Monday, September 28, 2015

அத்,. 38 updated everyday திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 38
“அத்தான் சுத்தமா அவருக்கு ஞாபகமே இல்லை…“ என்று உதட்டைப் பிதுக்குகிறான் சிகாமணி.
“இப்ப பார்… இதோ பார்…“ ராமசாமி சட்டென்று தன் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்துக் காட்டுகிறான். “இது உன்னிது தானே? உங்கது தானே? இதாவது ஞாபகம் இருக்கா? ..குங்களா?“ ராமசாமி புன்னகையுடன் சின்னக்கனியைப் பார்க்கிறான்.
சின்னக்கனியின் முகம் ஆச்சர்யத்தில் விரிகிறது. “ஆகா அவருக்கு ஞாபகம் வந்திட்டது… நீங்க உட்காருங்க அத்தான்“ என்கிறான் சிகாமணி உற்சாகமாய். “ஹோ ஹோ“ என்று சிரிக்கிறான் சின்னக்கனி. அர்த்தம் புரியாமல் அவன் கூடவே சேர்ந்து ராமசாமியும் சிகாமணியும் சிரிக்கிறார்கள். “பொதுவா நாங்கதான்டா எங்க திறமையைக் காட்ட இந்த மாதிரி, கூடப் பேசிட்டிருக்கறவங்க கிட்டியே திருடிக் காட்டுவோம்… இந்தாளு… பாரு. பார்க்க அப்பாவி மாதிரி இருக்கான். என்னென்ன வேலையெல்லாம் காட்டறான்… இது என் சங்கிலிதான். எப்பிடித் திருடினே இதை என்கிட்ட யிருந்து?“
“ஐயோ நானா, திருடினேனா? ஈஸ்வரா? இது நீ… நீங்கதானே எனக்குக் குடுத்தீங்க…“‘
“நானா?“
“ஆமாம்.“
உனக்கா?“
“நிசந்தான் சின்னக்கனி.“
“பிறந்த நாள் பரிசா?“
ராமசாமி முழிக்கிறான்.
“இவங்க எல்லாரும் வாழ்க்கைல கஷ்டப் பட்டவங்க. போலிசுலயும் ஜெயில்லயும் அடி வாங்கித் துவண்டு கெடக்கறாங்க. நல்லவனா வாழ நினைச்சாலும் இவங்களை இந்த சமுதாயம் நல்லவங்களா ஒத்துக்கறது இல்லை. இவங்களை நல்லவங்களா நம்பறதும் இல்லை. நல்லவங்களா வாழ விடறதும் இல்லை. இவங்களுக்கு நான் உதவி செய்யிறேன்…“
“இந்த டயலாக் நல்லா இருக்கு அத்தான்…“
“உனக்கு? நல்லா கொழுகொழுன்னு சீமைப் பன்னி மாதிரி இருக்கே. உனக்கு எதுக்கு நான்? அதும் தங்கச் சங்கிலி?“
“இந்த உவமை கூட நல்லாதான் இருக்கு…“
“நீ சும்மா இர்றா. சின்னக்கனி. இங்க பார்… பாருங்க. அன்னிக்கு ரெண்டு வருஷம் முந்தி…“
“ஆரம்பிச்சிட்டாண்டா…“
“உனக்கு பதிலா நான் அடி வாங்கினேன்னு…. அது எனக்கே தெரியாது. நீதான் என்கிட்ட விவரம் சொன்னது.“
சின்னக்கனி காதைக் கிட்டே கொண்டு வந்து காட்டுகிறான்.
“என்ன கனி?“
“பூ. பூ இருந்தா வெச்சி விடு…“
“இங்க வரை உன்னைத் தேடி இந்த ராத்திரி நேரத்தில் நாங்க ஏன் வந்து மாட்டிக்கறோம்? உன்னை எனக்கு எப்பிடித் தெரியும்? உன் உதவி ஆள் மணி… அவனை எனக்கு எப்பிடித் தெரியும்? ரெண்டு வருஷம் முந்தி  மெரினா பீச்ல… உனக்கு… அந்த மாதிரி ஒரு கை கலப்பு… அது நடந்தது எனக்கு எப்படித் தெரியும்?“
“இது எல்லாம் நான் கேட்க வேண்டிய கேள்விகள்…“ என உடலைக் குலுக்கிக் கொண்டு சிரிக்கிறான் சின்னக்கனி. அவனைப் பார்த்து பரபரப்பாகிறான் மணி.
சின்னக்கனியின் கிட்டே வருகிறான் மணி. “அண்ணே?“ என்கிறான் கிசுகிசுப்பாய்.
“என்னடா? நீ என்ன சொல்லப் போறே?“
“உங்க கழுத்து…“
“என் கழுத்துக்கு என்னடா? தலைக்குக் கீழே இருக்கு அது பாட்டுக்கு…“
“இல்லண்ணே…“
“என்ன நொள்ளண்ணே…“
“சங்கிலி.“
“சங்கிலியா?“
“உங்க சங்கிலி உங்க கழுத்திலயே கெடக்கு அண்ணே…“
“என்னடா சொல்றே?“ என்று தன் கழுத்தைப் பார்க்கிறான் சின்னக்கனி. “ஏ ஆமாண்டா…“
“கதையில் நல்ல டிவிஸ்ட்“ என்கிறான் சிகாமணி.
“பரவால்ல அவனை ஒரு அறை விடுங்க. அவன் என் கூட வந்தாளு தான். இருந்தாலும் இவன் லொள்ளு தாங்க முடியல்ல…“
“அப்பிடிச் சொல்லாதீங்க அத்தான். இது வசிகரப் பொய்களா, நாயகன் பார்ட் ட்டூவா? எனக்கே குழப்பம்.“
“ஏற்கனவே இருக்கற குழப்பம் போதும்டா…“ என்றபடி ராமசாமி சின்னக்கனியைப் பார்க்கிறான்.
சின்னக்கனி தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றுகிறான். “இதான் என்னோடது… அப்ப அது?“
“இதுவும் உன்னோடது தான் கனி“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி.
“என்னடா சொல்றான் இவன்?“ என்கிறான் சின்னக்கனி.
“அதைக் கழட்டுடா…“ என்கிறான் மணி.
“எனக்கு வேணாம்… உன் கிட்டியே இருக்கட்டும்.“ என கழற்றித் தருகிறான். “ரெண்டுமே தங்கம் தான்“ என்கிறான் சின்னக்கனி.
“அண்ணன் பார்த்த ஜோரில் தங்கமா கவரிங்கான்னு சொல்லிருவாரு…“ என்கிறான் மணி.
“நானும் சொல்வேன்…“ என்கிறான் ராமசாமி.
“எப்பிடி?“
“நான் பேங்க்ல அடகு வைக்க நகை வாங்குவேன்…“
சின்னக்கனியின் கண்கள் விரிகின்றன. “ரெண்டுமே ஒரே மாதிரி. அச்சு அசல்…“
“எது அசல், எது நகல்?“ என்கிறான் மணி.
“ரெண்டுமே அசல்“ என்கிறான் ராமசாமி.
“அத்தான் எனக்கு விஷயம் புரிஞ்சிட்டது…“ என்கிறான் சிகாமணி.
“உன்கிட்ட அப்பறம் பேசறேன்…“ என்கிறான் ராமசாமி.
“இவங்களை என்ன செய்யலாம்?“ என்று மணியிடம் கேட்கிறான் சின்னக்கனி. “பார்க்க அவங்க ஒண்ணும் பொய் கிய் சொல்ற மாதிரியும் இல்லை…“ என்கிறான் மணி.
“கரெக்ட்டு“ என்கிறான் சிகாமணி.
“உன்னைக் கேட்டேனா?“ என்கிறான் சின்னக்கனி. பிறகு மணியிடம் திரும்பி, “இவங்களை நம்ப முடியல்ல. இருந்தாலும் இதுல என்னவோ இடிக்குது… உண்மையாவும் சில விஷயங்கள் பேசறான்… நான்தான் தண்ணியைக் கிண்ணியைப் போட்டுட்டு…“ என யோசிக்கிறான்.
“ஆனால் ரெண்டு செய்ன் இருக்கே?“
“இப்ப தண்ணி போட்டிருந்தால் ஒண்ணு ரெண்டாய்த் தெரியும்…“ என்கிறான் சிகாமணி.
“சரி. வந்த வரை லாபம்… இது எனக்கு ராசியான சங்கிலிடா…“
“ஆமாம்“ என்கிறான் ராமசாமி. “உன்னைக் கேட்டேனா?“ என்று சீறுகிறான் சின்னக்கனி.
“சீமைப்பன்னி... ஹி ஹி“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“இல்ல. இதுமாதிரி ஒரு வசனம் நீ சொல்லுவே சின்னக்கனி…“
“வசனமா?“
“ஆமாம்…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி.
“என்ன வசனம்? சொல்லு சொல்லு சொல்லு…“
“இந்தச் சங்கிலியை மாட்டிக்கிட்டதுலயிருந்து….“ என நிறுத்துகிறான் ராமசாமி. சின்னக்கனி அவனையே ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான். “நான் மாட்டிக்கிட்டதே இல்லை“ என முடிக்கிறான் ராமசாமி.
“அட ஆமடா…“
ராமசாமி நம்பிக்கையுடன் அவனைப் பார்க்கிறான்.
“இதுவும் நான் ரெண்டு வருஷம் முந்தி சொன்னதா?“
“பின்னே? எனக்கு எப்பிடித் தெரியும்?“
“இதெல்லாம் நம்பறா மாதிரி…“
“இருக்கு அண்ணே. என்னவோ தூக்கத்தில் இருந்து எந்திரிச்சி வந்து பேசறா மாதிரி இந்தாளு டக்கு டக்குனு எடுத்து வைக்கறான்.“
“உன் சங்கிலியை உன் கிட்டயே தந்துட்டேன்… இப்ப உனக்கு ரெண்டு சங்கிலி…“
“அபேஸ் அடிக்காமலேயே…“ என்று சிரிக்கிறான்.
“இனிமேலும் கதையை வளத்த வேணாம்… இன்னிக்கு என்னோட பிறந்த நாள்… இன்னிக்கு நான் கத்தி எடுக்க மாட்டேன்.“
“ஆகா. அத்தான் வீட்ல பேரயி இந்த வசனத்தைக் குறிச்சிக்கணும்…“
“நீ படுத்தற பாடுக்கு நானே கத்தி எடுப்பேன்…“ என்கிறான் ராமசாமி.
“இவங்களை விட்டுறலாம்… இனி இவங்க வேவு பார்ககவோ, எதுக்குமே…  இந்தப் பக்கம் வரக் கூடாது.“
“சண்முகா டாக்கிஸ்ல படம் பார்க்கக் கூட வர மாட்டோம்…“ என்கிறான் ராமசாமி.
“ஆனாலும் எனக்கு உன்னாண்ட நிறைய சந்தேகம் இருக்கு…“
“இருக்கணுமே…“ என்கிறான் சிகாமணி.
“எங்க ஆளுங்க உன்னை எப்பவும் தொடர்ந்து வாச் பண்ணிக்கிட்டே இருப்பாங்க…“
ராமசாமி தலையாட்டுகிறான். “உன்னைப் பத்தி எனக்குத் தகவல் வந்திட்டே இருக்கும்… இதுவரை நீங்க என்னைப் பத்தி என்னென்ன தகவல்லாம் சொன்னீங்க. இனி நாங்க புட்டு வைக்கிறோம்…“
“புட்டு ஏன் வைக்கறீங்க? உங்க பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா?“ என்கிறான சிகாமணி.
“உன் பேர் என்ன சொன்னே?“
“சீமைப்பன்னி.“
“நான் சொல்லவே இல்லியே. நீங்க கேட்கவே இல்லியே?“
“சொல்லு சொல்லு.“
“ராமசாமி.“
“இவன்?“
“சிகாமணி. வருங்கால திரைப்பட இயக்குநர்… அது விஷயமாத்தான்…“ என அசடு வழிகிறான். “உங்களைப் பார்க்க வந்தோம்.“
“என்னை எதுக்குடா பாக்க வந்தே? நான் என்ன படமா எடுக்கப் போறேன்…“
“படமா.. கதையே நீங்கதான்…“ என சிரிக்கிறான் சிகாமணி.
“பாரு. உன் ரெண்டு வருஷத்துக் கதையை நான் தோண்டி எடுக்கறேன்…“ என்கிறான் சின்னக்கனி.
“இப்ப… நாங்க கிளம்பலாமா?“
“விடுங்க அவங்களை….“ என்கிறான் சின்னக்கனி.
“அந்தச் சங்கிலி… நல்ல ராசி. ஆனால் உனக்குதான் சின்னக்கனி…“
“ஏன்?“
“அது எங்கிட்ட வந்ததா? நான் மாட்டிக்கிட்டேன்… உங்கிட்ட…“ சின்னக்கனி சிரிக்கிறான். “அது உன்கிட்டியே இருக்கட்டும்…“ என்கிறான் ராமசாமி.
“வேற எந்த நாளைக்கு என்னாண்ட வந்திருந்தாலும் நீங்க இப்பிடி உசிரோட போயிருக்க முடியாது…“
“இனிமே வந்தால் உன் பிறந்த நாளைக்கு தான் வரணும் நாங்க…“ என்கிறான் சிகாமணி.
“வழி விடுங்க…“ என சின்னக்கனி அந்தச் சங்கிலியைப் பார்த்தபடி சொல்கிறான். கும்பல் விலக அவர்கள் போகிறார்கள். வழியில் அந்த நடனப் பெண் உட்கார்ந்திருக்கிறாள். சிகாமணி அவளைத் தாண்டிப் போகையில் “உன் பேர் என்ன?“ என்று கேட்கிறான். “மனோன்மணி“ என்கிறாள் அவள். “ரொம்ப முக்கியம்… வாடா“ என அவனை இழுத்துப் போகிறான் ராமசாமி.
அவன் போனதும் சின்னக்கனி “என்னடா இவனுகளைப் புரிஞ்சிக்கவே முடியல்லியே?“ என்கிறான் மணியிடம். “உங்க சங்கிலி மேட்டருண்ணே… அதுதான் பெரிய குழப்பம். மத்தது எல்லாம் வாய் வார்த்தை… அள்ளி விடறது. தெரிஞ்சிக்கிட்டு வந்து சவடால் பேசறது… ஆனால் சங்கிலி?“ என்கிறான் மணி. “அச்சு அசல். அதேதான்… இதுல எதோ பெரிய கதை இருக்கு மணி… பொறந்த நாள் அன்னிக்கு இப்பிடி எல்லாம் நடக்குதே?“
அப்போது அவர்களில் படித்த ஒருவன் “அண்ணே… இதைப் பாத்தீங்களா?“ என வருகிறான். அவன் கையில் செய்தித்தாள். தினத்தந்தி.
“என்னடா?“
“இந்த ஆள் ஒரு வங்கியில் வேலை செய்யறாரு.“
“அதான் அவரே சொன்னாரே. பேர் என்ன போட்டிருக்குது?“
“ராமசாமி. போட்டோவே போட்டிருக்கு அண்ணே.“
மணியைப் பார்த்துத் தலையாட்டுகிறான். “பரவால்ல. பொய் ஒண்ணும் சொல்லல்ல… படி அதை.“
“ரெண்டு வருஷம் முந்தி அவங்க வங்கில ஒரு கொள்ளை. அதை இப்பதான் கண்டுபிடிச்சிருக்காங்க. இவரே திருடங்களைப் பிடிச்சிக் குடுத்திருக்காரு.“
“அங்கயும் ரெண்டு வருஷமா?“ என யோசிக்கிறான் சின்னக்கனி. ‘நீ என்ன சொல்றே மணி?“
“செய்திகளை முந்தித் தருது தினத்தந்தின்னு போடுவாங்க. நமக்கு செய்தி தாமதமா வந்திட்டது அண்ணே...“ என்று சிரிக்கறின்.
“இப்ப என்ன பண்ணலாம் சொல்லு...“ என்கிறான் சின்னக்கனி.
“எப்பிடியும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிக்கிட்டா நல்லது“ என்கிறான் மணி. “ஆனால் அண்ணே அவன் நம்மளை வேவு பார்க்க வந்திருக்க மாட்டான்…“
“அது எனக்கே தெரியும்“ என்கிறான் சின்னக்கனி. “வேவு பார்க்க வந்திருக்கிறவன் நம்ம முன்னால வந்து இப்பிடி பெப்பேன்னு நிக்க மாட்டான்…“ என்று சிரிக்கிறான். “அதனால தான் அவனை இப்ப விட்டேன்…“ என்கிறான். “அவனாக் கூட வர்லடா. கூட ஒரு கிறுக்குப் பயல் வந்தான் பாரு.. அவன்தான் என்னமோ சினிமான்றான். கதைன்றான்.. அவன்தான் இவனை இழுத்துக்கிட்டு வந்திருக்கான்.“
“ஆமாண்ணே….“ என்கிறான் மணி. “உன்னையும் தெரியும்ன்றானே மணி?“ என்கிறான் சின்னக்கனி. “பாப்பம் பாப்பம்…“ என்று சிரிக்கிறான் மணி.
“அன்னிக்கு… பீச்ல… உங்களுக்கு ஞாபகம் இருக்குதா அண்ணே?“
“ஆமாமா. அந்த நாள்… ஞாபகம் இருக்கு. அப்போ… நமக்கே தெரிஞ்சிட்டது… இடம் சரி இல்லை. நம்மைச் சுத்தி ஒரு வியூகம் வகுக்கறாங்கன்னு தெரிஞ்சிட்டது. நானும் நீயும் மட்டும் தான் அப்ப. அவங்க எத்தனை பேர்னு தெரியல்ல… சட்னு சுதாரிச்சி நான் அரிவாளை உருவிக்கிட்டேன்… கண்ணுல தட்டுப்பட்ட ஒருத்தனைப் பார்க்க நான் ஓடினேன். அந்தக் கும்பல் நாலா பக்கமும் சிதறிப் போச்சு இல்ல… பீச்சே அல்லோல கல்லோமாயிட்டது…“
“ஆனால் அவங்க யாருன்னே தெரியல்லியே அண்ணே… இது நாள் வரை…“ என்கிறான் மணி. “அப்படியப்பிடியே… நாம சுதாரிச்சது தெரிஞ்சதும் வாபஸ் ஆயிட்டாங்களே…“
“ஆமாம்“ என்கிறான் சின்னக்கனி.
“இவன் என்னன்னா, நீங்க வாங்க வேண்டிய அடியை அவன் வாங்கிக் கிட்டேன்றான். அதுக்கு நீங்களே தங்கச் சங்கிலி போட்டீங்கன்றான்…“
“இதுல ஒண்ணு பாரு மணி… நானா போடாமல் இது எப்பிடி அவன் கைக்குப் போச்சு?“
“அதாண்ணே…“
“என்னை யாராவது தொட முடியுமா?“
“உங்க நிழலே கூட உங்களை விட்டுத் தள்ளிதான் நிக்கும் அண்ணே…“
“சரி. ரொம்ப சீன் போடாதே. இதுல எது உண்மை?“
“இப்ப உங்க கையில ரெண்டு தங்கச் சங்கிலி. இதுதான் உண்மை….“ என்று சிரிக்கிறான் மணி.
ராமசாமி வீடு. இரவு. மொட்டை மாடி. “அட போடா பைததியக்காரா… உன்னால தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடி வர வேண்டியதாப் போச்சு… உங்க அக்கா கிட்ட எதுவும் சொல்ல வேணாம்…“
“சொன்னால் என்னை வெளிய அனுப்பிருவா…“ என்கிறான் சிகாமணி.
“இதெல்லாம் நமக்குத் தேவையாடா?“ என பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “சரி… அவனுக்கு நம்மை ஞாபகமே இல்லியேடா?“
“அதான் நான் சொன்னேனே அத்தான்… எனக்குப் புரிஞ்சிட்டதுன்னு சொன்னேன் இல்லியா?“
“என்ன அது?“
“அந்த சின்னக்கனி… அவன் உங்க வாழ்க்கையில் ரெண்டு வருஷம் முந்தைய வாழ்க்கையில் உண்டா?“
“இல்லையே.“
“இப்ப… நீங்க பழைய காலத்துக்குப் போனபோது அவன் வந்து சேர்றான்…“
“ஆமாம்.“
“அதும் எப்ப?“
“சொல்லு.“
“வழக்கமான நியதிப்படி நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. உங்க அப்பா பத்தி வர்ற போனை நீங்க தவிர்த்து விட்டு பீச் போறீங்க… அப்ப இந்த மாதிரி நடக்குது.“
“அதான் ALTERNATE REALITY. சொல்லிட்டியே.“
“இது?“ என்கிறான் சிகாமணி சிரிப்புடன். “இது REALITY அத்தான்.“
“இந்தச் சின்னக்கனி ரெண்டு வருஷம் முந்தி உங்களைப் பார்த்ததே கிடையாது. பார்த்திருக்கானா?“
“இல்லை.“
“அப்ப?“ என்கிறான் சிகாமணி. “அப்ப அவனுக்கு நம்மளை எப்பிடிப் புரியும்?“
“ஓகோ“ என்கிறான் ராமசாமி.
“உண்மையில் அந்த மெரினா பீச் சம்பவம்… உங்களுக்கு நடந்த மாதிரி, ரெண்டு வருஷம் முன்னாடி நடந்திருக்காது…“
“அதாவது REALITY ல வேற மாதிரி நடந்திருக்கலாம்… அப்படித்தானே?“
“அதேதான்.“
“அது நமக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.“
“இல்லவே இல்லை.“
“அதான் குழப்பம். அதுனால தான் அவன் கழுத்தில் ஒரு சங்கிலி, அது REALITY  உங்க கிட்ட இருந்ததே அது எங்க வந்தது… ALTERNATE REALITY ல வந்தது. சரியா?“
“ரெண்டு வருஷம் முந்தி நடந்த விஷயம் திரும்ப எனக்கு நடந்தால் கூட அவங்களை நிகழ் காலத்தில் பார்க்கிற போது கச்சிதமா ஞாபகம் இருக்கறது சாத்தியமே இல்லை. கல்யாண நாள்… நான் இவளை வந்து வெளியில் கூட்டிட்டுப் போனேன். அவளுக்கு இப்ப அதைப் பத்திக் கேட்டால்… ஒரளவு ஞாபகம் இருக்கும். என் அளவு கச்சிதமா அவளால ஞாபகப் படுத்திக்க முடியாது…“ என்கிறான் ராமசாமி.
“பாயின்ட்“ என்கிறான் சிகாமணி.
“வேண்டாத வம்புல நாம மாட்டிக்கிட்டோம்டா“ என்கிறான் ராமசாமி.
“அத்தான்… அஹ்“ என சிரிக்கிறான் சிகாமணி. “என்னடா?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “உங்களை…“ சிரிக்கிறான். “சீமைப் பன்னின்னான் பாருங்க…“ அடக்க முடியாமல் சிரிக்கிறான். “நல்லாதான் சொன்னான்…“
“உன்னால அதையெல்லாம் நான் வாங்கிக் கட்டிக்கிட்டேன்.“
“தப்பிச்சி வந்தாச்சி. அப்பறம் என்ன?“
“தப்பிச்சிட்டதா நீ நினைக்கிறே. இது இத்தோட விடுமா தெரியல்லியே…“ என்கிறான் ராமசாமி.
அப்போது திலகா மாடியேறி வருகிறாள். “சாப்பிட வரீங்களா? ரசம் சூடா வெச்சிருக்கேன்…“ என்கிறாள். அத்தோடு பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.
அப்போது ராமசாமியின் அலைபேசியில் அழைப்பு வருகிறது. பேசியது ரமேஷின் அண்ணன் பெண். சட்டென அவள் குரல் அடையாளம் தெரியவில்லை. “என்னம்மா கீதா?“ என்கிறான். “எதுவும் அவசரமா?“
“ஆமா அங்க்கிள்…“ என அழுகிறாள் கீதா. ‘சித்தப்பாவுக்கு…“
“யாரு ரமேஷுக்கா?“
“என்ன தெரியல… திடீர்னு நெஞ்சு வலின்னு…“
“என்னம்மா சொல்றே?“
“அப்பாதான் ஒரு ஆம்புலன்ஸ் வெச்சி…“
“ஆம்புலன்சா?“
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அன்க்கிள்…“
“பயப்படாதேம்மா. இந்த நேரம் தான் நாம பதறாமல் வேலை செய்யணும்…“
“எந்த ஆஸ்பத்திரி?“
“ஜி கே எம்.“
“நான வரேன்… கவலைப் படாதே.“ என்று அலைபேசியை வைக்கிறான்.
“சீக்கிரம் சோத்தைப் போடு… நான் அவசரமா ஜி கே எம் வரை போகணும்…“
“என்னாச்சி?“ என்கிறாள் திலகா.
“ரமேஷ்… திடீர்னு நெஞ்சு வலின்னானாம்… என்னன்னு தெரியல. ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்…“
“ச். என்ன திடீர்னு?“
“நெஞ்சு வலி லெட்டர் போட்டுக் கிட்டெல்லாம் வராதுடி…“ என்கிறான். ரசத்தை அப்படியே கையில் வாங்கி உறிஞ்சுகிறான். “ரசமான ரசம்“ என்கிறான். “அனுபவிக்க நேரம் இல்லை…“
“பாவங்க ரமேஷ்“ என்கிறாள் திலகா. “நானும் வரட்டா?“
“நான் முதல்ல போய்ப் பாத்திட்டு வரேன். அப்பறமா நாம ரெண்டு பேருமாப் போகலாம்…“
அப்படியே வெளியே ஓடுகிறான். லிஃப்ட்டை அழுத்துகிறான். அது மைனஸ் 1 காட்டுகிறது. அதை மறுத்து ஜீரோ அழுத்துகிறான். நிகழ்காலம். கீழே வந்து ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். வெளியே இருட்டிக் கிடக்கிறது. சிவப்பு பின்விளக்குடன் ஸ்கூட்டர் அந்த இருளைக் கிழித்துப் போகிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk 5 chapters please visit
vasikarapoikalplus.blogspot.com






No comments:

Post a Comment