Friday, September 25, 2015

அத். 35 updated everyday - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்


வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 35

ங்கி. நிகழ்காலம். மேனேஜர் ராமகிருஷ்ணன். நிமிர்ந்து சட்டென முகம் மலர்கிறார். “வாய்யா ஹீரோ சார்…“ வெட்கத்துடன் வருகைப் பதிவில் கையெழுத்திட உள்ளே வருகிறான் ராமசாமி. “என்ன சார்?“
“என்ன… சாரா? நாட்ல இப்ப எங்க பார்த்தாலும் உன் பேச்சு தான்யா…“
“அப்பிடியா சார்“ என சிரிக்கிறான்.
“அது சரி. ரெண்டு வருஷம் கழிச்சி… எப்பிடிய்யா உனக்கு அவன் முகம் ஞாபகம் வந்தது?“
“அதாவது சார்…“ என அவன் எதோ சொல்லுமுன், “அதான் ராமசாமி. நமக்கெல்லாம் நேத்து நடந்ததே மறந்து போகிறது…“ என்றபடியே உள்ளே வருகிறான் ரமேஷ். “உங்க வரைக்கும் செய்தி வந்தாச்சா?“ என்கிறான் ராமசாமி. “பின்னே?“ என்கிறான் ரமேஷ். “நீ சொன்ன பைக் நம்பரை வெச்சி முதல்ல அந்த ரௌடிகளில் ஒருத்தனை மடக்கியிருக்காங்க. எங்கியோ ஓ எம் ஆர் ரோடுப் பக்கம் மாட்டியிருக்கான். அவனை அடிச்சி உதைச்சி விசாரிச்சதில் அந்த ரெண்டாவது திருடனைப் பத்தி துப்பு கிடைச்சிருக்கு…. அவன் சோழிங்கநல்லூர்ல மாட்டியிருக்கான். அப்படியே அந்தக் கார் டிரைவர்… அவனும் இன்னிக்குப் பிடிபட்டாச்சு.“
“எல்லா விவரமும் எனக்கு முன்னே உங்களுக்கு வருதேய்யா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“பெரிய விஷயம் ராமு. களவு போன பணம் சுமார் பதிமூணு லட்சம். எவ்வளவு திரும்ப பணமா கைக்கு வருது பார்க்கலாம். நல்ல வேளை நகை லாக்கர் பக்கம்லாம் கை வைக்கல. என்னவோ அத்தோட போயிட்டாங்க…“ என்கிறார் மேனேஜர்.
“ஆமா சார். ரெண்டு வருஷமா அவங்களைப் பிடிக்க முடியல்ல. எனக்கே அவங்க கிடைப்பாங்கன்னு நம்பிக்கை இல்லை. அத்தோட இப்பிடி அதுக்கு நான் பயன்படுவேன்னு சத்தியமா நினைக்கல்ல சார்…“
“ஆச்சர்யமா இருக்கு. சொல்லுய்யா. அவனை நீ ஒரு ஹோட்டல்ல பார்த்தே… அது எப்போ? ஒண்ணரை ரெண்டு மாசம் இருக்குமா? திடுதிப்னு இப்ப அவன் ஞாபகம் எப்பிடி வந்தது? எப்பிடி அந்த வரைஞ்ச படத்தை நேத்து தேடினே? தேடி எடுத்து போலிசுகிட்ட குடுக்கலாம்னு எப்பிடி உனக்குத் தோணித்து…“ என்று அடுக்கடுக்காய்க் கேட்கிறார் ராமகிருஷ்ணன். அவன் பதில் சொல்லுமுன், “ஒருவேளை அவன் தான் திருடன்னு நீ தப்பா அடையாளம் காட்டியிருந்தால்?“ என்று சேர்த்துக் கொள்கிறார்.
“தெளிவா எனக்கு அவன்தான்னு மனசுக்குத் துல்லியப் படும் வரை நான் அதை போலிசுகிட்ட தந்திருப்பேனா சார்?“
அப்போது ஃபோன் வருகிறது. ராமகிருஷ்ணன் எடுத்து “நேஷனல்?“ என்று பேசுகிறார். “ஆமா சார். நம்ம கிளைதான் சார்… அதைக் கண்டுபிடிச்சதும் நம்ம ஸ்டாஃப் தான் சார்… இருக்கார் சார்… இதோ சார்…“ என்றவர் ரிசிவரைப் பொத்திக் கொண்டு, “ரீஜனல் ஆஃபிஸ்லேர்ந்து… ஏ ஜி எம் பேசறார்…“ என்கிறார். ராமசாமி தொலைபேசியை வாங்கிக் கொள்கிறான். “ஆமா சார். நான்தான் சார். தேங்ஸ் சார். I’M HONOURED SIR. SO KIND OF YOU SIR. நேர்ல வரேன் சார். சரி சார்“ என தொலைபேசியை வைக்கிறான்.
“எல்லாருக்குமே இந்தச் செய்தி பரபரப்பா ஆயிட்டது“ என்கிறான் ரமேஷ். “பேப்பர்ல வந்திருக்கே…“ என்கிறார் ராமகிருஷ்ணன். “நேத்து சாயந்தரம் கமிஷனர் ஆபிஸ்லேர்ந்து ஃபோன்னதும் எனக்கு ஒண்ணுமே விளங்கல்ல. நீயாவது என்கிட்ட இந்த மாதிரி நான்  கமிஷனர் கிட்ட போயிருந்தேன்னு ஒரு வார்த்தை சொன்னியா?“
“எப்பிடியும் திருடனைப் பிடிச்சிருவாங்க. அவரே உங்க கிட்ட சொல்லணும்னு இருந்தேன் சார்.“
வெளியே வருகிறான். டிராஃப்ட் வேலைகள் காத்திருக்கின்றன. “சார் உங்க பிரான்ச் தானே? இன்னிக்குப் பேப்பர்ல நியூஸ் பார்தேன்…“ என ஒருத்தன கேட்கிறான். “அதுக்கு துப்பு குடுத்ததே சார் தான்“ என்கிறான் ரமேஷ்.. “அப்பிடியா சார்…“ என கை கொடுக்கிறார்கள். ராமசாமி வெட்கமாய்த் தலையாட்டிவிட்டு வேலையில் மும்முரப் படுகிறான். ரமேஷ் அருகே. அவனும் வேலை மும்முரத்தில் இருக்கிறான்…
ராமசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான். மணி 11 45. “ரமேஷ்?“ என்று கூப்பிடுகிறான் ராமசாமி. “என்னடா?“ என்று ரமேஷ் திரும்புகிறான். “ரெண்டு நாள் முன்னாடி… இதே நேரம்…“
“ஒரு நேரமும் இல்லை. ரெண்டு நாள் முன்னாடி நீ வேலைக்கே வரல்ல. யாரோ உன்னை ஃபோன்ல கேட்டாங்க… யார்னு தெரியல்ல.“
“இவதான் கூப்பிட்டிருப்பா… நான் ஏன் வேலைக்கு வரல்ல? ANY GUESS?“
“கேட்டால் என்ன சொல்வே? நான் வந்திருந்தேன், அப்பிடிம்பே.  என்ன வேலை பார்த்தேன்னால், இதோ இதே வேலைதான்…னுவே.“
“அதில் சிறு மாற்றம்… இன்னிக்குத் தேதிப்படி ரெண்டு நாள் முன்னால்… என்ன நாள்?“
“ம்… இன்னிக்கு செப்டம்பர் 25. ரெண்டு நாள் முன்னாடி? செப்டம்பர் 23.“
“வருஷம்?“
“போரடிக்காதே. 2016.“
“அப்ப ரெண்டு வருஷம் முன்னாடி…“
“என்ன?“
“ரமேஷ். நீ மறந்திட்டே. ரெண்டு வருஷம் முன்னாடி செப்டம்பர் 23 அன்னிக்கு தான் நம்ம பேங்க்ல ROBBERY.“
“ஏ ஆமாண்டா ஆமாண்டா.“ பரபரப்புடன் கிட்டே வருகிறான் ரமேஷ்.
“இப்ப மணி என்ன?“
“11 50.“
“கிட்டத்தட்ட இந்நேரம் தான் என்னை அறைந்து அப்படியே ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டான் அந்தத் திருடன்.. நேரா என்னைப் பார்க்க துப்பாக்கியை நீட்டினானா? பயத்துல உடம்பெல்லாம் உதற ஆரம்பிச்சிட்டது…“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“ரெண்டு நாள் முந்தி…“ என்கிறான் ராமசாமி புன்னகையுடன்.
“சார் டிராஃப்ட் ரெடியா?“ என ஒரு பெண் வந்து கேட்கிறாள்.
“இவள் தான் கடைசி. இவளை அனுப்பிட்டு வெளியே போய்ப் பேசுவோம்…“ என்கிறான் ராமசாமி.
“சரி. நான் வெளியே காத்திருக்கிறேன்…“ என ரமேஷ் எழுந்து போகிறான்.
ராமசாமி வெளியே வருகிறான். “DO YOU WANT TO SMOKE?“
“இல்ல. வேணாம்…“ என்கிறான் ரமேஷ்.
“ஏன்டா இப்பல்லாம் வேணான்னுர்றே?“
“சிகரெட்டை விட்டுட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.“
“வெரி குட்“ என்கிறான் ராமசாமி. “எப்ப்டிடா நீ இந்த சிகரெட் பழக்கத்துல மாட்டிக்கிட்டே-“
“அது… ச்… என் அண்ணன்… வீட்ல தினமும் அடிச்ச கலாட்டா… எப்பவும் ஒரு மாதிரி படபடப்பா டென்ஷனா ஆக்கிட்டிருந்தான் என்னை…“
“எல்லாருமே ஒரு மாதிரி… ஒரு கவலையில் இருந்து தப்பிக்கறதா நினைச்சி இன்னொரு கவலைல போயி மாட்டிக்கிறாங்க…“ என்கிறான் ராமசாமி.
“VERY TRUE.“
“அப்பறமா இந்தக் கவலை முதல் கவலையை விடப் பெரிசா ஆயிருது…“
“ஆமா நீ சொல்றது சரியாத்தான் இருக்கு…“
“அதைவிட, உன் அண்ணன் வீட்ல படுத்தின பாடு… உன் சிகரெட் பழக்கத்தினால அதற்கு என்ன தீர்வு கிடைச்சது?“
“அதொண்ணும் இல்லை.“
“ஆக… இதுனால என்ன பிரயோசனம்? வீதில போற ஓணானை மடில கட்டிக்கிட்ட காரியம் தானே இது…“
“நான் இப்ப சிகரெட்டை விட்டுட்டேன்டா“ என்று சிரிக்கிறான் ரமேஷ். “எப்பிடி நிறுத்தினேன்றே?“
“சொல்லு சொல்லு…“
“அண்ணன் பொண்ணு இல்ல? அவ ஒருநாள் மொட்டைமாடியில் சிகரெட் குடிக்கறதைப் பார்த்திட்டாள்… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல…“
ராமசாமி அவனைப் பார்க்கிறான்.
“என்ன இது சித்தப்பா? இதெல்லாம் வேணாம் சித்தப்பா…ன்னா பாரு. ரொம்ப வெட்கமாப் போச்சு. அவள் அட்வைஸ் பண்ற அளவுக்கு நம்ம நிலைமை ஆயிட்டதே…ன்னு சீச்சீன்னு ஆயிட்டது. நம்ம கௌரவத்தை நாமதான் காப்பாத்திகணும்னு இருந்ததுடா.“
“ஆக சிகரெட்டை விட்டுட்டு வாழ்க்கைய்த தேர்ந்தெடுத்திட்டே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.

டீக்கடைப் பக்கம் வந்து சேர்கிறார்கள்.
“செப்டம்பர் 23. அந்த நாளை நான் மறந்தே போயிட்டேன்டா…“ என்றபடியே கூட ரமேஷ் வருகிறான். “சரி. அந்த நாளில் தான் வங்கிக் கொள்ளைன்னு தெரியுமே… தெரியும்னு நீ இப்ப சொல்றே. ஒருவேளை அது ஞாபகம் இல்லாமல் பழைய காலத்துக்குப் போயிட்டியா?“
“தெரியும். நல்லா ஞாபகம் இருந்தது. தெரிஞ்சே தான் போனேன் ரமேஷ்…“ என ராமசாமி புன்னகை செய்கிறான்.
“எதுக்கு அப்பிடி ஒரு ரிஸ்க் எடுத்தே இவனே?“
“இல்லடா. நம்மால அதைத் தடுக்க முடியலாம்னு ஒரு நப்பாசை… அத்தோட… என்னைக் கட்டிப் போட்டான் பாரு ஒருத்தன். அவனைத் திரும்ப கிட்டத்தில் பார்க்க… இன்னொரு வாட்டி பார்க்க, நான் நினைச்சேன்.“
“ஐயோ. எத்தனை பெரிய ரிஸ்க் டா அது…“
“இருக்கட்டும்… பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் துணிஞ்சிறலாம்னு… எனக்கு இப்பிடி ஒரு சான்ஸ். ஒரே முகத்தை, தெரியாத முகத்தை இன்னொரு வாட்டி பார்க்க வாய்க்கிறது… அதும் நாம தேடிட்டிருக்கிற ஒருத்தன். விட்டுற முடியுமா அதை?“
“உன் உயிருக்கு எதும் அதுனால் ஆபத்து வந்திருந்தால்?“
“முதல் தடவை உயிருக்கு ஆபத்து வரல்லியே…“
“அட உன்னையே அறியாமல் எதும் நிகழ்வை மாத்தியிருந்தால் நீ மாட்டியிருக்கவும் கூடும். அப்ப நீ ஒரு ALTERNATE REALITY யில மாட்டியிருந்தால் என்ன பண்ணுவே? நமக்கே என்ன நடக்கப் போகுதுன்னு அப்ப யூகிக்க முடியாத நேரம் அது… இல்லியா?“
ராமசாமி அவனைப் பார்க்கிறான்.
“இல்லடா. நீ சொன்னியே? நீ ரெண்டு வருஷம் முன்னாடி சந்திக்காத ஒருத்தனை…“
“சின்னக்கனி…“
“இந்த வாட்டி சந்திச்சியா இல்லியா? அது மாதிரி புதுக் குழப்பம் வரலாம் இல்லியா?“
“ஒரு அசட்டு தைரியம் இவனே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “இந்த ரெண்டு திருடர்களையும் பிடிக்க… சின்னக்கனியையும் தயாரா உதவிக்கு வெச்சிருந்தேன்…“
“அடப்பாவி.“
“ரிஸ்க்தான்… IN MY MIND ACTUALLY IT WAS ANYBODY’S GAME.“
“என்ன ஆச்சி? பின்னே? கொள்ளையர்களைப் பிடிச்சிட்டீங்களா?“
“இல்லை.“
“ஏன்?“
“மூணு எட்டு குழப்பம் ஆயிட்டது… அதை விட்றா…“ என்று சிரிக்கிறான்.
“அதுனால தான் நடந்தது பழசு மாறாமல் அப்பிடியே திரும்ப நடந்திருக்குன்னு படுது… அப்பிடியும் இருக்கலாம்.“
“அதுவும் நல்லதுதான்… ஆனால் அந்த ரௌடியைக் கிட்டத்தில் பார்த்ததுமே எனக்கு அவன்தான்னு பிடிபட்டுட்டது. சி சி டி வி கேமெராவை நொறுக்கியதும், கைல கிளவுஸ் போட்டுக்கிட்டதுமா உஷாராத் தான் இருந்தாங்க. எல்லாரையும் ஒரு அறையில் போட்டு அடைச்சி வெளியே தாள் போட்டுட்டாங்க.“
“ஐயோ. என்னையும் தான் உள்ள அடைச்சாங்க.“
“நாந்தான் ஒரு குவியல் லெட்ஜருக்குள்ள ஒதுங்கிக் கிடந்தேன். நான் எழுந்துக்கறதுக்குள்ள அவங்களை உள்ளே போட்டு அடைச்சிட்டாங்க. நான் வேற வழியில்லாமல் படுத்துக் கிடந்தேன்… அப்ப அவங்க கேஷ் கவுன்டருக்குள்ள போனபோது முகத்திரையை அவுத்தாங்க. சி சி டி வி இல்லியேன்னு தைரியம்.. என்னை ஒருத்தன் கண்டுபிடிச்சதும் திரும்ப திரை போட்டுக்கிட்டு என்னைப் பார்க்க ஓடி வந்தான்… என்னை அடிச்சி உதைச்சி ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டான்…“
“அவங்க போனதும் போலிஸ் எப்பிடி வந்ததுடா?“
“உனக்கு ஞாபகம் இருக்கா ரமேஷ்? எப்பிடி வந்தது தெரியல்ல. உன் கூடத்தானே எல்லாரும் ஒரு அறையில் இருந்தாங்க…அவங்கள்ல யாராவது செல் ஃபோன்ல போலிசைக் கூப்பிட்டாங்களா?“
“இருக்கலாம். பாசிபிள்… எனக்கு ஞாபகம் இல்ல. என் செல் ஃபோன் என் மேசை டிராயர்லயே விட்டிருந்தேன் நான். அது ஞாபகம் இருக்கு…“
“ம். அதான் என் அட்வென்சர்… ரெண்டு வாட்டி திருடன் கிட்ட அடி வாங்க வேண்டியதாயிட்டது… பரவால்ல. பிடிச்சமே?“
“இல்லடா. இப்ப ஒண்ணு புரியல எனக்கு. ஏன் நீ பழைய காலத்துக்கே போயி இதே தகவலை போலிஸ்கிட்டக் குடுத்திருக்கக் கூடாதா?“
“நான் கூட அதை யோசிச்சேன். ஆனால்… என்ன தெரியுமா?“
“கொள்ளை அடிச்ச பணத்தோட அவங்க நிச்சயம் ஊரை விட்டே எங்காவது தாண்டிப் போயிருப்பாங்க. அவங்க மூணு பேரும் காரில் இருப்பாங்க. இந்த நேரம் இந்த பைக் நம்பரை வெச்சி என்ன பண்ண? நிகழ்காலம்னால்… அவனும் நாம தேடறதை எதிர்பார்க்க மாட்டான்… அத்தோட….“
“இதுவரை நல்லா பேசினே… அதுசரி. அது என்ன அத்தோட…? அதுக்கு என்ன அர்த்தம்?“
“பழைய காலத்தில் நாம அவனைப் பிடிச்சோமா?“
“இல்லை.“
“இப்ப பழைய காலத்திலேயே முயற்சி பண்ணினால்… நம்ம வெற்றி FIFTY FIFTY அப்டின்னு ஒரு பயம் எனக்கு. இதை நிகழ்காலத்துக்கு எடுத்துட்டு வந்து கையாளறதுல வெற்றி சதவிகிதம் அதிகம்னு ஒரு கணக்கு… எப்பிடி?“ என்று சிரிக்கிறான்.
“சில கணக்கை ரொம்ப அழகாப் போடறே. சில கணக்கை கோட்டை விடடுர்றே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அப்போது ராமசாமியின் செல் போனில் அழைப்பு வருகிறது. தெரியாத எண்.
“யார்றா?“ என்கிறான் ரமேஷ். “தெரியல. புது நம்பர்“ என்றபடியே ராமசாமி பதில் அளிக்கிறான். “ஹலோ?“
“ராமு? நான் கிருஷ்ணராஜ் பேசறேன்…“
“சார் நீங்களா?“
“ஆமாம். இப்ப புனேல வேலை பார்க்கறேன்… எப்பிடி இருக்கே?“
“உங்க ஆசிர்வாதம் சார்…“
“அதே பிரான்ச்லதான் இருக்கேன்னு கேள்விப்பட்டேன்…“
“எப்பிடி சார்?“
“ரீஜனல் ஆபிஸ்ல சொன்னாங்க. சேதில்லாம் கேள்விப் பட்டேன். நம்ம பீரியடுல நடந்த அந்த ROBBERY…“
“ஆமா ஆமா சார்.“
“BEST PERFORMANCE AWARD வாங்கிட்டு கடைசியா இப்பிடி ஒரு திருட்டுலயும் நம்ம கிளை மாட்டிக்கிட்டதுன்னு இருந்தேன்… இப்ப என்ன? அவங்க மூணு பேருமே மாட்டிக்கிட்டாங்களாமே?“
“ஆமா சார்.“
“பரவால்லய்யா. நீ அவங்களை எப்பிடியோ நினைவு வெச்சிக்கிட்டு…“
“உங்க கீழே வேலை பார்த்த GOOD PERFORMERS ல ஒருத்தன் சார் நான்…“
“நல்ல விஷயம். நல்ல விஷயம்… என்கிட்ட தகவல் சொல்லி உன்னைப் பத்திக் கேட்டாங்க.“
“என்னன்னு சார்?“
“யாரு என்ன எப்பிடின்னு விவரம் கேட்டாங்க…“
“எதுக்கு சார்?“
“எதுக்கா?“ சிரிக்கிறார் கிருஷ்ணராஜ். “ஒரு மாசம் ரெண்டு மாசத்தில்… உனக்கு PROMOTION வந்தால் ஆச்சர்யப் படறதுக்கு இல்லை. என்னோட ADVANCE CONGRATULATIONS“ என்கிறார் கிருஷ்ணராஜ்.
ராமசாமிக்கு முகமே மகிழ்ச்சியில் பெரிதாகி விடுகிறது. “அது வருதோ இல்லியோ… உங்க ஆசிர்வாதம்… அது ரொம்பப் பெரிய சந்தோஷம் சார். என் நம்பரை இன்னும் வெச்சிருந்தீங்களா?“
“பின்ன? YOU ARE ONE OF THE GOOD PERFORMERS“ என்று சிரிக்கிறார்.
“சார்… கூட ரமேஷ் நிற்கிறான். பேசறீங்களா?“
“குடு. குடு…“ என்கிறார் கிருஷ்ணராஜ். “வணக்கம் சார்“ என அலைபேசியை வாங்கிக் கொண்டு அப்பால் போகிறான் ரமேஷ். ராமசாமி காத்திருக்கிறான். அதற்குள் புதிதாய் ஒருவன் அவன் பக்கம் வந்து, “நேஷனல் பேங்க சார் தானே?“ என்று கேட்கிறான். ராமசாமி தலையாட்டுகிறான். “பேப்பர்ல பார்த்தேன் சார்.“ அவன் போகிறான்.
ரமேஷ் திரும்ப வருகிறான். “பரவயில்லைடா. பழைய காலத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைச்சதை சரியா பயன்படுத்திக்க உனக்குத் தெரியுது…வெல்டன்.“
“SO FAR SO GOOD. MILES TO GO BEFORE I SLEEP…“ என்கிறான் ராமசாமி.
“நாளைக்கு உன் படத்தோட சேதி வருதாமே?“
சிரிப்புடன் திரும்புகிறான் ராமசாமி. “அதுக்குள்ள உனக்கு எப்பிடிடா தெரிஞ்சது?“
“காலைல உன் வீட்டுக்கு யாரோ ரிப்போர்ட்டர் வந்து புகைப்படம் கேட்டு வாங்கிட்டுப் போனானாம்… கேள்விப் பட்டேன்…“
“சிகாமணியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“இருக்கட்டும்டா. வீட்ல உன் கொடியை ஏத்திட்டே ராமு. ஒரு ஹீரோ ஆயிட்டு வர்றாப்ல இருக்கு… ஏற்கனவே சின்னக்கனிக்கு நீ தெய்வம்… I MEAN… AS YOU HAVE STATED… நான் எங்க அவனைப் பார்த்திருக்கேன்?“ என்கிறான் ரமேஷ்.
“இன்னும் எனக்கு பழைய காலத்தில் சில வேலைகள் இருக்கு…“ என்று நெற்றியைத் தேய்த்துக் கொள்கிறான் ராமசாமி. “இருக்கட்டும். இருக்கட்டும்… என்னடா கிருஷ்ணராஜ் PROMOTION அது இதுன்னாரு? வாழ்த்துக்கள்…“ என்கிறான்.
“அவர் மனசாரச் சொல்றாரு… நம்ம மேனேஜர் எழுதியனுப்பி, அது பரிசிலனை ஆகி…“
“வரட்டும். வந்தால் வேணான்னுருவியா?”
“அப்ப பார்க்கலாம்… அத்தைக்கு மீசை முளைக்கட்டும்“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
அவர்கள் அலுவலகம திரும்புகிறார்கள். “கேஷ் எட்டு லெட்சம் வரை கைப் பற்றி யிருக்கிறார்கள்னு தெரியுது…“ என்கிறார் ராமகிருஷ்ணன். “ஏ ஜி எம் சொன்னாரு… அவர் உன்னைப் பத்தி விசாரிச்சார்“ என்கிறார்.
ரமேஷ் அர்த்தத்துடன் ராமசாமியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்… “அத்தைக்கு மீசை அரும்பிட்டு வருதப்போவ்…“ என்று அவனைக் கிள்ளுகிறான்.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
for bulk 5 chapters please visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment