Tuesday, September 15, 2015

updated everyday - அத்தியாயம் 25


வசிகரப் 
பொய்கள்
அத்தியாயம் 25
ரு ஹோட்டல். முப்பது நாற்பது பேர் கலந்து கொள்கிற அளவிலான கான்ஃபிரன்ஸ் ஹால். குளிரூட்டப் பட்ட இருளூட்டப் பட்ட நடைவழி தாண்டி ராமசாமி போகிறான்.
அந்தக் கூடத்தின் கதவைத் திறக்கவும் யாரோ துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். டப், என்று சத்தம். அவன் மேல் பூக்கள் சிதறுகின்றன. உள்ளே யிருந்து எல்லாரும் கை தட்டுகிறார்கள். ராமசாமி உள்ளே நுழைகிறான்.
“வெல்கம் மிஸ்டர் முக்காலம்…“ என வரவேற்பு. ரமேஷின் குரல் தான் அது. “ஏ பாவி இதெல்லாம் உன் ஏற்பாடு தானா?“ என்று சிரித்தபடியே மேலே சிந்தியிருந்த மலர்களை உதறி விடுகிறான்.
“பாவிக்கு ஏ பாவின்னு இனிஷியல் தந்தவன் நீதான்…“
“என்னடா விளையாட்டு இது?“
“இன்னிக்கு நிறைய சர்ப்ரைஸ் குடுக்கணும்னு மகாவோட திட்டம்“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“மகாவே இந்த உலகத்துக்குப் பெரிய சர்ப்ரைஸ். அதுக்கும் மேல சர்ப்ரைசா?“ என்கிறான் ராமசாமி.

அங்கங்கே பலூன்களும் வண்ணக் காகிதங்களுமாய்க் கட்டி அறையே ஒரு கொண்டாட்ட அளவில் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. மெல்லிய இசை காற்றில் தவழ்ந்து வருகிறது.
“ஹலோ அன்க்கிள்…‘ என மகா கையாட்டுகிறாள். அருமையாய் பட்டுப் புடவை. தழையத் தழையக் கட்டியிருக்கிறாள். கூந்தலைக் கொண்டை போட்டு முத்துக்கள் அதில் விரவிக் கிடக்கின்றன. இரவு நேர நட்சத்திரங்கள் போல.. உதட்டுச் சாயம் மினுங்குகிறது. லிப்-கிளாஸ் போட்டிருக்கக் கூடும். கண்ணுக்கு மை தீட்டி காது வரை பெரிய கண்களாட்டம் காட்டி யிருக்கிறாள்.
ரமேஷின் அருகில் ஒரு தம்பதியர் அமர்ந்திருக்கிறார்கள். இந்த வயதிலும் சட்டையைப் பேன்ட்டுக்குள் செருகியிருக்கிறார். முழுக்கைச் சட்டை. கூட இருக்கும் மாமியும் நல்ல அமெரிக்கை. தலைக்கு சாயம் பூசிப் பழக்கி யிருந்ததில் இப்போது சிறு செம்பட்டை நிறம் வந்திருந்தது.
இப்போது வாசல் கதவில், கருமையாக்கப் பட்ட கண்ணாடி வழியே வெளியே யிருந்து யாரோ உள்ளே வரும் நிழல். ரமேஷ் தயராகிறான். கையில் பூத் தூவும் துப்பாக்கி. மேனேஜர் கிருஷ்ணராஜ் உள்ளே நுழைய டப், சுடுகிறான். எல்லாரும் கை தட்டுகிறார்கள். “எத்தனை நாள் ஒத்திகை பாத்திருந்தானோ இவன்…“ என்கிறார் கிருஷ்ணராஜ். மீண்டும் சிரிப்பு அலை மோதுகிறது.
இப்போது ராதிகா உள்ளே நுழைகிறாள். டப். அவளுடன் கூட இன்னொரு ஆண். சட்டென அவன் பாய்ந்து அவள் முன் மறிக்கிறான். அவன் மேல் பூ சொரிகிறது.
“தேங்ஸ் மகேஷ்…“ என நாணுகிறாள் ராதிகா.
மகா ஓடி வருகிறாள். “நாங்க எத்தனையோ யோசிச்சி சர்ப்ரைஸ் தர்றதா திட்டம்லாம் போட்டால், நீ தந்தே பார் சர்ப்ரைஸ்… சூப்பர் அக்கா.“ சிரிக்கிறார்கள்.
“எல்லாரும் வந்தாச்சா?‘ என்று கேட்கிறான் ரமேஷ். வந்திருந்த நபர்களை நோட்டம் விடுகிறான். பத்து இருபது பேர் கொண்ட சிறு நண்பர் வட்டம். மகாவைப் பார்க்கிறான். அவள் தலையாட்டுகிறாள்.
“சர்ப்ரைஸ் நம்பர் 1“ என்கிறான் ரமேஷ். “நம்பர் டூ“ என்கிறான் ராமசாமி. “உள்ள நுழையறச்சயே குடுத்தீங்களே, அதான் நம்பர் ஒன்.“
“அது என் ஐடியா‘. அதை நம்பர் ஒன் ஐடியாவா ஏத்துக் கிட்டதுக்கு தேங்ஸ்“ என்கிறான் ரமேஷ். “தோழர்களே, தோழியர்களே…“
“என்னடா யூனியன் மீட்டிங் மாதிரி…“ என்கிறார் மேனேஜர். எல்லாருக்கும் சிரிப்பு. “உங்களை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வர மாட்டேன். பயப்படாதீங்க“ என்கிறான் ரமேஷ். அதற்கும் சிரிப்பு.
“இன்னிக்கு நம்ம எல்லார்க்கும் பிடித்த மகா என்கிற மகா லெட்சுமிக்குப் பிறந்த நாள். எங்க ஆபிஸ்ல எல்லாருமே இதை சிறப்பா எடுத்துச் செய்யலாம்னு இருந்தப்ப தான் மகா இப்படி ஒரு ஐடியா சொன்னாள். அது என்ன ஐடியா? போகப் போகப் பார்க்கலாம்…“
“என்னவோ சர்ப்ரைஸ்னியேடா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“அதுக்கு தான் வரேன். பிறந்த நாள்னா மெழுகுவர்த்தியை கேக் மேல ஏற்றி உடனே அதை அணைச்சிர்றாங்க. அது ஏன் தெரியல்ல.“
“விலை வாசி தான் காரணம்… யாரோ சிக்கன நடவடிக்கையா அதை முதல்ல பண்ணியிருக்காங்க“ என யாரோ சொல்ல சிரிப்பு.
ரமேஷ் புன்னகையுடன் தொடர்கிறான். “ஒருவேளை… எத்தனை வயசோ  அத்தனை மெழுகுவர்த்தி ஏத்தி அதை அணைச்சால், அதைத் தாண்டி வந்ததாக வெள்ளைக்காரன் நினைச்சிருக்கலாம்…“ என நிறுத்துகிறான். “ஒளியை அணைக்கிறது அல்ல. ஏற்றுவது தான் நம்ம பண்பாடு… எனவே, நம்ம மகா தனது பிறந்த நாளை குத்துவிளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறாள்…“
“கரெக்ட்“ என்கிறார் மேனேஜர். “ஐ திங்க் நாம எல்லாருமே இதை ஃபாலோ பண்ணலாம்.“
குத்து விளக்கு ஒன்று. இடுப்பு உயரம். பளபளவென்று பூ சூடி தயாராக இருக்கிறது. எண்ணெய் விட்டு திரி போட்டுக் காத்திருக்கிறது. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதை அவளிடம் ரமேஷ் தருகிறான். அவள் அதை வாங்கி அதன் ஒரு முகத்தை ஏற்றுகிறாள். விளக்கின் கிட்டத்தில் அவள் மெழுகுவர்த்தியால் விளக்கை ஏற்ற அவள் முகத்தில் பிரகாசம் பரவுகிறது. கை தட்டுகிறார்கள்.
புன்னகையுடன் அவள் அந்த மெழுகுவர்த்தியை ரமேஷிடம் தருகிறாள். அதை ஊதி அணைக்கிறான் ரமேஷ். “நீ மட்டும் ஒளியை அணைக்கலாமா?“ என்று ராமசாமி கேட்கிறான். அதற்கும் சிரிப்பு பரவுகிறது.
டீப்பாயில் கேக் தயாராய் இருக்கிறது. அதில் மெழுகுவர்த்திகள் இல்லை.
ரமேஷ் தொடர்ந்து பேசுகிறான். “சர்ப்ரைஸ் நம்பர் டூ. எங்கள் எரிசையில் இல்லாதது. நாங்களே எதிர்பாராதது. எங்களுக்கே இது சர்ப்ரைஸ்…“ என சிறிது இடைவெளி விடுகிறான். பிறகு உற்சாகக் குரலில் “வெல்கம் திரு மகேஷ்… எங்கள் நட்பு வட்டத்தின் புது வரவு.“
இதை எதிர்பாராத மகேஷ் சட்டென எழுந்து கொண்டு வெட்கத்துடன் நிற்கிறான். எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“இந்த நண்பரை எங்களோடு இணைத்து வைத்த பெருமைக்குரிய ராதிகா…“
ராதிகா எழுந்து வெட்கமாய்ச் சிரிக்கிறாள்.
“ராதிகா நமக்கு மகேஷை அறிமுகம் செய்கிறார்…“ என அவளை அருகே அழைக்கிறான் ரமேஷ். அவள் வெட்கத்துடன் மறுப்பாய்த் தலையாட்டுகிறாள். “எல்லாம் நமக்குள்ள தானே ராது? கமான்….“ எனக் கூப்பிடுகிறான் ரமேஷ்.
“அவர் மிஸ்டர் மகேஷ். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட். ஃப்ரம் பெங்களுரு…“
மகேஷ் கை கூப்புகிறான்.
“ஏய் அவ்ளதானா?“
“நான் ராதிகாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை“ என்கிறான் மகேஷ். “அதைச் சொலல வேணாமா நீ?“ என்று ராதிகாவைக் கிண்டல் செய்கிறான் ரமேஷ். எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“எனி வே, தேங்ஸ் டியர் ராது. இப்பிடி ஒரு அக்கேஷேனுக்கு அவரையும் அழைச்சிட்டு வந்ததுக்கு… வந்து எங்களுக்கு அறிமுகப்… படுத்தினதுக்கு….“
“நீ படுத்தாதடா…“ என்கிறாள் ராதிகா.
“அது அவன் சுபாவம்“ என்கிறான் ராமசாமி.
“இப்போது என் முறை…“ என்கிறாள் மகா. “நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது. அப்பா அம்மாவை விட்டு நான் மட்டும் இங்க வேலைக்குன்னு வந்திட்டேன். ஆஃப் கோர்ஸ் சென்னை, நான் காலேஜ் படிச்சது எல்லாம் இங்கதான்…“ என நிறுத்துகிறாள்.
“சோடா கீடா வேணுமா? நிறையப் பேசிட்டாப் போல டயர்டா ஆயிட்டே…“ என்கிறான் ரமேஷ்.
“ஸ். இரு ரமேஷ்“ என அழகாய் மூச்சு வாங்கிக் கொள்கிறாள். “அப்பா அம்மா என்னை பிறந்த நாளைக்கு ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. நான்தான் இந்த வருஷப் பிறந்த நாளை இங்க சென்னையில் கொண்டாடணும்னு பார்த்தேன்… என் பிறந்த நாளுக்காக… என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே சேலத்தில் இருந்து இங்க வந்திருக்காங்க…“
அந்த வயதான தம்பதியர் எழுந்து எல்லாருக்கும் வணக்கம் சொல்கிறார்கள். “ஐம் ரியலி பிளெஸ்ட் வித் மை பேரன்ட்ஸ்…“ என்கிறாள் மகா.
“கேக் வெட்ட மறந்துராதே“ என்கிறான் ரமேஷ்.
“அதற்கு முன்….‘ என்கிறான் ராமசாமி. “ராதிகா, நீதான் நம்ம ஆபிஸ்ல எந்த ஃபங்ஷன்னாலும் பாடுவே. ஆயுத பூஜைன்னால் வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்… பாடுவியே? இப்ப நம்ம ராதிகா பத்தி… ஒரு பாட்டு….“
“ஐயோ என்ன இது? திடீர்னு?...“ என்கிறாள் ராதிகா.
“இவ பாடுவாள்னே எனக்குத் தெரியாது. சொல்லவே இல்லியே?“ என்கிறான் மகேஷ்.
“கமான்…“ என்கிறான் ரமேஷ்.
“இவன் ஒருத்தன் அப்பலேர்ந்து கமான், கமான்றான், கிண்டி ரேஸ் கோர்ஸ் மாதிரி…“ என்கிறான் ராமசாமி.
“ச். இப்ப வேணாம்…“ என்கிறாள் ராதிகா வெட்கத்துடன். என்றாலும் அவள் பாடுவாள் என அங்கிகரிக்கப் பட்டது குறித்து அவள் முகம் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
“சரி. அப்பன்னா மகேஷைப் பத்திப் பாடறியா?“ என்று ஒரு போடு போடுகிறான் ரமேஷ். அவள் முகம் குப்பென்று சிவக்கிறது. “வேணாம் வேணாம். மகா பத்தியே பாடறேன்…“ என சற்று யோசிக்கிறாள்.
மகேஷ் அவள் முகத்தையே ஆவலுடன் பார்க்கிறான். சட்டென்று கண்ணைத் திறந்து அவள் முகம் நிறைய உணர்ச்சி ‘பா‘வத்துடன் பாட ஆரம்பிக்கிறாள்.

(SONG NO 4)
என் கூடப் பிறந்தவள், என்கிற அழகான கருத்துடன் அவள் ஆரம்பிக்கிறாள். ரமேஷ் மௌத் ஆர்கன் கொண்டு வந்திருக்கிறான். அதை கூடவே இசைக்கிறான். ராதிகா பாட அதை அப்படியே எடுத்து ரமேஷ் தொடர்கிறான்.
எங்கள் எல்லாருக்குமே அவள் ஒற்றை நிலவு, என்கிறதாய் அவன் சரணம் அமைகிறது.
இப்போது எதிர்பாராமல் ரமேஷ் ஒரு காரியம் செய்கிறான். கூட்டத்தில் அமர்ந்திருக்கும் புதிய நபர் ஒருவனை மௌத் ஆர்கன் வாசித்தபடியே போய் சபை நடுவே இழுக்கிறான். “நீயும் பாடு… பாடு…“ என்கிறதாய் வற்புறுத்துகிறான். அவன் வெட்கத்துடன் மகாவைப் பார்க்க அவனை மகா பாடச் சொல்லி கண்ணால் உற்சாகப் படுத்துகிறாள்.
அவன் பாடுகிறான்.
என் வானத்தில் புதிதாய் ஒரு பறவை. கூடு தேடி வந்ததோ? குடியிருக்க வந்ததோ?.. என்பதாகப் பாடல்.
மூவருமாய்ப் பல்லவியைச் சேர்ந்து பாடி முடிக்கிறார்கள்.
“இந்த ஃபங்ஷனுக்கே சிறப்பா இந்தப் பாடல் முடிஞ்சதே…“ என்று ரமேஷ் சொல்ல, எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“ஒரு சர்ப்ரைஸை சர்ப்ரைஸா வெச்சிக்க முடியவில்லை…. எதிர்பாராமல் அந்த சர்ப்ரைஸ் உடைபட்டு விட்டது.“ என்று சிரிக்கிறான் ரமேஷ். “அதை நீங்களே இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பீங்க….“ என நிறுத்துகிறான்.
“இப்போது மகா நமது நட்பு வட்டத்துக்குப் புதிய நபர் ஒருவரை அறிமுகப் படுத்துவார்…“ என்கிறான் ரமேஷ்.
“திசிஸ் மிஸ்டர் ஸ்ரீநிவாஸ். எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மேனஜேர் ராம் அன்ட் ராம் என்ட்டர்பிரரைசஸ்.“
“வெல்கம் மிஸ்டர் ஸ்ரீநிவாஸ்…“  என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஸ்ரீநிவாசுக்குக் கை கொடுக்கிறார் மேனேஜர்.
“அவ்ளதானா?“ என்று கேலி செய்கிறான் ராமசாமி.
“மீதியை அவள்தான் சொல்லணும்…“ என்று சிரிக்கிறான் ஸ்ரீநிவாஸ்.
“நான் எப்பிடிச் சொல்றது?“ என நாணுகிறாள் மகா.
“வேற யார் சொல்லணுங்கறே?“ என்று ரமேஷ் கேட்கிறான்.
“ஏய் நீ பிறந்த நாளுக்கு எங்களை இங்க அழைச்சதே இதுக்கு தானா?“ என்று மகாவின் அம்மா கேட்கிறாள். எல்லாரும் சிரிக்கிறார்கள். “இதெல்லாம் உங்களுக்கே சர்ப்ரைஸ. இல்லியா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“அப்பா?“ என்கிறாள் மகா. “என்னம்மா?“ என முன்னே வருகிறார் மகாவின் அப்பா. “நீங்களும் வாங்க அம்மா….“
கேக் வெட்ட ஆயத்தம் ஆகிறாள் மகா. அப்போது மகாவின் அப்பா எதிர்பாராமல் ஒரு காரியம் செய்கிறார். மேசையில் ரமேஷ் விட்டுப் போயிருந்த அந்த மலர்த் துப்பாக்கியைக் கையில் எடுத்து, ஸ்ரீநிவாசைச் சுடுகிறார். டப். அவன் மேல் பூக்கள் சிதறுகின்றன.
எல்லாருமாய் ஹுவென்று ஓங்கரித்துக் கை தட்டுகிறார்கள். “நீயும் வா…“ என அவனை மேடைக்கு அழைக்கிறார் மகாவின் அப்பா.
கேக் வெட்டப் படுகிறது. பிளாஸ்டிக் கத்தி. முதல் துண்டை வெட்டி அவள் நேரே அம்மா பக்கம் வாய் அருகே கொண்டு வருகிறாள். “இப்பிடி அரை மனசா காரியம் செய்யக் கூடாது…“ என்கிறாள் அம்மா.
“ஏம்மா?“
“முதல் துண்டை நீ யாருக்குக் குடுக்கணுமோ மனசுப்படி குடுன்றா உங்க அம்மா…“ என்று அப்பா சிரிக்கிறார். அவள் முகம் வெட்கப்படுகிறது. புன்னகையுடன் ஸ்ரீநிவாஸ் அவளையே பார்த்தபடி காத்திருக்கிறான். அவள் அவன் பக்கம் கேக்கை நீட்டி, தன் வாயில் போட்டுக் கொள்கிறாள்.
பிறகு ரெண்டாவது துண்டை அவனுக்கு ஊட்டி வருகிறாள்.அவன் பயந்தாப் போல அவள் கையைப் பற்றி தன் வாய்க்குள் அந்தத் துண்டை வாங்கிக் கொள்கிறான். அவளது அப்பாவும் அம்மாவும் கை தட்டுகிறார்கள்.
“இது என்ன பிறந்த நாள் விழாவா, நிச்சயதார்த்தமா?“ என யாரோ கூட்டத்தில் இருந்து குரல் கொடுக்கிறார்கள். சிரிப்பு வெடிக்கிறது.
ஸ்ரீநிவாஸ் எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறான். அப்படியே போய் மகாவின் அப்பா அம்மா பாதத்தைத் தொட்டு வணங்குகிறான். நெகிழ்ச்சியுடன் மகாவின் அப்பா அவனை அப்படியே கட்டித் தூக்கிக் கொள்கிறார்.
ரமேஷ் மகாவின் அருகே வந்து, “சென்னை எனக்கு ஒண்ணும் புதுசு இல்லைன்னு நீ சொன்னியே, அப்பவே இதை நான் எதிர்பார்த்தேன்…“ என்று சிரிக்கிறான்.
“எதை?“
“ஸ்ரீநிவாஸ் மாதிரி ஒரு அறிமுகத்தை.“
மகா அழகாய் வெட்கப் படுகிறாள். “இந்தா“ என அவளிடம் மலர்த் துப்பாக்கியைத் தருகிறான் ரமேஷ். “ஷுட்.“
மகா சுடுகிறாள். ஸ்ரீநிவாஸ் மேலே மலர்கள் தூவப் படுகின்றன.
“மன்மதன் அம்பு“ என்கிறான் ராமசாமி.
மகேஷ் வந்து ஸ்ரீநிவாசுக்குக் கை கொடுக்கிறான். “கங்கிராட்ஸ்“ என்கிறான்.
“உங்களுக்கும் வாழ்த்துக்கள்“ என சிரிக்கிறான் ஸ்ரீநிவாஸ். “வாய் ஓயாமல் இவளுக்கு அக்கா புராணம் தான்…“
“இவளும் சொல்லியிருக்கா“ என்கிறான் மகேஷ்.
ஸ்ரீநிவாஸ் தோளைப் பிடித்தபடி மகா அப்பா கீழே இறங்குகிறார். மகாவின் அம்மா மகாவின் அலங்காரத்தை என்னவோ சரி செய்கிறாள்.
பஃபே உணவு தயாராய் இருக்கிறது.
“ஜமாய்ச்சிட்டே போ“ என்கிறார் மேனேஜர் மகாவிடம். “IT BECOMES GRAND ONLY WITH YOU PEOPLE SIR… I AM REALLY REALLY HONOURED.’’ என்கிறாள் மகா. அப்படியே திரும்பி அப்பாவிடம், “எங்க மேனேஜர்“ என அறிமுகம் செய்கிறாள். “ரொம்ப ஸ்ட்ரிக்ட்“ என்கிறான் ரமேஷ். “அவர் கேட்டாராடா?“ என திரும்புகிறார் கிருஷ்ணராஜ்.
“இந்த வருஷம் இவர் பிரியடுல தான்ப்பா எங்க கிளைக்கு BEST PERFORMANCE AWARD வந்திருக்கு“ என்கிறாள் மகா.
“ஆமாம்“ என புன்னகை செய்கிறார் மேனேஜர். “அதையும் அவர் கேட்கல்லியே? சார் மகா உங்களுக்கு ஐஸ் வெக்கிறா. ஐஸ்வர்யா ராய் இவள்… இவளை நம்பாதீங்க“ என்கிறான் ரமேஷ்.
“யாரை நம்பக் கூடாது. இவளையா ஐஸ்வர்யா ராயையா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“ரமேஷை…“ என்கிறாள் மகா. “வாங்க சார். FEEL AT HOME“ என்று உணவு எடுத்துக் கொள்ள வழி நடத்துகிறாள் மகா.
ரமேஷ் சாப்பாட்டுத் தட்டுடன் ராமசாமி பக்கம் வருகிறான். “மிஸ்டர் முக்காலம்…“
“‘பேரே வெச்சிட்டியா?“ என்கிறான் ராமசாமி.
“உனக்கு இது எதுவும் சர்ப்ரைஸ் இல்லை. இல்லியா?“
“இல்லை. ஆனாலும் சந்தோஷமா இருக்கு எனக்கு… ரெண்டு தடவை இந்த பார்ட்டி எனக்கு….“
“ரெண்டு மொய் வைக்கணும் நீ. படவா ராஸ்கல்“ என்கிறான் ரமேஷ். பிறகு ஆர்வமாய் அவனைப் பார்க்கக் குனிந்து ரகசியம் போலக் கேட்கிறான். “எனக்கு எப்படா கல்யாணம் ஆகும்?“
“தெரியல… 2016 வரை இல்ல. ஆனால்…“
“ஆனால்னா? அதைவிட நல்ல விஷயம் என்ன?“
“நீ நல்லா முயற்சி பண்ணி C A I I B எழுதுவே…“
“பாஸ் ஆகுமா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “எனக்கே சஸ்பென்ஸ்தான் அது“ என்கிறான்.
அப்போது டப். மலர்த் துப்பாக்கி வெடிக்கிறது. ரமேஷ் மேல் பூ சிதறல். ஆர்வமாய்த் திரும்புகிறான். எட்டு வயதுப் பெண். தலைப்பின்னலில் முத்து சோடித்து கைமுட்டியில் நகையிட்டுக் கொண்டு நெற்றிச் சுட்டியுடன் அழகான பெண்.

“யார் இந்தப் பொண்ணு?“ என்று கேட்கிறான் ராமசாமி.

“இன்னொரு சர்ப்ரைஸா இது?“ என்கிறான் ரமேஷ்.
“பன்னெண்டு பதிமூணு வருஷம் நீ காத்திருக்கணும் போலடா…“ என ராமசாமி சிரிக்கிறான்.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842


No comments:

Post a Comment