Friday, September 11, 2015

அத்தியாயம் 21 - updated evryday - திரைப்பட வீயூகத்தில் ஒரு நாவல்

வ சி க ர ப்

பொ ய் க ள்

அத்தியாயம் 21
குறும்படம் எடுக்க என்று சிகாமணியும் நண்பர்களும் குழுமி யிருக்கிறார்கள். காமெரா வைத்திருப்பவன் தலையில் சிறு தொப்பி. அருகில் கூலிங் கிளாஸ் போட்டபடி ஒருத்தன். கையில் பேடும், அதில் சில தாள்களும். அவன்தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம். தாளின் முதல் பக்கத்தில் பெரிசாய் அழகாய் எழுதியிருக்கிறது. புதிய புனைப் பெயர். ராஜபாரதி.
“பாரதிராஜாவுக்குப் போட்டியா வன்ட்டான்டா ஒருத்தன்“ என கூட்டத்தில் யாரோ கிண்டல்.
ராஜபாரதி எதோ யோசிக்கிறான். அவன் முகம் மலர்கிறது. ஒரு வரியை சட்டென அடித்துப் புதுசாய் எழுதுகிறான்.
கூட்டத்தில் ஒருவன் “என்ன படம் சார்?“ என்று கேட்கிறான். “அட படம் கிடம் ஒண்ணும் இருக்காதுடா. எல்லாரும் தவறாமல் ஓட்டுப் போடுங்கள் - அப்டின்றா மாதிரி துண்டுப் படமா இருக்கும். இதுங்க முகரைங்களைப் பார்த்தால் படம் எடுக்கற முகரைங்களாட்டமா இருக்கு?“ என கூட்டத்தில் மற்றொருவன்.
இயக்குநர் ஆவேசமாய் “ஏன் சார் படம் எடுக்கன்னு தனி முகரையா வாங்கி ஒட்ட வெச்சிக்க முடியும்?“ என்று கேட்கிறான்.
“இந்த டயலாக் நல்லா இருக்கு“ என அவனை சிகாமணி போய் சமாதானப் படுத்துகிறான். “தேங்ஸ்“ என்றபடி அவன் திரும்ப தன் வேலைக்குப் போகிறான்.
இயக்குநர் அருகில் ஒருத்தன் போகிறான். “என்ன கதை சார்?“
“இப்ப என் வேலையை விட்டுட்டு உன்கிட்ட வந்து நான் கதை சொல்லணுமாய்யா?“ என திரும்பவும் கோபப்படுகிறான்.
அதற்குள் கூட்டத்தில் ஒருவன் தனியே மேக்-அப் போட்டுக் கொண்டிருக்கும் நடிகையைக் காட்டி, “அதோ அந்தம்மாவை…“ அப்படியே திரும்பி இன்னொரு பக்கம் நின்று கொண்டிருக்கும் ஆளைக் காட்டுகிறான். “இதோ இந்தத் தடியனாட்டம் இருக்கிறானே… அவன்… கற்பழிக்கப் போறான்.“
ஐயய்ய நான் மாட்டேன், என வெட்கமாய் மறுக்கிறான் தடியனாட்டம் இருக்கும் அவன்.
“அவன் ஏன் மேக்-அப் எதுவும் போடல்ல?“
“கழுத்துல கர்ச்சிப் எதும் கட்டி, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு மாதிரி மச்சம் கிச்சம் வைப்பாங்க. பாரேன்.“
அடுத்தவனின் கற்பனையில் அந்த மேக்-அப்புடன் தடியனின் முகம் வருகிறது. “யோவ் நல்லாதான்யா இருக்கு. பேசாம நீயே கதை எழுதலாம் அண்ணே.“
“யோவ் கதை உன் கதை இல்லய்யா. என்னிது…“
“இருந்தாலும் கற்பழிப்பு வேஷத்துக்கு அந்த ஆள் சூப்பரா இருப்பான் சார்.“
சீச்சீ, என அவன் மேலும் வெட்கப் படுகிறான். “ஏய்யா அந்தம்மா பாரு. அவங்களே வெட்கப் படல்ல. பேசாம இருக்கு. இவரு கற்பழிக்கப் போறாராம். இவருக்குப் பாரு வெட்கத்தை…“
“கொஞ்சம் கம்னு இருய்யா. வேலை செய்யிற மூடையே கெடுத்துருவாங்க போல…“ என இயக்குநர் கத்துகிறான். சற்று தள்ளிப் போய் சேரை இழுத்துப் போட்டு உட்கார்கிறான்.
அறிமுகம் அற்ற நடிகை. சொந்தமாய் தன் மேக்-அப் பெட்டி கொண்டு வந்திருக்கிறாள். மடியில் கண்ணாடி வைத்து குனிந்து அவளே மேக்-அப் போட்டுக் கொண்டிருக்கிறாள். சுடிதார் அணிந்திருக்கிறாள்.
“கற்பழிப்புன்னா புடவை தான் அண்ணே அம்சமா இருக்கும்…“
“டைரக்சன் மிஸ்டேக்.“
ஒரு உதவி இயக்குநர் அவளிடம் வருகிறான். “இரும்மா என்ன சீன்னு கேட்டுக்கோ. நீ பாட்டுக்கு பணக்கார வேஷம் போடறாப்ல இவ்ள எடுப்பா ரெடியாகறியே?“
“அப்பிடியா? இப்ப என்ன பண்றது?“ என்று அவள் திகைப்புடன் கேட்கிறாள்.
“கற்பழிச்சிட்டா மேக்-அப் எல்லாம் கலைஞ்சிரும். அந்த சீனை முதல்ல எடுத்திறலாம்…“
“ஆமாண்டா. கற்பழிக்கு முன்னால மேக்-அப் இருந்தால் தான் சீன் எடுபடும். முன்னாடியே பங்கரையா இருந்தால் எவன் கற்பழிப்பான்“
இயக்குநர் திரும்ப முறைக்கிறான்.
“இல்லடா, இது ஓட்டுப் பொடுங்கள் தவறாமல்…ன்ற துண்டுப் படம் தாண்டா. நான் போறேன்.“ ஒருவன் கிளம்புகிறான்.
“அன்னிக்கு ஒரு விளம்பரப் படம் பாத்தேண்டா. குளிக்கிற சோப் விளம்பரம். குளிக்கிற சீனையே திரும்பத் திரும்ப எடுக்கறாங்க… பத்து டேக் வாங்கிட்டது.“
“அந்தம்மா குளிச்சதே இல்லை போல…“
“கடேசில அந்தம்மாவுக்கு ஷுட்டிங் முடிஞ்சி போறதுக்குள்ள ஜனதோஷமே பிடிச்சிட்டது.“
“டைரக்டருக்குத் தலைவலியே வந்திருக்குமே?“
“சார்… நல்ல ரிச் காஸ்ட்யூமா நீங்கதானே கொண்டு வரச் சொன்னீங்க?“ என்று கேட்கிறாள் நடிகை ராஜபாரதியை.
“சரிதாம்மா.“
“அப்ப இந்த மேக்-அப் சரிதானா?“
“சரியாத்தான் இருக்கு.“
அப்பா… என அவள் மீண்டும் நிம்மதியாக கண்ணாடி பார்த்துக் கொள்கிறாள். பக்கத்தில் இருக்கும் சிகாமணியிடம், “இந்தப் படத்துல நடிக்கறதுக்காக புதுசா டிரஸ் எடுத்தேன் சார்“ என்கிறாள்.
“உங்க கலை ஆர்வத்தைப் பாராட்டறேன்“ என்கிறான் சிகாமணி.
“தேங்ஸ்“ என்கிறாள் அவள் மலர்ந்து.
“ஆனால் நடிக்கவும் செய்யணும். அது இதைவிட முக்கியம்“ என்கிறான் சிகாமணி.
“இந்த அம்மாவை வெச்சிப் படம் எடுத்தால் படம் ப்ரி வியூ தியேட்டர்லியே, விநியோகஸ்தர் காட்சியே நூறு நாள் போகும்டா…“ என்கிறான் ஒருத்தன்.
ஒருவன் ராஜபாரதியிடம் வந்து “இந்தப் படத்தின் கதை நீங்கதானா?“ என்று கேட்கிறான்.
“எஸ்.“
“திரைக்கதை?“
“அதுவும் நான்தான்.“
“வசனம்?“
“நானே.“
“இயக்கம்?“
“சாட்சாத் நானே…“ என அவன் பெருமையுடன் நிமிர்ந்து சொல்கிறான்.
“அப்பன்னா… ஒண்ணு சொல்லவா?“
“சொல்லுங்க.“
“துட்டுச் செலவும் நீங்களே… சரிதானா?“
ராஜபாரதி முறைக்க அந்த நபர் நழுவுகிறான்.
சிகாமணி அருகே வருகிறான். “இப்ப என்ன சீன் சார்?“
“ம். கதாநாயகி பெரிய பணக்காரி. கதாநாயகன் ஏழை.“
“குடிசை வீட்டில் வசிக்கிற ஏழை.“
“அப்ப கற்பழிப்பு?“ என்று கூட்டத்தில் குரல்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ராஜபாரதி தொடர்கிறான். “கதாநாயகனைத் தேடி கதாநாயகி அவன் குடிசைக்கே வருகிறாள்…“
“எங்கடா குடிசை?“ என கூட்டத்தில் குரல்.
“அந்தா பாரு மாப்ளே. முன்னால மட்டும் கூரை பின்னாடி மொழுக்கட்டின்னு கெடக்கே அதான் அவன் குடிசை…“
“பாவம்டா கதாநாயகன். அந்தக் குடிசை கூட அவனுக்கு முழுசா இல்லை.“
“அவ்ள ஏழையா?“

“படத்தின் தயாரிப்பாளர் அவனை விட ஏழையா இருப்பார் போலுக்கே.“
“அவனைப் போய்க் கல்யாணம் பண்ணி இவ என்ன பண்ணப் போறா?“
“அவங்க ரெண்டு பேருமே மொழுக்கட்டின்னு கெடப்பாங்கடா.“
“ஐயோ இவங்களை கொஞ்சம் கம்னு இருக்கச் சொல்லுங்களேன்…“
“எங்களுக்குத் தெரியாத கதையா அண்ணாச்சி. எத்தனை படம் பார்த்திருப்போம்?“ என இளிக்கிறான் ஒருத்தன். அவனை சிகாமணி வாயைப் பொத்தும்படி சைகை காட்டுகிறான். “நாங்க எல்லாரும் உங்க இடத்துக்கு சினிமா எடுக்க வந்திருக்கோம். நீங்க கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுக்கணும்.“
“செய்லாம் நைனா. உனக்கு என்ன வேணும் ஒத்துழைப்பு. சொல்லு நீ…“ என ஒரு குடிகாரன் முன்னால் வருகிறான்.
அவரிடம் குனிந்து தோளைத் தொட்டு “நீ கம்னு அங்கபோயி குந்திக்கிட்டு வேடிக்கை மாத்திரம் பாரு. அதான் நீ தர்ற ஒத்துழைப்பு“ என்கிறான் சிகாமணி.
ராஜபாரதியிடம் வருகிறான் சிகாமணி. “சார் படம் எடுக்கும் போது அதுல கண்டிப்பா ஒரு நம்பகத்தன்மை கிடைக்கணும். யதார்த்தமா இருக்கணும் படம். சும்மா ஆளுங்க இங்க அங்க நடமாடறா மாதிரி எடுக்கறதா திரைப்படம்? அது நாடகம்…“
“கரீட்டு“ என்கிறான் குடிகாரன்.
“ஐயா…“ என இங்கிருந்தே வாயைப் பொத்துமாறு காட்டுகிறான் சிகாமணி.
“ஒத்துழைப்பு… சரி சரி“ என்று தன் வாயைத் தானே பொத்திக் கொள்கிறான் குடிகாரன்.
“இப்ப குடிசைன்னு ஒரு செட் மாதிரி பண்ணீருக்கீங்க…“
பின்னாடி மொழுக்கட்டின்னு கெடக்கு…“ என கூட்டத்தில் முன்னால் பேசியவன்.
“குடிசைன்றதால சார்…“ என்கிறான் சிகாமணி இயக்குநரிடம். “காட்சி இயற்கையா இருக்கணுமானால், ஒரு கோழி மாதிரி எதாவது வாசல்ல… கதாநாயகி நுழையுமுன்னால அது தொண்டை விரைக்க… ஒரு கொக்கரக்கோ..ன்னு கூவறா மாதிரி எடுத்தால், ரொம்ப அம்சமா இருக்கும்.“
“இப்ப சேவலுக்கு எங்க போறது?“ என்கிறான் ராஜபாரதி.
“எப்பிடியாவது கொண்டாருவோம். சீன் நல்லா அமையணுமானால் இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் சகஜம் தான். ஒவ்வொரு இயக்குநரின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு கடுமையான போராட்டங்கள் இருக்குன்னு… உங்களுக்குத் தெரியாதது இல்லை…“ என முடிக்கிறான் சிகாமணி.
“க…“ என ஆரம்பித்த குடிகாரன் அடங்கி “ஒத்துழைப்பு“ என தன் வாயைத் தானே பொத்திக் கொள்கிறான்.
“நம்ம ஆளுங்க யார் வீட்டிலயாவது சேவல் கிடைக்குமா?“ என்று கூட்டத்தைத் திரும்பிப் பார்க்கிறான் ராஜபாரதி. குடிகாரனைக் காட்டி “இவங்க பக்கத்து வீட்ல சேவல் இருந்தது…“ என்கிறான்.
“இப்ப இருக்கா?“
“அதை இவன்தான் திருடி குழம்பு வெச்சிட்டான்.“
“வாங்க தோழர் பாக்கலாம்“ என ஒருவன் கூட்டத்தில் இருந்து வருகிறான். ராஜபாரதி அவனுடன் போகிறான். “சிகாமணி நீங்களும் வாங்க“ என்று அவன் கூப்பிடுகிறான். “எதுக்கு நண்பா பத்து பேர்? எல்லாம் தோழர் பாத்து ஏற்பாடு பண்ணித் தருவார்…“
“நான் புரட்சிகர கலைக் குழுவில் பாடல்லாம் பாடுவேன் தோழர். சொந்தமாப் பாடல்களும் எழுதுவேன் தோழர். உங்க படத்தில் எனக்கு ஒரு பாடல் எழுதவோ, முடிஞ்சால் பாடவோ வாய்ப்பு கிடைக்குமா தோழர்… வாய்ப்பு கிடைச்சால் பட்டுக்கோட்டையையே மிஞ்சிருவேன் தோழர்.“
“பாட்டு கெடக்கட்டும். சேவல் கிடைக்குதா பாப்பம் வாங்க“ என்கிறான் ராஜபாரதி.
அவர்கள் கிளம்பிப் போகிறார்கள். நடிகை “என் மேக்-அப் கலைஞ்சிரும் போல…“ என்கிறாள் சிகாமணியைப் பார்த்து.
“பேய்ப்படம் எடுத்திற வேண்டிதான்“ என்று கூட்டத்தில் குரல்.
சிகாமணி மணி பார்க்கிறான். “போயி பத்து பதினைஞ்சு நிமிஷம் ஆச்சி… இன்னும் கிடைக்கல்லியா சேவல்?“
“யோவ் சேவல் இல்லைன்னா இந்தக் காட்சி எடுக்க முடியாதா? நீ வேற நல்லா இருந்த ஆளைக் குழப்பி விட்டுக் கூட அனுப்பிட்டியே?“ என ஒரு உதவி இயக்குநர் சிகாமணியிடம் கேட்கிறான்.
“அப்பிடில்லாம் ஏனோ தானோன்னு படம் எடுத்தேன்னா கவுந்துரும் தம்பி. நீ இப்ப உதவி இயக்குநர் ஆதுக்குள்ள வேலை செய்ய அலுத்துக்கறே?“
“கரெக்ட்“ என்கிறான் குடிகாரன். கூட இருப்பவன் அவனை சமாதானப் படுத்துகிறான்.
குடிகாரன் சிகாமணியைக் காட்டி “அந்தப் பையன் கிட்ட விவரம் இருக்குப்பா“ என்கிறான். சிகாமணி பின் பக்கம் திரும்பவும், குடிகாரன் வாயைத் தானே பொத்திக் கொள்கிறான்.
“தோழருக்கு பாட்டு சான்ஸ் குடுத்தால் தான் சேவலைப் பிடிச்சிக் குடுப்பான் போலடா“ என்கிறான் ஒருத்தன். “அதோ வந்திட்டாங்கடா…“ என்கிறான் இன்னொருத்தன்.
தோழர் கையில் சேவல். ராஜபாரதியின் வெள்ளைச் சட்டையில் இரத்தம். அவன் கையில் எதோ காயம். “என்னாச்சி?“ என எழுந்து ஓடி வருகிறான் சிகாமணி. “என்ன ஓட்டம் ஓடுது…“ என்று கையில் வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொள்கிறான் ராஜபாரதி.
“சேவல் எங்கயும் கிடைக்கல்ல. ஒருத்தன் கடைசியா தரேன்னான். வாடகையே 500 ரூபாய்.“
“பிராய்லர் உயிரோடவே அவ்வளவு விலை பெறாதே அப்பா?“
“வாங்கிட்டு வந்தேன். வேற வழி…“
“வெரி குட்“ என்கிறான் சிகாமணி. “சீன் பெர்ஃபக்டா வரணும் இல்லே.“
“தோழர் நம்மளை மறந்துறப்டாது…“ என்கிறான் அந்தப் பாடகன்.
“எங்க ஒரு பாட்டு பாடிக் காட்டுங்க…ன்னு அவர் இப்ப சொல்ல முடியாதுங்க. ஷுட்டிங் முடியட்டும்.“
அதற்குள் சேவலின் சொந்தக்காரக் கிழவன் ஓடி வருகிறான். “பாத்து பூவா கையாளணும் அதை“ என்கிறான்.
“தூக்கித் தலையில வெச்சிக்கிர்றதாய்யா? அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்“ என்கிறான் ராஜபாரதி.
“பணம்?“
“அதெல்லாம்  படப்பிடிப்பு முடிஞ்ச பிறகுதான்…“
“டாஸ் மாக் இருக்கும் தலைவா…“ என கூட்டத்தில் யாரோ கிண்டல்.
“சேவலை விட்டால ஓடிரும். சீனை எப்பிடி எடுக்கறது?“ என்று கேட்கிறான் உதவி இயக்குநர்.
““காலைக் கட்டிப் போடுங்க…“
“ஐயோ என் சேவல்…“ எனப் பதறுகிறான் கிழவன்.
“நீயே கட்டிப் போட்டுத் தானேய்யா வெச்சிருந்தே. இங்க வந்து சீன் போடறே…?“ என்கிறான் ராஜபாரதி.
“கட்டியிருந்த போதே நம்மைப் பார்த்ததும் கட்ட அவுத்துகிட்டு அது ஓடிட்டது….“ என்கிறான் தோழமைப் பாடகன்.
“அதைப் பிடிக்கப் போயி என் சட்டையே அழுக்காகி, கிழிஞ்சி, உடம்பே காயம் பட்டு…“
“காட்சி சிறப்பா அமைஞ்சால் எல்லாம் தெரியாது“ என புன்னகை செய்கிறான் சிகாமணி.
“எதுக்கு இப்ப குறும்படம் எடுக்கறாங்க?“

‘தொலைக்காட்சில நாளைய இமயக்குநர்னு போட்டி.“

“யாரு நடுவர்?“

“அட யாரோ நேற்றைய இயக்குநர்.“

கட்டிய சேவல் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறது. “அது பேசாமல்  அடங்கினால் தான் படம் எடுக்க முடியும்…“ என்கிறான் கேமெராமேன்.
“நேரமாவுது“ என்கிறான் ராஜபாரதி. “இப்பவே பாதி நாள் போயிட்டது… செலவு வேற பட்ஜெட் தாண்டுது.“
“எத்தனையோ கஷ்டங்கள் தியாகங்கள் திரைக்குப் பின்னால் இருக்குது“ என்கிறான் சிகாமணி.
“பேசாமல் மயக்க மருந்து மாதிரி கொடுத்துப் படுக்க வெச்சிறலாமா?“
“ஐயோ என் சேவல்…“ என கிழவன் கத்துகிறான்.
“அது சரி வராது தோழர். அது குரல் விரைக்க கொக் கொக் கொக்னு தொண்டையை விரித்து கொக்கரக்கொன்னு கூவணும். அப்பதான் காட்சி சரியா வரும்…“
“அது புது ஆட்களைக் கண்டு பயப்படுது…“ என்கிறான் கிழவன்.
குடிகாரன் நாவில் அதைப் பார்த்ததும் நீர் சொட்டிவிட்டது. “எந்த வீட்டுச் சேவல்ப்பா இது?“ என்கிறான் ஆசையுடன்.
சேவல் கொஞ்சம் அடங்கியதும், காமெராவை அதன் பக்கம் கொண்டு போனாலே படபடன்று பொங்குகிறது. “ச். இப்பிடி இதை எடுத்தாலும் ஒண்ணுதான், எடுக்கா விட்டாலும் ஒண்ணுதான்…“
“சேவலே வேணாம்னு சொல்றலாமா?“
“அதெப்பிடி? எனக்குப் பணம் தரணும்…“ என்கிறான் கிழவன்.
“யோவ் இருப்பா. கொஞ்சம் காமெராவைப் பார்க்கப் பழகிட்டது பாரு… இப்ப எடுக்கலாமா?“
சட்டென அதன் மேல் விளக்குகள் ஒளியைப் பாய்ச்ச திரும்ப அது மேலும் ஆவேசமாய்ப் பதறித் துடிக்கிறது…
“சார் சேவலை அறுக்கறா மாதிரி ஆடியன்ஸ் நினைச்சிக்குவாங்க சார்.“
“மணி ரெண்டு ஆயிட்டது சார். சாப்பாடு முடிச்சி வேலையை ஆரம்பிக்கலாமா?“ என்கிறான் உதவி இயக்குநர்.
“இருய்யா இன்னும் ஒரு சீன் கூட எடுக்கவே இல்லை. அதுக்குள்ள…“ என ராஜபாரதி கோபப்படுகிறான்.
“சேவல் அடங்காது சார். வேணாம். நாம வேற சீன் எடுக்கறது நல்லது சார். இப்பவே மணி ரெண்டே கால்…“ என்கிறான் உதவி இயக்குநர்.
“சரி. அப்ப ஒரு ஆடு கீடு….“ என சிகாமணி ஆரம்பிக்கிறான்.
“கரெக்ட்“ என்கிறான குடிகாரன்.  “அந்தாளு கிட்ட விஷயம் இருக்குதுப்பா.“
ராஜபாரதி சிகாமணியைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “நீங்க போயிட்டு வாங்க. என் படம். நான் எப்பிடியோ எடுத்துக்கறேன்… இன்னிக்கு அரை நாள் போச்சி. மீதியாவது எனக்கு மிஞ்சட்டும்…“
“சார்… நான் என்ன சொல்ல வரேன்னால்…“
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…“
“கரெக்ட். இந்தாள் சொல்றதுலயும் நியாயம் இருக்குப்பா“ என்கிறான் குடிகாரன்.
எல்லாருமே சிகாமணியைத் தனியே விட்டுவிட்டு ஷுட்டிங்குக்குப் போகிறார்கள்.
லைட்… என்று சத்தம். சிகாமணி இருக்கும் இடம் அப்படியே இருட்டு கவிகிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
(bulk update of chapters –
vasikarapoikalplus.blogspot.com

every Tuesday /Friday)

No comments:

Post a Comment