Wednesday, September 9, 2015

updated everyday - அத். 19 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

எஸ். சங்கரநாராயணன்
அத்தியாயம் 19
ராமசாமி வீடு. உள்ளே சிறு பூஜை அறையில் திலகா. குளித்து மங்களகரமாய் தலை நிறையப் பூவுடன். திருமாங்கல்யத்தை எடுத்து அதில் குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறாள். கடவுள் படங்களுக்குக் கற்பூரம் காட்டுகிறாள். அப்படியே கூடத்தில் இருக்கும் மாமனார் படத்துக்கும் காட்டுகிறாள். கூடத்தின் சுவரில் மாமனாரின் படம். மாலை போட்டிருக்கிறது. தலைமாட்டில் மினுக் மினுக் என ஒளிரும் சிரியல் பல் ஒன்று.
ராமசாமி படுக்கையறையில். இன்னும் எழுந்து கொள்ளவில்லை.. திலகா வந்து “என்னங்க?“ என எழுப்புகிறாள். பாதி கண்ணைத் திறந்தபடி “மணி என்ன?“ என்கிறான். “ஏழு“ என்கிறாள் திலகா. “ஏழு தானே?“ என அவன் திரும்பிப் படுக்கிறான். அவளுக்கு ஏமாற்றமாய் இருக்கிறது. “எழுந்துக்கறீங்களா தலைல தண்ணியைக் கொட்டவா?“
“என்னடி அவசரம். எட்டு ஆகட்டும். நானே குளிச்சிப்பேன்.“
அப்போது தொலைபேசி அடிக்கிறது. திலகா போய் எடுக்கிறாள். “ஆமாம்ப்பா. தேங்ஸ்ப்பா.“ சிரிக்கிறாள் மகிழ்ச்சியுடன். இங்க அவன் சற்றே தூக்கம் கலைந்த எரிச்சலோடு புரண்டு படுக்கிறான். “அவரா? அவர் தூங்கறார்ப்பா… சரிப்பா. குடுக்கறேன்.“
“என்னங்க?“
“யாரு?“
“அப்பா.“
“அவர் போய்ச் சேர்ந்து ஒண்ணு ஒண்ணரை வருஷத்துக்கு மேல ஆகுது.“
“அட உங்க அப்பா இல்ல, எங்க அப்பா“ என அவனை ஒரு செல்ல அடி போடுகிறாள்.
“என்னவாம்?“
“உங்க கூட பேசணுமாம்.“
“ச்“ என்றபடி எழுந்து லுங்கியைக் கட்டிக் கொண்டு தொலைபேசிக்கு வருகிறான். “சொல்லுங்க மாமா.“
“மெனி மெனி ஹெப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே.“
“கடைசில டே-ன்னீங்களே, அதுதான் மரியாதைக் குறைவா இருக்கு மாமா“ என்றவன், “எனிவே தேங்ஸ். இன்னிக்கு என்ன விசேஷம் மாமா?“ என்கிறான்.
“இன்னிக்கு…“
“இன்னிக்குதான் மாமா.“
“உங்களோட….“
“எங்களோட…“
“வெடிங் டே!“
“திரும்பவும் டே-ன்றீங்களே…“ என்றவன், “ஆ அப்பிடியாடே… சாரி. நன்றி மாமா. திலக்? அப்பிடியா? சொல்லவே இல்லே?“ என்று அவளைப் பார்த்துத் திரும்பி கண்ணடிக்கிறான். பின் தொலைபேசியில் “தேங்ஸ் மாமா. நான் அப்பறம் பேசறேன்…“ என வைத்து விட்டு அவளைக் கிறக்கத்துடன் பார்க்கிறான்,
(SONG BIT  - முன்னே வந்த பாடல்.
அவன் ‘உள்ளம் சொக்கும் அழகு‘ என்று பாட. அவள் – ‘கண்கள் சொக்கும் இரவு.‘
அது இப்போது உல்ட்டாவாக ரெண்டு வரி.
அவள் – உள்ளம் சொக்கும் அழகு
அவன் – கண்கள் சொக்கும் பொழுது)
“தூக்கம் போச். அதான் அம்மா அதிகாலையிலேயே… கிட்ட வாடி. வாசனை பிடிச்சிக்கறேன். உடனே அலட்டிருவீங்களே?“
“என்னவாம்?“ என்று பாவனை காட்டி அருகே வருகிறாள்.
“ஒண்ணில்ல போ“ என்கிறான். அவள் முகம் மாறுவதைப் பார்த்து மூக்கைத் திருகுகிறான்.
“வழக்கமா உன்னோட விசேஷம் வரும். இல்லாட்டி என்னோட விசேஷம் வரும். இப்ப பார். நம்ம ரெண்டு பேருக்குமான விசேஷம். எப்பிடி?“ என நிறுத்தியவன் “உளர்றேன் இல்லே?“ என்கிறான்.
“வழக்கம் போல…“ என்கிறாள். அவன் தலையைக் கோதி “எனக்குப் பழகிட்டது“ என்கிறாள்.
“எனக்கும்“ என்கிறான் அவன்.
“என்னது?“
“உன் முன்னால உளர ஆரம்பிச்சிர்றேன் கண்மணி. எனி வே…“ என்கிறான். “காதலில் கொஞ்சம் அப்பிடி இப்பிடி பேசறது தான் இயல்பா இருக்கும். சரியாப் பேசறது அத்தனை சரியா இருக்காதுடி.“
அவள் வாய்பொத்திச் சிரிக்கிறாள்.
“சந்தோஷம் ஜாஸ்தி ஆயிட்டா. அது சகஜம் தான். என் பிரண்டுடி… பிரசவ அறைக்கு வாசல்ல நிக்கறான். பொண் குழந்தை பிறந்தது. உடனே எனக்கு போன் பண்ணி…“
“என்னாச்சி?“
“ராமு நான் அம்மா ஆயிட்டேன்றான்!“
அவள் மலர்ந்து சிரிக்கிறாள். “உங்க ஃப்ரெண்ட் ஆச்சே.“
அவளைக் கிட்டே இழுத்து மூக்கால் அவளை வாசனை பிடிக்க முயல்கிறான். “போயி பல்லாவது தேய்ச்சிட்டு வாங்க“ என்கிறாள் அவள் விலகியபடி. அதற்குள் உள்ளே குளியல் அறையில் இருந்து கோகுலின் குரல். “அம்மா குளிச்சாச்சி. துண்டு…“ என்கிறான் கோகுல். “தோ“ என்று அவன் கைலியை உருவப் போகிறாள். “ஏய்“ என்கிறான் அவன் பதறி. “சாரி. துண்டுன்னு நினைச்சேன்“ என்று அவள் போகிறாள். “ஒரு நிமிஷத்தில் என்னையே பிறந்த குழந்தையாக்கப் பாத்தாளே…“ என எழுந்து கொள்கிறான்.
கோகுல் பள்ளிக்குக் கிளம்புகிறான். “ஆட்டோ வந்தாச்சி போல… மிஸ்ட் கால் வந்திட்டது‘ என்கிறாள் திலகா. அலுவலகம் கிளம்பும் மும்முரத்தில் ராமசாமி. “நான் வேணா கொண்டு விடட்டுமா?“ என்று சட்டையை மாட்டிக் கொள்கிறான்.
“வேணாம்.“ என்கிறாள் திலகா.
“ஏன் திலக்?“
“பையன் என்ன படிக்கிறான்?“
“மூணு.“
“நீங்க ஒண்ணாங் கிளாஸ்ல போயி உக்காத்தீருவீங்க…“
“ஓ“ என அவனும் அதை ரசித்துச் சிரிக்கிறான்.
வாசல் பக்கம் கணபதி தட்டுப் படுகிறார். “வணக்கம் சார். வாழ்த்துக்கள்“ என்கிறார். திலகா சிரித்தபடி அவரைத் தாண்டிப் போகிறாள். ராமசாமியும் வாசலுக்கு வருகிறான். “சேதி உங்க வரை வந்திட்டதா?“ என்று சிரிக்கிறான். கணபதி வீட்டில் உள்ளே இருந்து கணபதியின் மனைவியும் சிரிக்கிறாள். “இப்படியே சந்தோஷமா நிறைய நாள் கொண்டாடணும் நீங்க“ என வாழ்த்துகிறாள் கணபதியின் மனைவி.
“இன்னிக்கு என்ன, புரோகிராம் எதுவும் உண்டா?“
“பகல்ல எதுவும் இல்லை“ என்கிறான். அதைகேட்டு உள்ளே யிருந்தே கணபதியின் மனைவி வெட்கப் படுகிறாள்.
“கல்யாண நாளுக்கெல்லாம் லீவு போடறதா சார்? பொதுவா கல்யாண நாளை நாங்க ஒரு விதமாக் கொண்டாடுவோம்… ஒரு அநாதை இல்லத்துக்குப் பணம் கட்டி அவங்களுக்கு சாப்பாடு போடுவோம்.“ அவன் பேசி முடிக்குமுன்பே திரும்ப லிஃப்ட் மேலே வரும் சத்தம். திலகா திரும்பி வருகிறாள். அவளுடன் வீட்டுக்கு உள்ளே வருகிறான் ராமசாமி.
“எங்கடி உன் அருமைத் தம்பி…“
“எதோ குறும்படம் எடுக்கப் போறானாம். ஃப்ரெண்டைப் பார்க்கன்னு வெளியே போனான்…“
“அதான் வீடே அமைதியா இருக்கு“ என்கிறான். “பாயாசம் அற்புதம். சமையலுக்கு திலகாவை அடிச்சிக்க ஆள் கிடையாது…‘‘
“சமையல் நல்ல இல்லைன்னா?“
“கணவன் மனைவி, அவங்களே அடிச்சிக்குவாங்க“ என்கிறான் ராமசாமி.
“இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்களேன்…“
“இதுக்கெல்லாம் லீவு போட முடியாதுடி. முடிஞ்சா சாயந்தரம் சீக்கிரம் வரேன்…“ என்றவன் மணி பார்த்து விட்டு, “திலகா, கிட்டே வா…“ என அவளை இழுக்கிறான் அருகில். “உனக்கு என்ன பரிசு வேணும்?“
“பரிசா? அதெல்லாம் உங்களுக்குக் கேட்கத் தெரியுமா?“
“அடி சொல்லுடி….“
“கேட்டுருவேன். கைகேயி வரம் கேட்டா மாதிரி.“
“ஐயோ அவ்ள பயங்கரமான வரமா? நமக்கு இருக்கறது ஒரே பிள்ளை. எனக்கு இருக்கறதும் ஒரே பெண்டாட்டி. உன் பிள்ளைதான் இனி பட்டத்து அரசன் இங்கே“ என்று சிரிக்கிறான் ராமசாமி. கைக் கடிகாரத்தைப் பார்க்கிறான். “சட்னு சொல்லு…“
“உங்க கூட…“
“என் கூட…“
“நானும்…“
“நீயும்?“
“ரெண்டு வருஷம் முந்தைய காலத்துக்கு வரணும்!“ என்று அவன் கன்னத்தை வருடுகிறாள் திலகா.
“அப்படிச் சொல் கண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்“ என்று மயங்கினாப் போல நடிக்கிறான் ராமசாமி. “அடியே எனக்கு முடிஞ்சால் நான் அதைச் செய்வேன். அது எனக்கு மாத்திரம் தானே மைனஸ் 1 காட்டுது?“
“அதெல்லாம் எனக்குத் தெரியாது…“ என்கிறாள் கண்டிப்புடன்.
“அதெல்லாம் உனக்குத் தெரியாது. ஏன்னா என் கண்ணுக்கு மாத்திரம் தான் மைனஸ் 1 வருது. அதான் நான் சொன்னேன்“ என்கிறான் ராமசாமி.
அவள் அவனை ஏக்கத்துடன் பார்க்கிறாள். அவன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு, “சாரி. IT IS BEYOND MY LEVEL“ என்றுவிட்டுக் கிளம்புகிறான்.
லிஃப்ட். உள்ளே நுழைந்து கதவைச் சாத்துகிறான். சமத்தாக மைனஸ் 1 காட்டுகிறது லிஃப்ட். கீழே இருளுக்கு வருகிறான். ஊடு பாதை. வெளிச்சத்துக்கு வந்து சேர்கிறான். திடீரென்று அப்படியே நிற்கிறான். உற்சாகப்ப படுகிறான்.. வாயில் விசில் கிளம்புகிறது. அப்படியே திரும்பி தன் வீட்டைப் பார்க்க நடக்கிறான். தூரத்திலேயே அவன் அடுக்ககம் தெரிகிறது. திரும்ப லிஃப்ட் நிற்கும் ஸீரோ தளம் வருகிறான். லிஃப்ட்டைத் திறக்க பட்டனை அழுத்த கை வருகிறது. மறுத்துக் கொள்கிறான். அருகே மாடிப்படிக்ள். மெல்ல படியேறுகிறான். ஏழாவது மாடி. மூச்சிறைக்கிறது.
மாடி ஏழு. பக்கத்து வீட்டு வாசலில்… டு லெட் – போர்டு. ஆச்சர்யப் படுகிறான். உடனே திரும்ப தலையாட்டி விசில் அடிக்கிறான்.
“திலகா?“ என்று கதவைத் தட்டுகிறான்.
வந்து கதவைத் திறந்தது அவன் அப்பா! இறந்து போன அவன் அப்பா. கைவைத்த பனியனில் இருக்கிறார் அப்பா.
“அப்பா“ என ஆவேசமாய் அவரைக் கட்டியணைத்துக் கொள்கிறான்.

சுவரில் தேடிப் பார்க்கிறான். மினுக் மினுக் சீரியல் பல்பும், மாலை போட்டிருக்கும் அப்பா படமும்... இல்லை. 
‘‘என்னடா என்ன ஆச்சி உனக்கு? ஆபிசுக்குப் போனவன் பாதிலயே திரும்பி வந்திட்டியா?“ என்று கேட்கிறார் அப்பா. அவன் சட்டையில் இருக்கும் மொபைலைப் பார்த்து விட்டு “இது எப்படா வாங்கினே?“ என்று கேட்கிறார்.
“நீ செத்தப்பறம் வாங்கினேம்ப்பா.“
“என்னடா உளர்றே?“
“ஒண்ணில்ல. உங்ககிட்ட காட்ட முடியல இதை…“ என்றவன் சிரித்தபடி “இப்ப காட்டிட்டேன்.“
“வேறொரு மொபைல் தானே வெச்சிருந்தே. இப்படி வீணா செலவழிச்சே நாசமாப் போனே நீ…“ என்றவர் “செத்தப்பறம்னு எதோ சொன்னா மாதிரி காதுல விழுந்துது…“
“அப்படியா? தீர்க்காயுசா இருங்கப்பா. இருங்க இருங்க. சந்தோஷம்“ என்றபடியே உள்ளே போகிறான்.

வழியில் பரண். அதில் பழைய டைரிகளும், நாளிதழ்களும் குவிந்து கிடக்கின்றன.
கைக் கடிகாரத்தைக் கழற்றி அங்கே இருக்கும் மேசையில் வைக்கிறான்.
உள்ளே தயாராகாத நிலையில் திலகா. இரண்டு வருஷம் முந்தைய திலகா. படுக்கை அறைக்குள் இருக்கிறாள் அவள். அப்படியே போய் அவளை பின்னே யிருந்து அணைத்துக் கொள்கிறான்.
“இன்னிக்கு லீவு போட மாட்டேன்னீங்களே?“ என்று திரும்பியவள், “என்ன இது? வேற டிரஸ்ல வரீங்க?“ என்கிறாள். “என் இஷ்டம்டி கண்மணி. நீ எதுவோ தப்புன்னு நினைக்கறியே அது சரி. அதாவது நீ சரின்னு நினைக்காதது தப்பு…“ என்றவன் “உளர்றேன் இல்லே?“ என்று சிரிக்கிறான்.
“வழக்கம்போல“ என்றவள் அவன் தலையைக் கோதி “எனக்குப் பழகிட்டது“ என்கிறாள்.
“எனக்கும்“ என்கிறான் அவன்.
“என்னது?“
“உன் முன்னால உளர ஆரம்பிச்சிர்றேன் கண்மணி. எனி வே…“ என்கிறான். “காதலில் கொஞ்சம் அப்பிடி இப்பிடி பேசறது தான் இயல்பா இருக்கும். சரியாப் பேசறது அத்தனை சரியா இருக்காதுடி.“
அவள் வாய்பொத்திச் சிரிக்கிறாள்.
அவன் கிட்டே நெருங்க அவள் விலகி “ஷ்“ என அவனை ஒரு விரலால் அப்பால் தள்ளுகிறாள். “வெளியே அப்பா…“
“நமக்குக் கல்யாண நாள். அவருக்குத் தெரியும். நான் பாதில ஆபிஸ் போகாதபடி எபவ் டர்ன் அடிச்சி வந்திருக்கேன்னும் தெரியும்…“ என்கிறான். “அவர் தன் மலரும் நினைவுகளுக்குப் போயிருப்பார்…“ என அவளை கன்னத்தில் முத்தம் இடுகிறான். “வா வெளில போயிட்டு வரலாம்.“
“எங்க?“
“கோவிலுக்கு… அஞ்சநேயர்னா நீ வெண்ணெயா உருகிருவியே.“
“நீங்க லீவு போட்டுட்டு வந்தீங்களே. அதுவே எனக்கு சந்தோஷம்…‘ நீங்க வெளிய போங்க. நான் டிரஸ் மாத்திக்கிட்டு….“
“நான் உள்ளேயே இருக்கேனே…“
“சீ“ என்கிறாள்.
“YES. I WANT TO SEE.“
“இது …ச்சீ“ என்கிறாள் அவள். “மிஸ்டர் உங்களுக்கு ஒண்ணாங் கிளாஸ் படிக்கிற குழந்தை இருக்கு.“
“மூணாங் கிளாஸ்“ என்கிறான் அவன்.
“என்ன உளர்றீங்க?“
“உனக்குப் பழகிட்டது நான் உளர்றது இல்லியா?“ என்று சமாளிக்கிறான். வெளியே வருகிறான்.
டி.வி. ஓடிக் கொண்டிருக்கிறது. அதில், பாகிஸ்தானில் அநேக இடங்களில் குண்டு வெடிப்பு, என்று சேதி ஓடுகிறது.
இருவருமாய் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார்கள். “சண்டை கிண்டை போடாமல் ஒத்துமையா சந்தோஷமா இருங்க“ என்று கும்பிடுகிறார் அப்பா.
“இந்தக் கல்யாண நாளுக்கு உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குவேன்னு நான் நினைக்கவே இல்லைப்பா…“ அவன் கண்கள் பனிக்கின்றன.
“நான் செத்துருவேன்னு பாத்தியாடா?“ என அவன் தலையை அப்பா தடவுகிறார். “இன்னும் 20 வருஷம் நான் இருப்பேண்டா“ என்கிறார்.
வெளியே வரும்போது அவளுக்குதான் என்ன உற்சாகம். இடையே ஒரு பூக்காரியிடம் நின்று பூ வாங்கித் தருகிறான் அவளைத் திரும்பச் சொல்லி பூ வைத்து விடுகிறான்.
ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகிறார்கள்.
வரும் வழியில் ஒரு கைக் கடிகாரக் கடை. அவள் அவனை அழைத்துப் போய் ஒரு புதிய கைக் கடிகாரம் வாங்கி பரிசளிக்கிறாள்.
வரும் வழியில் அந்த மன நல மருத்வனை போர்டு பார்க்கிறார்கள். “இதுக்கு நான் வந்திருந்தேண்டி“ என்கிறான். “எதுக்கு?“
“ஒரு ஃப்ரெண்டோட தம்பி“ என்று சமாளிக்கிறான். “நீங்க உளர்றீங்க உண்மைதான். ஆனால் இவரை வந்து பார்க்கிற அளவுக்கு இல்லை“ என்கிறாள் திலகா.
வழியில் அந்த அம்னீஷியா பேஷன்ட்டை சந்திக்கிறார்கள். “அவனுக்கு ரெண்டு வருஷம் முந்திய நினைவுகள்தான்  வருதுடி“ என்கிறான். “அந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தான்.“
“ஐயோ பாவம்“ என்கிறாள்.
“நானும்“ என்கிறான்.
“நீங்களுமா? ஏன்?“ என்கிறாள்.
“உன்னைக் கல்யாணம் பண்ணிட்டிருக்கேனே…“
“நாட்டி“ என அவன் இடுப்பில் கிள்ளுகிறாள்.
“இதுக்குப் பேர் நாட்டி இல்ல இது இடுப்பு...“
அப்போது அவளது செல் போனுக்கு போன் வருகிறது. ‘முகம் மலர எடுக்கிறாள். “ஹல்லோ அப்பா?“ என்கிறாள்.
“அப்பான்னதும் உனக்கு வாயெல்லாம் பல்லுதான்…“
“அப்பான்னு வாயைத் திறந்தால் பல் தெரியத்தான் செய்யும். சும்மா இருங்க“ என்றவள் சிரித்து “சொல்லுங்கப்பா… ஆமாப்பா. தேங்ஸ்ப்பா. இருக்கார்ப்பா… சரிப்பா“ என்று அலைபேசியை அவனிடம் தருகிறாள்.
“மாப்ளே?“
“சொல்லுங்க மாமா.“
“MANY HAPPY RETURNS OF THE DAY“ என்கிறார்.
“எல்லாம் சொல்லி கடைசில டே-ன்னீங்களே. அதுதான் மரியாதைக் குறைவா இருக்கு மாமா. பரவால்ல. நன்றி மாமா“ என்று போனை அணைக்கிறான்.
அப்படியே ஒரு அநாதை இல்லம் போகிறார்கள். வாசலில் போர்டு. சேவைக்கரங்கள்.
இல்லத்தை நடத்தும் சாரங்கநாதன் அவர்களை ம0கழ்ச்சியுடன் வரவேற்கிறார். “வருஷா வருஷம் தவறாமல் கல்யாண நாளுக்குப் பணம் அனுப்பி குழந்தைகளுக்குச் சாப்பாடு போடறீங்க. இந்த தடவை நீங்களே நேரில் வந்தீங்களே. ரொம்ப சந்தோஷம்…“
SONG
நாலைந்து குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். கூடவே திலகாவும் ராமசாமியும் உட்கார்கிறார்கள். ஒரு பிரார்த்தனைப் பாடல். இல்லத்தில் தினசரி பாடப்படும் பாடல்.
உலகில் நல்ல காரியங்கள் தொடர பூமிக்கு மனிதர்களை அனுப்பும் அந்த இறைவன் வாழ்க. இந்த இறைவனின் அந்தத் தூதுவர்கள்… அவர்கள் வாழ்க.
ராமசாமியின் அருகே ஒரு குழந்தை வெகு அழகாய் இருக்கிறது. அவன் அருகில் அமர்ந்து சாப்பிடுகிறது. தன் இலையில் இருந்து ஒரு வாய் உணவை எடுத்து ராமசாமி அதற்கு ஊட்டுகிறான். அது ஆர்வமாய் வாங்கிக் கொள்கிறது. ஏக்கத்துடன் இந்தக் குழந்தைக்கு அடுத்த குழந்தை அவரகளைப் பார்க்கிறது. சிரித்தபடி திலகா அந்தக் குழந்தைக்கு ஒரு வாய் ஊட்டுகிறாள்.
வீடு திரும்பும் போது மாலை நாலரை மணி.  லிஃப்ட். வெளியே வருகிறார்கள். பக்கத்து வீட்டு வாசலில் ‘டு லெட்‘ பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது.
“இங்க யாரு வரப் போறாங்களோ?“ என்கிறாள் திலகா.
“கணபதி இல்லைன்னா பிள்ளையார்னு யாராவதது வருவாங்க“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
அவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “பசிக்கறதாப்பா?“ என்று அவசரமாக உள்ளே நுழைகிறான் ராமசாமி. “நான் சாப்பிட்டுட்டேண்டா. ஏது வர இவ்ளோ நேரமாயிட்டது?“
“சேவைக்கரங்கள்ல அவங்க எல்லார் கூடவும் சாப்பிட்டோம்ப்பா.“
“நல்லது நல்லது“ என்கிறார் அப்பா.
“திலகா. நீ உள்ள போ… எனக்கு ஒரு வேலை இருக்கு. இதோ வந்திர்றேன்“ என்கிறான் .
“என்ன? நாம வரும்போதே அதை முடிச்சிருக்கலாமே?“
“முடியாது.“
“ஏன்?“
“அதைச் சொன்னால் உனக்குப் புரியாது…“
“சாதாரணமாவே இவன் பேசறது நமக்குப் புரியறது இல்லே“ என்கிறார் அப்பா.
“போயிட்டு வரேம்ப்பா“ என அவன் அப்பா கையைப் பிடிக்கிறான் அழுகை வருகிறது.
“நல்ல நாள் அன்னிக்கு அழப்டாது. எங்க போறே…“
“நீங்க இங்க இருக்கீங்கப்பா. நான் இங்க இல்லாமப் போகப் போறேன்…“
“என்னங்க இது?“
“உளர்றேன் இல்லே திலக்?“ என சிரிக்கிறாப் போல கண்ணைத் துடைத்துக் கொள்கிறான். வெளியே போகிறான்.

தொடர்கிறேன்
91 97899 87842


No comments:

Post a Comment