Monday, September 21, 2015

அத். 31 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல

UPDATED EVERYDAY

வ சி க ர ப் 
பொ ய் க ள்

எஸ். சங்கரநாராயணன்


அத்தியாயம் 31

நான்கு சந்துகள் பிரிகிற நடு இடம் அது. ரௌடி ஒரு யோசனையின் தீவிரத்துடன் நிற்கிறான். கை தன்னைப் போல மீசையை முறுக்குகிறது. தாடியைத் தடவுகிறது. அவன் கூட ஒரு அடியாள். அங்கே யிருந்தே தூரத்தில் தெரிகிறது கிருஷ்ணா கபே வாசல். சனங்கள் நடமாட்டம். உள்ளே போகிறார்கள். காபி அருந்திவிட்டு வெளியே வருகிறார்கள். ரௌடி காத்திருக்கிறான். வேறு எங்கெல்லாமோ தேடி அவன் கண் துறுதுறுவென்று அலைகிறது. கிருஷ்ணா கபே வாசல். ராமசாமியும் சிலரும் வெளியே வருகிறார்கள். அவனைப் பார்த்ததும் சட்டென ரௌடியின் கண்கள் விளக்கேற்றிக் கொள்கின்றன. கூட இருக்கும் அடியாள். “என்னண்ணே?“ என்கிறான்.
“கண்டு பிடிச்சிட்டேன்…“
“அதே ஆள் தானா?“
“சந்தேகமே இல்லை.“
“இந்த தடவை விட்டுறக் கூடாது அண்ணே.“
“டேய் மணி… நீ இந்தப் பக்கத்துக்குத் தெருவுக்குப் போ. ஆளைக் கண்டுக்கிட்டியா?“
“கண்டுக்கிட்டேன் அண்ணே.“
“யாரு?“
“அந்த… கோடு போட்ட சட்டை…“
ராமசாமி கோடு போட்ட சட்டை அணிந்திருக்கிறான்.
“கரெக்ட்டு. நீ அடுத்த தெருப் பக்கமா ஜாக்கிரதையா இரு. ஒருவேளை நான் நேத்தி மாதிரி அந்தாளை விட்டுட்டால்…“
“அடுத்த தெரு பக்கம் தான் வரும். நான் லபக்குனு மடக்கிக்கறேன் கவலைப் படாதே அண்ணே…“
“ஜுட்…“ என ரௌடி சொல்ல அவனது அடியாள் மணி விறுவிறுவென்று பக்கத்துச் சந்துப் பக்கமாகப் போகிறான். “எதுக்கு இந்த ஆளைத் துரத்துறான் அண்ணன் தெரியல… ஹ்ம். அண்ணனுக்கு இப்பிடி பல வேலைகள்…“
ராமசாமி முதலில் ரௌடியை கவனிக்கவில்லை. திடீரென்று கவனித்து விடுகிறான். அவனுக்கு குப்பென்று ஆகி விடுகிறது. திரும்ப ஹோட்டலுக்குள் நுழைந்து விடுகிறான். அந்த பழக்கமான சர்வர் அவனைப் பார்க்க வருகிறான். “என்ன சார்? எதையாவது விட்டுட்டுப் போயிட்டீங்களா?“
“இல்ல. இங்க டாய்லெட் இருக்கா?“
“ஓ விட்டுட்டுப் போலாம்னு வரீங்க…“
“BAD JOKE. டாய்லெட் எங்க?“
“மாடில சார்…“
“எப்பிடிப் போறது?“
“டாய்லெட் எல்லாரும் எப்பிடிப் போவாங்க? அப்பிடித்தான்.“
“யோவ் நிலமை தெரியாமல் நீ வேற…“
“அவ்ள அவசரமா சார்.“
“விஷயம் அவசரம்.“
“லிஃப்ட் இருக்கு சார்.“
“லிஃப்ட்ல டாய்லெட் போலாமா?“
“இல்ல சார். லிஃப்ட்ல டாய்லெட்டுக்குப் போலாம்…“
“நாக்கு தப்பா சுழட்டி விட்டுட்டது… அது தமிழ் இலக்கணப்படி சரிதான். நாலாம் வேற்றுமைத் தொகை.“
“எனக்கு பில் தொகை தான் சார் தெரியும்.“
“லிஃப்ட் என் வாழ்க்கையில் ரொம்பதான் விளையாடுது.“ ராமசாமி கிறுகிறுவென்று லிஃப்ட்டைப் பார்க்கப் போகிறான். முதல் மாடியை அடைகிறான். லிஃப்ட் கதவைத் திரும்பச் சாத்தாமல் விட்டு விடுகிறான். உள்ளே வெளிச்சமாய் லிஃப்ட் நிற்கிறது. அதை யாரோ கீழே கூப்பிடுகிறார்கள். கிர்ர் என்று பொத்தானை அழுத்தும் சத்தம். அங்கே யிருந்தே ராமசாமி கீழே கடையைப் பார்க்கிறான். அந்த ரௌடி கடையின் உள்ளே வந்து… தேடுவது தெரிகிறது. “ஈஸ்வரா?“ என நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான். சட்டென ரௌடி மாடி பார்க்கத் திரும்புகிறான். ஐயோ, என தலையைக் குனிந்து கொள்கிறான் “நிசம்மாவே டாய்லெட் வந்திரும் போலுக்கேய்யா?“
ரௌடி கீழே ஒரு முறை பார்த்து விட்டு ஆகா… மெல்ல மாடியேறுகிறான்.
ராமசாமி. திரும்ப லிஃப்ட்டுக்குள் புகுந்து தரைத் தளத்துக்குப் போகிறான். கதவைத் திறந்த ஜோரில் ஒரு பெரியவர் அவனை இடித்துக் கொண்டு உள்ளே நழைகிறார். “மேல டாய்லெட் இருக்கா?“ என்று கேட்கிறார்.
பதில் சொல்லாமல் தாண்டி கடைக்கு வெளியே பாய்கிறான் ராமசாமி.
“எனக்கு தான் அவசரம்னால் இவருக்கு என்ன அவசரம்?“ என்றபடி பெரியவர் லிஃப்ட் கதவைச் சாத்துகிறார்.
ரௌடி திரும்ப கீழே வருமுன் காணாமல் போய்விட வேண்டும் என அடுத்த தெருவில் விறுவிறுவென்று நடக்கிறான்.
ரௌடி டாய்லெட் பக்கம் போய்த் தேடுகிறான். டாய்லெட் கதவைத் திறந்து பார்க்கிறான். உள்ளே யாரும் இல்லை. ச்சே, என கையைக் குத்திக் கொள்கிறான். அதற்குள் அந்தப் பெரியவர் அந்தப் பக்கம் வருகிறார். “என்ன?“ என அவனைப் பார்க்கிறார். “டாய்லெட்ல தண்ணி வரல்லியா?“ என்று விசாரிக்கிறார். “அதான் நீயே ஊத்தப் போறியே நயினா?“ என அவன் திரும்ப வெளியே வரும்போது லிஃப்ட்டைப் பார்க்கிறான். தலையாட்டிக் கொள்கிறான். விறுவிறுவென்று வாசலுக்கு வந்து தேடுகிறான்.
ராமசாமி பக்கத்துச் சந்தில் நடக்கிறான். அவனுடன் இன்னொரு கோடு போட்ட சட்டைக்காரன். ரௌடியின் அடியாள் மணி காத்திருக்கிறான். ராமசாமியைப் பார்த்ததும் சட்டென அவன் சுதாரித்தாப் போலத் தெரிகிறது. கவனிக்காமல் ராமசாமி அவன் மேலேயே மோதிக் கொள்கிறான். மணியோ ராமசாமியை விட்டுவிட்டு அந்த அடுத்த கோடு போட்ட சட்டையைக் கண்காணித்தபடியே கூட விறுவிறுவென்று நடக்கிறான். திரும்பிப் பார்த்த அவன் கலவரமாய் நடையில் வேகமெடுக்கிறான். “என்ன நடக்குது இங்க?“ என தன்னையே கேட்டுக் கொள்கிறான். “நடு ரோட்டுல யாரும் லிஃப்ட் கிஃப்ட் வைக்கப்டாதா?“
அவன் பதட்டமாய் சுற்று முற்றும் தேடுகிற பாவனையில் இருப்பதால் ஒருத்தன் நின்று ராமசாமியிடம் “என்ன சார் தேடறீங்க?“ என விசாரிக்கிறான்.
“இல்ல. சட்டைப் பையில் இருந்து பணம்…“
“பணமா?“
“ஆமாம்.“
“கீழ விழுந்திட்டதா சார்?“
“ஆமாம்.“
“பாத்து கவனமா வெச்சிக்கக் கூடாதா சார்?“
“இனிமே கவனமா வெச்சிக்கறேன்…“
“எவ்வளவு சார்?“
“நூ…“ என்று அவன் வாயைத் திறக்குமுன் வந்தவன் வாய் அதைவிடப் பெரிதாய்த் திறக்கிறது. “நூறா?“
“ஐந்நூறு…“ என்கிறான் ராமசாமி.
“என்ன சார் நீங்க. இவ்ளவு அலட்சியமாவா இருப்பீங்க? இந்தக் காத்துல எங்க விழுந்ததோ… லேசா இருட்ட வேற ஆரம்பிச்சிட்டது.“ என அவன் பரபரப்பாகத் தேட ஆரம்பிக்கிறான்.
“தேடுப்பா. கிடைச்சால் என்னாண்ட குடு. கிடைக்காட்டி நீயே வெச்சிக்கோ.“
ராமசாமி விறுவிறுவென்று நடந்து போகிறான். தெரு முனையில் திரும்புகையில் ராமசாமி பார்க்கிறான். பணத்தைத் தேட கும்பல் கூடி விடுகிறது. கூட்டத்தில் யாரோ ஒருத்தன் “எவ்வளவு?“ என்று கேட்க, “ஆயிர ருவ்வா நோட்டு“ என்று யாரோ பதில் சொல்கிறார்கள்.
அப்போது அவசர நடையில் ரௌடி அங்கே வருகிறான். அவனைப் பார்த்ததும் ராமசாமி அங்கே யிருந்து நடக்க ஆரம்பிக்கிறான். ரௌடி விசாரிக்கிறான். “ஒரு கோடு போட்ட சட்டைக்காரர் இந்தப் பக்கமா வந்தாரா?“ எல்லாருமா பணத்தைத் தேடிக் கொண்டு மும்முரமாய் இருக்கிறார்கள். அதில் குனிந்து தேடும் ஒருத்தனின் பர்ஸ் பேன்ட்டின் பின் பாக்கெட்டை விட்டு வெளியே பிதுங்கித் தெரிகிறது. கை துறுதுறுக்க ரௌடி அந்தப் பர்சை லூட் அடிக்கிறான்.
“எவ்வளவு ரூபா காணம்?“
“முழுசா ஆயிர் ரூவா தாளுய்யா…“ என்கிறான் பர்சை இப்போது இழந்த அந்தப் பையன்.
“நிறையத் தாள் இருக்கும் போலருக்கே“ என்கிறான் ரௌடி. “போயித்தான் எண்ணிப் பார்க்கணும்“ என்றபடியே தாண்டிப் போகிறான்.
அதற்குள் பர்சைப் பறி கொடுத்த அந்தப் பயைன் தன் பின் பாக்கெட்டில் பார்த்து விட்டு, “ஐயோ என் பர்சு…“ என அலறுகிறான். “அதையும் சேர்த்துத் தேடுங்கடா முண்டங்களா…“ என்றபடியே ரௌடி போகிறான்.
ராமசாமிக்கு என்ன பண்ண தெரியவில்லை. பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க பயமாய் இருக்கிறது. எந்த பஸ் வந்தாலும் ஏறி விடலாம், என நினைத்துக் கொள்கிறான். பீச் பக்கம் போகிற பஸ் வருகிறது. “ஐயோ அங்க போனால் தலைல அடி விழும்…“ என தலையைத் தடவிப் பார்த்துக் கொள்கிறான். அதற்குள் ரெளடி வருவதைப் பார்த்து விடுகிறான். சட்டென பஸ்சில் தாவி யேறுகிறான். ரௌடி பஸ்சுக்கு ஓடி வருகிறான். அவன் ஓடும் வண்டியில் பாய்ந்து ஏறுகிறான். ராமசாமி முன் வழியாக பாய்ந்து இறங்குகிறான். ரௌடி இறங்குமுன் பஸ் வேகம் எடுத்து விடுகிறது. பஸ் வாசல் பக்கம் இருந்து ரௌடி எட்டிப் பார்க்கிறான். டாடா… என்று கையசைக்கிறான் ராமசாமி. “தாதா உனக்கு டாடா.“
அப்பாடா, என பஸ் நிறுத்தத்துக்குத் திரும்ப வந்து உட்கார்ந்து ஆசுவாசப் படுகிறான். ‘யாரு இவன்? எதுக்கு என்னை விரட்டறான்? ஒரு இழவும் புரியல்லியேய்யா?“ என்கிறான்.
சர்ர்ரென்று ஒரு ஆட்டோ வந்து அவன் முன்னால் நிற்கிறது. அதில் இருந்து ரௌடி இறங்குகிறான். பதறிப்போய் எழுந்து நிற்கிறான் ராமசாமி. “நான் வெச்ச குறி தப்பாது… ஹா ஹா“ என சிரிக்கிறான் ரௌடி. “பயமா இருக்கா சார்?“
“உன்னைப் பார்க்கப்…பரவாயில்லை. உன் சிரிப்பு தான் பயமா இருக்கு.“
ஆட்டோ போய் விடுகிறது.
“த பார். நான் பிள்ளைக் குட்டிக் காரன்…“
“எத்தனை பிள்ளை எத்தனை குட்டி?“
“உனக்கு என்ன வேணும் சொல்லு. என்கிட்ட இப்ப பணம் இல்லை. உனக்கு வேணுன்னால் பேங்க்ல லோன் போட்டு தான் உனக்கு எடுத்துத் தரணும்.“
“பணமா. ஹா ஹா“
“இப்பதானே சிரிக்காதேன்னேன்?“
“எனக்கு நீ தான் சார் வேணும்… நீ சாதாரண ஆள் இல்ல.“
“பார்க்க விநோதமா இருக்கேனா?“
“தெய்வம் சார் நீ. தெய்வம்… என்னோட தெய்வம்.“ ரௌடி நெகிழ்கிறான். அப்படியே ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டு கலங்குகிறான். “அன்னிக்கு….“
“என்னிக்கு?“
“நீ மட்டும் அந்த சமயத்தில் பீச்சுக்கு வந்திருக்கா விட்டால் …“
“எனக்கு அடி பட்டிருக்காது.“
“அது உனக்கு விழ வேண்டிய அடி இல்ல அய்யா.“
“அது உனக்கும் தெரியுமா?“
“எனக்கு விழ வேண்டிய அடி அய்யா அது…“
“ஓ கதை அப்பிடிப் போவுதா?“ என ராமசாமி சிரிக்கிறான்.
“ஆமய்யா. தெய்வம் நீ எனக்கு. என் தங்கமே. தியாகச் செம்மலே…“
“மெழுகுவர்த்தியா உருகறியேய்யா…“
“தபார் இனிமே நாம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. கண்ணுக்குள்ள கண்ணு.“
“மண்ணுக்குள்ள மண்ணா?“
“உனக்கு என்ன உதவின்னாலும் கேளு. என்ன காரியம்னாலும் சொல்லு. நான்… நான் செய்யறேன் தலைவா…“ என நெஞ்சைத் தட்டுகிறான் ரௌடி.
“நீ என்னை ஆளை விட்டால், அதுவே பெரிய உதவி.“
“அப்பிடிச் சொல்லாதே கண்ணு. என்ன உதவியோ… கேளு… கேளு… நான் இருக்கேன்.“
ராமசாமிக்கு வேடிக்கையாய் இருக்கிறது. “உன் பேர் என்ன?“
“கனி. சின்னக்கனி. கேட்டியா? நீ அவசியம் என்னாண்ட வரணும்…“ என்கிறான். “நீ வராட்டி கூட நான் உன் கூடவே இருப்பேன்.“
“வராட்டி எரு… எனக்கு ஒரு உதவியும் வேணாம் கனி.“
“ஆ அப்பிடிச் சொல்லக் கூடாது. யார் நீ?“
“தெய்வம்.“
“கண் கண்ட தெய்வம்… அன்னிக்கு… நல்ல வசம்மா திட்டம் தீட்டியிருக்கானுங்க…“
“உனக்கு யார் எதிரி கனி?“
“நிறையப் பேர் இருக்கான். எப்பவுமே என் தலைக்கு மேல கத்தி தொங்குது.“
“கத்தி இல்ல, சத்தம் இலலாம தொங்குது.“
“என்ன சொல்றே?“
“சும்மா ஜோக். தெரியாத்தனமா உன்னாண்ட ஜோக் அடிச்சிட்டேன்…“
“ஜோக்கா? சரி சரி. ஹா ஹா“ என சிரிக்கிறான்.
“புரியுதோ புரியல்லியோ சிரிச்ச்சிட்டே.“
“பின்னே? யார் நீ? நம்மாள் நீ. இந்த பார்….“
“எனக்கு ஒரு உதவியும் வேணாம் கனி.“
“இப்ப வேணாம். அதை ஒத்துக்கறேன். ஆனால் எதிர்காலத்தில்….“
“அதாவது நிகழ் காலத்தில்…“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. எதிர்காலத்தில்… நான் சரியாத்தானே சொல்கிறேன். தண்ணியடிச்சாலும் நான் நிதானம் தவற மாட்டேன்.“
“நீ தண்டியடிச்சி நிதானமாப் பேசறே. நான் தண்ணி யடிக்காமல் உளர்றேன்… இல்லியா கனி?“
“எதிர்காலத்தில்…“
“சரி எதிர்காலத்தில்…“
“உனக்கு என்ன தேவைன்னாலும் என்னாண்ட வா. நான் நினைச்சால் முடிக்க முடியாத வேலையே கிடையாது. வேலையை முடிப்பேன். ஒத்து வரர்ல்லியா...“
“ஆளையே முடிப்பே. அப்பிடித்தானே கனி?“
“கரெக்ட். எப்பிடிக் கண்டுபிடிச்சே? அதான் என் வேலை…“
“அது சினிமாக்கள்ல பன்ச் டயலாக் இப்பிடி தான் இருக்கும்.“
“தெயவமே… என் தெய்வத்துக்கு ஒரு சின்னப் பரிசு…“
அவன் தன் கழுத்தில் இருந்து ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து ராமசாமி கழுத்தில் போடுகிறான்.
“ஐயோ இதெல்லாம் வேணாம்…“
“இருக்கட்டும் தலைவா.“
“யாராவது என் நகைன்னு சண்டைக்கு வரப் போறாங்க கனி…“
“இது அடகுக்கடைல அடிச்சது… வர மாட்டாங்க. கவலைப் படாதே. இது எனக்கு ரொம்ப ராசி. இதை மாட்டிக்கிட்டதுல இருந்து….“
“நீ மாட்டிக்கிட்டதே இல்லை. அதானே?“
“கரெக்ட்டு“ என ரௌடி ஆச்சர்யப் படுகிறான்.
“பன்ச் டயலாக்“ என்கிறான் ராமசாமி. சிரித்தபடி “கனி, ரெண்டு நாளா ஆளைக் கதி கலங்க அடிச்சிட்டே… சரி. சந்தோஷம். என்னை விட்டுரு…“
“அப்பிடிச் சொல்லாதே கண்ணு. யார் நீ?“
“அதெல்லாம் வேணாம். நீ தப்பிச்சது பத்தி சந்தோஷம்… அவங்க முகம்லாம் எனக்கு ஓரளவு ஞாபகம் இருக்கு கனி.“
“விடப்டாது அவங்களை. தொழில்னு வந்திட்டால்… அது வேற கணக்கு.“
‘கணக்கு எல்லாம் பேசற கனி. நீ எதுவரை படிச்சிருக்கே?“
“கணக்கு வாத்தியாரை மண்டைய ஒடைச்சிட்டுப் பள்ளிக்கூடத்துல இருந்து ஓடி வந்தேன்…“ என்று சிரிக்கிறான் கனி. “அத விடு. நம்ம கணக்கு எல்லாம் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு. அவ்ளதான். கேட்டியா? உனக்கு எதும் தேவையா? எப்ப வேணா எந்த நேரம் வேணா… கேட்டியா? ராத்திரி பன்னெண்டு மணியின்னால கூட நீ என்னைத் தேடி வரலாம்….“
“தேடி வர்றதா?“
“ஆமாம். சைதாப்பேட்டை பக்கம் வா. சண்முகா டாக்கீஸ் தெரியுதா? அந்த ஏரியா பக்கம் வந்தாலே சின்னக்கனின்னா எல்லாருக்கும் தெரியும்.“
“நான் வராட்டி சின்னக்கனின்னா அவங்களுக்குத் தெரியாதா?“
“என்ன பேசற நீ… நீ பேசறது எனக்குப் புரியல.“
“ஜோக்.“
“ஆ ஜோக்கா? இருக்கட்டும் இருக்கட்டும். ஹா ஹா“ என சிரிக்கிறான் சின்னக்கனி.
“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்னு பாட்டு… உன் சிரிப்பில் அது ஞாபகம் வருது கனி.“
“சரி தலைவா. வரட்டா? இன்னிக்கு என் தெய்வத்தைக் கண்டேன்…“
அப்போது சின்னக்கனியின் அடியாள் மணி ஓடி வருகிறான். “அண்ணே நீ இங்கியா இருக்கே?“
“என்ன மணி?“
“ச்சே. எவ்வளவோ முயற்சி பண்ணினேன் அண்ணே. அந்தாளு… தப்பிச்சிட்டாரு.“
“ஏய் என்னடா சொல்றே?“
“அந்தக் கோடு போட்ட சட்டை…“
“நான் இவரைத் தாண்டா தேடினேன்… நீ யாரைப் பார்த்துப் போனியோ. எழவெடுத்தவன்டா நீயி. உனக்குப் பகல்லியே பசமாடு தெரியாது. ராத்திரி எருமைமாட்டை எங்க தேடுவே…“

“அப்ப அந்தாளு பாவம்... இன்னும் ரெண்டு நாள் தூங்க மாட்டான்...“ என்கிறான் மணி.

“நானும் ரெண்டு நாள் பயத்தில் திண்டாடிட்டேன்...“ என்கிறான் ராமசாமி.

“நான் வேணா அடுத்த முறை அவனைப் பார்த்தால் மன்னிப்பு கேட்டுர்றேன் தலைவா...“

“மன்னிப்பா. நீ இன்னொரு தடவை அவன் கிட்ட போனாலே இன்னும் ரெண்டு நாள் தூங்க மாட்டான் அவன்.“ கனி சிரிக்கிறான்.

“நான் இன்னிக்குத் தூங்குவேன்…“ என்கிறான் ராமசாமி.
“சார் தானா?“ என மணி அவரை ஏற இறங்கப் பார்க்கிறான்.
“நான் இவனோட தெய்வம்…“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“கும்பிட்டுக்கோ“ என்கிறான் சின்னக்கனி. “சாருக்கு இனிமே என்ன உதவி வேணாலும்.. என்ன? நாம செஞ்சி குடுக்கோணும்.. கேட்டியா? சார்தான்டா…“ அவனுக்குத் தொண்டை அடைக்கிறது. “அவர் மட்டும் இல்லாட்டி….“
“நீ மட்டும் இல்லாட்டி… எனக்கு அடியே விழுந்துருக்காதே கனி“ என்கிறான் ராமசாமி.
·       

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
storysankar @gmail.com


No comments:

Post a Comment