Tuesday, September 29, 2015

அத். 39 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் updated everyday

வ சி க ர ப் 
பொ ய் க ள்

அத்தியயாயம் 39

ராமசாமி ஆஸ்பத்திரியை அடைந்த போது அவனுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
வரவேற்பில் ஒரு பெண். மருத்துவ உடையில் அல்லாமல் பருத்திப் புடவையில் இருந்தாள். புன்னகையுடன் அவனை வரவேற்றாள். “ரமேஷ்னு… இப்ப ஒரு ரெண்டுமணி நேரம் முன்னாடி யாரும் அட்மிட் ஆனாங்களா…“
“ஐ சி யூ வில்…“ என அவள் புன்னகை மாறாமல் பேசினாள். “ஆனால் நோயாளி தவிர வேற யாரும் உள்ளே அனுமதி இல்லியே…“
“அவங்க கூட வந்தவங்க?“
“ஐ சி யூ வராந்தாவில் காத்திருக்கலாம்… பாருங்கள்“ என்றாள் அதே புன்னகையுடன்.
முதல் மாடிக்கு படியேறினான். தூரத்திலேயே தினகரன், ரமேஷின் அண்ணாவை அடையாளம் காண முடிந்தது. இவனைப் பார்த்ததும் வேக வேகமாக வந்தான் அவன். குடிக்காத நிதானத்துடன் அவன் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. என் மேல் இவனுக்குக் கோபம் இருக்கும்… சரியான நேரத்தில் அட்வகேட்டை அழைத்து வந்தது நான்தானே, என்று நினைத்துக் கொண்டான் ராமசாமி.
“வா ராமு… நீ வந்தப்பறம் தான் எனக்கு மூச்சே வருது“ என இயல்பாய் தினகரன் வந்து ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டான். ஆச்சர்யமாய் இருந்தது ராமசாமிக்கு. “என்னாச்சி அண்ணா?“ என்று கேட்டான். தினகரன் பக்கத்தில் அவன் பெண் கீதா. கவலையான விழிகள். தலையை மாத்திரம் ஆட்டினாள்.
“திடீர்னு நெஞ்சு வலின்னான். கையைத் தூக்க முடியாதபடி திண்டாடினான். அப்படியே பேசிக்கிட்டே சோபாவில் உட்கார்ந்தான். அதுவும் முடியாமல் படுத்திட்டான்.“
“ஐயோ.“
“கீதாதான் பாத்தது. ரொம்ப பயந்திட்டாள் பாவம்…“
ராமசாமி கீதாவைப் பார்த்தபடியே தினகரனுக்குத் தலையாட்டுகிறான். “டாக்டர் என்ன சொல்றாரு?“
“எதேதோ அவங்களுக்குள்ள பேசிக்கறாங்க. ஃபோன் பண்ணியிருக்கு. பத்து மணிக்கு பெரிய டாக்டர் வருவார் போலருக்கு…“
“இப்ப என்ன பண்றாங்க?“
“ஈ சி ஜி ஓடிட்டிருக்கு. இதயத் துடிப்புல சிரமம் இருக்கறா மாதிரி தான் தெரியுது. மூச்சு விட கொஞ்சம் சிரமப் படறான். ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருக்கு…“
“அதை வெச்சி பயந்துக்க வேணாம்… சரியா?“ என கீதாவைப் பார்த்தபடியே தினகரனிடம் சொல்கிறான் ராமசாமி. “ஐ சி யூ இது. அவசர சிகிச்சைன்னு இதெல்லாம் செய்யறது தான். என்ன பிரச்னைன்னு பெரிய டாக்டர் வந்தால் தான் நம்மகிட்டவே சொல்வாங்க…“ என்கிறான். “ஒருவேளை பிரச்னை என்னன்னு அவங்களுக்குத் தெரியாதா இருக்கும். தெரிஞ்சாலுங் கூட அதைப் பெரிய டாக்டர் வந்து உறுதிப் படுத்தணும்னு இருப்பாங்க… சரி. கீதா, இங்க பார்… நீ இப்பிடி அதைரியமா இருக்கக் கூடாது. சின்ன பொண்ணுதானே நீ… இதெல்லாம் சேர்ந்து தான் வாழ்க்கை…“
“சித்தப்பான்னா அவளுக்கு உசிர் ஆச்சே“ என்கிறான் தினகரன். “நான் ஒருத்தன்… என் ஆசை, என் திமிர்னு ஒரு ஆட்டம் ஆடிட்டேன். அவன் வந்து வீட்டுப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கிட்டான்… அவனாலதான் இப்ப பொண்ணு படிப்புல மனசை ஒழுங்கா செலவு பண்ணறா. இப்ப நல்ல மார்க்கு வாங்கறா. என் பொண்ணுன்னு கேவலமா அவளைப் பாத்தவங்க, இப்ப அவள் அப்பான்னு என்னை மரியாதையாப் பேச ஆரம்பிக்கறாங்க. அவ்வளவுக்கு ரமேஷ்…. அவனோட பாசம் எங்களைக் கட்டிப் போட்டுட்டது…“ தினகரன் கண்ணைத் துடைத்துக் கொள்கிறான்.
“அண்ணா… இருக்கட்டும். அது ஒரு நேரம்…. அழிக்கணும்னு உங்களுக்கு ஒரு சுயநலம். வேகம். இப்ப… குழந்தை வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப் படத் தெரியுது. அதுவே நல்ல விஷயம்…“
ஆமாம், என்கிறாப் போல தலையாட்டுகிறான் தினகரன். “என் மேலே கூட உங்களுக்குக் கோபம் இருக்கும்…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“இருந்தது…“ என்கிறான் தினகரன். “இப்ப இல்லை“ என அவனைப் பார்க்கிறான். “நான் அப்படியே இருந்தால் எனக்குப் பிறகு இதுங்களை யார் பார்க்கறது?“
“உங்களுக்குப் பிறகுன்னு நீங்க யோசிச்சதே இல்லியே…“ என சிரிக்கிறான் ராமசாமி. “சரி. அதை விடுங்க. இப்ப ரமேஷ் நல்லபடியா எழுந்து வரட்டும். அதை கவனிக்கலாம்.“
“எல்லாம் நல்லா ஆயிட்டு வருதுன்னு நினைச்சேன் அப்பா…“ என்கிறான் தினகரன். “திடுதிப்னு இவன் இப்படி அடிபட்ட பறவை மாதிரி விழுவான்னு நான் கண்டேனா… எனக்கு என்ன தெரியும்? வீட்டை அவன் பாத்துக் கிட்டான். நான் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்…“
“கீதா, எதும் சாப்பிட்டியா?“ என அவள் பக்கம் திரும்புகிறான் ராமசாமி. “ஆச்சி அன்க்கிள்…“ என்கிறாள் கீதா. “சரியாயிரும்… கவலைப்படாதே…“ என அவளைக் கிட்டே அழைக்கிறான். தினகரனின் மனைவி மருந்து மாத்திரை என வாங்கப் போயிருந்தவள் வருகிறாள். “வாங்க… எப்பிடி ஒரு இடி… வந்திட்டதே பாத்தீங்களா?“ என்கிறாள் கண் கலக்கத்துடன்.
“பெரிய டாக்டர் வரட்டும். பார்க்கலாம்…“ என்கிறான் ராமசாமி. “செலவு பத்தி கவலை வேண்டாம். அவன் கிட்டவே மெடி கிளெய்ம் பாலிசி இருக்கும். பாங்க் வேற உதவி செய்யும்… அதுனால கவலைப் பட வேண்டாம்.“
“சரி“ என்கிறாள் தினகரனின் மனைவி. “எங்களுக்கு என்ன தெரியும். நீங்க கூடவே இருக்கணும்…“
“இருக்கேம்மா.“
“தேங்ஸ்“ என்கிறான் தினகரன். “ரமேஷுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மேல ரொம்ப ப்ரீதி உண்டு. அவர் அவனைக் கை விட மாட்டார்“ என்றவன், கண் கலங்க ராமசாமி கையைப் பிடித்துக் கொள்கிறான். “அந்த ஏழுமலையான் மேல சத்தியம். இவன் பழையபடி எழுந்து வந்தால் போதும். நான் குடிக்கறதையே விட்டுர்றேன் ராமு…“
“ஆகா“ என்கிறான் ராமசாமி. அவன் கையை அழுத்தி. “இதைக் கேட்டாலே ரமேஷ்… எழுந்து உட்கார்ந்திருவான்.“
ஐ சி யூ சன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்க்கிறான். உள்ளே மூணாவது படுக்கையில் எல் போல அரை மடிப்பாய்க் உட்கார்ந்து கிடக்கிறான் ரமேஷ். முகத்தில் ஆக்சிஜன் முகமூடி. ஆனால் கண் திறந்திருக்கிறது. ஊசி வழியே மருந்து செலுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்தே இவனை எப்படிப் பார்த்தான் தெரியவில்லை. கையை லேசாகத் தூக்கினாப் போலிருக்கிறது. ஒரு நர்ஸ் அவன் பக்கம் ஓடி வருகிறாள். பிறகு ஐ சி யூ வாயில் கதவின் சன்னலைப் பார்க்கிறாள். உடனே அந்த வாயிலைத் திறந்து வெளியே வருகிறாள். “அவர் இப்ப முழிச்சிக்கிட்டார் சார். கவலைப் பட வேண்டாம். ஆனால் யாரும் இப்பிடி எட்டிப் பார்க்க வேணாம். அவர் ரொம்ப தன்னை சிரமப் படுத்திக்குவார்…“
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீதா சன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு கையாட்டுகிறாள். உள்ளே படுக்கையில் ரமேஷ் தலையாட்டுகிறான். கீதா முகம் மலர்கிறது. ‘அம்மா?“ என அவளையும் பார்க்கக் கூப்பிடுகிறாள். நர்ஸ் கோபித்துக் கொள்கிறாள். “அப்பறம் எலலாரையும் கீழ அனுப்பிருவேன்…“ என்கிறாள். “சித்தபபாவையுமா?“ என்கிறாள் கீதா. அவள் உற்சாகத்துக்கு வந்துவிட்டாப் போலத்தான் இருக்கிறது.
“ஆனால் கீதா… பெரிய டாக்டர் வரட்டும். என்ன சொல்றார்னு பார்க்கலாம்…“ என அவளை அழைத்துப் போகிறான் ராமசாமி. “எதுவும் கூல் டிரிங்ஸ் மாதிரி குடிக்கறியா?“
“வேணாம் அன்க்கிள்…“
“ரொம்ப டென்ஷன் ஆயிட்டியே…“
“நான்தான் அன்க்கிள் சித்தப்பா வரும் போது வீட்டில் இருந்தேன்…“
பெரிய டாக்டர் வருகிறார். பரபரப்புடன் கூடவே ஒரு நர்ஸ். தினகரன் அவர் கூடவே  உள்ளே போக முயல்கிறான். நர்ஸ் அவனை அங்கேயே நிற்க வைக்கிறாள்.
“சித்தப்பாவுக்கு சரியா ஆயிரும் அன்க்கிள்…“ என்கிறாள் கீதா.
ராமசாமி புன்னகை செய்கிறான். “வித்தியாசமான பொண்ணு அம்மா நீ.“
“ஏன் அன்க்கிள்?“
“திடீர்னு டென்ஷன் ஆயிர்றே. அப்பறம் ரொம்ப ஃப்ரீயா ஆயிர்றே… ரெண்டுமே ஆபத்து.“
“என்ன அன்க்கிள் சொல்றீங்க?“
“ரமேஷ் எப்பிடி இருக்கிறான்னு பெரிய டாக்டர் சொல்லட்டும்… தெரியுதா?“ என்கிறான் ராமசாமி.
டாக்டர் தினகரனைக் கூப்பிட்டு “மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம்னு தோணுது. இப்போதைக்குத் தூங்கறார். செடேடிவ் தந்திருக்கோம். எதோ ஒரு வால்வ் கொஞ்சம் பலவீனம் ஆனாலும் இப்பிடி ஆகறதுதான்… எதுக்கும் நாளைக்கு சோதனைல்லாம்  பார்ப்பம். அப்பறமா முடிவு பண்ணலாம்.“
“இப்ப எப்ப்டி இருக்கான் டாக்டர்…“ என்கிறான் தினகரன்.
“ஹி இஸ் ஓ.கே. சில பேர் வலியைக் கூட தாங்கிக்குவாங்க. வலிக்குதுன்னு சொல்ல மாட்டாங்க. நாளைக்கு டெஸ்ட் ரிசல்ட் பாத்துட்டு மீதி பேசலாம்…“
நர்ஸ் வந்து, “யாருமே இருக்கத் தேவை இல்லை. எதும் அவசரம்னால் நாங்களே ஃபோன் பண்ணுவோம். எல்லாரும் வீட்டுக்குப் போங்க“ என்கிறாள்.
“இல்ல. நான் இருக்கேன்“ என்கிறான் தினகரன். “வாசல் ரிசப்ஷன்ல இருந்துக்குவேன். மணி பத்தரை ஆவுது. இவங்க ரெண்டு பேரையும் எப்பிடி வீட்டுக்கு அனுப்பறது… தெரியல்ல.“
“நாங்களும் இருக்கோம்ப்பா…“
“வேணாம் வேணாம். ஒரு ஆட்டோ பிடிக்கலாம். ஸ்கூட்டர்ல நான் பின்னாடியே போறேன். இவங்களை வீடு வரை விட்டுட்டு அப்பிடியே நான் என் வீட்டுக்குப் போறேன்…“
அவர்கள் கிளம்புகிறார்கள். தினகரன் திரும்ப அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். “ராமு… நீ கூடவே இருக்கணும்.“
“ஆகட்டும் அண்ணா“ என்று அந்தக் கையை அழுத்துகிறான் ராமசாமி.
காலை பதினோரு மணிக்கு ராமசாமி திரும்ப ஆஸ்பத்திரி வருகிறான். “நேத்திக்கே ரெண்டு வாட்டி வலி அதிகம் ஆயிட்டதுன்னு சொல்றாங்க… அவசர அவசரமா டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்கு ராமு…“ என்கிறான் தினகரன். அவன் உடம்பு நடுங்குகிறது. “அடாடா தைரியமே இல்லியே உங்களுக்கு?“ என்கிறான் ராமசாமி. “கீதா வரல்லியா?“
“அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேன்… அவளுக்குப் பரிட்சை. என்ன முடியுதோ எழுதிட்டு வான்னு சொல்லியிருக்கேன்…“
“இவனோட டெஸ்ட் ரிசல்ட் வந்திட்டதா?“
தலையாட்டுகிறான் தினகரன். “என்ன சொல்றாங்க?“ என்கிறான் ராமசாமி. “உங்க முகத்தைப் பார்த்தாலே விஷயம் பெரிசா இருக்கும் போலுக்கே அண்ணா?“ என்கிறான்.
“உடனே ஆபரேஷன் பண்ணணுன்றாங்க…“
“ஓகோ…“
“ஒரு வால்வ் உடனே மாத்திட்டா நல்லதுன்றாங்க…“
“எந்த வால்வ்?“
“இடது பக்க கீழ் வால்வு.“
“சரி. பண்ணிறலாம்… இந்த மாதிரி அவசர கேசை இந்த ஆஸ்பத்திரியில் எடுத்து உடனே செய்வாங்க. என்ன செலவு கொஞ்சம் அதிகம் எடுக்கும். ஆனால் பாங்க் பாத்துக்கும்…“ என்கிறான் ராமசாமி.
“சாயந்தரமே பண்ணிருவாங்க போலுக்கு… பெய்ன் கில்லர் கொடுத்து அவனைத் தூங்க வெச்சிருக்காங்க…“ என்றவன் சட்டென பொட்டலம் உடைந்தாப் போல அழ ஆரம்பிக்கிறான். “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராமு.“
அதற்குள் திலகாவும் சிகாமணியும் அங்கே வருகிறார்கள். தினகரன் அவர்களைப் பார்த்துத் தலையாட்டுகிறான். சிகாமணி அங்கே வந்து “கவலைப் படாதீங்கோ சார். அண்ணாவுக்கு ஒண்ணும் ஆகாது“ என்கிறான்.
“அவன் என் அண்ணன் இல்லை. தம்பி“ என்கிறான் தினகரன்.
“எனக்கு அண்ணன்னு சொன்னேன்…“ என்கிறான் சிகாமணி.
நர்ஸ் வெளியே வருகிறாள். ராமசாமி அவளிடம் போகிறான். “என்ன சிஸ்டர்?“
“இவ வீட்டுக்காரர் இங்க வந்து படுத்தாலும் இவளை சிஸ்டர்னு தான் கூப்பிடணுமா?“ என தினகரனிடம் கேட்கிறான் சிகாமணி. “நான் அடங்கிட்டேன்டா. இல்லாட்டி உன்னை ஒரு வழி பண்ணிருவேன்…“ என்கிறான் தினகரன்.
“சாயந்தரம் தியேட்டர் ஃப்ரியா இருக்கு எதிர்பாராமல்…“ என்று ராமசாமியிடம் சொல்கிறாள் நர்ஸ்.
“என்ன படம் அத்தான்?“
“வசிகரப் பொய்கள்…“ என்கிறான் ராமசாமி. “நீங்க சொல்லுங்க…“ என்கிறான் நர்சிடம்.
“வேறொரு பேஷன்ட்டுக்குப் பண்ண வேண்டிய ஆபரேஷன் தள்ளிப் போயிருக்கு…“
“அவருக்குப் பண்ண வேண்டியதை இவருக்குப் பண்ணிறாதீங்க…“ என்கிறான் சிகாமணி.
“ஓகோ…“ என்கிறான் ராமசாமி. “இவன் அதிர்ஷ்டம் அது“ என்கிறான் ராமசாமி.
“அது அந்த ஆள் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். யார் கண்டா?“ என்கிறான் சிகாமணி.
“விஷயம் என்னன்னால்… அவரோட ரத்தம் A 2 B பாசிடிவ். அந்த ரத்தம் இங்க எந்த ரத்த வங்கிலயுமே கிடைக்கல்ல…“
“A 2 B . அப்டின்னா அடையார் ஆனந்த பவன் ஆச்சே…“ என்கிறான் சிகாமணி.
“BE SERIOUS“ என்கிறான் ராமசாமி. “B SERIOUS னு ரத்த வகை இல்லை அத்தான். A 2 B POSITIVE தான் இருக்கு. அவங்க கேட்டாங்க…“
“ம். ஆபரேஷன் சமயத்தில் ரத்தம் தேவைப்படும்… தேடித் தேடிப் பார்த்தும் டோனர்ஸ் கிடைக்கல்ல…“
“இப்ப மணி என்ன?“
“பன்னெண்டு இருபது.“
“ஏண்டி உன் ரத்தம் என்ன வகை? தெரியுமா?“ என திலகாவைக் கேட்கிறான் ராமசாமி.
“B POSITIVE“ என்கிறாள் திலகா.
“SHE IS ALWAYS POSITIVE“ என்கிறான் சிகாமணி. “உன் ரத்தம் என்ன வகைடா?“
“B NEGATIVE.“
“நினைச்சேன்“ என்கிறான் ராமசாமி. “இப்ப என்ன பண்றது சிஸ்டர்?“
“எப்பிடியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணணும்…“
அதற்குள் கீதா வருகிறாள். கூட அவள் அம்மா. “என்ன அன்க்கிள், சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரங் குடுக்கலைன்ற கதை மாதிரி…“
“சாமி இருக்கையில், பூசாரி கிட்ட ஏன் வரங் கேட்டே நீ?“ என்கிறான் சிகாமணி.
“ஆபரேஷன் தியேட்டர் ரெடின்றாங்க. ரத்தம் கிடைககலையாமே…“
“நம்ம தெரிஞ்சவங்க யார் கிட்டயும்  A 2 B பாசிடிவ் ரத்தம் இல்லை…“
கீதா முகம் மாறுகிறது. “சித்தப்பா வலியில் கஷ்டப் படாறார்னு சொன்னாங்க அன்க்கிள்…“ என அழுகிறாள். எதோ சொல்ல வந்தவன் சிகாமணி அப்படியே நிறுத்திக் கொள்கிறான்.
“இப்ப என்ன பண்றது அன்க்கிள்…“
“பார்க்கலாம்…“
“அவரை ஐ சி யூ வில் வெச்சிருக்காங்க அன்க்கிள். அதுனால அங்க எது நடந்தாலும் எதுவுமே நமக்குத் தெரியாது. கடைசிலதான் நமக்குச் சொல்லுவாங்க.“
தினகரன் வருகிறான். “தெரிஞ்ச அத்தனை பேர் கிட்டயும் சொல்லிட்டேன்.. ரத்தம் கிடைக்கல்லியே…“ என்கிறான் கவலையாய். “பயப்படாதீங்க“ என அவன் தோளைத் தொடுகிறான் ராமசாமி.
“அதானே கவலையாய் இருக்கு… சாயந்தரம் ஆபரேஷன்… இப்பவே மணி… ஒண்ணாகப் போவுது…“
நர்ஸ் வெளியே வருகிறாள். “என்ன ரத்தம் கிடைக்க எதும் வழி இருக்கா?“ என்று கேட்கிறான் ராமசாமி அவளிடம். அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். “இது மாதிரி ஆனதே கிடையாது. போன வாரங் கூட, எங்க கிட்டியே  A 2 B இருந்தது. ஒரு பஸ் விபத்து வந்தது. ஜி ஹெச் லேர்ந்து கேட்டு விட்டாங்களா…“
“இப்ப என்ன பண்றது அன்க்கிள்…“
சட்டென எழுந்து கொள்கிறான் ராமசாமி. “பார்க்கலாம்… இதோ வரேன்…“ என பரபரப்புடன் கிளம்புகிறான் ராமசாமி. “எங்க போறீங்க?“ என்று கேட்கிறாள் திலகா. அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் பரபரப்புடன் போகிறான் ராமசாமி.
ஸகூட்டரை தன் வீட்டுக்கு வந்து நிறுத்துகிறான் ராமசாமி. பாய்ந்து லிஃப்ட்டுக்கு ஓடுகிறான். அதன் அருகே யாரும் இல்லை. உளளே போய்க் கதவைச் சாத்துகிறான். லிஃப்ட் மைனஸ் 1 காட்டுகிறது. சாமியைக் கும்பிட்டுக் கொள்கிறான். மணி பார்த்துக் கொள்கிறான். வெளியே இருட்டில் ஓடுகிறான். வங்கிக்கு ஒரு ஃபோன் அடிக்கிறான். அலுவலகம். ரமேஷின் மேசையில் தொலைபேசி அடிக்கிறது. “ரமேஷ்…  நான் ராமசாமி… உடனே நீ அகர்வால் பிளட் பாங்க்குக்கு வா…“
“ஏய் இர்றா. எங்கருந்து பேசறே?“
“அதெல்லாம் அப்பறம்… விஷயம் சிரியஸ்…“
“யார் சீரியஸ்?“
“நீதான்…“
“என்னடா உளர்றே?“
“உன் ரத்தம் A 2 B பாசிடிவ் தானே?“
“உனக்கு எப்பிடித் தெரியும்?“
“கிளம்பி வா. அவசரம். அகர்வால் ரத்த வங்கி. நுங்கம்பாக்கம். தெரியும் இல்லே?“
“தெரியும்…“
அகர்வால் ரத்த வங்கியில் ரமேஷ் ரத்தம் தருகிறான். பின் எழுந்து கொண்டபடியே “யாருக்குடா?“ என்கிறான். “உனக்குதாண்டா“ என்கிறான் ராமசாமி. “என்னடா உளர்றே…“
“வழக்கம்போல…“ என அங்கேயிருந்து பரபரப்புடன் வெளியேறுகிறான். அவனை அதிர்ச்சியுடன் பார்க்கிறான் ரமேஷ்.
ராமசாமி மாடிப்படி ஏறி வரும் போதே நர்ஸ் ஆச்சர்யத்துடன் அவனிடம் அவனைப் பார்க்க கீதா ஓடி வருகிறாள். “கவலைப்படாதே கீதா… ரத்தம் ஏற்பாடு பண்ணியாச்சி… ஆபரேஷன் சக்சஸ்ஃபுல்லா நடக்கும்… எனிறு புன்னனகை செய்கிறான்.
அபதபடி அவனைக் கட்டிக் கொள்கிறாள் கீதா.
“எப்பிடிக் கிடைச்சது அன்க்கிள்…“
“அடையார் ஆனந்த பவன்ல வாங்கினீங்களா அத்தான்?“ என்கிறான் சிகாமணி.
“இவன் ஒருத்தன்…“ என்று ஆசுவாசமாய் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்கிறான் ராமசாமி. மணி பார்க்கிறான் நாலு. “இவ்ளோ நேரம் பக் பக்னு உட்கார்ந்திருந்தேன் அன்க்கிள்…“
“அதான் கிளைமக்சுக்கு அழகு“ என்கிறான் சிகாமணி.
“ஆபரேஷன் இன்னிக்கு இருக்குமான்னு ஆயிட்டது எங்களுக்கு…“
“இருக்கும்“ என்கிறான் சிகாமணி.
“சித்தப்பா நல்லபடியா தேறி வருவார். கவலைப்படாதே“ என்று அவள் தலையை வருடிக் கொடுக்கிறான். தினகரன் வாய்விட்டு அவர்களைப் பார்த்து நெஞ்சில் கை வைத்துச் சிரிக்கிறான். “முழுசும் முடியட்டும்“ என்கிறான் ராமசாமி. “சரியான சமயத்தில் நாம அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டோம். சரியான சமயத்தில் சரியான ட்ருட்மென்ட் குடுக்கறோம்… கவலைப் பட வேண்டாம்.“
திலகா அவனிடம் வருகிறாள். அவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறான் ராமசாமி.
“என்னத்தான் லிஃப்ட் வேணுமா?“ என்கிறான் சிகாமணி.


தொ ட ர் கி றே ன்
91 97899 87842
for bulk 5 chapters please visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment