Thursday, September 10, 2015

updated everyday - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத்தியாயம் 20

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 20
ராமசாமி வீடு. சுவரில் அவன் அப்பாவின் படம். மாலை போட்டிருக்கிறது. தலைமாட்டில் மினுக் மினுக் சீரியல் பல்ப். பக்கத்தில் சுவர்க் கடிகாரத்தில் மணி நாலே முக்கால். திலகா கணவன் வர காத்திருக்கிறாள். திருமண நாளின் முக மலர்ச்சி. தலை நிறைய மல்லிகைப் பூ.
“அம்மா… அப்பா இன்னும் வரல்லியா?“ என்று கேட்டபடியே கோகுல் அம்மா தந்த டம்ளர் பாலை வாங்கிக் குடிக்கிறான். “காலைல போனவரு, சீக்கிரம் வரேன்னுட்டுப் போனார். ஆளையே காணம். நல்ல நாள்னாவது சீக்கிரம் வரக் கூடாதா?“ என சலித்துக் கொள்கிறாள் திலகா.
“உன் பொறந்த நாளைக்கும் இப்படித்தான் பண்ணினார். வெளியே  இறங்கினால் அவருக்கு வீடே மறந்துர்றது அக்கா“ என்கிறான் சிகாமணி. “ஏன்க்கா நீ இன்னிக்கு அவரை லீவு போடச் சொல்லி யிருக்கலாமே?“
“என்னிக்குடா அவர் லீவு போட்டிருக்கார். பொறந்த நாள், கல்யாண நாள்னா… அது ஒரு விஷயமா? எதும் சாதிச்சால் அதுதான் கொண்டாடற நாள். மத்தபடி இதுக்கெல்லாம் லீவாவது?... அப்டின்னுவார்.“ என்றவள் மெல்ல புன்னகை செய்கிறாள்.
“என்னக்கா?“
“இல்ல. கைகேயி மாதிரி நான் இன்னிக்கு அவர்கிட்ட ஒரு வரம் கேட்டேன். அதான்… பயந்திட்டாரா தெரியல்ல.“
“என்ன வரம்?“
“என்னையும் ரெண்டு வருஷம் முன்னாடி அழைச்சிட்டுப் போங்கன்னேன்…“
“என்ன சொன்னார்?“
அப்போது கதவு தட்டப் படுகிறது. வாசலில் கணபதியின் குரல் “என்ன வேலை முடிஞ்சி வந்தாச்சா?“
“அக்கா அத்தான் வந்திட்டார்… நீ கவலைப்படாதே. நான் அவரோட பேசறேன்.“
உற்சாகமாக ராமசாமி உள்ளே நுழைகிறான். “ஹாய் சிகா…“
“அதெல்லாம் இருக்கட்டும்…“ என்று என்னவோ சொல்ல வந்தவன் ராமசாமி கை கடிகாரத்தைப் பார்த்து விட்டு, “இதென்ன புது கடிகாரம் அத்தான் கையில?“
திலகா திரும்பிப் பார்க்கிறாள். “இதே மாதிரி  ரெண்டு வருஷம் முந்தி நம்ம கல்யாண நாள் வந்ததே அப்ப நான் வாங்கித் தந்தேன்… போலருக்கே?“
“அதே தான்“ என்கிறான் ராமசாமி.
“என்ன சொல்றீங்க?“
“அதே போலத்தான் இருக்குன்னு சொல்ல வந்தேன்.“
“அது எங்கியோ தொலைஞ்சி போச்சின்னு தானே வேற வாங்கினீங்க?“
“அது…“ என ராமசாமி சிரிக்கிறான். “இந்த வாட்ச்சை எங்கியோ வெச்சிட்டேன். இதைத் தேடினேனா…“
“பழைய வாட்ச் கிடைச்சிட்டதாக்கும்.“ என்கிறாள் திலகா.
“ஆகா. என் மனைவி மாதிரி புத்திசாலி உலகத்தில் இல்லை.“
“இன்னிக்குக் கல்யாண நாள் உங்களுக்கு. இன்னிக்கு ஒருநாளாவது அக்காவை எங்காவது வெளியே கூட்டிட்டுப் போகக் கூடாதா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“இன்னிக்கு ஒரு நாளாவது லீவு போட்டிருக்கக் கூடாதா? அதையும் கேளுடா“ என்கிறாள் திலகா.
“இன்னிக்கு நான் லீவு தான்“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நானும் இவளும் ஒரு இடம் போயிட்டு வந்தோம்…“ என்றவன், சேவைக்கரங்கள் இல்லத்தில் பாடிய பிரார்த்தனைப் பாடலின் ஒரு வரி பாடுகிறான்.
“என்ன பாட்டு இது?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“நல்லா இருக்கா?“
சிகாமணி பதில் சொல்லுமுன், திலகா, “இன்னிக்கு லீவா நீங்க?“
“ஆமாண்டி என் கண்மணி…“ என அவள் கன்னத்தைக் கிள்ள வருகிறான்.
“லீவு போட்டுட்டு எங்க போனீங்க?“
“லீவு போட்டேனா…. நான் இங்க தான் வந்தேன்…“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
“பொய்.“
“சத்தியம்“ என்கிறான் ராமசாமி.
“பொய்சத்தியம்“ என்கிறான் சிகாமணி.
“சத்தியமா இது பொய்“ என்கிறாள் திலகா.
“வந்து உன்னை, நான் வாக்கு தந்தபடி… வெளியே கூட்டிட்டுப் போனேன்.“
“ரெண்டு வருஷம் முன்னாடி வந்தீங்களா?“ என அவள் திகைப்புடன் கேட்கிறாள். “அப்ப நான் எப்பிடி இருநதேன்?“
“அதுவா இப்ப முக்கியம்?“ என்கிறான் சிகாமணி.
“உன் தங்கச்சி மாதிரி இருந்தே“ என்கிறான் ராமசாமி.
“எனக்கும் அவளுக்கும் ஆகறது இல்லை“ என்கிறாள் திலகா.
“உங்களை நம்பறதா வேணாமான்னே நாங்க குழம்பி, எங்களுக்கே பைத்தியம் பிடிச்சிரும் போல இருக்கு அத்தான்“ என்கிறான் சிகாமணி. “ஆனால் அக்கா…“ என்று திலகா பக்கம் திரும்புகிறான். “அந்த ரமேஷ்-அப்பா சாவின் போது…“
“சொன்னியேடா“ என்கிறாள் திலகா.
“என்ன டிவிஸ்ட் இல்லே? அது பாக்கும் போது… எனக்கு நம்பலாமாட்டம் இருக்கு“ என்கிறான்  சிகாமணி.
“இந்த மாதிரி திருப்தியா நான் என் கல்யாண நாளைக் கொண்டாடியதே இல்லை“ என்கிறான் ராமசாமி. மேசையில் அமர்ந்து வரையும் தாளை எடுக்கிறான்.
“என்ன அத்தான்….“
“வரைஞ்சி பாத்து ரொம்ப நாள் ஆச்சிடா“ என்கிறான் ராமசாமி. ‘சேவைக் கரங்கள் பிரார்த்தனைப் பாடலின் இன்னொரு வரி தன்னைப் போல வாயில் வருகிறது.
“இந்தப் பாட்டை எப்பவோ நான் கேட்டாப் போல இருக்கு“ என்கிறாள் திலகா.
“என்ன சார்? ஒரே பாட்டும் உற்சாகமுமா இருக்கீங்க?“ என்று வாசலில் இருந்து கணபதி கேட்கிறார். “கல்யாண நாள் குஷியா?“ படம் வரைந்தபடியே ராமசாமி தலையாட்டி அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
“எதையாவது ரெஃபரன்ஸ் வெச்சிக்கிட்டு வரைவீங்களா, அல்லது ஜஸ்ட் லைக் தட் கை போன போக்கா?“
“உள்ள வாங்க“ என்கிறாள் திலகா.
“இல்லம்மா. பரவால்ல… சார் வேலையா இருக்கார்“ என்று கணபதி தயங்குகிறார்.
“பரவால்ல வாங்க கணபதி“ என அழைக்கிறான் ராமசாமி.
“எப்பவாவது பார்த்து மறக்க முடியாத முகம் இருந்தால் அதை நினைவுக்குத் திரும்பக் கொண்டு வந்து வரையறது எனக்குப் பிடிக்கும் சார். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில் இருந்தே எதாவது படம், சுவரில் போஸ்டர் மாதிரி எதாவது, பார்த்தால் அதை அப்படியே மனசில் குறிச்சுக்குவேன். வீட்டுக்கு வந்து வரையும் போது எவ்வளவு ஞாபகம் வருதுன்னு செக் பண்ணிக்குவேன்…“
பேசியபடி கை தன்னைப் போல வரைகிறது. அது ஒரு சிறு பெண் குழந்தையின் படம். காதுகளில் டோலாக்கு. முகம். மூக்கு. நெற்றி. புருவம். “விறுவிறுன்னு வரையறீங்களே?“ என்று சிரிக்கிறார் கணபதி.
“ஞாபகத்தில் இருக்கிறதை யோசிச்சிக்கிட்டே வரைகிறேன்…“
கன்னத்தில் கோடு வரைகிறான். சிரித்தாப் போல கண்கள்.. ”ஹா“ என்கிறார் கணபதி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “காமாட்சி?“ என்று சத்தமாய்க் கூப்பிடுகிறார்.
என்னவோ ஏதோ என்று பயந்துகொண்டு கணபதியின் மனைவி வாசலில் இருந்து எட்டிப் பார்ககிறாள். “என்னங்க?“
“இங்க வா…“
காமாட்சி உள்ளே வருகிறாள். ராமசாமி வரைந்து கொண்டிருக்கும் படத்தைப் பார்த்து விட்டு அவளும் “ஹா“ என்கிறாள்.
“படம் அத்தனை தத்ரூபமா இருக்கு இல்லே?“ என்கிறான் சிகாமணி.
“இந்தப் பொண்ணு அழகா இருக்கா இல்லே?“ என்கிறான் ராமசாமி வரைந்து கொண்டே.
கணபதி கண்ணில் கண்ணீர். “சார்… சார்… இது… இது எங்க பொண்ணு சார்…“ சொல்லும்போதே அவர் குரல் தழுதழுக்கிறது.
‘ராமசாமி ஒரு துள்ளலுடன் திரும்புகிறான். “இது உங்க பொண்ணா?“
“ஆமா சார்.“
“கவலைப் படாதீங்க. உங்க பொண்ணு கெடச்சிட்டா…“ என்று கையைப் பிடித்துக் கொள்கிறான் ராமசாமி.
“எங்க பொண்ணு எங்க இருக்கா?“ என்று கேட்கிறாள் காமாட்சி.
“உங்க பொண்ணு பேர் என்ன?“
“ராணி.“
“ஒரு நிமிஷம்“ என ராமசாமி தொலைபேசிக்குப் போகிறான். கணபதி காமாட்சி கையைப் பிடித்துக் கொள்கிறார். “சனிஸ்வரனுக்கு எண்ணெய்க் கிழி போட்டது வீண் போகல்லடி…“
“ஹலோ சேவைக் கரங்களா?“ தொலைபேசியில் பேசுகிறான் ராமசாமி.
“ஆமா சார்.“
“அங்க ராணின்னு ஒரு குழந்தை…“
“இருக்கு சார்.“
“சரி நாங்க இப்பவே அங்க வரோம்.“ ராமசாமி வந்து கணபதியைக் கட்டிக் கொள்கிறான். “வாங்க போகலாம்…“
திலகா எதுவும் புரியாமல் திகைக்கிறாள். “திலக். நம்ம கல்யாண நாளில் எத்தனை நல்ல விஷயம் நடக்குது பார்…“
“என்ன சொல்றீங்க?“
“சிகாமணி, ஒரு கால் டாக்சி கூப்பிடுறா…“ என்கிறான் ராமசாமி.
சேவைக் கரங்கள் இல்லம். வாசலுக்கே வந்து சாரங்கநாதன் வரவேற்கிறார். “உங்க பேரைச் சொல்லி இன்னிக்கும் குழந்தைகள் வயிறாற சாப்பிட்டாங்க சார்…“
“அதைவிட முக்கியமான விஷயம் இருக்கு சாரங்கநாதன்…“ என்கிறான் ராமசாமி.
உள்ளே எல்லாரும் பரபரப்பாக நுழைகிறார்கள். ராணி அங்கே யாரோ வந்திருக்கிறார்கள் என்று பார்த்தபடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறாள். கணபதியைப் பார்த்த கணம் அவளுக்கு அடையாளம் தெரிகிறது. “அப்பா?“ என ஓடி வருகிறாள். அதைப் பார்த்தபடி காமாட்சி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள். “உன்னை இனிமே பார்க்கவே மாட்டோமேன்னு ஆயிட்டதேடி எங்களுக்கு…“ என குழந்தையைக் கட்டிக் கொண்டு அழுகிறாள் காமாட்சி.
கட்டை விரலை உயர்த்தி திலகாவிடம் காட்டுகிறான் ராமசாமி. “வெல்டன்“ என அவன் இடுப்பைக் கிள்ளுகிறாள் திலகா.
“வெல்டன் இல்ல. இது இடுப்பு“ என்கிறான் ராமசாமி.
சிகாமணி அருகே வந்து அத்தான் பக்கம் நிற்கிறான். கணபதியையும் காமாட்சியையும் குழந்தையையும் பார்த்தபடியே அவன் பேசுகிறான். “குழந்தை இங்க இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது அத்தான்?“
“அடேய் ஒரு தடவை பார்த்தால் மறக்கும். நான் இந்தக் குழந்தையை ரெண்டு தடவை பார்த்திருக்கேன்…“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“அது ஒரு தடவை.“
“இன்னிக்கு?“ என்கிறாள் திலகா புருவம் உயர்த்தி. “இன்னிக்கு ரெண்டாவது தடவை. ஆமாண்டி ஆமாம்“ என்கிறான் ராமசாமி.
“வாப்பா நம்ம வீட்டுக்குப் போலாம்“ என்கிறாள் ராணி. “போலாம் போலாம்“ என தூக்கிக் கொள்கிறார் கணபதி. கையில் கொண்டு வந்திருந்த ஆப்பிளை அதற்குத் தருகிறார். வாயை வைத்து ஆசையாய்க் கடிக்கப் போகிறாள் ராணி. சட்டென நிற்கிறாள். “மேகலா?“ என்று திரும்பிக் கூப்பிடுகிறாள் ராணி.
“யாரது மேகலா?“ என்று கேட்கிறாள் காமாட்சி.
“இல்லத்தில் இருக்கிற இன்னொரு பொண்ணு… அவளும் இவளும்தான் ரொம்ப சிநேகம்“ என்கிறார் சாரங்கநாதன்.
ராணி “ஒரு நிமிஷம் அப்பா“ என்று உள்ளே மேகலாவைத் தேடிப் போகிறாள்.
மேகலா உள்ளறையில் குப்புறப் படுத்து அழுது கொண்டிருக்கிறாள்.
“என்னாச்சி மேகலா? இங்க பாரு…“
“ஒண்ணும் வேண்டாம் போ“ என முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் மேகலா.
“இந்தாடி ஆப்பிள்.“
“வேணாம்..“
“ஏன் வேணாம்?“
மேகலா பதில் சொல்லவில்லை.
“அப்ப எனக்கும் வேணாம்…“ என ராணி அந்த ஆப்பிளை கட்டில் ஒரத்தில் வைக்கிறாள். மெல்ல மேகலாவைத் தொடுகிறாள். மேகலா விக்கி விக்கி அழ ஆரம்பிக்கிறாள்.
அதற்குள் கணபதியும் மற்றவர்களும் அந்த அறைக்குள் வந்து விடுகிறார்கள்.
“என்ன ராணி?“
“பாவம்ப்பா மேகலா…“ கணபதி ராணியைப் பார்க்கிறார். “அவளுக்கும் அப்பா அம்மா யாருமே இல்லப்பா…“
“பாவம்“ என்றபடி காமாட்சி போய் மேகலாவைத் தூக்கிக் கொள்கிறாள். மேகலா அப்படியே பின்பக்கமாக விரைத்துக் கொள்கிறாள்.
“நான் உங்க கூட வரல்லப்பா“ என்கிறாள் ராணி. “ஏன்டி?“ எனப் பதறுகிறார் கணபதி. “மேகலா இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்ப்பா“ என்கிறாள் ராணி. “அவளுக்கு யாருமே இல்லப்பா. எனக்கு அப்பா அம்மா கெடச்சிட்டாங்க. அவளுக்கு?“ என்கிறாள்.
“அவளுக்கும் கெடச்சிட்டாங்க“ என்று காமாட்சி மேகலாவுக்கு முத்தங் கொடுக்கிறாள். மேகலா விரைத்தபடி காமாட்சியைப் பார்க்கிறாள்.
“ம்?“ என்பது போல மேகலா காமாட்சியைப் பார்த்துத் தலையாட்டி கேள்வி கேட்கிறாள். “ம்…“ என காமாட்சி அவள் தலையைத் தடவிச் சிரிக்கிறாள்.
“ஐ“ என ராணி கை தட்டுகிறாள். எல்லாரும் கூடவே கை தட்டுகிறார்கள்.
“அம்மா…“என்கிறாள் மேகலா. “ஆமாண்டி என் தங்கமே“ என்கிறாள் காமாட்சி. “அம்மா…“ என மேகலா அவளைக் கட்டிக் கொள்கிறாள்.
அதைப் பார்த்து ராணி சிரிக்கிறாள்.
சாரங்கநாதன் சந்தோஷமாய்த் தலை யாட்டுகிறார். ராமசாமியிடம் “திடீர்னு எங்க ஞாபகம் எப்படி வந்தது உங்களுக்கு…“
“அது ஒரு பெரிய கதை“ என்கிறான் சிகாமணி.
அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். ராணி அந்த ஆப்பிளை ஒரு கடி கடித்து விட்டு மேகலாவிடம் தருகிறாள். மேகலா அதை வாங்கி அவளும் ஒரு கடி கடிக்கிறாள்.
“இதெல்லாம் பொய்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “சத்தியம்“ என்கிறாள் திலகா. “வெல்டன்“ என்கிறாள். “இடுப்பு“ என்கிறான் ராமசாமி. சிரிக்கிறாரகள்.
ராமசாமி வீடடுக்குப் பக்கத்து கணபதி வீடு. வாசலில் கதவுக்கு மேலே ஒரு படம். ராமசாமி வரைந்தது.
அதில் ராணிக்கு அருகே மேகலாவின் முகம் வரைந்திருக்கிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

(bulk updation of chapters on a separate blog 
vasikarapoikalplus.blogspot.com
updated every Tuesday / Friday)


No comments:

Post a Comment