Saturday, September 26, 2015

updated everyday - அத்தியாயம் 36

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வசிகரப் பொய்கள்

*
அத்தியாயம் 36

லிஃப்ட்டைக் கடந்து தன் வீட்டுக்குள் வரும் வழியில் கணபதியைப் பார்க்கிறான் ராமசாமி. “என்ன ஆபிஸ் விட்டு வரீங்களா?“ என்று சிநேகமாய்ச் சிரிக்கிறார். கதவுப் பக்கம் வரும் சிகாமணி, “கேளுங்க கேளுங்க… எங்களுக்கே அந்த சந்தேகம் உண்டு…“ என்கிறான்.
ராமசாமி சிரிக்கிறான். “பசங்களோட ஜாலியா எங்கியோ டூர் போயிட்டு வந்தாப்ல இருக்கே?“
“ஆமாம். திருநெல்வேலி திருச்செந்தூர் நவதிருப்பதின்னு ஒர் ரவுண்டு… இவளுக்கு அதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.“
சிகாமணியுடன் வீட்டுக்குள் வருகிறான் ராமசாமி. “அத்தான் இன்னிக்கு ஆபிஸ்ல எல்லாரும் உங்களை ஆகா ஓகோன்னாங்களா?“
“எல்லாருக்கும் இது எதிர்பாராத விஷயம்டா. நானே எதிர்பார்க்கலையே… ரெண்டு வருஷம் முந்திய திருட்டை… இப்ப எப்பிடி கண்டுபிடிச்சாங்க? அதுவும் இவர் எப்பிடி அந்தத் திருடனை அடையாளம் காட்டினாருன்னு…“
“படம் வரையறது உங்களுக்கு இந்த அளவு பயன்படும்னு நீங்க எதிர்பார்த்தீங்களா அத்தான்?“
“இல்லை. நிச்சயமா இல்லை… அத்தோட டைரி.“ என்றபடியே சட்டையைக் கழற்றுகிறான். உள்ளே யிருந்து “வந்தாச்சா?“ என்று சிரித்தபடி வருகிறாள் திலகா. “காபி?“ என்கிறாள். “வேணாம். ஒரு வேலை இருக்கு…“ என்கிறான் ராமசாமி. போய் வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொள்கிறான். “இன்னிக்குப் பூரா நம்ம வீட்டு டெலிஃபோன் என்கேஜ்டாவே இருந்ததே…“
“கால் வந்திட்டே இருந்ததுங்க…“ என்கிறாள் திலகா.
“வந்திட்டே எல்லாம் இருக்காது. நீதான் யாரையாவது கூப்பிட்டுச் சொல்லிக்கிட்டே இருந்திருப்பே… திலகா BROADCASTING CORPORATION.““
“என் புருஷனைப் பத்தி நான் பெருமை அடிச்சிக்கக் கூடாதா?“
“அளவோட வெச்சிக்க எல்லாத்தையும்… நீ பெரிய அளவுல எதிர்பார்த்து… நாளைக்கே நான் உன்னை ஏமாத்திட்டதா நினைச்சிக்கக் கூடாது. I AM JUST WHAT I AM.“
“ஆரம்பிச்சிட்டாருடா இவர். QUOTABLE QUOTE.“
“திட்டம் போடறதில் அத்தான் ஒண்ணும் குள்ள நரி கிடையாது… ORDINARY. அப்படித்தானே அத்தான்?“
பதில் சொல்லாமல் மேசையில் அமர்ந்து ஒரு கெட்டித்தாளில் படம் வரைய ஆரம்பிக்கிறான். “ஒருவேளை PROMOTION மாதிரி எதும் வரலாம்…“ திலகா பக்கம் திரும்புகிறான். “அது காலப்படி நடக்கும். நாளைக்கே வந்திராது. உடனே திரும்ப நாளைக்கு எல்லாருக்கும் போன் பண்ணி அமர்க்களம் பண்ணிறாதே…“
“அப்பா கிட்ட மாத்திரம் சொல்லிக்கறேன்…‘
“சரி.“
“இப்பவே?“
“வேணாம். காலைல சொல்லு. PROMOTION வர்றதுக்கு முன்னாடி சொன்னால் கூட போதும்.. அதுகூட ஒரு WILD GUESS தான்…“
அவள் முகத்தில் ஏமாற்றம். “நானே சொல்லிர்றேன்… எப்பிடியும் நாளைக்கு அவரே பேசுவார்.“
“ஏன்?“
“பேப்பர்ல என் ஃபோட்டோ வருதுன்னு நீ அவர்கிட்ட இன்னிக்கிச் சொல்லியிருப்பியே…“
“பின்னே?“
“உன் புருஷன் பத்தி நீ சொல்லாமல் வேற யார் சொல்வா? அதானே… சரி சரி…“ என்கிறான் சிகாமணி.
“நாளைக்கு கமிஷனர் வரச் சொல்லிக் கூப்பிட்டிரருக்கார்.“
“திருப்பியுமா? என்ன?“ என்கிறான் சிகாமணி.
“என்னன்னு தெரியல… அவருக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு ஆளைப் பார்த்தால் பிறகு சாவகாசமா வீட்டுக்குப் போயி மனசில அசை போட்டே திரும்ப அந்த முகத்தை வரைஞ்சிற முடியுமான்னு கேட்டாரு…“ என்று சிரிக்கிறான்.
“நாளைக்கு கமிஷனரைப் பார்க்கப் போறோம்…“ என்கிறான் சிகாமணி. “கமிஷனரையா? நானும் வரேன்…“ என்கிறாள் திலகா ஆர்வத்துடன். “நான் அங்கயெல்லாம் வந்து பார்த்ததே இல்லை.“
“நம்ம கோகுல் கூட கமிஷனரைப் பார்த்தது இல்லை.அவனையும் கூட்டிட்டுப் போலாமா…? அடச் சீ… அது என்ன எக்சிபிஷனா போயி சுத்திப் பாத்திட்டு வரதுக்கு?“
“அங்க போனால் என்ன… கூல் டிரிங்ஸ் குடிக்கலாம்.“
“இவன் ஒருத்தன்டா…“
“அவர் தர்றாரு. நீங்க ஏன் வேணான்றீங்க?  அதைச் சொல்லுங்க அத்தான்…“
படத்தை அப்படியே நிறுத்தி விட்டு அவள் பக்கம் எழுந்து வருகிறான். “கமிஷனர்னா யாருன்னு நினைச்சே நீ?“
“ஒரு திருடனைப் பிடிச்சால் அவருக்கு இவ்வளவுன்னு கமிஷன் குடுப்பாங்களா? LIC ஏஜென்ட் மாதிரி…?“
“சூப்பர்“ என்கிறான் சிகாமணி. “அக்கா வந்தால் அவர் கிட்டியே கமிஷனர் வேலை என்னன்னு கேட்டுருவா. வரியா அக்கா?“
“உங்க அத்தான் என்னை எங்கயுமே கூட்டிப் போறாரா பார்றா…“
“அவர் எதும் சீரியசான விஷயம் பேசக் கூடக் கூப்பிட்டிருக்கலாம்… என்ன ஏதுன்னு நாம அவர்கிட்ட போனில் விசாரிக்க முடியாது.“
“அவரே பேசினாரா அத்தான்?“
“ஆமாம். நேர்ல வாங்க ஒரு சர்ப்ரைஸ் தரேன்னார்… அதான் நானும் ஒரு சர்ப்ரைஸ் அவருக்குத் தரலாம்னு பாக்கறேன்.“ சிரிக்கிறான் ராமசாமி. “நாம தகவல் குடுத்த ஐந்து ஆறு மணி நேரத்துக்கு உள்ளவே முதல் திருடன் மாட்டிக்கிட்டான். அத்தோடு எல்லாரையும் அடுத்தடுத்து பிடிச்சிருக்காங்களே… அவருக்கே அதில் திருப்தி…“
“இப்ப நாம எதுக்கு?“
“போயிப் பாத்திருவோம்…“ என்கிறான் ராமசாமி.
ஆட்டோவில் கமிஷனர் அலுவலகம் போகிறார்கள். தங்கை மாதுரி பேசுகிறாள். “அண்ணா? பாத்தேன் அண்ணா….“
“எப்பிடிடி இருக்கே? குட்டி எப்பிடி இருக்கு…“
“நல்லா இருக்கா அவளுக்கென்ன?“
“மாப்ளை எப்பிடி இருக்கிறார்?“
“அதெல்லாம் இருக்கட்டும். பேப்பர்லியே  வந்திட்டியே அண்ணா? எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்…“
“சரி.“
“என்ன சரி? எங்களுக்கெல்லாம் ட்ரீட் குடுக்கணும்…“
“நீ வாடி மெட்ராசுக்கு. அப்ப பார்க்கலாம்…“
அவன் வைக்குமுன் அடுத்த அழைப்பு. மேனேஜர் ராமகிருஷ்ணன். “ஆங்கில பேப்பர்லியே விலாவாரியா எழுதியிருக்கான்யா. நேரம் நல்லா யிருந்தா கலப்பைக்கே துளிர் விடும் போலருக்கே…“ என்கிறார். “தேங்ஸ் சார். கமிஷனர் வரச் சொன்னார். அதான் போயிட்டிருக்கேன்…“
“போயிட்டு வா.“ அவன் வைக்கு முன் அடுத்த ஃபோன் “மாப்ளே?“
“சொல்லுங்க மாமா…“
ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்க்கிறான்.  ராமசாமிக்கு என்னவோ போலிருக்கிறது. “அப்பறம் பேசறேன் மாமா…“ என்கிறான்.
“இல்ல மாப்ளே… ஒரு நிமிஷம். பெப்பர்ல… பாத்தேன் மாப்ளே…“
“சரி.“
“இவளோட படத்தையும் சேர்த்துக் குடுத்திருக்கக் கூடாதா மாப்ளே?“
“உங்க பொண்ணு ரொம்ப அழகு மாமா. அப்பறம் அவளை மாத்திரம் போட்டுட்டு என்னை விட்டுருவாங்க.“ ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்க்கிறான் மறுபடியும். “நான் அப்பறம் பேசறேன் மாமா…“
“இல்ல ஒரு நிமிஷம்…“
“கூட சிகாமணி இருக்கான் மாமா. அவன் கூடப் பேசுங்க…“ சிகாமணி போனுக்குக் கை நீட்டுகிறான்.
“நான் அப்பறம் பேசறேன்…“ என்று அவர் வைத்து விடுகிறார்.
ஆட்டோ டிரைவர் கேட்கிறான். “என்ன சார் போட்டோ அது இதுன்னு…“
“சாரோட படம் இன்னிக்கு தந்தி பேப்பர்ல வந்திருக்கு…“ என்று புன்னகை செய்கிறான் சிகாமணி. ராமசாமியும் புன்னகை செய்கிறான்.
“தந்தில யாரையாவது தெரியுமா சார் உங்களுக்கு?“ என்று கேட்கிறான் ஆட்டோக்காரன். ராமசாமியின் முகம் மாறுகிறது. “ரோட்டைப் பாத்து ஓட்டுப்பா“ என்கிறான்.
கமிஷனர் அலுவலகம். அவர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். வாயிலின் ஜாக்கெட் போன்ற ஆடு கதவுகள். அதைத் தள்ளிக்கொண்டே போகவும் வரவுமாக நபர்கள். பரபரப்பாக இருக்கிறது. ஒரு போலிஸ் வந்து “ஐயா உங்களைக் கூப்பிடறாங்க…“ என்று பணிவாய்ச் சொல்கிறான். சிகாமணிக்கு ராமசாமியை விட பரபரப்பு அதிகமாய் இருக்கிறது.
“வணக்கம் சார்…“ என உள்ளே  நுழைகிறான் ராமசாமி.
“உங்களை வரச் சொன்னது சர்ப்ரைசா இருந்தது இல்லியா?“
“ஆமா சார். வெல்டன்.. ரொம்ப வேகமா நீங்க செயல்பட்டீங்க…“
“எத்தனையோ முயற்சிகள் செய்யிறோம். சிலது சட்னு வலைக்குள் மாட்டிருது… எனக்கு என்ன ஆச்சர்யம்னால்… தூரத்தில் அவனைப் பார்த்து வரைஞ்சது… முக அடையாளம் சரியா இருந்தது. உங்க கிட்ட சொன்ன போது…“
அப்போது ஒரு சிறுவன் உள்ளே நுழைகிறான். “என்ன சாப்பிடறீங்க?“ ராமசாமி எதுவும் சொல்லுமுன் சிகாமணி “கூல் டிரிங்ஸ்“ என்கிறான் சிரிப்புடன். அவர் தலையாட்டுகிறார். சிறுவன் போகிறான்.
“ம். எங்க விட்டேன்? ஒராளை மனசிலேயே ஞாபகப் படுத்திக் கூட வரைவேன்னு நீங்க சொன்னீங்களா? அது அற்புதமான விஷயம் மிஸ்டர். உங்க பேர் என்ன?…“
“கூல் டிரிங்ஸ்“ என்கிறான் சிகாமணி. ராமசாமி அவனை முறைத்து விட்டு “ராமசாமி சார்“ என்கிறான்.
“ஆமாம். எங்க டிபார்ட்மென்ட்டில் இப்பிடி ஒரு ஆள் இல்லியேன்னு பட்டது…“ என்று புன்னகை செய்கிறார்.
“ஒரு தடவை பாத்திட்டால்… வீட்ல போயி… நினைவு வெச்சிக்கிட்டு… அப்படியே வரைஞ்சிருவேன்னு நான் சொல்றதை நீங்க நம்ப முடியல்ல இல்லே சார்?“
அவர் புன்னகை செய்கிறார்.
கூல் டிரிங்ஸ் வருகிறது. சிறுவன் அதன் மூடியைத் திறக்க புஸ் என்று பாம்புச் சீறல். ராமசாமிக்கும் சிகாமணிக்கும் முன்னால் ஒவ்வொரு பாட்டிலை ஸ்ட்ரா போட்டு வைக்கிறான் பையன். சிகாமணி எடுத்து ஸ்ட்ராவில் உறிஞ்சிக் குடிக்க ஆரம்பிக்கிறான். ராமசாமி கையில் சுருட்டி வைத்திருந்த அட்டைக் காகிதத்தை அவரிடம் புன்னகையுடன் தருகிறான். வாங்கிப் பார்க்கிறார் அவர். “நேத்து வரைஞ்சேன் சார்.“
அது கமிஷனரின் படம்.
“உங்களை போன தடவை தான் பார்த்தேன்… வெறும் நினைவிலேயே வரைஞ்சிருக்கேன் சார்…“
“எக்சலென்ட்“ என்று கை குலுக்குகிறார் கமிஷனர்.
“அத்தான் சாப்பிடுங்க.“
அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு குளிர் பானத்தை எடுத்து உறிஞ்ச ஆரம்பிக்கிறான் ராமசாமி. குடித்து சிறிது பாட்டிலிலேயே மீதம் வைக்கிறான்.
“நம்பவே முடியல மிஸ்டர் ராமசாமி… உங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சேன். நீங்க அதுக்கு முன்னால, எனக்கு சர்ப்ரைஸ் தந்திட்டீங்க…“
“அத்தான்…“ என காதுக்குக் கிட்டத்தில் பேசுகிறான் சிகாமணி. கமிஷனர் வேறேதோ அலைபேசி அழைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார். “என்னடா?“
“கூல் டிரிங்சை மிச்சம் வெச்சிட்டீங்க…“
“சும்மா இருடா.“
பேசி முடித்துவிட்டு ராமசாமியிடம் கேட்கிறார் கமிஷனர். “நான் என்ன சர்ப்ரைஸ் குடுப்பேன்னு எதிர்பார்க்கறீங்க?“
“நான் இங்க வந்ததே, நீங்க கூப்பிட்டு அனுப்பிச்சதே சர்ப்ரைஸ் தான் சார்…“
“வாங்க“ என எழுந்து போகிறார் கமிஷனர். பின்னாலேயே போகிறான் ராமசாமி. “அத்தான்?“ என கிசுகிக்கிறான் சிகாமணி. “வாடா…“ என்றபடி போகிறான் ராமசாமி. அறையில் யாரும் இல்லை. ராமசாமியின் பாட்டிலில் கொஞ்சம் பானம் மிச்சம் இருக்கிறதை சிகாமணி பார்க்கிறான். சட்டென அதை எடுத்து தன் வாயில் ஊற்றிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறுகிறான்.
ஒரு பரந்த கூடத்தில் தள்ளித் தள்ளி போலிஸ்காரர்கள் நிற்கிறார்கள். கமிஷனர் முன்னால் போக பின்னால் ராமசாமி. ஓடி வந்து சிகாமணி சேர்ந்து கொள்கிறான். மூன்று குற்றவாளிகள் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். ராமசாமியிடம் திரும்பி “நாங்க பிடிச்ச திருடர்கள் இவர்கள்தான்… உங்க அடையாளம் சரியா இருக்கா?“ என்று கேட்கிறார்.
“ரியலி சர்ப்ரைஸ் சார்“ என்று முகம் மலரச் சொல்கிறான் ராமசாமி. முதல் திருடன் கிட்டே போகிறான். “இவனை நான் பார்த்தது இல்லை“ என்கிறான். “இவன் தான் கார் டிரைவர்“ என்கிறார் கமிஷனர். ராமசாமி அவனைத் தாண்டிப் போகிறான். அவன் கூட வரும் சிகாமணி கார் டிரைவரைப் பார்த்து என்னவோ சொல்ல வருகிறான். அவன் சட்டென உதட்டைத் துருத்தி.  ஆவேசப் பட - பயந்து ராமசாமிகூட போய்ச்சேர்ந்து கொள்கிறான் சிகாமணி.
கமிஷனர் அருகில் போய் எதோ ரகசியமாய்ச் சொல்கிறான் ராமசாமி. அவர் சரி என்கிறாப் போல தலையாட்டுகிறார்.
ஒரு திருடன் பக்கம் போய் நிற்கிறான். அவன் முகத்தை அருகில் பார்க்கிறான். பளாரென்று அவன் எதிர்பாராத நேரம் அவனை அறைகிறான். “மகனே அப்பவே துப்பாக்கியை நீட்டியவன் தானே… நீ சுட்டிருந்தால் நான் இப்ப உன் முன்னால் நின்னுட்டிருக்கவே மாட்டேன்…“
அடுத்த திருடனிடம் வருகிறான். அவன் முகத்தையே பார்க்கிறான். ஒரு சிரிப்பு சிரிக்கிறான். பளார் பளார் பளார் பளார். நான்கு அறைகள் விடுகிறான். “நான் ரெண்டு அறை தானேய்யா விட்டேன் உன்னை?“ என்கிறான் திருடன்.
“மொத்தம் ரெண்டு வாட்டி…“ என்கிறான். “ரெண்டும் ரெண்டும் நாலு அறை அறைஞ்சிருக்கே என்னை…“ என்கிறான் ராமசாமி. திரும்பி கமிஷனரிடம் வருகிறான். “கொஞ்சம் பயமாத்தான் இருந்தது… இருந்தாலும் நீங்க கூட இருக்கறதுனால…“ என்று சிரிக்கிறான்.
கமிஷனர் சிரித்தபடி “தம்பி என்ன பண்றாரு?“ என்கிறார்.
“என் மனைவியோட தம்பி சார்.“
“என்ன வேலை பார்க்கறாரு?“
“அக்காவுக்குத் துணையா….“
“வீட்ல சும்மா இருக்கிறாரா?“
“சினிமாவுல வாய்ப்பு தேடிட்டிருக்கேன் சார்…“ என்கிறான் சிகாமணி.
“எப்ப தொலைச்சீங்க…“ என்கிறார் கமிஷனர்.
“சினிமாவைப் பொருத்தவரை, தேடறதும் தொலைக்கறதும் ஒண்ணுதான் சார்…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
வெளியே வருகிறார்கள். கிடைத்த ஆட்டோவில் ஏறிக் கொள்கிறார்கள். “அங்க வந்து மானத்தை வாங்கறியேடா “ என்று பல்லைக் கடிக்கிறான் ராமசாமி. “இனிமே எங்கயும் உன்னைக் கூட்டிட்டு வர மாட்டேன்…“
“ஒரே ஒரு இடத்துக்கு மாத்திரம் கூட்டிட்டுப் போங்க அத்தான். போதும்…“
“எங்கடா?“
“அத்தான். ஒரு அருமையான பிராஜக்ட் ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்..“
“அதான் சொன்னியே…“
“எது அத்தான்?“
“அந்தச் சின்னக்கனி கதை தானே?“
“ஆமாம் அத்தான். நாயகன் பார்ட் ட்டு. நாட்டையே அதிரடிக்கணும் அத்தான்.“
“விட்றா… புது வம்பு எதுக்கும் நான் லாயக் பட மாட்டேன்.“
“உங்களை அப்பிடிக் கொண்டாடறான் சின்னக்கனி. அப்டி இப்டின்னீங்க. அவன் உங்களுக்கு வேணாம்… நான் பழகிக்கறேன். அப்பவே தாதா மாதிரின்றீங்க. இப்ப அதை விடப் பெரிய ஆளா ஆயிருக்க மாட்டானா?“
“அதுக்கு?“
“நாயகன் பார்ட் ட்டூ – அருமையான மேட்டர் அத்தான்.“
“நீயே போயித் தேடிக்கோ அவனை… நான் வரல்ல… எனக்கு அதைவிட நிறைய வேலை இருக்கு…“
“இல்ல அத்தான். உங்களைத் தான் அவன் அப்பிடி மதிக்கிறான். இல்லியா? உங்களை அவனே எப்ப வேணாலும் வந்து பாருங்கன்னு சொன்னான் இல்லியா? இருபத்தி நாலு மணி நேரமும்… எப்ப வேணாலும் வரலாம் நீங்க. அப்டி இப்டின்னு சொன்னானா இல்லியா?“
“அதுக்கு?“
“போவோம். போயிப் பார்ப்போம்…“
“பயமா இருக்குடா… இது வேண்டாத வம்பு தான்.“
அலுவலக வாசலில் இறங்கிக் கொள்கிறான் ராமசாமி. “என்ன அத்தான் நீங்க… என் கனவு பிராஜக்ட் இது அத்தான்… நான் உங்களைத் தான் நம்பி யிருக்கேன்“ என்கிறான் சிகாமணி.
“நமக்கு அவன் தேவையே இல்லைடா…“
“எனக்குத் தேவை அத்தான்.“
ராமசாமி அவனையே பார்க்கிறான். “இப்ப என்னன்றே நீ?“
“நாம போறோம் அத்தான்…“
“நளைக்குப் பார்ப்போம். அவனை எங்க தேடறது? எப்பிடித் தேடறதுடா?“
“அவன் என்ன சொன்னான்? சண்முகா டாக்கிஸ் பக்கம்… சைதாப்பேட்டை… எங்க போனாலும், யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்கன்னு உங்ககிட்ட சொன்னானே?“
“அவன் சொன்னதை என்னை விட நீ நல்லா ஞாபகம் வெச்சிருக்கியே…“
“என்ன சொல்றீங்க அத்தான்?“
“ச். விட மாட்டேங்கறே…“
“நாளைக்கு…“ என்கிறான் ராமசாமியிடம். “போங்க““ என்கிறான் ஆட்டோக்காரரனிடம். ஆட்டோ கிளம்புகிறது. ராமசாமி பாங்க் வாசலில் நின்றபடியே ஆட்டோ போவதைப் பார்க்கிறான்.
சைதாப்பேட்டை. மெல்ல சிகாமணியும் ராமசாமியும் நடந்து போகிறார்கள். சண்முகா டாக்கிஸ் பக்கம். தெரு திரும்பும்போதே களை கட்டுவதாய் இருக்கிறது. அங்கங்கே சின்னக்கனி படம் போட்ட போஸ்டர்கள். பிறந்த நாள் வாழ்த்து. “கண்டுபிடிக்க ஒரு சிரமமும் இருக்காது அத்தான் வாங்க…“
தயங்கித் தயங்கிப் போகிறான் ராமசாமி.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk reading of 5 chapters please visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment