Thursday, September 17, 2015

இடைவேளைக்குப் பிறகு - அத். 27

வசிகரப் 
பொய்கள்
அத்தியாயம் 27

(இ டை வே ளை க் கு ப்    பி ற கு)
 ராமசாமி வீடு. சுவரில் அப்பாவின் படம் மினுக் ஒளியுடன். பக்கத்தில் கடிகாரம் மணி பத்தைக் காட்டுகிறது. சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். எதோ தொலைக்காட்சித் தொடர் முடிந்து திலகா தொலைக்காட்சியை அணைக்கிறாள். “மணி பத்தாச்சிடா?“
“அதுக்கென்ன அக்கா?“
“இன்னும் இவரு வீடு திரும்பலையேடா?“
“இதுவரை சீரியல் ஓடிட்டிருந்தது. உனக்கு அத்தான் ஞாபகமே இல்லை. இன் ஃபாக்ட் அவர் வந்தால் இடைஞ்சலா கூட நினைச்சிருப்பே… இப்ப திடீர்னு ‘மணி‘ பத்து சிகா-‘மணி‘ன்றே… சாப்பிட வரியாடான்னே கேட்கல. இப்ப வேறொரு கவலை. எனக்கு எப்ப சாப்பாடு போடுவியோ?“
“கோகுல் அப்பவே தூங்கியாச்சி. அவன் கூடவே சாப்பிட வந்திருக்கலாம் இல்லே நீ?“
“தமிழகத்தையே புரட்டிப் போடறா மாதிரி ஒரு கதை. பாதில எப்பிடி விட்டுட்டு வர்றது… ஒருத்தன் புதுசா ஒரு ஃபிளாட்டுக்குக் குடி வர்றான்… பக்கத்து வீட்டு ஜன்னலில் அழகான முகம். சிரிச்ச முகமா ஒரு பொண்ணு… எப்பிடி ஓபனிங்?“
“ஜன்னல் ஓபனிங். உன்கிட்ட இவர் எதும் சொல்லிட்டுப் போனாரா?“
“இல்ல அக்கா. அவன் மறுநாள் காலைல பக்கத்து ஃபிளாட்டுக்குப் போய்ப் பார்த்தால்… வாசல்ல பூட்டு தொங்குது.“
“அவ எங்கியாவது வெளிய போயிருப்பாள். இது ஒரு கதையாடா?“
“இல்ல அக்கா. அப்பறம் அவன் கேள்விப் படறான்… அந்த வீட்ல யாருமே குடி இருக்கவில்லைன்னு…“
“அப்ப… அவன் பார்த்தது?“
“பேய் அக்கா பேய்…“
“என்னடா என்னையே பேய்ன்றே?“
“அந்த வீட்டுக்கு யாருமே குடி வர்றது இல்லே. ஏன்னால் அந்த வீட்டுலதான் அவள் தற்கொலை செய்துக்கிட்டா…“
“அதைத்தான் சிம்பாலிக்கா சொல்றே… வாசல்ல பூட்டு… தொங்குது. தற்கொலை… எப்பிடி?“
“அக்கா உனக்கு சிம்பாலிக் ஷாட்லாம் தெரியுமா?“
“ராகவா லாரன்சுக்குப் போட்டி தயாராகுது போல. ராத்திரில பேய்க் கதைல்லாம் எதுக்குடா?“
“அடுத்த நாள்… அவன் பக்கத்து வீட்டில் யாரோ ஒரு பொண்ணு அழுகிறாப் போல சத்தம் கேட்குது…“
“நானே இங்க அழுதுருவேன் போல இருக்கு. அவரோட மொபைல்ல ட்ரை பண்ணினேன்டா… தொடர்பு எல்லைக்கு வெளியேன்னு வருது…“
“மனைவியின் தொடர்பு எல்லைக்கு வெளியேன்னால்… சந்நியாசம் வாங்கிட்டாரா?“
“எனக்கு பயமா இருக்கு. நீ சிரிக்கறே?“
“அப்பிடில்லாம் சந்நியாசம் வாங்கிக்க மாட்டார் அக்கா. பயப்படாதே.“ என்று சிரிக்கிறான். “அவர் என்ன குழந்தையா அக்கா? பீச்ல, தியேட்டர்ல, சந்தைல தொலைஞ்சி போகறதுக்கு? வந்திருவார்…“ என்றவன் “அவர் யார்? தொலைஞ்சி போன குழந்தையையே கண்டுபிடிச்சிக் கொடுத்தவர்…“
“யாரோ தொலைச்ச பர்சையும் அவர் தான் கண்டு பிடிச்சாரு…“
“அக்கா, அவர் நிகழ்காலத்தில் இருக்காரோ கடந்த காலத்தில் இருக்காரோ? நான் எதை நம்பி எப்படி அதும் இந்த நேரத்தில் தேடிப் போறது?“
“எனக்கு என்ன தோணுதுன்னால்…“
“பயமா இல்லாதபடி எதாவது சொல்லு…“
“அவர் கடந்த காலத்தில் எங்காவது மாட்டிக் கிட்டிருப்பாரோ?“
“அக்கா. நீயே திரைக்கதை எழுத ஆரம்பிச்சாச்சி. வெரி குட். அதான் சஸ்பென்ஸ். சூப்பர் சிச்சுவேஷன் இது. கதைன்னால இப்பிடி விறுவிறுப்பு ஏத்தணும்...“
“எனக்கு BP ஏறுதுடா.“
“என்ன ஆயிருக்கும் அக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கரண்ட் கட் ஆயிருக்குமா?“
“என்னடா சொல்றே?“
“கரண்ட் கட் ஆனால் லிஃப்ட் எப்பிடி வேலை செய்யும்? அவர் எப்பிடி திரும்ப நிகழ்காலத்துக்கு வர முடியும்?“
“இப்ப என்ன பண்ணுவாரு?“
“அப்படியே மாடி ஏறி, ரெண்டு வருஷத்துக்கு முந்தைய உன்னை சந்திப்பார்…“
“போரடிக்காதே சிகாமணி.“
“அக்கா. அவர் இருக்கிற வரை அவரை சட்டை பண்ண மாட்டே. இல்லைன்னால் கிடந்து உருகறே…“
“அதாண்டா பெண் ஜென்மம்.“
“சென்ட்டிமென்ட் டயலாக். இப்ப… உனக்கு அவர் வரலைன்னு கவலையா இருக்கு…“
“பயமா இருக்குடா.“
“பொதுவா இப்படி பயம் வந்தால் என்ன பண்ணுவே?“
“விளக்கேத்தி சுவாமி கிட்டே வேண்டிக்கறதைத் தவிர எனக்கு என்ன தெரியும்? நீ கிண்டல் பண்ணறே. சாமி கிண்டல் பண்ணாது…“
“அப்ப அதைப் பண்ணு. உனக்கு அதில் நம்பிக்கை இருக்கு இல்லியா?“ என்கிறான் சிகாமணி. “பத்து பத்தேகால் ஆறது. சாமி எப்ப தூங்கப் போகும்னு தெரியல… என் கதையை விட்டுட்டு இந்தக் கதைக்கு என்னை இழுக்கறே நீ.“
ராமசாமி இருட்டில் அடி பட்டுக் கிடக்கிறான்.
 
அவள் நெற்றியில் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொள்கிறாள். சிகாமணி “கதை வேற genre ல முவ் ஆகுதே.“ கை குவிக்கிறாள். அப்படியே கோளறு திருப் பதிகம் சொல்ல ஆரம்பிக்கிறாள். “நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?….“
“இதே பாணில கே பி சுந்தராம்பாள் பாடுவாங்க. வெண்ணீறணிந்தது என்ன என்ன என்ன என்ன…“
திலகா ரொம்ப கவலையோடு அப்படியே சாமி படத்தின் முன்னால் அமர்கிறாள். கந்த சஷ்டி கவசம் புத்தகம் எடுத்து வைத்துக் கொள்கிறாள். வாசிக்க ஆரம்பிக்கிறாள்…
ராமசாமி மெல்ல அசைகிறான். அப்படியே தள்ளாட்டமாய் எழுந்து கொள்கிறான். தலை கனக்கிறது. அப்படியே பிடித்துக் கொள்கிறான். சுத்து முத்தும் பார்க்கிறான். மெல்ல நடக்க ஆரம்பிக்கிறான்.
“ஆகா உன் பிரார்த்தனைக்கு பலன் கண்டிப்பா இருக்கும் அக்கா… நம்பிக்கையை விட்றாதே. தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்லு. சொல்லு. பாதில நிறுத்திட்டால் வீட்டுக்கு வர்ற அத்தான் திரும்பாமல் அப்படியே நின்னுருவார். உன் சக்தியால் அவரை வரவழை இங்.க“
நேரம் மணி பத்தரை. வாசல் கதவு தட்டப் படுகிறது. “இந்நேரம் யாரு? பால்காரன் அதுக்குள்ள வந்திட்டானா?“
”நீ வேற… அது அவர்தாண்டா… எனக்குத் தெரிஞ்சாச்சி…“ அப்படியே கந்த சஷ்டி கவசத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து கொள்கிறாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி வாசலைப் பார்க்கப் போகிறாள். கதவைத் திறக்கிறாள்.
வாசலில் ராமசாமி நிற்கிறான். பின் தலையில் சாயம். அப்படியே தள்ளாடி அவள் மேல் சாய்கிறான்.
“என்னங்க ஆச்சி உங்களுக்கு?“
“வாசல்லியே நிறுத்தி எல்லா கதையும் கேட்கறியே? அறிவு இருக்கா உனக்கு? நான் சொல்லாட்டி உள்ள விட மாட்டியா?“
“தலைல அடி பட்டாலும் அத்தான் குணம் மாறல்ல… அந்த அளவுக்கு மூளை பாதிப்பு இல்லைன்னு தெரியுது அக்கா.“
“வாங்க“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறாள். அப்படியே உள்ளே வந்து நாற்காலி ஒன்றில் உட்கார்கிறான் ராமசாமி. “தலைல வலி விண் விண்-னு தெரிக்குது.“
“இருங்க பார்க்கிறேன்… எதும் கீறல் மாதிரி இருக்கான்னு?“ என்று சிகாமணி வந்து தலை முடியைப் பிரித்துப் பார்க்கிறான்.
“நல்லவேளை. அவன் கம்பை வீசறான்… தற்செயலா பாத்து குனிஞ்சிட்டேன். அப்படியே கம்பு தலையை உரசினாப் போலப் போயிட்டது…“
“கம்பா?“
“உங்களை அடிக்க வர்றா மாதிரி எதிரி யாருங்க உங்களுக்கு?“
“யார் எவர்னு இனி தான் கண்டு பிடிக்கணும்…“ என்றவன் அப்படியே சோபாவில் போய்ப் படுக்கிறான். “எதுவும் சாப்பிடறீங்களா? எப்ப சாப்பிட்டீங்க?“ என்று கேட்கிறாள் திலகா.
“எதாவது… பிசைஞ்சி கொண்டு வா… எனக்குத் தெம்பே இல்லை…“ என்றவன் “மதியம் ரமேஷோட ஹோட்டல்ல சாப்பிட்டேன். ரெண்டு பேருமா வெளியே போய் வந்தோம்…“
“என்ன ஆச்சி அத்தான்? எங்க எப்பிடி இப்பிடி அடி பட்டது? உங்களைப் போயி… யார் அத்தான்?“
“அட நாலைந்து பேர் வந்தாங்க. தப்பா ஆளை அடிச்சிட்டோம்னு சொல்லிட்டே ஒடிட்டாங்க… சரியான ஆளா இருந்தால் அடி நவத்தியிருப்பாங்க போலுக்கு.“
“அடி தடி நடக்கிற இடத்துக்கு நீங்க எப்பிடிப் போனீங்க?“
“அதான் நான் பண்ணின தப்பு. சிகா… என்னாச்சின்னால்…“ என ஆரம்பித்தவன், “பெரிய கதை வேணாம். நான் என்ன பண்ணினேன்… ஏற்கனவே நடந்த கடந்த காலத்தின் ஒரு நிக்ழ்ச்சியின் பாதிப்பில் இருந்து விடுபட நினைச்சேன். அதை மாத்த நினைச்சேன். அதான் எல்லாமே குழம்பிட்டது… எதிர்பாராத வேற நிகழ்ச்சிகள் வந்து சேர்ந்திட்டது…“
திலகா ஒரு தட்டில் பிசைந்து எடுத்து வருகிறாள். சிறு குழந்தை போல அப்படியே வாயில் அவள் ஊட்டி விட வாங்கிக் கொள்கிறான்.
“வலி இப்ப எப்பிடி இருக்கு?“
“நான் பயந்த அளவு மோசமா இல்லை…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி.
“அக்கா உன் பக்தி… சூப்பர். அத்தானை திரும்ப வீட்டுக்கு இழுத்திட்டியே“ என சிரிக்கிறான் சிகாமணி. ‘அப்படியே சமையல் அறைக்குப் போய்த் தட்டில் தனக்கான உணவை எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.
“நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடல்லியா?“ என்று ராமசாமி கேட்கிறான்.
“இருக்கட்டும். எனக்கு நீங்க வந்ததே சாப்பிட்டா மாதிரி இருக்கு“ என்கிறாள் திலகா.
“அக்கா, அப்ப சமையல் அறை லைட்டை அணைச்சிறவா? அப்படியே நீ அத்தான் கூட படுக்கப் போயிருவே இல்லே?“ என்கிறான் சிகாமணி.
ராமசாமி சுவரில் அப்பா படத்தைப் பார்க்கிறான். “இன்னிக்கு ஜுலை ஒன்பதுடி.“
“அதுக்கு என்ன?“
“இன்னிக்கு தான் அப்பா பாத்ரூம்ல விழுந்து அடி பட்டுக் கிட்டார்…“
“ஐயோ அது பயங்கரம்“ என்று கன்னத்தில் கை வைத்துக் கொள்கிறாள் திலகா. “கூட இவனும் பக்கத்தில் இல்லை. பக்கத்து வீட்லயும் யாரும் இல்லை… டு லெட். எப்பிடி இருந்தது தெரியுமா எனக்கு?“
“அது எப்பிடியோ எனக்கு ஞாபகத்தில் வந்திட்டது திலக். அதனால் தான் இத்தனை குழப்பம்…“
“இது வரை நீங்க தெளிவா இருந்தீங்க. நாங்க குழம்பினோம்… இப்ப நீங்களே குழம்பறீங்க…“ என்கிறாள் திலகா.
“தங்கப் பத்க்கத்தில் பிரமீளா வசனம் ஞாபகம் வருது எனக்கு“ என ஒரு வாய்ச் சோற்றை வாயில் போட்டபடியே சிகாமணி வெளியே வருகிறான். “வத்திப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே வத்திப் போயிட்டா?“
ராமசாமி பார்க்கிறான். பூஜை அலமாரி திறந்திருக்கிறது. தரையில் குப்பறப் போட்ட மாதிரி கந்த சஷ்டி கவசம். திரும்பி திலகாவைப் பார்த்துச் சிரிக்கிறான். “பயந்திட்டியாடி?“ இல்லை, என தலையாட்ட வந்தவள்… பின் ஆமாம், என்கிறதாய்த் தலையாட்டுகிறாள்.
“ச்சீ அசடு…“ என அவளை கன்னத்தில் வருடிக் கொடுக்கிறான்.
“இனிமே காணாமல் போனால். நீங்க சொல்லிட்டு தான் காணாமல் போகணும்“ என்கிறாள் திலகா.
காலை விடிந்ததும் தானாக விழித்துக் கொள்கிறான் ராமசாமி. போய் முகம் கழுவி பல் தேய்க்கிறான்.
“உடம்பு இப்ப தேவலையா?“
“BACK TO THE PAVILION ன்னு சொல்வாங்க. நான் BACK TO THE ARENA“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“இனிமே நீங்க… என்ன ஆனாலும் சரி. பழைய காலத்துக்குப் போக வேணாம். கேட்டீங்களா?“ என்கிறாள் திலகா.
“வர வர காபி கொடுக்கறதுக்கே நீ கண்டிஷன் போட ஆரம்பிச்சிட்டே…“ என்றபடி வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. “எனக்கு அப்படியே அந்தப் பழைய காலத்தில் வளைய வந்து பழகிட்டதுடி. இன்னும் எனக்கு அங்கே வேலை இருக்கற மாதிரி தோணுது…“
“என்ன வேலை?“
அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். “மகாவோட பிறந்த நாள்… வந்தது. போயிருந்தேன். ரெண்டாவது தடவை.“
“முதல் தடவையே நான் வரல்ல. எனக்கு உடம்பு முடியாமல் ஆயிட்டது“ என்கிறாள் திலகா. “அந்த விளையாட்டெல்லாம் விட்டுட்டு நீங்க பழையபடி சகஜமா வளைய வரக் கூடாதா? நானும் நிம்மதியா இருப்பேன் இல்லியா?“
“நான் பக்கதுத்ல இருந்தால் டி.வி சிரியல் எப்பிடிப் பார்ப்பே?“
“அதையெல்லாம் பாத்து தான் நீங்க வரல்லியோன்னு பயந்துட்டேன்.“
“நான் மைனஸ் 1க்குப் போக வேணாம்னால், நீ சீரியல் பார்க்கறதை விட்டுறணும்… சரியா?“ என அவளைப் பார்க்கிறான்.
“அதுக்கும் இதுக்கும் என்ன?“ என்கிறாள் திலகா.
“அப்பன்னா விட மாட்டேன்னு அர்த்தம்“ என ராமசாமி சிரித்தபடியே அவள் மூக்கைத் திருகுகிறான்.
“அத்தான்…“ என வெளியே இருந்து வருகிறான் சிகாமணி. அவன் கையில் நாளிதழ். அதை மடித்துக் கொள்டே பேசுகிறான். “நேத்து நீங்க சொன்ன விஷயம்லாம் நான் யோசிச்சிப் பார்த்தேன். இப்ப… அந்த நாளில் உங்களுக்கு பழைய ஞாபகம் வந்தது இல்லியா?“
“ஆமாம்.“
“நீங்க சொன்னா மாதிரி, நடக்கப் போற நிகழ்ச்சிகளை யெல்லாம் டக்கு டக்னு ஒரு நிமிஷம் முன்னாடியே சொல்ல முடிஞ்சது இல்லியா?“
“ம்.“
சிகாமணி சிரிக்கிறான். “நீங்க எங்க தப்பு பண்ணினீங்க?“
“நீயே சொல்லு.“
“அந்த ஃபோன் கால்… அதை எடுக்காமல் சம்பவத்தை மாத்தி யமைச்சிட்டீங்க… உங்களை அறியாமல்.“
‘ராமசாமி தலையாட்டுகிறான்.
“அப்பன்னா…“ என சிரிக்கிறான் சிகாமணி.
“இவனுக்கு எல்லாமே சிரிப்பு தான்“ என்கிறாள் திலகா.
“இரு. அவன் என்னவோ கற்பனை பண்ணறான்… அதைச் சொல்லட்டும்.“
“அப்பன்னா… இனி உங்களுக்கே புதிரான சம்பவங்கள்லாம் இனி நடக்கும்..பாத்துக் கிட்டே இருங்க…“
“அப்டீன்றே?“
“ஆமாம். இதுவரை நீங்க அனுபவிக்காத சம்பவங்கள்…“
“ஓகோ.“
“ஏன்னால் அந்த சம்பவத்தின் வரிசையை நீங்களே கலைச்சிட்டீங்களா இல்லியா?“
“GOOD GUESS“ என்கிறான் ராமசாமி. “POSSIBLE TOO“ என்கிறான் யோசனையாய்.
·       

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

bulk chapters updated every tuesday / friday visit
vasikarapoikalplus.blogspot.com



No comments:

Post a Comment