Thursday, September 3, 2015

எஸ். சங்கரநாராயணன் அத்தியாயம் 14

திரைப்பட வியூகத்தில் 
வளரும் நாவல்

வசிகரப் 
பொய்கள்
அத்தியாய்ம் 14

ராமசாமி வீடு. கடிகாரத்தில் காலை பதினோரு மணி. சிகாமணி நாளிதழைப் புரட்டிக் கெண்டிருக்கிறான்.
மொட்டை மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு திலகா வீட்டுக்குள் வருகிறாள். “உன்னைப் பார்க்க குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கு அக்கா“ என்கிறான் சிகாமணி.
அக்கா சிரிக்கிறாள். “பொம்பளைகளில் குடுகுடுப்பை பஎத்திருக்கியா சிகாமணி?“
”நீதான் ஃபர்ஸ்ட்டு அக்கா“ என்கிறான். சிரிக்கிறார்கள். அப்படியே ரிமோட்டால் தொலைக்காட்சியை ஆன் செய்கிறாள் திலகா.

துவைத்த துணிகளைத் தரையில் அமர்ந்தபடி திலகா மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சிப் பெட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் என்னவோ பேட்டி தந்து கொண்டிருக்கிறார். சிகாமணி கழுத்தைச் சாய்த்து டி.வியைப் பார்த்து விட்டு “மத்திய அரசாங்கத்துக்கு எதிரா ஒரு முதல்வரே தெருவுக்கு வந்து உண்ணாவிரதம் இருக்காரு பாரு அக்கா. இந்த மாதிரிக் கூத்தெல்லாம் நம்ம நாட்ல தான் நடக்கும்“ என்கிறான் சிகாமணி.
“அரசியல்வாதிங்க செய்யற காரியங்களே எது ஸ்டண்ட்டு, எது நிஜக் கவலைன்னே தெரியமாட்டேங்குது…“ என்கிறாள் திலகா.
“அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாத்தியானா அக்கா, வில்லன் மோசமா ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்து அவகிட்ட ஆபாசமா நடந்துக்குவான். அது தப்புன்னு கதாநாயகன் வந்து அவனை மொத்து மொத்துன்னு மொத்துவான். அப்பறம் என்னாகும்? அவனுக்கும் அவளுக்கும் காதல். அது இதைவிட ஆபாசக் கூத்தா இருக்கும்… எல்லா அரசியல்வாதியும் அப்பிடித்தான் நடந்துக்கறாங்க. யார் வில்லன், யார் கதாநாயகன்னே தெரியறது இல்லை. ரெண்டுமே ஒண்ணா இருக்கு.“
“அட என் அறிவுக் கொழுந்தே… என்னமாப் பேசறே நீ?“ என்கிறாள் திலகா.
“தேங்ஸ் அக்கா. ஒரு காபி கிடைக்குமா?“
“உடனே உண்டியலைக் குலுக்கிருவியே…“
“இன்னிக்குப் பேப்பர் படிச்சியே? சுவாரஸ்யமா என்னடா செய்தி?“
“எனக்கு சுவாரஸ்யமான செய்தி உனக்கு சுவாரஸ்யமா இருக்குமான்னு தெரியாது அக்கா“ என்றவன் சட்டென பிரகாசமாகிறான். ஆ இருக்கு அக்கா…“
“என்ன?“
“ராஜஸ்தானில் ஒரு பொண்ணு. திடீர்னு காலைல எழுந்து…“
“காலைல எழுந்துக்கறது ஒரு சுவாரஸ்யமாடா உனக்கு?“
“மொக்கை போடாதே. திடுதிப்னு சொல்லறா, எனக்குப் பூர்வ ஜென்மம் ஞாபகம் வந்திட்டது. என் கணவர் குஜராத்தில் இருக்கிறார். அவர் பெயர் மகேஷ்.“
“ஐயோ.“
“சின்னப் பொண்ணு அக்கா. அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல.“
“இது பூர்வ ஜென்மம்ன்றாளே.“
“அவளைக் கூட்டிக்கிட்டு அவ சொல்கிற முகவரியைத் தேடி அப்பா அம்மா குஜராத்துக்குப் போயிருக்காங்க.“
“அங்க அந்த முகவரி இருக்காமா?“
“இருக்கு.“
“அந்த மகேஷ்?“
“அவர் இன்னும் உயிரோட இருக்கார்.“
“அவருக்கு எவ்வளவு வயசு?“
“எழுபத்திரெண்டு.“
“பதினெட்டு வயசுப் பெண்ணுக்கு எழுபத்திரெண்டு வயதுக் கணவனா?“
“அவரோட மனைவி இறந்து போயி இருபது வருஷம் ஆகுது. அவ பேர் சௌதாமினி…ன்றாரு அவர்.“
“பத்து வயசு வரை சௌதாமினி. அறுபது வயசில் சௌதா மாக்ஸின்னு ஆயிருப்பாளே அவ.“ மடித்த துணிகளை ஒரு முறை பார்த்தபடி எழுந்து கொள்கிறாள். “காபிக்குப் பால் இருந்தால் தர்றேன். ஒராளுக்கு மாத்திரம் வெச்சிருந்தா மாதிரி ஞாபகம்…“
“உனக்கு இல்லாட்டி பரவால்ல அக்கா. எனக்கு மாத்திரம் போடு. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…“ என அவன் சிரிக்க அவள் முறைக்கிறாள்.
அவன் பேசியபடியே கூட வருகிறான். “அந்தப் பொண்ணே கிளம்பும்போது சொன்ன விவரங்கள் சரியா பொருந்தி யிருக்கு அக்கா. அந்தப் பெண்ணே சொல்லியிருக்கு பூர்வ ஜென்மத்தில் என் பேர் சௌதாமினி…“
“அந்த கிராமத்துலயே எல்லாருக்கும் ஆச்சர்யம். அந்தப் பெரியவர்தான் அவளைப் பார்த்து, நீ பூர்வ ஜென்மத்தில் என் மனைவியா இருந்ததை நான் நம்பறேம்மா. இந்த ஜென்மத்தில் நீ வாழ வேண்டிய பொண்ணுன்னு சொல்லி திரும்ப அனுப்பியிருக்காரு.“
“அனுப்பிடடாரா? சொத்துல பங்கு கேட்டா என்ன பண்ணியிருப்பார் தெரியல.“
“என் அடுத்த ஜென்மத்துல வாங்கிக்கோ, அப்டின்னுற வேண்டிதான்…“ என சிகாமணி சிரிக்கிறான்.
“நீ சினிமாவா எடுத்தா இதை எப்பிடி எடுப்பே இவனே?“ டிகாஷனை ஊற்றி பாலை அடுப்பில் வைக்கிறாள்.
“நானா? போன ஜென்மத்தில் என்னை என்ன பாடு படுத்தினே. படவா. இன்னும் சாகாமக் கெடக்கியா நீன்னு சொல்லி….“
அவள் சிரிக்கிறாள். “அதே புருஷன் அடுத்த பிறவிலயும்னா ஒரே போர்டா.“‘
“ஆனால் ஏழு ஜென்மத்திலும் இவரே கணவரா வரணும்னு கோவிலில் வேண்டிக்கறீங்க?“
“அப்பிடி வெளியே சொல்லிக்கறது தான்…“ என சிரிக்கிறாள். “ஆம்பளைங்கன்னா இன்னும் மோசம்…“
“என்ன?“
“இந்த ஜென்மத்திலேயே இன்னொரு மனைவி வேணும்னு அவங்க தேடறாங்க…“
“சரி. அதை விடு. நம்ம அத்தான் விஷயம் என்ன? அவருக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் தான் இருக்குமோ அக்கா?“
“என்ன?“
“அவர் பாட்டுக்கு ரெண்டு வருஷம் முன்னால போறேன்றார். வரேன்றார்…“
“அது…“ எனற்வள் “ஐயோ,“ என பெருஞ் சத்தமாய்த் திரும்பகிறாள். காஸ் அடுப்பில் காபி பொங்கி அத்தனை காபியும் பாத்திரத்துக்கு வெளியே வழிந்து விட்டிருக்கிறது.
“எப்பவுமே அடுப்புல எதையாவது வெச்சிட்டு நீ மறந்திர்றே அக்கா…“ என்கிறான் சிகாமணி.
“எனக்குக் காபி இல்லாமல் பண்ணினே இல்லியா? அதான் கடவுளாப் பாத்து உனக்கு இல்லாமல் பண்ணிட்டார்…“
“சரி. GAS ஸை அணை முதல்ல…“
ஒரு துணியால் அடுப்பைத் துடைக்கிறாள் திலகா. அவன் வெளியே போய்க் காத்திருக்கிறான். தொலைக்காட்சி வெறிதாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அணைக்கிறான். பின்னால் திலகா வருகிறாள்.
“அவர் சொல்றதை நம்பறதா வேணாமான்னு குழப்பா இருக்கு அக்கா.“
“ஒரு குழப்பமும் இல்லை.“
“நம்ப வேணான்றியா?“
“அதிகம் கவலைப் படாமல், அதை நம்பலாம்னு இருக்கு எனக்கு.“
ஆச்சர்யத்துடன் திரும்புகிறான். “என்னாச்சி அக்கா உனக்கு?“
“அவர்கிட்ட நான் கேட்டேன்டா.“
“என்னன்னு?“
“எப்பிடி நீங்க ரெண்டு வருஷம் முன்னாடி போய்வர முடியுதுன்னு கேட்டேன்…“
“அப்ப அதை நீ நம்ப ஆரம்பிச்சாச்சி…“
“நம்பறா மாதிரி விஷயங்கள் நடக்குதுடா. அதை அப்பறமா சொல்றேன் அந்தக் கதையெல்லாம்.“
“இப்ப சொல்லு. எப்பிடி அவர் பழைய காலத்துக்குள்ள நுழையறார்?“
“சொன்னா ஆச்சர்யப்படுவே….“
“சொல்லாமலே ஆச்சர்யமாத்தான் இருக்கு. சொல்லு.“
“நம்ம லிஃப்ட்….“
“அதுக்கு என்ன?“
“அவருக்கு மாத்திரம் அது மைனஸ் 1 காட்டுதுடா.“
“புரியல அக்கா. மைனஸ் ஒண்ணா?“
“நம்ம லிஃப்ட்ல எத்தனை பொத்தான் இருக்கு? எட்டு மாடிக்கு எட்டு பொத்தான். தரைத்தளம். அதுக்கு ஜீரோ. ஒன்பது பொத்தான். இல்லியா?“
“இல்லியா இல்லை இருக்கு. சொல்லு.“
“அவருக்கு மாத்திரம் மைனஸ் 1 வருது…“
“அதெப்பிடி?“
“வருது. அதாவது அவர் அப்பிடிச் சொல்றார்.“
“வந்தால்?“
“அது அவரை ரெண்டு வருஷம் முன்னாடி அழைச்சிட்டுப் போயிருது…ன்றார் அவர்.“
“ஆகா. நடக்கிற கதையா இது?“
“எதுக்கு நடக்கணும். அதான் லிஃப்ட் இருக்கே.“
“இல்லக்கா.“
“லிஃப்ட் இருக்குடா.“
“அவருக்கு மட்டும் அப்பிடி நடக்குதாமா? லிஃப்ட் எப்பிடி நடக்கும்னு போரடிக்காதே…“
“அப்பிடித்தான் அவர் சொல்றார்.“
“அவருக்கு மட்டும் தான் இது நடக்குதுன்னு எப்பிடி அவர் சொல்றார்?“
“நம்ம யாருக்கும் அப்படி நடக்கல்லியேடா.“
“அது சரி“ என யோசிக்கிறான் சிகாமணி.
“ஒருநாள் பக்கத்து வீட்டு கணபதி இல்லே?“
“இருக்கார்.“
“அவர் கூட இவர் லிஃப்ட்டுக்குள்ள போனபோது அது சமத்தா ஜீரோ வரைதான் காட்டித்தாம். இவர் தனியாப் போனால் மாத்திரம் மைனஸ் 1 காட்டுதுன்றார்.“
“ஸ்வைங்னு ரெண்டு வருஷம், அனுமன் கடலைத் தாண்டினாப் போல லங்கைக்கு, அதாவது கடந்த காலத்துக்குப் போயிட்டாரா…“
“அப்பிடித்தான் அவர் சொல்றார்….“
“இதை நீ எப்பிடி நம்ப ஆரம்பிச்சே…“
“அவரோட கோவிலுக்குப் போனேனா?“
“சாமி மேல சத்தியம் பண்ணினாராக்கும். நீ நம்பிட்டே…“
“சரி விடுறா. நீ கேலி பண்றே…“
“இல்லக்கா சொல்லு.“
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால எடுத்த பர்ஸ் ஒண்ணு வெச்சிருந்தார்.. அதுல முகவரி இருந்தது….“
“என்ன சொல்ல வரே அக்கா?“
“அந்த வீட்டுக்குப் போனோம் நாங்க. அந்த வீட்டுப் பெரியவர் இதை நான் தொலைச்சி ரெண்டு வருஷம் ஆகுதுன்றார்….“
“புதுசா இருக்கே…“

“இல்லடா. பர்ஸ் பழசுதான்.“

“ரெண்டு வருஷப் பழசு.“ 
“அதைப் பார்த்ததும அவர்...“

“சில்லரை கூட இல்லாத இந்த பர்சை ஒரு விஷயம்னு திருப்பிக் கொண்டு வந்தியான்னு கேட்டாரா?“

அதான் இல்லை. அவருக்கு ரொம்ப சந்தோஷமாச்சி... அவரோட இறந்து போன மனைவியோட படம் இருந்தது அதில். அதைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டாரு“
“ராஜஸ்தான் கதை மாதிரிப் போகுதே இதுவும்…“
“நீ நம்பினா நம்பு. அப்பறம்…. இவரோட தங்கை மாது வந்திருந்தா இல்லடா?“

“அதை நான் நம்பறேன். நானே பார்த்தேனே... அவளுக்கு என்ன பண்ணினார்?“
“குழந்தைக்குப் பால் பவுடர் கிடைக்கவே இல்லை. இவர் திடீர்னு வெளியே போனார்.“
“பழைய காலத்துக்கு….?“
“அப்பிடித்தான் தோணுது.“
“வாங்கிட்டு வந்திட்டாரா?“
“ஆமாம்டா ஆமாம்.“
“இதை நான் நம்ப மாட்டேன்க்கா…. சம்திங் ராங்.“
“சம்திங் ரைட் மாதிரிதான் இருக்குடா. அவர் கழட்டிப் போட்ட அவரோட சட்டையை இன்னிக்குத் தோய்க்கலாம்னு எடுத்தபோது சட்டைப் பாக்கெட்டில் பார்த்தேன்…“
“அதெல்லாம் கரெக்டா எல்லா மனைவியும் பார்த்திருவீங்க.“
“அதுல பில் இருந்தது…“
“பில்லா?“
“பால்ராஜ் ஸ்டோர்ஸ் பில். ஃபேரெக்ஸ் வெஜிடபிள் ரெண்டு டின் வாங்கினது.“
“அதுல தேதி?“
“ரெண்டு வருஷம் முந்தின தேதிதான்டா போட்டிருந்தது.“
“எங்க? அந்த பில்லை வெச்சிருக்கியா அக்கா?“
“இப்பதான் கசக்கிப் போட்டேன்.“
பரபரப்புடன் போய் குப்பைத் தொட்டியை அளைகிறான். ஒரு பில்லை எடுக்கிறான். சத்தமாய் வாசிக்கிறான். “பால்ராஜ் ஸ்டோர்ஸ். அட ஆமாம் அக்கா. ரெண்டு வருஷம் முந்தைய பில். பால் டின் விலை கூட ரொம்பக் குறைவா இருக்கே…“
“என்னால நம்பவே முடியல்லடா.“

“இதை நம்பித்தான் ஆகணும். ரெண்டு வருஷம் முன்னாலன்னா விலை குறைச்சலா தான் இருக்கும்.“

“அது... எப்பிடி இவர் போயி வாங்கிட்ட வர முடிஞ்சது? அதைத்தான் நம்ப முடியல்ல.“
“இப்பதான் நம்பறேன்னு சொன்னே?“
“நம்பாமலும் முடியல்லடா…“
அவசர அவசரமாக வாசலை நோக்கிப் போகிறான்.
“எங்கடா போறே?“ என்று கூப்பிடுகிறாள் திலகா. கதவைப் படாரென்று சார்த்தி விட்டு வெளியேறுகிறான் சிகாமணி.
லிஃப்ட் கதவு சாத்தியிருக்கிறது. அவன் கால்கள் நடுங்குகின்றன. முகம் வியர்த்து வழிகிறது. லிஃப்ட் வேறு எதோ தளத்தில் இருக்கிறது. அதைத் தன் தளத்துக்கு வர பொத்தானை அழுத்துகிறான். அது மேலே வருகிறது. உள்ளே யிருந்து கணபதி வருகிறார்.
“எங்க கிளம்பியாச்சி சிகாமணி?“ என புன்னகை செய்கிறார்.
“நீங்க உங்க வீட்டுக்குள்ள போங்க… அப்பதான் லிஃப்ட் வேலை செய்யும்“ என்கிறான் சிகாமணி.
“ஏன் அப்பிடிச் சொல்றே?“ என அவர் அங்கேயே நிற்கிறார்.
“தயவு செஞ்சி உள்ள போங்க சார்…“
குழப்பமாய் நிற்கும் அவரை அவர் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறான. அவசரத்தில் சாவி போட்டுத் திறக்க அவருக்கு வரவில்லை. கடகடவென்று சாவி வாங்கி அவனே திறந்து அவரை உள்ளே அனுப்புகிறான். “ஆன்ட்டி இல்லியா சார்?“
“அவ வெளியே போயிருக்கா. வர்ற நேரம் தான்…“
“நம்ம நேரத்துக்கு அவள் வரக் கூடாது“ என்கிறான் சிகாமணி.
“என்ன சொல்றே?“
“ஒண்ணில்ல சார். நீங்க உள்ள போங்க. கதவைச் சாத்திக்கங்க. உலகம் கெட்டுக் கெடக்கு?“
“கெட்ட உலகத்துல நீ வெளியே போறியே தம்பி?“ என்கிறார் கணபதி.
“நான் பாத்துக்கறேன் சார்.“
அவசர அவசரமாக லிஃப்ட்டுக்குள் வந்து பொத்தான்களைப் பார்க்கிறான். பூஜ்யம். ஒண்ணு முதல் எட்டு வரை. ஒன்பது பொத்தான்கள் மாத்திரமே இருக்கின்றன. “கடவுளே ஒரு  மைனஸ் 1  போடக் கூடாதா?“ எனக் கத்துகிறான்.
திரும்ப லிஃப்டை விட்டு வெளியே வருகிறான். வராந்தா காலியாய் இருக்கிறது.
உள்ளே யிருந்து கணபதி “யாரது?“ எனக் குரல் கொடுக்கிறார். “யாரும் இல்ல. நீங்க உள்ளேயே இருங்க“ என்கிறான் சிகாமணி. திரும்ப லிஃப்ட்டுக்குள் நுழைகிறான். மைனஸ் 1 இல்லை. முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறான். சரி என்று பூஜ்யத்தை அழுத்துகிறான். லிஃப்ட் தரைத் தளத்தில் இறக்கி விடுகிறது.
வெளியே வருகிறான். இரு எந்த வருஷம் தெரியல்லியே… தெரு காலியாய்க் கிடைக்கிறது. காத்திருக்கிறான். தனக்குள் எதும் மாற்றம் நிகழ்கிறதா பார்க்கிறான். கையால் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான்.
ஒரு சைக்கிள் வருகிறது. பாய்ந்து ஓடி அதை நிறுத்துகிறான். “இது எந்த வருஷம் சார்?“
“வருஷமா?“ என அவர் அவனைக் கேள்வியுடன் பார்க்கிறார்.
“சொல்லுங்க சார். இது எந்த வருஷம்?“
“யோவ்.அவனவன் நேரம் கேட்பான். தேதி கேட்பான். நீ வருஷம் கேக்கறியேய்யா?“
“ப்ளீஸ் சார். சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“ஐயோ பைத்தியம் பைத்தியம்…“ என அவர் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடுகிறார்.
அப்போது இன்னொரு நபர் வருகிறார். அவரே நின்று இவனைப் பார்க்கிறார்.
“இது எந்த வருஷம் தம்பி“ என்று அவரே கேட்கிறார்.
“2016“ என்கிறான் சிகாமணி.
“இல்ல“ என்கிறார் அவர். “இது 2012“ எனகிறார்.
“சார் சரியா சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“2012.“
“ரெண்டு வருஷம் தான் சார் முன்னாடி போகும் எங்க லிஃப்ட். உங்க வீட்டு லிஃப்ட் நாலு வருஷம் முன்னாடி போயிட்டதா?“
“இது 2012 தான்.“
அப்போது வேறொரு நபர் வருகிறார். “தம்பி இவர் எதும் கலாட்டா பண்ணினாரா?“
“ஏன்?“
“இவர் ஒரு அம்னீஷியா பேஷன்ட்.“
“அப்டின்னா?“
“இவருக்கு மனசில் பழைய ஞாபகங்கள் தான் இருக்கு. நிகழ்காலமே அவருக்கு நினைவில் தெரியாது…“
“அதுக்குப் பேர் அம்னீஷியாவா? நீங்க சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“2016“ என்கிறார் அவர்.
“அப்ப லி1ப்ட்?“ என தனக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறான்.
“என்ன லிஃப்ட்?“ என்கிறார் அவர்.
“ஒண்ணில்ல…“
அப்போது கணபதியின் மனைவி கைநிறைய கனத்துடன் காய்கறி நிரம்பிய பையுடன் வருகிறாள். ‘பையை அவன் வாங்கிக் கொள்கிறான். இருவரும் லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள்.
“இன்னிக்கு நம்ம லிஃப்ட்ல…“
“உங்களுக்குமா?“
“எனனது?“
“மைனஸ் 1 வந்ததா?“
“என்னாச்சி சிகாமணி?“ என்று அவள் கேட்கிறாள்.
“ஒண்ணில்ல. நீங்க என்ன சொல்ல வந்தீங்க அம்மா?“
“காலைல  லிஃப்ட் ரிப்பேரா இருந்தது… இப்ப சரியா ஆயிட்டதுன்னு சொல்ல வந்தேன்.“
லிஃப்ட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
தொடர்கிறேன்
91 97899 87842



No comments:

Post a Comment