்… என்கூடப் பேசுவான். பேசலைன்னா மதியம் நான் கூப்பிட்டுப் பேசறேன் அப்பா. ஒரு மரியாதைக்கு முதல்ல உங்ககிட்ட தகவல் சொல்லியிருக்கான்… நீங்க வேணா ஒரு நடை போயிப் பாத்திட்டு வரீங்களா அப்பா?“
“வேணாம். வேணாம். அவனையே எதாவது வேலையா இந்தப் பக்கம் வரும்போது கூட்டிட்டு வரச் சொல்லிச் சொல்லலாம்… அதான் மாசம் ஆனா வந்திட்டே தானே இருக்கான்…“
“ஆனால் அந்தக் குழந்தையைப் பார்க்க நீ இருப்பியாப்பா.“
“குழந்தையா? என்ன குழந்தைடா?“
“பெண் குழந்தை…“
“வழக்கம் போல விளையாட்டுப் பேச்சா பேசறே? நான் எங்க போயிறப் போறேன்? முதல் பிரசவம் நாமதான் பார்த்து அனுப்பணும்…“
“கண்டிப்பா. கண்டிப்பா… சரிப்பா. நான் வெச்சிர்றேன்…“
ரமேஷ் அவனையே பார்க்கிறான். “ஆ வூன்னா உணர்ச்சி வசப் பட்டுர்றே நீ. இப்ப என்னாச்சி?“
“ஒண்ணில்ல.“
“சேதி நல்ல சேதி தானேடா?“
“ஆமாம். மாது… என் தங்கை உண்டாகி யிருக்காளாம்.“
“அதுக்கு அழுவாங்களா?“
“அப்பா போன் பண்ணினார்…“
“சரிடா. அதுக்கு எதுக்கு அழறே?“
“என்னால இப்பிடி நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் ஆடி ஓட முடியல்லடா. சில விஷயங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு. சிலது…“
“அழுகையா வருது.“
“விளக்கமா நீ சொல்றதே இல்லை. ஆனால், எப்பவாவது நீ விளக்கமாப் பேச ஆரம்பிச்சியானால்…“ என்கிறான் ரமேஷ். “அது புரியறது இல்லை.“
ராமசாமி தலையாட்டுகிறான். “எனக்கே அது கஷ்டமா ஆயிருது.“
“உன்னோட வருஷக் குழப்பம் இன்னும் தீரலியாடா?“
“தீர்ற மாதிரி இல்லை.“ அவன் எழுந்து போகிறான். அவனையே புரியாமல் பார்க்கிறான் ரமேஷ்.
மதிய நேரம். ரமேஷ் நினைவு படுத்துகிறான். “மாப்ளை கூடப் பேசணும்னியே?“
“அவனே பேசிட்டான். டாக்டர் முன்னாடியே கன்ஃபர்ம் பண்ணிட்டாராம். இருந்தாலும் சொல்றதுக்கு அவசரப் பட வேண்டாம்னு இருந்தானாம்…“
“அது கரெக்ட்டுதான். உடம்பு அவளுக்கு நல்லபடியா ஒத்துழைக்கணுமே.“
கிருஷ்ணராஜ் சாப்பாட்டு அறைக்கு வருகிறார். “என்ன நம்ம கேர்ள்ஸ் ரெண்டு பேரையுமே காணம்?“
“எதோ சஸ்பென்ஸனு சொல்லிட்டு காணாமல் போயிட்டாங்க…“
“என்ன சஸ்பென்ஸ்? ராமு உனக்குத் தெரியுமா?“
“அடிக்கடி கணக்கு உதைக்கிற சமயம் சஸ்பென்ஸ் அக்கவுண்ட் அவனால தான் வருது“ என ரமேஷ் சிரிக்கிறான்.
“சும்மா இர்றா“ என்கிறான் ராமசாமி. “தெரியாது சார்.“
அப்போது வாசலில் கலகலப்பு. ராதிகாவும், மகாவும் புத்தம் புதிய ஸ்கூட்டி பெப் வாகனத்தில் வந்து இறங்குகிறார்கள்.
எல்லாரும் வேகமாக வாசலுக்கு வருகிறார்கள்.
“மகா இதுதான் உன் சஸ்பென்சா?“ என வருகிறான் ரமேஷ்.
“எஸ் ஆஃப் கோர்ஸ்“ என உடலை இப்படி அப்படி ஆட்டிக் குதூகலிக்கிறாள் மகா.
“என்ன திடீர்னு?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
மகா அமெரிக்கையாய்ச் சொல்கிறாள். ‘’WHY SHOULD BOYS HAVE ALL THE FUN?’’
“NOT NECESSARILY OF COURSE“ என்கிறான் ரமேஷ் சிரிப்புடன். “வாழ்த்துக்கள் மகா…“ என அவளிடம் கை குலுக்குகிறான். “ராதிகாவுக்கு மட்டும்தான் சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் தான் போய் இந்த பச்சை கலர் வண்டியை மாடல் ச்சூஸ் பண்ணினோம்.“
“எங்க ராமுவைக் காணம்?“
“சாப்பிட ஆரம்பிச்சிட்டனா?“
“அப்பதான் நாங்க சாப்பிடலாம்னு போனம். நீங்க வந்திட்டீங்க?“
“நல்ல நேரம் பார்த்து வண்டி டெலிவரி எடுத்தோம்…“
மேனேஜர் ராதிகா மற்றும் மகா சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “இருங்க. இதோ வந்திட்டேன்…“ என ரமேஷ் உள்ளே போகிறான். அவன் முகம் மாறி யிருக்கிறது.
“ராமு?“ என்று கூப்பிடடபடியே உள்ளே போகிறான்.
“வா“ என உள்ளே யிருந்து ராமுவின் குரல்.
“என்னடா சேதி தெரியுமா?“
“என்ன?“
“நம்ம மகா…“ சிரிக்கிறான். “வண்டி வாங்கியிருக்கா.“
“வாங்கிட்டாளா?“
“உனக்கு அதுல சநிதோஷம் இல்லியாடா?“
“சந்தோஷம் தான்.“
‘அதை சந்தோஷமா சொல்லலியே நீ. தோஷமாச் சொல்லுறியே?“
“அப்பிடி யெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ போயி மகா கிட்ட எதையாவது உளறி வைக்காதே…“
“சேச்சே…“ என்றவன் ராமசாமி கிட்டே வந்து உட்கார்கிறான். “அவளைப் பத்திய விஷயத்தை நீ என்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் வந்திட்டதுன்னு நினைக்கிறேன் ராமு.“
“அப்பிடியா?“
“இந்தபாரு. விளையாடாதே.“
“நான் விளையாடல்ல. சாப்பிட்டுக் கிட்டிருக்கேன்…“ என்றவன், எழுந்து கொள்கிறான். “சாப்பிடப் பிடிக்கல்ல…“
“அப்பன்னால்?“
“எதையாவது வீணா கற்பனை பண்ணிக்கிட்டு அங்க போயி உளறி வைக்காதே காத்தவராயா?“
“கற்பனை பண்ணாதபடி உனக்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லக் கூடாதா?“
மகாவும் ராதிகாவும் கலகலவென்று சிரித்தபடி உள்ளே நுழைகிறார்கள்.
“சார் வண்டி வாங்கிட்டேன் சார். ஸ்கூட்டி பெப்.“
“பச்சை கலர்…“
“உங்களுக்கு எப்படித் தெரியும்?“
“இன்னிக்கு வண்டி வாங்கியிருக்கே. காலைல பச்சைக் கலர்ல டிரஸ் பண்ணியிருக்கே… SO LET ME GUESS IT THAT WAY…’’ சிரிக்கிறான்.
அவர்கள் உள்ளே நுழைய ராமசாமி வெளியே போகிறான். ரமேஷும் கூட வருகிறான். “நீ சாப்பிடப் போகல்லியா ரமேஷ்?“
“அப்பறமா சாப்பிடறேன்…“
இருவரும் வாசலுக்கு வருகிறார்கள். வாசலில் புதிய வண்டி ஸ்கூட்டி பிளஸ். சந்தனம் குங்குமம் இட்டு செவ்வந்தி மாலை போட்டு…
“ஹா“ என பெருமுச்சு விடுகிறான் ராமசாமி. அவனைப் பார்க்கத் திரும்புகிறான்.
“ரமேஷ்… ஐம் சீரியஸ். இப்ப நான் சொல்றதை நீ நம்பணும்…“
“நம்பறது அப்பறம். ஆனால் தெரியும்… யு ஆர் சீரியஸ்.“
“மகா வண்டி வாங்குவான்றது எனக்கு அவள் இங்க வந்த நாள் அன்னிக்கே தெரியும்…“
“ம்.“
என்னவோ சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்துகிறான். அவன் மனசில் காட்சி ஓடுகிறது.
“இன்னிக்கு ’ஸ்ரீநிவாசோட அப்பா அம்மா வர்றாங்க அன்க்கிள்…“ என உற்சாகமாக ராமசாமியிடம் சொல்கிறாள் மகா. ராமசாமி சிரித்தபடி “மாமனார் மாமியாரை ஐஸ் வைக்கப் போறியா?“ என அவள் கன்னத்தில் தட்டுகிறான்.
“கொஞ்சம் நெர்வஸா தான் இருக்கு அன்க்கிள்…“
“என்ன எதுக்கு நெர்வஸ்?“
“அவங்க என்னை நேர்ல பாத்தது இல்லை. ரெண்டு பேருமே லண்டன்லேர்ந்து வராங்க. இங்க ஸ்ரீநிவாசோட சித்தப்பா தான் எங்க அப்பா அம்மாவைப் பார்த்துப் பேசி முடிச்சது…“
“அதுனால என்ன?“
“இல்ல. முதன் முதல்ல பார்க்கறோம். அவங்க கிட்ட எப்பிடி நடந்துக்கணும், எப்பிடிப் பேசணும்னு ஒண்ணும் தெரியல…“
“ஸ்ரீநிவாஸ் கூட வரல்லியா?“
“அவன் வரேன்னான். நாந்தான் நானே மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன்…“
“அதெல்லாம் ஜமாய்ச்சிருவே நீ…“ என தட்டிக் கொடுக்கிறான் ராமசாமி.

ஸ்கூட்டி பிளஸ் உற்சாகமான குலுக்கலுடன் கிளம்பிப் போகிறது. சாலைகளில் வேகத் தடைகளில் சீராகச் செல்கிறது. சிக்னல்களில் நின்று கடக்கிறது. கூலிங் கிளாஸ் போட்ட மகா. ரோசா நிற உடைகளில் தேவதை போல. ஒரு திருப்பத்தில்… சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் போடப் படுகிறான். கடைசியில் நிற்கிற காரில் இருந்து யாரோ இறங்கி ஓடி வருகிறான். என்னாச்சி? என்னாச்சி? என்னாச்சி?... என குரல்கள்.
சட்டென முகத்தை மூடிக் கொள்கிறான் ராமசாமி. “என்னால கற்பனையே பண்ணிப் பார்க்க முடியல்லேடா ரமேஷ்.“ உடம்பு குலுங்குகிறது அழுகிறாப் போல. “நான்தான் அவளை வழியனுப்பி வெச்சேன் அன்னிக்கு…“
“சொல்ல வேணாம்“ என்கிறான் ரமேஷ்.
“இதை நான் நம்பறதா வேணாமான்றது இல்லை. ஆனால் அலட்சியம் பண்ண மாட்டேன்…“ என்கிறான் ரமேஷ். ராமசாமியைப் பார்க்கிறான். “அதாவது மகா… நீ வர்றேன்றியே… அந்த எதிர்காலத்தில்… இல்லை. அப்பிடியா?“
“ஆமாம்.“
“அவளோட சாவு உனக்குத் தெரியும்.“
“ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம்னு... அவளைக் கூறு போட்டு…“ என அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.
“ஆ“ என நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான் ரமேஷ். “என்னாலயே கற்பனை பண்ணிப் பார்க்க முடியல.“
“நான் அனுபவிச்சிருக்கேன்…“
“வேணாம்“ என்கிறான் ரமேஷ். “போதும்.“ என்கிறான். “தெரியாத்தனமா உன்கிட்ட இதைக் கேட்டுட்டேன்டா…“ என்கிறான்.
“இதை யார் கிட்டயும் மூச்சு விடக் கூடாது“ என்கிறான் ராமசாமி.
“இதை எப்பிடி யார் கிட்ட நான் போய்ச் சொல்றது?“
“சரி. போய்ச் சாப்பிடு. போ“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு இதுக்குமேல எனக்குச் சாப்பாடு இறங்காதுடா.“
“சாரி“ என்று அவனை வெளியே கூட்டிப் போகிறான் ராமசாமி. “DO YOU WANT TO SMOKE?“
“இல்ல வேணாம்…“ என்கிறான் ரமேஷ். “இப்படி வேற வேற காலத்து வருஷக் குழப்பத்தில் அப்படியே எல்லாம் சந்தோஷமா அமையாது…“
“எப்பிடி அமையும்?“ என்கிறான் ராமசாமி. ‘சரி. நான் சொல்றதை நீ நம்பறியா?“
“எனக்கே புரியல்ல. நம்பறதா வேணாமான்னு…“
மெல்ல நடக்கிறார்கள். அந்த மரத்தடி சோசியன் “வாங்க சார். உங்க எதிர்காலத்தைத் தெரிஞ்சிக்கங்க…“
“அதைத் தெரிஞ்சிக்கர்றதுல தான் குழப்பமே“ என்கிறான் ரமேஷ்.
“அது எப்பிடி சார்?“ என்கிறான் சோசியன்.
“எப்பவுமே ரமேஷ். இறந்த காலத்தையும் விட்டுறணும். எதிர்காலத்தையும் கவலைப் படக் கூடாது. நிகழ் காலத்தில் அன்னன்னிக்குப் பாடு ஓடுதா? அத்தோட வாழறது நல்லது…“
“முடியல்லியேடா“ என்கிறான் ரமேஷ். “எத்தனை பெரிய குண்டைப் போட்டுட்டே…“
“இன்னிக்கு பாரு. எனக்கு ஒரு நல்ல சேதி. இன்னொண்ணு இப்பிடி யோசனை… நான் என்ன பண்றது ரமேஷ்.“
ராமசாமி மனதில் அந்தக் காட்சி… கடைசி வண்டிக்காரன் வெளியே இறங்கி ஓடுகிறான். என்னாச்சி? என்னாச்சி? என்னாச்சி?... என்ற குரல்கள்.
இறங்கி ஓடியவன் சட்டென திரும்ப வந்து முன் மடிந்து, உவ்வே, என வாந்தி எடுக்கிறான்…
“அந்தத் தகவலே பாங்க்குக்கு தான்டா வந்தது… நான்தான் அந்த போனை எடுத்தேன்…“
“வேணாம்… போதும்“ என்கிறான் ரமேஷ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.
“இதுக்குதான் நான் இதெல்லாம் உனக்குத் தெரிய வேண்டாம்னு இருந்தேன். நீ கேட்கல்ல“ என்கிறான் ராமசாமி.
“மேனஜேர் தேடப் போறார்“ என்கிறான் ரமேஷ். திரும்பி நடக்கிறார்கள்.
 * * *
தொ ட ர் கி றே ன்

91 97899 87842

No comments:

Post a Comment