Monday, August 31, 2015

நாவல் அத்தியாயம் 11

திரைப்பட வியூகத்தில் வளரும் நாவல்
அத்தியாயம் 11

வ சி க ர ப் 
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
ஷுட்டிங் ஸ்பாட். பேய்ப்படம் ஒன்று எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தி இருள் சூழும் நேரம். சிகாமணி முதல் நாள் வேலைக்கு வந்திருக்கிறான். தயாரிப்பாளர் தவிர வேறு யாரும் தெரிந்த முகம் இல்லை. மனம் நிறைய மகிழ்ச்சி. “வணக்கம் சார்,“ என்கிறான் தயாரிப்பாளரிடம். தலையாட்டுகிறார்.
“இந்தப் படத்தின் கதை என்ன சார்?“
“பேய்ப்படம் தம்பி.“
“செலவு மிச்சம் சார்.“
“ஏன்?“
“கதாநாயகிக்கு மேக் அப்பே போட வேண்டாம்.“
தயாரிப்பாளர் முகம் மாறுகிறது. “ஜோக் சார்“‘ என்கிறான் சுதாரித்து. தலையாட்டுகிறார். பக்கத்தில் கதாநாயகிக்கு மேக் அப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளைப் பார்க்கிறான். “கதாநாயகிக்கு மேக் அப் வேணாம். பேய்க்குதான் தேவை“ என சிரிக்கிறான். அவள் அதை ரசிக்கவில்லை.
“என்ன சொன்னாலும் இவங்க சிரிக்க மாட்டாங்களா?“
“அவங்களுக்குத் தமிழே தெரியாதுய்யா…
“இவங்க கதநாயகியா பேயா?“ என அங்கிருந்த மற்றொரு உதவி இயக்குநரிடம் விசாரிக்கிறான். “கொஞ்ச நேரம் பேசாமல் இருய்யா…“ என்கிறான் அவன்.
படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. கதாநாயகி வீடு செட்.
ஸ்டார்ட். கேமெரா. ரோலிங். ஆக்ஷன்…
ஜன்னல் கதவு படபடக்கிறது. வெளியே இருந்து ஒரு ராட்சச விசிறி சுழல ஆரம்பிக்கிறது. ஊய்யென்று காற்று. ஜல் ஜல் என்று சலங்கை ஒலி கேட்கிறது. ஜன்னல் வழியே ஒரு வெள்ளைத் துணி அசைவதைப்போல பேய்… அடுத்த காட்சி. கதாநாயகி பயத்துடன் ஜன்னலைப் பார்க்கிறாள். காமெரா மெல்ல அவளை நோக்கி வருகிறது.
“கட் கட்“ என்று சிகாமணி கத்துகிறான். சட்டென விளக்குகள் எரிகின்றன. “என்னாச்சி?“ என இயக்குநர் திரும்பிப் பார்க்கிறார். கதாநாயகி “நல்லா பண்ணினேன். இப்ப அடுத்த டேக் போணும் போல“ என முணுமுணுக்கிறாள்.
“ஜல் ஜல்னு சலங்கை ஒலி போட்டீங்களே?“
“ஆமாம்.“
“பேய்க்குக் கால் கிடையாதே? சலங்கையை எப்படிக் கட்டிக்கும் சார்?“

“அட யாராவது கட்டி விட்டுட்டுப் போறாங்க“

“அதில்லை சார். அதுக்குக் காலே இல்லியே? சலங்கையை எங்க கட்டிக்கும்?“
இயக்குநர் தலையில் அடித்துக் கொள்கிறார். “அட அது எஃபெக்ட்டுக்குய்யா. அப்பதான் காட்சில திகிலைக் கிளப்ப முடியும்…“
“சலங்கை கட்டிய பேய் தரையில் நடக்காமல், ஜன்னல் வழியே உள்ள வருதே சார்… அதுவும் சரியான்னு… ஒரு சந்தேகம் சார்.“
“எடுக்கறதே பேய்ப் படம். அதுல லாஜிக் வேறயா?“ என்கிறார் இயக்குநர்.
“நம்ப முடியாத கதையைக் கூட நம்பறா மாதிரிச் சொல்லணும். அதானே சார் சினிமா.“
“யார் இந்தாளை உள்ள விட்டது?“ என அவர் தயாரிப்பாரைக் கேட்கிறார்.
“நான் பேய். எனனை யாரும் உள்ளே விட வேண்டியது இல்லை…“ என்றபடி கதாநாயகியைப் பார்ககிறான். “எனக்குப் பேயைப் பார்த்துக் கூட பயமா இல்லை. இவங்களைப் பார்த்துதான் பயமா இருக்கு…“ என வெளியேறுகிறான்.
வங்கி. மேனேஜர் ராமகிருஷ்ணன். நிகழ்காலம். “இருப்பேன். இருப்பேன். எப்ப வரீங்க? கண்டிப்பா இருப்பேன். சார். நீங்க டெபாசிட் பண்ண வரேன்றீங்க. நீங்கதான் சார் எங்களுக்குக் கடவுள்… வாங்க வாங்க“ என்றபடி தொலைபேசியை வைக்கிறார்.
ராமசாமியை அழைக்கிறார். “என்ன சார்?“ என்றபடியே உள்ளே வருகிறான்.
“ஒரு உபகாரம். ஆஃப் கோர்ஸ் நாட் அஃபிசியல்…“ என்கிறார்.
“சொல்லுங்க சார். அதைப் பத்தி என்ன?
“என் பையன். எட்டாங் கிளாஸ். ஒரு பிராஜக்ட்.“
“படம் கிடம் வரையணுமா சார்?“
“புரிஞ்சிக்கிட்டே தேங்க் யூ.“
“நான் வரைவேன்னு யார் சார் சொன்னா?“
“உன் ஒய்ஃபும் என் ஒய்ஃபும் கோவில்ல சந்திச்சிப் பேசிக் கிட்டபோது உன் ஒய்ஃப் தான் சொல்லிப் பெருமைப் பட்டுக்கிட்டா போலருக்கு…“
“எல்லாருக்கும் ஹீரோ ஆன அந்த ஆஞ்சநேயர் எனக்கு வில்லனா ஆயிட்டாரே…“ என் சிரிக்கிறான் ராமசாமி. “செஞ்சி தர்றேன் சார்.“
உள்ளே ரமேஷும் ராமசாமியும் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பியூன் கிளியரிங் செக்குகளை டிராப் பாக்சில் இருந்து எடுத்து ஒரு ட்ரேயில் போட்டு ஒரு கம்பியூட்டர் பக்கம் எடுத்து வைத்துவிட்டுப் போகிறான்.
மதிய இடைவேளை. அவரவர் உணவு டப்பாக்களைப் பிரிக்கிறார்கள். “உங்க அப்பாவுக்கு எப்பிடி இருக்கு ரமேஷ்?“
“எழுந்து நடக்கவே இப்பவெல்லாம் முடியல. யாராவது கூட உதவிக்கு வேண்டியிருக்கு. பாத்ரூம் வரை போகக் கூட என் தோளைப் பிடிச்சிக்கிட்டே போயிட்டு வராரு…“
“ச். பாவம்.“
“என்ன உதவின்னாலும் நான் வர்ற வரை காத்திட்டிருக்காரு. அண்ணன் கிட்ட கேட்க மாட்டாரு.“
“உங்க அண்ணன்… எப்ப அவர் சாகப் போறார்னு எதிர்பாத்திட்டிருக்கானா?“
“அவன் அப்பா இருக்கிற அறைப் பக்கமே வர்றது இல்லை. எனக்கென்னமோ அப்பா இருக்கற போதே இந்த வீடடை விலை பேசி வித்திறலாம்னு அவன் என்னவோ பிளான்ல இருக்கிறாப் போல இருக்குடா.“
“நீ தான் உஷாரா இருக்கணும். அப்பாவை அவன் கட்டாயப் படுத்தி மிரட்டிக் கூட எதையாவது செய்திருவான்… அவனே அவருக்குப் பாதி வியாதிடா. என்னைக்கேட்டால் அவனை நம்பி அவரைத் தனியா விட்டுட்டு நீ ஆபிஸ் வர்றதே கூட ரிஸ்க்தான்.“
“நான் என்ன பண்ணட்டும் சொல்லு. அண்ணனை எதிர்த்துப் பேசிப் பழக்கமே கிடையாது எனக்கு…“ என்றவன், “என் கதையை விடுறா. அதுக்கு முடிவே கிடையாது. உன் கதை பேசு. இப்ப எப்பிடி இருக்கு?“
“எது?“
“என்னன்னு நீதான் சொல்லணும். அடிக்கடி லீவு போடறே. எங்க போறே எங்க வர்றேன்னு தெரியல. உன் மனைவிக்குக் கூடத் தெரியாது இல்லியா?“
ராமசாமி புன்னகை செய்கிறான். “முந்தா நேத்து ஒரு வழியா அவ கிட்ட மாட்டிக்கிட்டேன். அவள் பாங்க்குக்கு போன் பண்ணியிருக்கிறாள். நம்ம மேனேஜர் தான் எடுத்தார் போல…“
“ஓகோ.“
“வேலைக்கே வரல்லன்னு சொல்லிட்டார்.“
“மாட்டினியா?“
“பெரிசா ஒண்ணும் மாட்டல. நேத்து ரொம்ப உடம்ப அசத்திட்டது. நான் காலை ஒன்பது மணி வரை அடிச்சிப் போட்டாப் போல தூங்கியிருக்கேன். இவளே எனக்கு லீவு சொல்லிட்டா.“
“ஆமாம். அந்த போனை நான் தான் எடுத்தேன். சரிடா. லீவு போட்டுட்டு என்ன பண்றே? எங்க போறே? சின்ன வீடு எதும் செட் அப் பண்ணிட்டியா?“ என்று சிரிக்கிறான்.
“சொல்லவா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “லீவு போட்டுட்டு எங்க போறேன்னு தானே கேட்டே இங்க தான் வரேன்.“
“இங்க தான்னா?“
“இங்க. நம்ம ஆபிசுக்கு…“
“அப்ப எப்பிடி லீவுன்றே?“
“அதான் கூத்துன்றது.“
“வந்து என்ன பண்றே?“
“வேலை பார்க்கிறேன்…“
“வேலையா?‘ என்ன வேலை?“
“இதே வேலை. டிராஃப்ட் எழுதறது. எட்செட்ரா.“
“உன்கூட இதுதான் சங்கடம். நீ பேச ஆரம்பிச்சால் உண்மையாப் பேசிறியா டூப் விடறியான்னே தெரிய மாட்டேங்குது.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “நான் உண்மை பேசினால் யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. நான் பேசற உண்மைதான் குழப்பமா இருக்கு எல்லாருக்கும். அதுனால, என் சஸ்பென்ஸ் என் கூடவே இருக்கட்டும். சரியா?“
“உன் சஸ்பென்ஸ் நாசமாப் போக…“ என்கிறான் ரமேஷ். “சரி. நீ லீவு போட்டுட்டு இங்கியே வரே, வந்து வேலை பாக்கறே…“
“ஆமாம்.“
“அப்ப நான்?“
“நீ லீவு போடாமலேயே இங்க வேலைக்கு வரே. வேலை பாக்கறே…“
“ஆனால் நான் உன்னை பார்க்கறதே இல்லியா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “நாமளே புரிய வைக்கிறதை விட, அவங்களே புரிஞ்சிக்க வாய்ப்பு தரலாம். அதான் இப்பத்திய என் பாலிசி…“ என்றவன், “அவ்ளதான். வேற வழி இல்லை.“ ராமசாமி எழுந்து கொண்டு கை கழுவுகிறான்.
“என் மனைவி லேசா என்னை நம்ப ஆரம்பிச்சிட்டதாத் தெரியுது…“
அப்போது அவன் அலைபேசியில் அழைப்பு. திலகா தான். “இப்பதான் சொன்னேன். அதுக்குள்ள அவளுக்கு மூக்கு வேர்த்திட்டது போல. நான் வேலைக்கு வந்திருக்கேனான்னு சந்தேகமா?“ என சிரிக்கிறான். “என்ன திலக்?“
“உங்க தங்கை வந்திருக்கா.“
“மாதுரியா? குடு குடு…“
“தங்கைன்னா துடிக்குதோ?“ என்று திலகாவின் குரல். பிறகு சிறிது மௌனம். “அண்ணா?“ என்று மாதுரி.
“எப்பிடி இருக்கே மாது?“
“நல்லா இருக்கேண்ணா. நீ எப்பிடி இருக்கே?“
“ஜஸ்ட் புல்லிங் ஆன்…  உன் வீட்டுக்காரர் எப்பிடி இருக்கிறார்? குட்டி… எப்பிடி இருக்கு?“
“அவளுக்குதான் லேசா ஜுரம். சளிக்கட்டு போல இருக்கு. அப்பறம் அண்ணா? அவளுக்குதான் பேபி ஃபுட் இப்ப படு டிமாண்டா இருக்கு. எங்கயுமே கிடைக்கல்ல…“
“என்ன பேபி ஃபுட் குடுக்கறே?“
“ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“நான் இங்க கேட்டுப் பார்க்கறேன்…‘ சாய்ந்தரமா வாங்கிண்டு வரேன். இருப்பே இல்லியா?“
“இருப்பேன். இருப்பேன். நீ எக்ஸ்ட்ரா வேலை அது இதுன்னு தாமதம் ஆக்கிறாதே? அதுக்குதான் நான் வந்திருக்கேன்னு தகவல் சொன்னேன்…“
“சரி. சரி“ என அழைப்பைத் துண்டிக்கிறான்.
மாலை அலுவலகம் விட்டு வந்ததும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கடை கடையாக விசாரிக்கிறான்.
“வாங்க சார் வாங்க வாங்க…“ என அழைக்கிறான் ஒரு கடைக்காரன். “நம்ம கடையில இல்லாத ஐட்டமே இல்லை சார்.“
“ரொம்ப சந்தோஷம். ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“அடடா“ என்கிறான் கடைக்காரன். “இப்ப பேபி ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாமே டிமாண்டு சார்…“
“எப்ப வரும்?“
“தெரியல சார். ஆர்டர் குடுத்திருக்கோம். நாலு நாள் ஆச்சி. இன்னும் வரல்ல. எங்கயுமே கிடைக்கல்லியே. இல்லாட்டி நாங்க கஸ்டமரை விட மாட்டோம். நாங்களே பையனை அனுப்பி வாங்கிக் கைல குடுத்துருவோம். வேற எதாவது வேணுமா சார்?“
“இல்ல வேணாம்…“ என்றபடி வெளியே வருகிறான்.
இரவு. அலுப்புடன் வீடு திரும்புகிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருக்கிறான். “அண்ணா வந்தாச்சி“ என உள்ளே யிருந்து குரல். “வந்து சிரிப்புடன் கதவைத் திறக்கிறாள் மாதுரி. “எப்பிடி இருக்கே அண்ணா? சிக்கிரம் வந்துருவேன்னு பார்த்தேன்… எட்டு மணி ஆயிட்டதே?“
“ஹா“ என்றபடி உள்ளே வருதல். “உனக்காகத்தான் அலைஞ்சிட்டு வரேன். எங்கயுமே கிடைக்கல்ல.“
“என்ன?“
“பேபி ஃபுட்.“
“எங்கிட்டயும் ஸ்டாக் தீரப் போறது. இன்னும் ஒருநாள் வரும் அவ்ளதான்.“
திலகா “காபி?“ என்கிறாள். பிறகு அவளே மாதுரியிடம் “இவர் காபிக்கு மாத்திரம் எப்பவும் நோ சொல்றதே இல்லை“ என புன்னகை செய்கிறாள்.
சட்டென பிரகாசமாகி எழுந்து கொள்கிறான் ராமசாமி. “நோ“ என்கிறான்.
“என்ன நோ?“
“காபிக்கு நோ.…“ என விறுவிறுவென்று வெளியேறுகிறான். “என்னாச்சி?“
“டின்னோட வர்றேன்…“ என வெளியே போகிறான்.
“அட எங்க போறான் இப்போ? காலைல பாத்துக்கக் கூடாதா?“ என்கிறாள் மாதுரி.
லிஃப்ட். மைனஸ் 1 காட்டுகிறது. வெளியே வந்து விறுவிறுவென்று நடக்கிறான்., முன்பு விசாரித்த அதே கடை.
“வாங்க வாங்க“ என்கிறான் கடைக்காரன். வேறு உடை. “நம்மட்ட இல்லாத ஐட்டமே இல்லை சார்“ என புன்னகை செய்கிறான். “பையா சாரை கவனி?“
“என்ன வேணும் சார்?“ என ஒரு பையன் அவன் பக்கமாக வந்து நிற்கிறான்.
“ஃபேரக்ஸ் வெ4டபிள்.“
“எத்தனை வேணும் சார்?“
“ரெண்டு.“
வீடு. உற்சாகமாக “இந்தா“ என தங்கையிடம் நீட்டுகிறான். அவள் ஆச்சர்யத்துடன் வாங்கிக் கொள்கிறாள். “நானும் அண்ணியும் தேடாத கடை இல்லை. ஏறி இறங்காத இடம் இல்லை. உனக்கு மாத்திரம் எப்பிடி கிடைச்சது?“
“நீங்க எந்தக் கடையில் கேட்டீங்க?“
“நீங்க எந்தக் கடையில வாங்கினீங்க?“ என்று கேட்டாள் திலகா.
“பால்ராஜ் ஸ்டோர்ஸ்.“
“நாங்க அங்கயும் கேட்டோமே…“ எனறாள் மாதுரி. “ஒருவேளை அண்ணா பாங்க் அது இதுன்னு மஸ்கா பண்ணி வாங்கிட்டு வந்துட்டானா?“
சிரிக்கிறான் ராமசாமி. மாதுரி டின்னைத் தலைகீழாகக் கவிழ்த்துப் பிடித்து எக்ஸ்பிரி டேட் பார்க்கிறாள். “எக்ஸ்பிரி டேட். நானே பாத்துதான் வாங்கினேன்“ என்கிறான் ராமசாமி.
‘மாதுரி மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை நகர்த்தி விட்டு எழுந்து உள்ளே போகிறாள். “எப்பிடிங்க?“ என்று கேட்கிறாள் திலகா. “எனக்கு என்ன தோணுதுன்னால்…“
“அதே தான்“ என்கிறான் ராமசாமி.
“ஆனால்…“ என்கிறாள் திலகா. சிரிக்கிறார்கள்.
·       

தொடர்கிறேன்

91 97899 87842

No comments:

Post a Comment