Saturday, September 19, 2015



 வ சி க ர ப் பொய்கள்

அத்தியாயம் 29

காலண்டரில் நாள்த் தாள்கள், அகாடின் வாத்தியம் போல, ஆனால் கீழிருந்து மேலாகப் பறக்கின்றன.
வங்கி. வாசலில் வாகனங்கள். அத்தோடு பச்சை வண்ண ஸ்கூட்டி பெப். அதன் முகப்பில் WHY SHOULD BOYS HAVE ALL THE FUN என எழுதி யிருக்கிறது.
வேலை மும்முரத்தில் இருக்கிறது வங்கி. மகா சிரித்தபடி அருகே இருக்கும் ராதிகாவிடம் எதோ சொல்கிறாள். ராதிகா பதிலுக்குப் புன்னகை செய்தபடியே வந்து இருக்கையில் அமர்கிறாள். அவள் கையில் ஒரு பூச்சரம். அதை பாதி நறுக்கி மகாவிடம் நீட்டுகிறாள். மகா சிரித்தபடி அதை வாங்கி, ஏற்கனவே தன் தலையில் இருக்கும் பூக்களோடு சேர்த்து வைத்துக் கொள்கிறாள். தலையில் இருந்த பூ வரிசையோடு ஒரு பிறை வடிவத்தில் இதையும் டிசைனாக இணைத்துக் கொள்கிறாள்.
வழக்கமான டிராஃப்ட் கூட்டம்.. அமர்ந்திருக்கிற அந்த வரிசையைப் பாரக்கிறான் ராமசாமி. கல்லூரி போகிற அமர்க்களத்தில் உடை உடுத்திய ஆண் பெண் வரிசை. அதில் மலிவான சீட்டிப் பாவாடையுடன் தாவணிப் பெண் ஒருத்தி. தலையில் கனகாம்பரம். அந்தப் பொருந்தாக் கணம் ஒருகணம் அவனை யோசிக்க வைக்கிறது. அவன் பார்ப்பதை அவளும் கவனிக்கிறாள். கூந்தலை சற்று முன்னால் விட்டிருக்கிறாள். மெலிந்த சிறு உருவம்.
பொதுவாக எதும் அலுவலகத்தில் இருந்து வங்கி வேலையாய் இப்படி வேலையாட்களை அனுப்பி வைப்பது உண்டு. நல்ல திருத்தமான முகம். மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றி நடுவில் சாந்துப் பொட்டு வைத்திருக்கிறாள் அந்தப் பெண். அவளை முன்னே பார்த்த நினைவு இல்லை ராமசாமிக்கு.
“சத்யா ஸ்டோர்ஸ்-“ என்று பணம் பெறுதல் கவுன்டரில் இருந்து குரல். சத்யா ஸ்டோர்ஸ்… அவனுக்குக் கேள்விப் பட்ட பெயராய் இருக்கிறது. அவன் முகத்தில் சிந்தனைக் குறிகள். நிமிர்ந்து பார்க்கிறான். அவள் போய் கவுன்டர் அருகே நிற்கிறாள்.
ஏற்கனவே பணக் கட்டுகளைக் கொடுத்துவிட்டு எண்ண அவள் காத்திருந்திருக்க வேண்டும். அவள் முன்னாலேயே கவுன்டர் நபர், நோட்டுகளை எண்ணும் இயந்திரத்தில் சரசரவென்று இயக்கி கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை நூறு சரி பார்க்கிறான். நூறு ரூபாய் கட்டுகள். ஐந்நூறு. ஆயிரம்… என வகை பிரித்து ஒண்ணு மேல் ஒண்ணாய் அடுக்கியபடி அவள் எழுதிக் கொடுத்த சலானில் டிக் செய்துவிட்டு, அந்த சலான் புத்தகத்தில் வங்கியின் சீல் நச்சுகிறான். அதன் தன் பகுதியைக் கிழித்து எடுத்துக்கொண்டு புத்தகத்தை அவளிடம் தந்து விட்டு “நெக்ஸ்ட்“ என்கிறான்.,
தாண்டிப் போகையிலும் அவள் அவனைப் பார்க்கிறாள். அவன் அவளையே பார்க்கிறான் என்பதைப் பார்க்கிறாள். அவனுக்கு அருகே மகாவிடம் போய் சில செக்குகளை நீட்டுகிறாள். “செக்கை DROP BOX ல போட்டுறலாமே?“ என புன்னகையுடன் அவள் DROP BOX இருக்கும் திசையைக் காட்டுகிறாள். “இல்ல. நாங்க சத்யா ஸ்டோர்ஸ். கரன்ட் அக்கவுண்ட். தினசரி செக் போட வேண்டி யிருக்கும். BULK சலான் புக் இருக்கு. அதுல குடுத்ததுக்குக் கையெழுத்தும் சாப்பாவும் வாங்கிக்குவோம்.“
மொத்தையான சலான் புத்தகத்தை அவள் நீட்டுகிறாள். மகா கை வேலையாக இருக்கிறாள். ராமசாமி அவளை “இங்க வாங்க“ என அழைக்கிறான். நன்றியாக ஒரு பார்வை பார்த்தபடி மகா “வாங்கிக்கறீங்களா?“ என புன்னகை செய்கிறாள். “ஓ எஸ். இங்க கொண்டு வாம்மா…“ என கை நீட்டுகிறான் ராமசாமி. அவள் வந்து சலான் புத்தகத்தைத் தருகிறாள்.
“கையெழுத்து அழகா இருக்கு“ என்கிறான் ராமசாமி.
“உன் கையெழுத்தை விட எல்லாரிதும் நல்லாதான்டா இருக்கும்“ என்கிறான் பக்கத்தில் இருக்கும் ரமேஷ். அந்தப் பெண் புன்னகை செய்கிறாள். அடக்கமான பெண்… என நினைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“எவ்வளவு கேஷ் கொண்டு வந்து கட்டினே?“
“நாலு லட்சத்தி பதிமூணாயிரம் சார்.“
“கூட துணைக்கு யாரும் வர்லியா?“
“எதுக்கு சார்?“
“பெரிய அமவுண்ட்டா இருக்கே…“
“அதெல்லாம் நான் வருவேன் சார். துணைக்கு பாதுகாப்புக்குன்னு கூட ஆள் எல்லாம் கேட்க மாட்டேன்…“ சிரிக்கிறாள். “அதுக்கு அவரே தனியா வந்திறலாமே?“
“லாஜிக். குருடன் தண்ணிக்குப் போனால் கூட எட்டாள் வேணும்னு பழமொழி. அது ஞாபகம் வருது…“ என்றவன், “உனக்குத் தேவை இல்லை“ என்கிறான்.
சலான் புத்தகத்தில் குண்டூசி குத்தி நாலைந்து செக்குகள் இருக்கின்றன. “கிளியரிங் தனியா, டெபாசிட் தனியா பிரிச்சி எழுதியிருக்கியாம்மா?“ அழகாகத் தலையாட்டுகிறாள்.
“சத்யா ஸ்டோர்ஸா?“
“எஸ் சார்.“
“என்ன பண்றீங்க?“
“ஜவுளி சார்.“
“அடேடே…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி. “அங்க நீ என்ன வேலை பார்க்கறே?“
“அக்கவுண்ட்ஸ் பார்க்கிறேன் சார்.“
“வெரி குட். என்ன படிச்சிருக்கே‘?“
“பி. காம்.“
“வெரி குட்“ என்கிறான். அப்படியே சலானில் கையெழுத்து பார்க்கிறான். ஃபார் சத்யா ஸ்டோர்ஸ் என்று போட்டு அவள் கையெழுத்து.
நிமிர்ந்து அவளைப் பார்க்கிறான். “உட்காரும்மா“ என்று அவளுக்கு தன் எதிர் இருக்கையைக் காட்டுகிறான். “என்னாச்சி சார்?“ அவள் முகத்தில் கவலை. “எதுவும் தப்பாயிருச்சா?“
“ஆமாம் மற்றும் இல்லை“ என சிரிக்கிறான்.
“அவ கிட்டியே ஆரம்பிச்சிட்டியா ராமு?“ என ரமேஷ் அவனைப் பார்க்கிறான்.
“உன்னை நானே பார்க்கணும்னு இருந்தேன்ம்மா…“
“என்னையா?“ என நெஞ்சைத் தொட்டுக் கேட்கிறாள் அவள். “என்னை உங்களுக்குத் தெரியுமா சார்?“
“ஆமாம் மற்றும் இல்லை அப்டின்றாதே ராமு“ என்கிறான் ரமேஷ்.
“ஆமாம் மற்றும் இல்லை“ என்கிறான் ராமசாமி.
“விளையாடாதீங்க சார். எனக்குப் புரியல“ என்கிறாள் அந்தப் பெண்.
“உன் பேர் கிருஷ்ணவேணி… தானே?“
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?“ என அவள் வியக்கிறாள்.
“கிருஷ்ணவேணின்னு பேர் வெச்சிக்கிட்டவங்க கூந்தலை இப்படி முன்னால போட்டுக்குவாங்க…“ என சிரிக்கிறான்.
“சார் டிராஃப்ட் ரெடி ஆயிட்டதா?“ என ஒருவன் வந்து நிற்கிறான். “பத்து நிமிஷம் ஆகும் தம்பி. போயி காபி கீபி சாப்பிட்டுட்டு வா“ என அவனை அனுப்புகிறான் ராமசாமி.
ரமேஷ் அந்த விளையாட்டில் இணைந்து கொள்கிறான். “சலான்ல கையெழுத்து போட்டிருக்கியேம்மா…“
“ஓ“ என்கிறாள்.
“நல்லா இருக்கியா கிருஷ்ணவேணி?“ என்கிறான் ராமசாமி. அவளுக்குத் திகைப்பாய் இருக்கிறது. என்றாலும் அவன் கேள்வி அவளுக்குப் பிடித்திருக்கிறது. “இருக்கேன் சார்“ என்று புன்னகை செய்கிறாள்.
“உன் கூட நான் பேசணும் கிருஷ்ணவேணி.“
“என் கூடவா சார்?“
“ஆமாம்.“
“என்ன விஷயம் சார்?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ். ‘அப்பிடித்தானேடா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி. “BUT ALL FOR THE GOOD“ என்கிறான். “நீ நல்ல பெண்ணும்மா. உன்னைப் பத்தி நான கேள்விப் பட்டிருக்கேன்…“
“எப்பிடி சார்?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ்.
அப்போது கடையில் இருந்து வாடிக்கையாக வரும் டீ வருகிறது. தண்டியான பெரிய பிளாஸ்க்கில் இருந்து காகித டம்ளரில் ஊற்றி ஊற்றி எல்லா அலுவலர் மேசையிலும் வைக்கிறான் டீக்கடை ஆள். “தம்பி இன்னொரு டீ…“ என்று கேட்டு வாங்கி அவள் பக்கம் நகர்த்துகிறான் ராமசாமி. அவள் திகைக்கிறாள். “இல்ல சார் இருக்கட்டும்…“ என்கிறாள் தயக்கமாய்.
“ஏம்மா டீ சாப்பிட மாட்டியா?“
“சாப்பிடுவேன் சார்.“
“பின்ன எடுத்துக்க…“
அவள் மேலும் தயங்குகிறாள். “ஆறிரப் போகுது கிருஷ்ணவேணி…“ என உரிமையாய்ப் பேர் சொல்லி வற்புறுத்துகிறான் புன்னகையுடன். “ரொம்ப தேங்ஸ் சார். இன் ஃபாக்ட்… நான் காபி தான் குடிப்பேன்…“ என்கிறாள்.
“தெரியும்.“
“தெரியுமா?“
“எப்பவாவது டீ சாப்பிடலாம் தப்பு இல்லை…“ என்றவன் சிரித்தபடி, “ஒரு நல்ல காபி வாங்கித் தரேன் அடுத்து…“ என்கிறான்.
“இருக்கட்டும் சார்.“
“உனக்கு ஆட்சேபணை இல்லைன்னால்…“

“காபி சாப்பிட என்ன ஆட்சேபணை சார்“ அவள் சிரிக்கிறாள். “இங்கியே கூடச் சொல்லலாம் சார்.“

டிராஃப்ட் எடுக்க வடுந்த பையன்  இருக்கையில் இருந்து எழுந்து எட்டிப் பார்க்கிறான். தாமதம் ஆகிற எரிச்சல் அவனுக்கு.

“இங்க வேணாம். இது ஆபிஸ். அதுனால் தான் சொல்றேன்.“
அவள் குழப்பமாய் அவனைப் பார்க்கிறாள். “பி. காம் படிச்ச பொண்ணு தானே? பயம் கியம் ஒண்ணும் இல்லியே?“
“அட அதெல்லாம் இல்லை சார். உங்க கிட்ட என்ன பயம்?“ என்கிறாள். சற்று இளக்கங் காட்ட ஆரம்பித்திருக்கிறாள் என்று ராமசாமிக்கு நம்பிக்கை வருகிறது.
“நல்ல காபி. கிருஷ்ணா கபே காபி… சரியா?“
“அங்க காபி நல்லா யிருக்கும் சார்.“
“வேலைக்கு நடுவுல அங்க நீ வந்து காபி சாப்பிட்டுட்டுப் போவே இல்லியா?“
“பாத்திருக்கீங்களா சார்?“ என வெட்கப் படுகிறாள்.
“நாளைக்கு சாயந்தரமா ஒரு நாலரை மணி வாக்கில்… கிருஷ்ணா கபே… சரியா?“
“இருக்கட்டும் சார். ஒரு காபிக்காக நீங்க அவ்வளவு தூரம் வரணுமா?“
“வரேன். எனக்கு உன் கூட பேசணும் கிருஷ்ணவேணி.“
“என் கூட என்ன சார்?“
“அப்பா என்ன செய்யறாரு கிருஷ்ணவேணி?“
“பஸ் கண்டக்டர் சார்.“
“எப்பவுமே எல்லாத்துக்கும் ரைட் ரைட் தான். அப்படியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி. அவளைப் பார்த்து “பயப்படாதே. எனக்குக் கல்யாணம் ஆயிட்டது.“
“என் அப்பாவை உங்களுக்குத் தெரியுமா சார்?“
“இனிமே தெரிஞ்சுக்குவேன் கிருஷ்ணவேணி.“
“நீங்க பேசறது புரியல சார்…“
“எங்களுக்கே புரியாது அவன் பேசறது…“ என்கிறான் ரமேஷ்.
“சார் டிராஃப்ட் ரெடியாயிட்டதா?“
“உன்னை காபி சாப்பிட்டுட்டு வரச் சொன்னேனே ஐயா?“
“இப்ப தான் சார் சாப்பிட்டேன்…“ ராமசாமி அவனைப் பார்க்கிறான். “டிபன் சாப்பிடச் சொல்லப் போறீங்களா சார்?“ என்கிறான் அந்தப் பையன்.
“இல்ல. நான் டிபன் சாப்பிட்டுட்டு வரலாம்னு பார்த்தேன்… பரவால்ல. அஞ்சே நிமிஷம். சாரி I DELAYED YOU.“ என்றவன் “சரி கிருஷ்ணவேணி. GOOD DAY. நாளை, சாயந்தரம், நாலரை. கிருஷ்ணா கபே…“
“இருக்கட்டுமே சார். இன்னொரு நாளைக்கு….“ என்று தயங்குகிறாள். “பயமா இருக்கா கிருஷ்ணவேணி?“ என திரும்பக் கேட்கிறான் ராமசாமி. “ஐய உங்க கிட்ட என்ன சார் பயம் எனக்கு?“ என்கிறாள்.
“அப்ப நாளைக்கு…“
“சாயந்தரம் நாலரை. சரி“ என்று புன்னகை செய்கிறாள். “கிருஷ்ணா கபேன்னால் யார் வேணாம்னு சொல்லுவாங்க சார்.“
“பார்க்கலாம்…“ என்று குனிந்து கிடுகிடுவென்று டிராஃப்ட் தயாரிக்க ஆரம்பிக்கிறான்.
“அவளை நீ பார்த்திருக்கியா ராமசாமி?“ என்கிறான் ரமேஷ்.
“இப்பதான் முதல தடவை.“
“ரொம்பத் தெரிஞ்சவ மாதிரி பழகறே பின்னே?“
“தெரிஞ்சவ தான்…“
“எப்பிடி?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “வா தம்பி“ என அந்தப் பையனை அழைக்கிறான். “இந்தா. சலான்ல கையெழுத்து போடு.“
“இவனுக்கு டீ வாங்கித்தர மாட்டியே? பொண்ணுங்கன்னா வழியறே?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“காரணம் இருக்கு. ஆனால் அது…“
“வேணாம்“ என ரமேஷ் எழுந்து போகிறான்.
அலுவலகம் விட்டு திரும்பி நடந்து வருகிறான் ராமசாமி. ரமேஷ் எதோ வேலை என முன்பே கிளம்பிப் போயிருக்கிறான். கிளம்ப நேரம் ஆகி விட்டது. மணி ஐந்தரை. வெயில் அடங்கி மெல்ல நிழல்கள் உரு பெருக ஆரம்பித்த வேளை. நடந்து கொண்டே இருந்தவனுக்கு திடீரென்று என்னவோ சரியில்லை போலத் தெரிகிறது. சட்டென நிற்கிறான். சுற்று முற்றும் பார்க்கிறான். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. திரும்ப நடக்க ஆரம்பிக்கிறான். திரும்ப அந்த உறுத்தல். சட்டென நிற்கிறான். சோசியக்காரன் மரத்தடி வரை வந்திருக்கிறான். திரும்ப சுற்று முற்றும் தேடிப் பார்ககிறான். சற்று தள்ளி ஒரு ரௌடி நின்றபடி வம்படியாய் வேறெங்கோ வேடிக்கை பார்த்தாப் போலத் தெரிகிறது. அவனுக்கு சந்தேகம் வருகிறது.
விறுவிறுவென்று நடக்கிறான். ஓரக் கண்ணால் பார்க்கிறான். அவனும் இவன் கூடவே வருகிறான். சட்டென நிற்கிறான் ராமசாமி. அவனும் நிற்கிறான். ராமசாமிக்கு பயமாய் இருக்கிறது.
திலகாவின் குரல். “திரும்ப உங்களை அந்த வேற யாரோன்னு நினைச்சித் துரத்தப் போறாங்கன்னு எனக்கு பயமா இருக்குங்க…“ வாய்விட்டு “எனக்கும் பயமா இருக்குடி“ என்கிறான். சட்டென இடது பக்கச் சந்தில் திரும்பினாப் போல ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறான்.
சந்தேகமே இல்லை. அந்த ரௌடி இவனைத் தான் பின் தொடர்ந்து வருகிறான். அவன் குழப்பமாய் இவனைத் தேடுகிறான். அவன் அறியாதவாறு திரும்ப பழைய சந்துக்கே வருகிறான் ராமசாமி. ஒரு பஸ் வந்து நிறுத்தத்தில் நிற்கிறது. ஓடிப்போய் ஏறுகிறான் ராமசாமி. அவனை அதற்குள் கண்டு பிடித்துவிட்ட அந்த ரௌடி பஸ்சைப் பார்க்க ஓடி வருகிறான். அதற்குள் பஸ் கிளம்பி விடுகிறது-
ராமசாமி பரபரப்பாக தனது தெருவில் நடக்கிறான். நெஞ்சு வலிக்கிறது. பயமாய் இருக்கிறது. அந்தப் பக்கம் கொஞ்சம் இருட்டாய்க் கிடக்கிறது. திரும்பி சுற்று முற்றும் பார்க்கிறான். யாரும் பின் தொடர்கிறார்களா? இல்லை. தெரு வெறித்துக் கிடக்கிறது.
தூரத்தில் அவன் அடுக்ககம் தெரிகிறது. அதை நோக்கி நடக்கிறான். போய் லிஃப்ட்டை அடைகிறான் ராமசாமி.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

No comments:

Post a Comment