Sunday, September 20, 2015

அத். 30 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்


வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 30
கிருஷ்ணா கபே. மாலை நாலரை மணி. கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக் கொள்கிறான் ராமசாமி. கடையில் கூட்டம் பெரிதாக இல்லை. ராமசாமி காத்திருக்கிறான். சர்வர் வருகிறான். “வாங்க ‘SPONSOR’  சார்“ என வணக்கம் சொல்கிறான். “தனியா வந்திருக்கீங்க இன்னிக்கு?“
“யாரு? ஓ அவனா…“ என சிரிக்கிறான். “நான் நல்லா மாட்டிக்கிட்டேம்ப்பா அவன்கிட்ட…“
“சுமமா கள்ளழுகை சார். சில பிள்ளைங்க தூக்கிக்கச் சொல்லி அம்மாகிட்ட அழுது விரைக்கும். அவ பாட்டுக்குப் போயிட்டால், தானே அழுகையை நிறுத்திரும்.“
“அழற பிள்ளையை அடுத்தாள் இடுப்பில் ஏத்தி விட்டுருவாங்க சில பேர்…“ என்கிறான் ராமசாமி. “அதுதான் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.“
“பிள்ளையாரைப் பிடிச்ச சனி ஆலமரத்தையும் பிடிச்சதாம்னு, ஒரு பிரச்னை ரெண்டு பிரச்னையா ஆயிறப் போகுது சார்…“ என சிரிக்கிறான் சர்வர்.
“பார்க்கலாம்.“
“காபி எடுத்திட்டு வரவா சார்?“
“இன்னொருத்தர் வருவாங்க…“
“அவனா?“
ராமசாமி சிரித்து “இன்னும் ரெண்டு பேர் வருவாங்க“ என்கிறான்.
“சரி“ என்றவன், பக்கத்து மேசைக்கு ஆள் வந்திருக்கிறார்கள், என்று கவனித்து “எனன வேணும் சார்“ என்று போகிறான்.
ராமசாமி காத்திருக்கிறான். கிருஷ்ணா கபேக்கு உள்ளே வருகிறாள் கிருஷ்ணவேணி. வெளியே எங்கும் ராமசாமி நிற்கிறானா என்று பார்த்தபடியே, அவனைத் தேடியபடியே வருகிறாள். அவனைப் பார்த்து விட்டாள். புன்னகை செய்கிறாள். தலையாட்டுகிறான் ராமசாமி.
“சொன்னபடி சரியா வந்திட்டியே. வெரி குட்..“
“நான் வாக்கு குடுத்திட்டால் தவற மாட்டேன் சார்.“
மேசைக்கு நாலு பக்கமுமாக நாற்காலிகள். அதிகம் காபி சாப்பிட வருகிறவர்களுக்காக அந்த அமைப்பில் போடப் பட்டிருக்கிறது. கிருஷ்ணவேணி வந்து அவனுக்கு இடப்பக்கம் உள்ள நாற்காலியில் அமர்கிறாள்.
தலையில் கால் முழம் பூ வைத்திருக்கிறாள். எளிய பருத்திப் புடவை. மஞ்சள் பூசிய முகத்தில் சாந்துப் பொட்டு. ஆர்ப்பரிக்காத கடல் போல இருக்கிறாள் இவள், என நினைத்துக் கொள்கிறான். “ரொம்ப நல்ல பொண்ணு“ என்கிறான் ராமசாமி. அவள் சிரித்தபடி தலையசைத்து “தேங்ஸ் சார்“ என்கிறாள். “உங்க அப்பாவுக்கு எத்தனை குழந்தைகள் கிருஷ்ணவேணி?“
“இன்னொரு தம்பி எனக்கு இருக்கான் சார். பத்தாவது படிக்கிறான்.“
“மெட்ரிக்கா C B S E யா?“
“மெட்ரிக் சார். நல்லா படிக்கிறான். அவனை எப்படியாவது இன்ஜினிரிங் படிக்க வைக்கணும்னு…“
“உங்க அப்பா நினைக்கிறாரா?“
“இல்ல. நான் நினைக்கறேன் சார்.“
“ஓ.“
“அப்பா தெளிவா, எனக்குக் கட்டுப்படி ஆகாதுடா. உன் அக்கா வேற கல்யாணத்துக்கு இருக்கா. உங்க அம்மா வேலைக்கு எங்கயும் போகல்ல. SINGLE EARNING. கல்யாணச் செலவை நான் சமாளிக்கணும். எதோ என்னால முடிஞ்ச அளவு படிக்க வைக்கிறேன்கிறார்.“
“சொல்லு.“
“அவன் அழுதுட்டான். என்னால தாங்க முடியல்ல சார்.“ ராமசாமி தலையாட்டுகிறான். “நான் படிக்க வைக்கறேன்டா“ என அவனை ஆறுதல் படுத்தினேன் சார். “பணத்துக்கும் ஆசைக்கும் என்ன சார் இருக்கு?“
“ஒண்ணும் இல்லை.“
“ஏழையா இருந்தால் பெரிய படிப்புக்கு… ஆசை கூடப் படக் கூடாதா சார்?“
“அப்பிடிப் போடு… கனவு காணுங்கள்ன்றாரு அப்துல் கலாம்.“
“பாத்துக்கலாம்டா. நீ நல்ல மார்க் வாங்கினால் என் முதலாளி கிட்ட கேட்டு கடன் வாங்கி நான் உன்னைப் படிக்க வைக்கறேன்டா…ன்னு சொல்லியிருக்கிறேன். கல்விக் கடன்லாம் இருக்குன்றாங்க…“
“இருக்கு இருக்கு. நாங்களே குடுக்கறோம்…“ என்கிறான் ராமசாமி.
“ஆகா. அப்ப எனக்கு… என் தம்பிக்கு உதவி செய்வீங்களா சார்?“
“செய்வேனா, செய்ய மாட்டேனா… நீயே சொல்லு…“
“செய்வீங்க சார்…“ என நெகிழ்கிறாள். நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறாள். உணர்ச்சி மேலிடும் போதெல்லாம் அவள் நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறாள் என நினைத்துக் கொள்கிறான் ராமசாமி. “சாரைப் பார்த்தது மூலிகை கால்ல தட்டினாப்ல ஆயிட்டது. ரொம்ப சந்தோஷம் சார்…“ அவள் கண்கள் பனிக்கின்றன. “ஈசி ஈசி“ என சிரிக்கிறான் ராமசாமி.
“நான் என் கதையை உங்க கிட்ட சொல்லிட்டிருக்கேன். போரடிக்கிறேனா சார்?“
“நோ. நெவர். நாட் அட் ஆல்…‘ என்கிறான் ராமசாமி. “என்னடா முன்பின் தெரியாதவன் ஓட்டலுக்கு நம்மைக் கூப்பிடறான்னு இருந்ததா?“
“இல்ல. உங்க பிரியம் எனக்குப் புரிஞ்சது சார். உண்மையான அன்புன்னா எனக்கு என்னன்னு தெரியும்.“
“சூப்பர்.“
“எங்க அப்பாவே கூட அதிகமாச் செலவு கிலவு பண்ண மாட்டார் சார். சாப்பாடுன்னா எப்படியும் ராத்திரி வீடு வந்திருவார். நாலு பேருக்கு இந்தச் சம்பளம். நான் ஒராளா அதைச் செலவழிக்க முடியாதும்பாரு…“
“நல்ல குடும்பம்தான்… அதான் நீங்க இப்பிடி அவர் நிழல்ல சந்தோஷமா வளர்றீங்க“ என்று பாராட்டுகிறான்.
“உன்கூட நான் பேசணும்னு சொன்னேன்… அதுக்காகத் தான் வரச் சொன்னேன். இல்லியா?“
“ஆமா சார்“ என்கிறாள். “நீங்க பேசற விஷயத்துக்கு வர்றதுக்கு முன்னால், நான் ஒரு விஷயம் பேசி… எனக்குத் தேவையானதை வாங்கிக் கிட்டேன்…“ சிரிக்கிறாள் கிருஷ்ணவேணி.
“என்ன அது?“
“தம்பி படிப்புக்கு…“
“அட அது சின்ன விஷயம் வேணி. நான் உன்னை வேணின்னு கூப்பிடலாமா?“
“கூப்பிடுங்க சார். அதுக்கென்ன? அது எங்களுக்கு ரொம்பப் பெரிய விஷயம் சார்.“
“இருக்கட்டும்….“ என்கிறான் ராமசாமி.
“சரி. என்ன விஷயம் சொல்லுங்க சார்.“
“உன்னால யூகிக்க முடியுதா? ANY GUESS?“
“தெரியல. வேற நல்ல வேலையா எனக்கு எதுவும் சொல்ல நினைச்சிருக்கலாம். என்ன படிச்சிருக்கேன்னு கேட்டீங்களே?“
“ஓகோ.“
“ஆபிஸ்ல எப்பிடிச் சொல்றதுன்னு யோசிச்சிருக்கலாம்…“
“YOU ARE VERY PRACTICAL“ என்கிறான் ராமசாமி. “AND TO THE POINT“ என சேர்த்துக் கொள்கிறான். “எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு கிருஷ்ணவேணி…“
“தேங்ஸ் சார்“ என்கிறாள். “என்னை விட உன்னை இன்னொருத்தருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி. “என்ன சார் புதிர் போடறீங்க?“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
அப்போது கிருஷ்ணன் கடைக்குள் நுழைகிறான். இருப்பதில் நல்ல உடையை அணிந்து வந்திருக்கிறான். தலையில் தொப்பி. முடிந்தவரை அட்டகாசமாக உற்சாகமாக இருப்பதான பாவனையுடன் “ஹாய்“ என கையாட்டியபடியே உள்ளே வருகிறான்.
“இவனா?“ என முகம் மாறி எழுந்து கொள்ளப் போகிறாள் கிருஷ்ணவேணி. “அட உட்காரும்மா“ என அவளை அமர்த்துகிறான் ராமசாமி.
கிருஷ்ணன் வந்து ராமசாமிக்கு இடது பக்க நாற்காலியில் அமர்கிறான்.
சர்வர் வருகிறான். “மூணு காபி…“ என்கிறான் கிருஷ்ணன். “ஒண்ணுல சர்க்கரை ஜாஸ்தி…“ என்கிறான் உற்சாகமாய்.
“என்ன சர்க்கரை ஜாஸ்தி…. யாருக்கு?“ என்கிறான் ராமசாமி.
“எனக்குதான் சார். இன்னிக்கு எனக்கு மகிழ்ச்சியான நாள்“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
“மண்ணாங்கட்டி“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “என் நாளையே கெடுத்திட்டியே“ என்கிறாள். “சார் இவனை எங்க பிடிச்சீங்க?“
ராமசாமி சிரித்து “நான் எங்கம்மா பிடிச்சேன்? அவன் தான் என்னைப் பிடிச்சிக்கிட்டான்…“
“அழுது இடுப்பில் ஏறிக்கிட்ட குழந்தை…“ என்றபடியே சர்வர் மூணு கப் காபியை வைக்கிறான். “உங்கிட்ட அவர் கேட்டாராய்யா? உன் வேலை என்ன? காபி தருவது. அதைச் செய். அதை ஒழுங்காச் செய். புரிஞ்சதா? இதுல எது சர்க்கரை ஜாஸ்தி?“ என்கிறான் கிருஷ்ணன்.
“இதுதான். கவுத்தின டபரால சர்க்கரை தூவி யிருக்கு பார். ஓசிக் காபிக்கு உதார் எல்லாம் தேவையா?“ என்றபடி சர்வர் போகிறான். கிருஷ்ணவேணி சிரிக்கிறாள் எகத்தாளமாய். “நீ சிரிச்சால் தீபாவளி…“ என்கிறான் கிருஷ்ணன் மயக்கமாய். “நான் சிரிச்சால் மத்தாப்பு. சீறினால் வெடிகுண்டுடா“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “மு. மேத்தா சொல்வாரு… நான் காத்திருந்தால் காற்று – புறப்பட்டால் புயல். அதுமாதிரியான அதிரடி இது…“
“தேங்ஸ் சார்“ என ராமசாமி பார்க்கத் திரும்புகிறாள் கிருஷ்ணவேணி. “இவனை எங்க பிடிச்சீங்க?“
“நான் எங்க பிடிச்சிக்கிட்டேன்…“ என்கிறான் ராமசாமி திரும்ப.
“காபி ஆறிரப் போகுது. எடுத்துக்கோ கிருஷ்ணவேணி“ என்கிறான் கிருஷ்ணன்.
“என் வயிறு எரியுதேடா… அதுல ஊத்திக்கிட்டா சரியா இருக்கும்…“
“காபி ஆறிரப் போகுது. பாம்பு சீறிரப் போகுது… எப்பிடி ரைமிங்“ என்கிறான் கிருஷ்ணன்.
ராமசாமி சிரித்தபடி காபியை உறிஞ்சுகிறான். “ஏன் சார் இதுக்குதான் என்னை வரச் சொன்னீங்களா?“
“ரொம்ப தேங்ஸ் சார்“ என்கிறான் கிருஷ்ணன்.
“இந்தாளு ஒரு ஃபிராடு சார்… டம்மி பீஸ்.“
“எனக்குத் தெரியாமல் போச்சே. முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எனக்கு என்ன சார் குறைச்சல்?“ என காலரை நிமிர்த்துகிறான் கிருஷ்ணன். “அழகு இல்லியா?“
“இல்ல“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“அறிவு இல்லியா?“
“இல்லவே இல்ல…“ என்கிறாள் ஆத்திரமாய். “சார் இவன்கிட்டச் சொல்லி வையுங்க. எப்ப பாரு என் பின்னாலயே இளிச்சிக்கிட்டே வரான் சார்…“
“நான் பின்னாலதான் வரேன்…“ என்கிறான் கிருஷ்ணன். “ஹி ஹி இளிப்பு தன்னால வருது.“
“எனக்கு இளிப்பு வரல்ல. ஆத்திரம்தான் வருது.“
“நீதான் எனக்குப் பொருத்தமான ஜோடி கிருஷ்ணவேணி… ஏன் சார் அப்பிடித்தானே?“
“ஒண்ணு ஜாடி. ஒண்ணு மூடி… பொருத்தம் தான்“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“என்ன சார் இப்பிடிச் சொல்றீங்க?“ என்கிறாள் கிருஷ்ணவேணி. காபி டம்ளரைக் கீழே நங்கென்று வைக்கிறாள். “இந்த ஆள் கிட்ட என்ன இருக்குன்னு இவனை நான் காதலிக்கணும்ன்றான்…“
“நல்ல பையன்ம்மா. அப்பாவி. வாயில விரல் விட்டா கடிக்கக் கூடத் தெரியாத குழந்தை மனசு அவனுக்கு.“
“குழந்தைன்னால் லாலி பாப் வாங்கிக் குடுங்க. இவன்… கல்யாணம்ன்றான்.“
“பால்ய விவாகம் தப்புன்னு அரசாங்கத்தில் சட்டமே இருக்கு கிருஷ்ணா“ என்று அவன் பக்கம் திரும்புகிறான் ராமசாமி. “காபி எப்பிடி கிருஷ்ணவேணி?“ என அவள் பக்கம் திரும்புகிறான்.
“ஓ.கே.“
“நீ கிருஷ்ணா கபே காபியின் ரசிகை. அவனும்…“ என திரும்பி கிருஷ்ணனைப் பார்க்கிறான். “ஆகா என்ன பொருத்தம்…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அதுக்காகத்தான் இவ்ள நேரம் இருந்தேன்னு பார்த்தீங்களா?“ என்று ராமசாமியிடம் திரும்புகிறாள். “இந்தாளுக்கு வெட்கமே கிடையாது சார். உன்னை எனக்குப் பிடிக்கலன்னு முகத்தில் அடிச்சாப்ல சொல்லிட்டேன்… பல தடவை சொல்லிட்டேன். அப்ப கூட என் பின்னாலயே சுத்தறான் சார். இன்னிக்கு உங்க முன்னால இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு தான் சார் நான் பார்க்கிறேன்..“
“அப்டில்லாம் கோபமா பேசக் கூடாது. கிருஷ்ணன் கிட்ட சிகெரெட்னோ மதுன்னோ எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை…“ என்கிறான் ராமசாமி.
“புண்ணியவதி. அப்பிடி எந்தப் பழக்கத்தையும் உண்டாக்கி விட்டுறாதே…“ என்கிறான் கிருஷ்ணன்.
“இதுதான் இவர்கிட்ட. எதுக்கெடுத்தாலும் மிரட்டறது. இப்பிடியே தற்கொலை அது இதுன்னு மிரட்டறார் சார்.“
“நீ மறுத்தால், எனை வெறுத்தால்… எனக்கு அது தான் ஏமாற்றம். அதுக்கு இதுதான் முடிவு. இதில் மாற்றம் இல்லை“ என்கிறான் கிருஷ்ணன்.
“ரைமிங்கா?“
“ஆமாம் சார்“ என சிரிக்கிறான் கிருஷ்ணன். “தற்கொலை. போய்த் தொலை… அது கூட ரைமிங் தான்…‘ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“இதுவரை எத்தனை தரம் இப்பிடி உன்னை மிரட்டினான்?“
“ஒருதடவை என்னை வழி மறிச்சார். ஒரு கையில் தாலிக் கயிறு. அடுத்த கையில் தாம்புக் கயிறு… இதுன்னா உனக்குன்னு தாலிக் கயிறைக் காட்டறார். நீ மறுத்தால்… இது, தாம்புக் கயிறு… இது எனக்கு…ன்னு என்னை மிரட்டறார்.“
ராமசாமி சிரிக்கிறான். “நீ என்ன பண்ணினே?“
“சரி. இது எனக்குன்னு… நான் தாம்புக் கயிறை வாங்கிக் கிட்டேன்…“.
“பேசாமல் இவனைக் கல்யாணம் பண்ணிக்கோ… ரெண்டும் ஒண்ணுதான்.“ ராமசாமி சிரிக்கிறான். “ரெண்டு பேருமே விட்டுக் குடுக்கறாப்ல இல்லை.“
“சார். இவரை நம்பாதீங்க. உங்களுக்கு வேற வேலை இருந்தால் பாருங்க. இந்தாளை நான் சமாளிச்சிப்பேன்…“ எழுந்து கொள்கிறாள். “அட உட்காரும்மா“ என அவளை அமர்த்துகிறான் ராமசாமி. “பேசாமல் அவளை மறந்துரு கிருஷ்ணா. அவள் தான் தெளிவா சொல்லிட்டாளே?“
சட்டென அழுகை பொங்க எழுந்து கொள்கிறான் கிருஷ்ணன். “எனக்கு தற்கொலை தவிர வேற வழி இல்லை.“
“பைல பேரு  PHOTO லாம் எடுத்து வெச்சிருக்கியா கிருஷ்ணா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“என்னது?“
“நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் போடணுமே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“ஓ அதுவா? இருக்கு சார். எப்பவுமே தயாரா அது இருக்கும் சார்.“
“எப்பவுமே சாகத் தயாரா இருக்கே. வாழத் தயாரா இருக்கக் கூடாதா கிருஷ்ணா?“
“ஒரு தடவை இவர் தற்கொலை பண்ணிக்கறதுக்குள்ள பத்து பேரை சாவடிச்சிருவார்…“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“கொஞ்சம் டைம் குடு கிருஷ்ணா… அப்பிடியே விரைப்பா நின்னால் எப்பிடி?“ என்கிறான் ராமசாமி.
“இந்தாளு சாகாது சார். நமக்கு தான் வேலை கெட்டுப் போகும். நான் கிளம்பறேன் சார். உங்களைப் பாத்ததுல சந்தோஷம்“ என்கிறாள்.
“என்னைப் பாத்ததுல?“ என இளிக்கிறான் கிருஷ்ணன். “சீச்சீ“ என தலையை உலுக்கிக் கொண்டு அவள் போகிறாள். “எனக்கு நேரம் ஆயிட்டது சார். முதலாளி திட்டுவார்…“
“சாரி.“
“பரவால்ல“ என்றுவிட்டு அவள் போகிறாள். அவள் தாண்டிச் செல்கையில் கிருஷ்ணன் மெல்ல அவளைப் பார்க்க ஈர்க்கப் பட்டாப் போல சரிகிறான். விலுக்கென்று நொடித்தபடி அவள் போகிறாள். “கழுத்து சுளுக்கிக்கப் போகுதுடி“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
அவள் போய்விட்டாள். அவள் எழுந்து போன நாற்காலியில் ஒரு சிறு மல்லிகைப் பூ. உதிர்ந்து கிடக்கிறது. “ஆகா“ என எழுந்து போய் அதை கிருஷணன் கையில் எடுத்து முகர்கிறான். திரும்பி “கிருஷ்ணவேணி வாசனை“ என்கிறான்.
“ரொம்ப பித்து பிடிச்சி அலையிறே கிருஷ்ணா…“
“ஆமா சார்“ என இளிக்கிறான். “ஆனால்…“ என நிறுத்துகிறான் ராமசாமி. அவன் முகம் மாறுகிறது. “ஏன் சார்?“
“அவ எத்தனை பொறுப்பா இருக்கா. வீடு பத்தி, அப்பா பத்தி அவளுக்கு எத்தனை ஒட்டுதல். தம்பி மேல எத்தனை கரிசனம்…“
கிருஷ்ணன் அவனைப் பார்க்கிறான். “அதுல எதுவுமே உன்கிட்ட இல்லையே? அவளுக்கு உன்னை எப்பிடிப் பிடிக்கும் கிருஷ்ணா?“
“சார். என்ன சார் இப்பிடிச் சொல்றீங்க? நான் உங்களைத் தான் சார் நம்பி யிருக்கேன்…“
“அவள் உன்னை நம்பலியே கிருஷ்ணா?“ அவன் முகம் அழுகிறாப் போல மாறுகிறது. திரும்ப எழுந்து கொள்ளப் போனவனை அமர்த்துகிறான். “இங்க பாரு. அவள் உன்கிட்ட பிரியமா இல்லை… அப்டின்னும் சொல்ல முடியாது.“
“எதை வெச்சிச் சொல்றீங்க?“ என்கிறான் சிரிப்புடன்.
“லேசா அவள் மனசில் ஒரு மாற்றம் வந்திருக்கறா மாதிரித் தெரியுது…“
“அப்படியா சார்?“
“கவனிச்சியா? வந்த வேகத்துல அவன் இவன்னு ஆரம்பிச்சாள் கோபமா. தன்னைப் போல அவர்னு மாத்திக்கிட்டா. கோபமும் மெல்ல அடங்கினா மாதிரித் தெரிஞ்சது…“
“அப்பிடியா சார்? சொல்லுங்க சொல்லுங்க.“
“ஆனால் நீ அவசரப் படக் கூடாது கிருஷ்ணா…“
“இனிமே என்ன சார், எதுக்கு சார் காத்திருக்கணும்? ஒரே வாரம் சார். அதுக்குள்ள அவள் வந்து, அவளே வந்து  I LOVE YOU சொல்லணும் சார்.“
“அது நடக்காது கிருஷ்ணா.“
“நடக்கணும் சார்“ என்கிறான் அழுத்தமாய். “அதுக்கு…“ என அவன் ராமசமியின் கையைப் பிடித்துக் கொள்கிறான். “உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்…“
“எனக்கு தலை சுத்துது கிருஷ்ணா.“
“ஒரு வாரம் சார்…“ என எழுந்து கொள்கிறான் கிருஷ்ணன்.
“இல்லாட்டி?“
“திரும்ப நீங்க என்னைப் பார்க்க மாட்டீங்க. நானும் வந்து உங்களைப் பார்க்க மாட்டேன்…“
“உட்காரு கிருஷ்ணா…“
“நான் வரேன் சார்“ என எழுந்து போகிறான் கிருஷ்ணன். சர்வர் பில் கொண்டு வருகிறான். “மோசமான குதிரை சார இவன்.“
“அப்பிடின்னா?“
“கொள்ளுன்னா வாயைத் திறக்கும். கடிவாளம்னா கப்புனு மூடிக்கும்…“ என சிரிக்கிறான் சர்வர். “பில் நான் எடுத்திட்டு வர்றதைப் பாத்திட்டு எழுந்து போகிறான் சார்.“
 * * *
தொ ட ர் கி றே ன்
91 97899 87842
For bulk chapters pls visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment