Wednesday, September 2, 2015

நாவல் / எஸ். சங்கரநாராயணன் - அத்தியாயம் 13

திரைப்பட வியூகத்தில் 
வளரும் நாவல்

வ சி க ர ப்   பொ ய் க ள்
அத்தியாயம் 13
சென்னை மெரினா கடற்கரை. கண்ணகி சிலை. அதன் அருகில் ஒரு பெண் உயரே தூக்கிய கையுடன், கையில் முறுக்குகளை அடுக்கி வைத்திருக்கிறாள்… “முறுக்கு, முறுக்கு“ என விற்றுப் போகிறாள். அவளைப் பார்க்கவே நியாயம் கேட்கும் கண்ணகி போலத் தான் இருக்கிறது. அதிகக் கூட்டம் இல்லாத இடத்தைத் தேர்வு செய்து காலால் குறுக்காக எக்ஸ் போட்டு அமர்கிறான் ராமசாமி. தள்ளித் தள்ளி‘ இளம் காதலர்கள். அல்லது ‘தள்ளி‘க்கிட்டு வந்தவர்கள்… மெல்ல இருள் கவியக் கவிய சுற்றிலும் ஆட்களே இல்லாத தனிமை. கடற்கரையின் ரோந்து விளக்கின் ஒளி வட்டம்.
அப்படியே மணலில் படுத்துக் கிடக்கிறான் ராமசாமி. திடீரென்று அவனைத் தாண்டி ஆவேசமாய்த் தள்ளாடியபடி ஒரு உருவம் கடலை நோக்கிப் போகிறது. என்ன ஆச்சி இவனுக்கு, என எழுந்து உட்கார்கிறான். அந்த இருளிலும் போகிறவனின் தள்ளாட்டமும் ஆயாசமும் அவனது மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஆள் கொஞ்ச நேரம் நிற்கிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறான். திடீரென்று வேகமாய் ஆவேசமாய்க் கடலைப் பார்க்கப் போகிறான்.
தாள முடியாமல் எழுந்து அவனை நோக்கி ஓடுகிறான் ராமசாமி. முட்டளவு ஆழத்தில் அங்கேயே நிற்கிறான் அந்த இளைஞன். “ஏய் என்ன பண்ணப் போறே?“ அந்த இளைஞன் திரும்பி ராமசாமியைப் பாரக்கிறான். “நீங்க எதுக்கு சார் கடல்ல வந்தீங்க? உங்களுக்கும் காதல் தோல்வியா?“
“அடேடே. நீ காதல் தோல்வி கேசா?“ என்கிறான் ராமசாமி. “ஏன் இப்பிடி ராத்திரி நேரம் கடலுக்குள்ள ஓடி வர்றே? பகல்ல வர்றது தானெ? பகல்லன்னா யாராவது வந்து காப்பாத்திருவாங்கன்னு பயமா?“
“பகல்னா சாகறதுக்கு எனக்கே பயம் சார்.“
“இப்ப? ராத்திரியில்?“
“ஐய எனக்கு வேற வழி இல்லை சார்.“
“என்ன வழி இல்லை…“
“எனக்கு வாழ்க்கை வெறுத்திட்டது சார்.“
“அப்பிடியா? இப்பிடியே நாம கடல்ல நின்னுட்டிருந்தால் ஜலதோஷம் பிடிச்சிக்கும். வா நாம கரைக்குப் போய்ப் பேசலாம்…“
“இல்ல சார்…“
“அட வாப்பா“ என அவனைக் கையைப் பிடித்து இழுக்கிறான் ராமசாமி. “காதலில் ஜெயித்தவர்கள் எண்ணிக்கை உலகத்திலேயே ரொம்பக் குறைவுதான் தம்பி.“
“அப்பிடியா சார்? நீங்க எப்பிடி சார்?“
“காதலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது… அதை விடு. காதல் தான் மொத்த வாழ்க்கையா தம்பி? வாழ்க்கைல காதலும் இருக்கணும். அதுதான் வாழ்க்கை…“
“வாழ்க்கைன்னா காதலும் இருக்கணும் இல்லே? என் வாழ்க்கையில் காதல் இல்லியே சார்? காதல் இல்லாத வாழ்க்கைல என்ன சார் இருக்கு?“
“ஒரு வெறுப்புல அப்பிடிப் பேசறே நீ. நிதானமா ஆற அமர யோசிச்சிப் பார். உன் பெயர் என்னப்பா?“
“கிருஷ்ணன் சார்.“
“அடேடே உலகத்துக்கே கீதை தந்தவன் கிருஷ்ணன்.  நீ என்னடான்னா…. வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லைன்னு அர்ஜுனன் மாதிரி அபலையா நிக்கறே…“

“கிருஷ்ணன் கீதை சொல்லலாம் சார். வாலிபத்தில் அவன் அடிக்காத கொட்டமா, பண்ணாத லீலையா? எல்லாம் முடிச்சி அப்பறம் கீதை... நமக்கு இன்னும் மீட்டர் விழவே இல்லியே சார்?“

ராமசாமி சிரிக்கிறான்.

“உன் வீடு எங்கருக்கு?“
“திருவல்லிக்கேணி தான் சார்.“
“வா போயிட்டே பேசலாம்.“
“என்ன ஏன் சார் காப்பாத்தினீங்க?“
“அட போ கிருஷ்ணா. முட்டளவு ஆழத்தில் நின்னுகிட்டு சாகப் போறேன்னு வசனம் பேசறே நீ.“
“ஒரு பெரிய அலை வரும்னு காத்திட்டிருந்தேன் சார்.“
“அதுக்கு கரையிலயே காத்திட்டிருக்கலாமே?“
“போங்க சார் கிண்டல் பண்றீங்க…“ என திரும்ப கடலைப் பார்க்கக் கிளம்புகிறான் கிருஷ்ணன்
“அட இருப்பா. எப்பவுமே உடம்புல ஒரு வேகம் வர்ற போது உணர்ச்சி வசப்படும் போது எதாவது தோணும். அதை உடனே செயல்படுத்திறக் கூடாது. உயிர் ரொம்ப உசத்தியான விஷயம் கிருஷ்ணா. அதை இப்படி அலட்சியமா தூக்கிப் போட்டுவிட முடியாது.“
“அவள் இல்லாமல் வாழறதுல எந்த அர்த்தமும் இல்லை சார். வாழ்க்கையில கிடைக்காத அர்த்தத்தை, நான் சாவுலயாவது கிடைககாதான்னு பார்க்கிறேன்…“
“ஸ். அதையே நினைச்சிட்டிருக்காதே. நல்லவேளை நான் உன்னைப் பார்த்தேன். இல்லாட்டி….“
“இல்லாட்டி, காலைல என்னைப் பேப்பர்ல நீங்க பாத்திருப்பீங்க சார்.“
“பேப்பர்லயா?“
“என் புகைப்படம் முகவரி பெயர் எல்லாம் எழுதி தயாரா கைல வெச்சிருக்கேன் சார்…“ என பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டுகிறான்.
“பரவால்ல. தண்ணி படாதபடி, பட்டாலும் எழுத்து அழியாத படி பிளாஸ்டிக் உறைல்லாம் போட்டு சுத்தி பத்திரப் படுத்தி உள்ள வெச்சிருக்கே. ஆனால் உயிரைப் பத்திரப் படுத்த விட்டுட்டே… சரி. வா… இங்க கிருஷ்ணா கபேல காபி நல்லா யிருக்கும்.“
அவன் அவரைப் பார்க்கிறான். பிறகு தலையாட்டுகிறான்.
உள்ளே நுழைகிறார்கள். சர்வர் வருகிறான். “என்ன சார் ரெண்டு காபியா?“ என்று கேட்கிறான். “உனக்கு எப்பிடித் தெரியும்?“ என சர்வரைக் கேட்கிறான் ராமசாமி.
“இன்னிக்கு காபி நீங்க ஸ்பான்சர். தினசரி இவரை யாராவது சமாதானப் படுத்தி இங்க தான் அழைச்சிட்டு வராங்க…“
“அப்பிடியா கிருஷ்ணா?“
“ஆமாம் சார். எனக்கு வாழவே பிடிக்கல்ல சார்.“
“கிருஷ்ணா கபேல காபி நல்லா யிருக்கும்னு தெரிஞ்சி வெச்சிருக்கே.“
“ஆமாம் சார்“ என்கிறான் கிருஷ்ணன். காபி வருகிறது. “ஸ்ட்ராங்கா இருக்கா?“ என்று கேட்டபடியே எடுத்துக் கொள்கிறான்.
“இப்ப எப்பிடி இருக்கு வாழ்க்கை?“ என்று கேட்கிறான் கிருஷ்ணன்.
“சார். வாழ்க்கைதான் வெறுத்திட்டதுன்னேன். காபி வெறுத்திட்டதுன்னு நான் சொல்லவே இல்லியே“ என்கிறான் கிருஷ்ணன்.
இருவருமாய் அவன் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.
“இதான் சார் என் வீடு“ என நிற்கிறான் கிருஷ்ணன். திண்ணை எடுப்புடன் உள்பக்கம் நீளமான வீடு. “பாவம் சார். உங்களை சிரமப்படுத்திட்டேன். ஆனால் சார்… நீங்க அடிக்கடி என்னைப் பார்க்க வரணும் சார்.“
“வரேன் வரேன். ஆனால் நீ இனி இப்பிடி பைத்தாரத்தனம் எல்லாம் பண்ணக் கூடாது கிருஷ்ணா.“
“அவ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை சார். நீங்கதான் சார் எப்பிடியாவது அவளோட என்னைச் சேர்த்து வைக்கணும்…“
“முயற்சி பண்றேன் கிருஷ்ணா.“
“அப்டில்லாம் இல்லை. சேர்த்து வைக்கணும். சரியா?“
ராமசாமி சிரித்து “எனக்கு இப்பிடி ஒரு சோதனையா? சரி“ என்கிறான். “நான் கிளம்பறேன். இனிமே நீ இப்பிடி வாழ்க்கையை முடிச்சிக்க அவசரப் படக் கூடாது.“
“நீங்க அடிக்கடி வாங்க சார். உங்க பேரைச் சொல்லவே இல்லையே?“
“ராமசாமி.“
“நீங்க எதுக்கு கடற்கரைக்கு வந்தீங்க?“
“என் கவலைக்கு ஆறுதலா யிருக்கும்னு நான் காத்து வாங்க வந்தேன். அங்க அதைவிடப் பெரிய கவலையை நான் பார்த்திட்டேன்.“
“சாரி சார். எனக்கு வேற வழி தெரியல்ல சார்?“
“இப்ப?“
“வழி தெரிஞ்சிட்டது.“
“என்ன வழி?“
“நீங்க இருக்கீங்க. பொறுப்பை உங்ககிட்ட விட்டாச்சி…“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
அப்போது உள்ளே யிருந்து. ஒரு வயதான குரல் கேட்கிறது. “யாரது வாசல்ல?“
“நான்தான்ப்பா.“
“எங்கடா போயிட்டே நீ?“
“தற்கொலை பண்ணிக்கப் போனேம்ப்பா.“
“பண்ணிக்கிட்டியா?“
“இல்லைப்பா.“
“ஒரு காரியம் ஒழுங்கா பண்ணத் துப்பு கிடையாது உனக்கு. சரி உள்ள வா.“
“வரேன் சார்“ என கிருஷ்ணன் உள்ளே போகத் திரும்புகிறான். “திரும்ப எப்ப சார் வரீங்க? நான் உங்ககிட்ட அவளைப் பத்தி நிறையச் சொல்லணும் சார்.“
“வரேன் வரேன்.“
“கிருஷ்ணா?“ என உள்ளே யிருந்து குரல். அவன் தலை மறைவதைப் பார்த்த பின் ராமசாமி திரும்பி நடக்கிறான்.
இரவு. ராமசாமி வீடு. மாதுரி வந்து கதவைத் திறந்து விடுகிறாள். “என்ன அண்ணா இன்னிக்கும் லேட்டா வரே?“
“ஒரு அவசர வேலை வந்திட்டது. காலைல கிளம்பும்போதே இன்றைய நாள் பத்தித் தெரியும் எனக்கு…“ என்றபடியே அருகே நிற்கிற திலகாவைப் பார்க்கிறான்.
அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவள் உள் வாங்கிக் கொள்கிறாள். “சில நாட்களை டைரி இல்லாமலேயே ஞாபகத்தில் கொண்டு வருவீங்கன்னீங்களே. அப்பிடி ஒரு நாளா இது?“
“புரிஞ்சிக்கிட்டியே“ என புன்னகை செய்கிறான். மாதுரிக்கு அவர்கள் பேசுவது விளங்கவில்லை.
“என்ன அண்ணா?“
“ஒண்ணில்ல“ என்கிறான் ராமசாமி.
“காபி?“ என திலகா ஆள்காட்டி விரலால் வாயைப் பார்த்துக் காட்டிக் கேட்கிறாள். “இல்ல வேணாம். இப்பதான் குடிச்சேன்…“ என்றவன் அவளை அருகே அழைத்து காதில் சொல்கிறான். “ரெண்டு வருஷம் முன்னால்.“
“ஆனால்…“ என்கிறாள் திலகா. சிரிக்கிறார்கள்.
“எனக்குச் சாப்பிட கொஞ்ச நேரம் போகட்டும். நேத்து மாதுவோட குழந்தையைப் பாதி வரைஞ்சி வெச்சிருந்தேன். அதை முடிச்சிர்றேன்“ என்கிறான் ராமசாமி.
“குழந்தை தூங்கறது. தூங்கற குழந்தையை வரையக் கூடாது‘ அண்ணா“ என்கிறாள் மாதுரி.
“நான குட்டியோட ஃபோட்டோவை வெச்சிக்கிட்டு தானே வரையறேன்…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி. “நீ எப்ப ஊருக்குப் போறேடி?“
“நாளைக்குக் காலை பத்து மணி ரயில்.“
“அப்ப இன்னிக்கு வரைஞ்சி குடுத்தா தானே? கால் டாக்சிக்குச் சொல்லியாச்சா திலக்?“
“சொல்லியிருக்கு.“
மேசையில் ஒரு கெட்டி அட்டையில் ராமசாமி பாதி வரைந்து நிறுத்தியிருந்த பெண் குழந்தையின் ஓவியம்.
காலையில் குழந்தையைத் தயார் பண்ணி விறுவிறுவென்று கிளம்புகிறாள் மாதுரி. கைக்குழந்தை. ஒன்பது, பத்து மாதக் குழந்தை. அதற்கு வெந்நீர் போட்டு குளிப்பாட்டி. தூக்கம் விலகாமலேயே கண்ணுக்கு மைதீட்டி அலங்கார அமர்க்களங்கள்.
“வேலைக்குப் போறியோ இல்லியோ. எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேன்ஜ்ல ரினியூ பண்ணனும்னு ஒரு நடை வந்திர்றே. அதும் நல்லதாச்சி. உன்னைப்  பார்க்க முடியுதே“ என்றபடி அலுவலகம் கிளம்பும் உடை மாட்டிக் கொள்கிறான் ராமசாமி. “பிரசாத்தைக் கேட்டதாச் சொல்லு. நம்ம பாங்க்ல அவனுக்கு அக்கவுண்ட் இருக்கு இல்லியா? அதுல சேர்க்க அவனோட PAN நம்பர் வேணும். ஏற்கனவே அவன்கிட்டச் சொல்லியிருக்கேன். ஒரு SMS பண்ணச் சொல்லு. உனக்கு அவன் PAN நம்பர் தெரியுமா?“
“தெரியாது.“
“ஆனால் எப்பிடியும் XEROX தேவைப்படும். வெறுன்ன ஏத்திற முடியாது. சரி. நானே அவன்கிட்ட இன்னொருவாட்டி பேசறேன். குழந்தை ரெடி. நீ ரெடியா?“
“இதோ குளிச்சிட்டு வந்திர்றேன்…“ என குளியல் அறைக்குள் போகிறாள். அதற்குள் சிகாமணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான். “நீ மாதுவை ரயில் ஏத்தி விட்டுர்றியா இவனே?“ என்று ராமசாமி கேட்கிறான்.
“ம். அப்பிடியே நான் மந்தைவெளி வரை போகணும். ஒரு கதை டிஸ்கஷன்.“
“சினிமாக் கம்பெனி தான்… நீயே கவுத்திட்டே.“
“ஐய அங்கல்லாம் நம்மால தாக்குப் பிடிக்க முடியாது அத்தான்.“
“அவங்களும் உன்னைப் பத்தி இதே மாதிரிதான் பேசுவாங்கடா. பரவால்ல. அப்பறமாப் பேசலாம்.“ கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான். “நேரமாச்சி. இங்கயே மணி ஒன்பதே கால்…‘ நான் கிளம்பறேன். எப்பிடியோ தாமதம் ஆயிருது…“‘ என வெளியே ஓடுகிறான்.
லிஃப்ட் மைனஸ் 1.
அவசர அவசரமாக வெளியேறுகிறான். பஸ்சுக்காகக் காத்திருக்கிறான். கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். அருகில் இருக்கும் நபர் “இதான் சார் சென்னைல பிரச்னை. லீவுன்னா பஸ் வர்றதே கிடையாது…“ என்கிறார். அவரைக் குழப்பமாய்ப் பார்ககிறான்.
“என்ன லீவு?“ என அவரைக் கேட்குமுன், அவர் பஸ் வருகிறது. கிளம்பிப் போய்விடுகிறார். பத்து நிமிடத்தில் பஸ் வருகிறது. மணி பார்த்துக் கொள்கிறான். நிச்சயம் மேனேஜர் கிட்ட இன்னிக்கும் டோஸ் வாங்கணும், என பதட்டமாய் இருக்கிறது.
பஸ்சில் இருந்து இறங்கி அவசர அவசரமாக பாங்க் வருகிறான். வங்கி ஷட்டர் போட்டு பூட்டியிருக்கிறது. ஏ டி ஏம் அருகே செக்யூரிட்டி. “என்ன சார் ஞாயித்துக் கிழமை ஆபிஸ் வந்திருக்கீங்க?“ என்று கேட்கிறான்.
“இன்னிக்கு வெள்ளிக் கிழமை…“
“என்ன சார் ஆச்சி? இன்னிக்கு ஞாயிறு தான் சார்“ என கையில் இருக்கும் நாளிதழைக் காட்டுகிறான்.
‘என்னவோ மிஸ்டேக்“ என அசடு வழிந்தபடி திரும்பிப் போகிறான் ராமசாமி.
வீடு. கதவைத் திறக்கிறாள் திலகா. “என்னாச்சி அதுக்குள்ள திரும்பி வந்திட்டீங்க?“ என முகத்தில் வியப்பு.
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமைடி. நான் பாட்டுக்கு லீவு நாளன்னிக்கு வேலைக்குப் போயிருக்கேன்.“
“அப்ப?“
“வீடு. தனிமை. அமைதி. இதை விடலாமா பெண்ணே?“ என்கிறான் தாகமாய்.
“எதிர்பாராத விடுதலை!“
சட்டையைக் கழற்றுகிறான். பட்டன் சட்டென அவிழ மறுக்கிறது. “சே அவசரத்தில் அண்டாவுலயே கை நுழையாது…“ என சிரிக்கிறான்.
“நேத்து வரை உங்க தங்கை மாது தான் ஒசச்தியா இருந்தது…“

“அவ அப்படியே என் அம்மா சாயல்டி“ என்கிறான் ராமசாமி. “உலகத்தில் கோபப்பட்டால் கூட மனைவிகள் அழகுதாண்டி…“ என்கிறான்.

“இந்த ஆம்பளைகளுக்கு பெண்கள் திடீர் திடீர்னு அழகா தெரியறாங்க. ஏங்க அப்பிடி?“

“ஏங்கத்தான் அப்பிடி...“ என சிரிக்கிறான் ராமசாமி.
SONG
நான் பின்னே பின்னே போகிறேன்… என அவன் ஆரம்பிக்க, அவள், நான் பின்னே பின்னே வருகிறேன், என தொடர்வதாக ஒரு பாடல் காட்சி.
இரண்டு இரண்டு வருடங்களாக அவர்கள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள்.அந்த அளவுக்கு இளமை முறுக்கமும் வேகமும்… இசையில் துள்ளலும் நெளிவுகளும்… கடைசியில் அவர்களது முதல் இரவு வரை பின்னே செல்கிறது பாடல்.
ஒரு குளியல் அறை SHOWER. தண்ணீர் சட்டேன பூவாய்த் தூறலாய் இறங்குகிறது.
அவன் குப்புறக் கிடக்கிறான். மேலே அவள். மேலே பறவையின் சிறகுகள். கனவுகள் மெல்ல அடங்குகிறாப் போல.

தொடர்கிறேன்

91 97899 87842

No comments:

Post a Comment