Sunday, September 13, 2015

அத்தியாயம் 23 - updated everyday - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 23
ராமசாமி வீட்டுக்கு வருகிறான். அதித சோர்வாய் இருக்கிறது. கதவைத் தட்டியதும் உற்சாகமாய் கோகுல் வந்து கதவைத் திறக்கிறான். அவன் தாமதம் இல்லாமல் வீடு திரும்பியதில் திலகாவுக்குத் திருப்தி. “நீங்க எப்ப வருவீங்க வருவீங்கன்னு கோகுல் என்னைத் துளைச்செடுத்துட்டான்.“
“ம்“ என்கிறான் ராமசாமி சுரத்து இல்லாமல். “அப்பா நான் பிரைஸ் வாங்கியிருக்கேன்…“ உள்ளேயிருந்து ஒரு பொம்மையைக் கொண்டு வருகிறான் கோகுல். “சூப்பர்டா…“ என அதை வாங்கி ஆச்சர்யம் போலப் பார்த்து விட்டு கோகுலின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து பொம்மையைத் திருப்பித் தருகிறான் ராமசாமி. அதை வாங்கிக் கொண்டு வாசலுக்கு ஒடுகிறான் கோகுல்.
“எதுக்கு பிரைஸ்னு கேட்க மாட்டீங்களா?“ என்கிறாள் திலகா ஏமாற்றத்துடன். அவன் முகத்தைப் பார்த்து விட்டு, “போயி காஃபி கொண்டு வரேன். அப்பதான் இவருக்கு முகத்தில் களையே திரும்ப வரும்…“ அவனைப் பார்த்து உற்சாகப் படுத்தும் அளவில் சிரிக்கிறாள். “I KNOW YOU MAN…“ என உள்ளே போகிறாள்.
“இன்னிக்கு கோகுல் பள்ளிக் கூடத்தில் மாறு வேஷப் போட்டி அத்தான். நானும் போயிருந்தேன்…“ என்றபடியே சிகாமணி வந்து சோபாவில் அமர்கிறான்.
“வெரி குட்.“
“என்ன பிரைஸ் எப்பிடி பண்ணினான் எதுவும் கேட்க மாட்டீங்களா?“ என உள்ளே யிருந்து உற்சாகமாய்ப் பேசுகிறாள் திலகா.
“ஒரே வேடிக்கை அத்தான்…“ என்று சிரிப்பை அடக்க முடியாமல் சிகாமணி தொடர்கிறான். “என்னாச்சி… ஒரு பையன். சங்கராச்சாரியார் வேஷம்…“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“அதுல என்னடா சிரிப்பு?“
“சங்கராச்சாரியார் கதை என்ன? பெத்த அம்மா… சங்கரா என்னை விட்டுட்டு சந்நியாசம் வாங்கப் போகாதே… அப்டின்னு கெஞ்சுவா. ஆனால் சங்கரர் அப்படியே குருவோட கிளம்பிருவார்…“
“ஆமாம்.“
“மாறுவேஷப் போட்டில ஒரு பையன். சங்கராச்சாரியார் வேஷம்… அம்மா அவனை ஸ்டேஜுக்குப் பிடிச்சித் தள்ளித் தள்ளி விடறா… இவன் அம்மான்னு திரும்பத் திரும்ப அவளைப் பார்க்க ஓடி வர்றான்.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “இது மாதிரி காமெடி நீ எழுத மாட்டேங்கறியே சிகா…“ என்கிறான். “ஒரு மாடல் லேர்ந்து வேற ஜோக்கை உற்பத்தி செய்யத் தெரியணும்டா. ஒண்ணு சொல்றேன் பாரு… எல்லா டிபார்ட்மென்ட்லயும் வேலை செஞ்சால் காசு. ஒரு டிபாரட்மென்ட்ல மட்டும் அவன் வேலை செய்யலைன்னா சம்பளம். நல்ல பாராட்டு கிடைக்கும்… அது என்ன வேலை?“
“ஆகா…“ என யோசிக்கிறான் சிகாமணி. “புதுசா இருக்கு அத்தான்.“
“மினசார வாரியத்தில் வேலை. கரன்ட் கட் ஆனால் தான் அவர்களுக்கு வேலை வரும். கட் ஆகலைன்னால்? வேலை செய்யாமலேயே சம்பளம். அதுக்கு நாம எல்லாரும் அவங்களைப் பாராட்டுவோம்…“
“இது மாதிரி ஒண்ணு நான் கேள்விப் பட்டிருக்கேன் அத்தான். “ZOO ல எத்னையோ மிருகங்கள். நாம அதைக் கூண்டுக்கு உள்ளே போட்டுட்டு வெளியே பாதுகாப்பா இருப்போம். ஆனால் கொசு? அதுக்கு பயந்து நாம கூண்டு, அதாவது வலைககுள்ள ஒளிஞ்சிக்கறோம்பாங்க.“
“ரைட் இதுல சூப்பர் எது தெரியுமா சிகா?“
“சொல்லுங்க சொல்லுங்க…“
“எல்லா வியாபாரமும் வாசல்ல வரும்போது, வந்தவன் கிலோ அஞ்சு ரூபாய் சொன்னால் நாம நாலு ரூபாய்னு கேப்போம். ஒரு வியாபாரம் தான் இதுக்கு விதி விலக்கு. அதாவது அவன் ஐந்து ரூபாய் சொன்னால், நாம ஆறு ரூபாய்னு பேரம் பேசுவோம்… அது என்ன வியாபாரம்?“
“ஹ்ம்…“ என வியக்கிறான் சிகாமணி.
அவன் யோசிக்கையிலேயே ராமசாமி பதில் சொல்கிறான். “பழைய பேப்பர் வியாபாரம்.“
“சூப்பரா இருக்கு அத்தான்.“
“நம்ம கோகுல்… அவன் பண்ணின கூத்தைக் கேக்கல்லியே“ என்றபடி உள்ளே யிருந்து வருகிறாள் திலகா. “இவனுக்கு பாரதியார் வேஷம்.“ காபியை அவனிடம் தருகிறாள். “சூடு போதுமா பாருங்க.“
“போதும். இந்த மாதிரி குறிப்பறிஞ்சி நீ கொண்டு வந்ததே இதம்மா இருக்கு திலக்…“
“என்னாச்சி? DO YOU FEEL DULL?“ என்று கேட்கிறாள் திலகா.
“A BIT…“ என்கிறான். “அது பரவால்ல. நீங்க ரெண்டு பேரும், கோகுல் உட்பட உற்சாகமா இருக்கீங்க… அது நல்ல விஷயம். சொல்லு. என்னவோ சொல்ல வந்தியே.“
“ம். கோகுலுக்கு பாரதியார் வேஷம் போட்டு விட்டேன்.“
“பாரதியாரா? ஏது டிரஸ்? வாடகைக்கு எடுத்தியா?“
“குடுகுடுப்பைக்காரனுக்கும் பாரதிக்கும் ஒரே கோட் தான். ஒரே கடைதான்… இன்னோரு பையன் அத்தான்…. அதே மாதிரி கோட் போட்டுக்கிட்டு நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குதுன்னு வந்தான். அவனும் மீசை வெச்சிருந்தான். பாரதியார்னா தலைப்பாகை… அது தான் வித்தியாசம்.“
“அவன்… நல்ல காலம் பொறக்குது… இவன்?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“கேளுங்க வேடிக்கையை…“ என திலகா உற்சாகமாய் ஆரம்பிக்கிறாள்.
“நானே கேட்டுக்கறேன்… கோகுல்?“ என்று கூப்பிடுகிறான் ராமசாமி. “பக்கத்து வீட்டு ராணிக்கும், மேகலாவுக்கும் பொம்மையைக் காட்டிட்டு வரேன்னு போயிருக்கான்…“
அதற்குள் அவனே உள்ளே வருகிறான். “அப்பா… கூப்பிட்டீங்களா?“
“ஆமாண்டா. இன்னிக்கு நீ மாறு வேஷப் போட்டில என்ன பண்ணினே?“
கோகுல் கம்பீரமாய் நெஞ்சு நிமிர்த்துகிறான். “நாந்தான் பாரதி… அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே - என்று வானத்தை நோக்கி கையை உயர்த்திப் பேசுகிறான்.
“சூப்பர். அம்மா சொல்லிக் குடுத்தாளா?“
“ஆமாம்ப்பா.“
“உங்க அம்மாவுக்கு தான் அச்சமே கிடையாது.“
“என்ன வேடிக்கை தெரியுமாங்க?“ என அவன் பக்கத்தில் வந்து உட்கார்கிறாள் திலகா. “இவன் அச்சம் இல்லைன்னு ஆரம்பிச்சான் பாருங்க. டக்னு கரண்ட் போயிட்டது. ஒரே இருட்டு… அம்மா…ன்னு பயந்து இவன் எடுத்தான் ஒரு அழுகை…“ சிகாமணியும் திலகாவும் ஒரே சமயத்தில் பெருஞ் சிரிப்பு சிரிக்கிறார்கள்.
‘கோகுல் வெட்கப்பட்டு எல்லாரையும் பார்க்கிறான். “ச்சீ. இருட்டுன்னா எனக்கே பயம் தாண்டா… நீ வாடி குஞ்சலம்… குழந்தையைப் போயி கிண்டல் பண்ணிக்கிட்டு…“ என கோகுலை அருகே அழைத்து அணைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“கோகுலுக்கு இங்க புதுசா ரெண்டு ஃப்ரெண்ட்ஸ வந்தாச்சே? இல்லியா?“ என உற்சாகமாய்க் கேட்கிறான் ராமசாமி.
“ஆமாம்ப்பா. அந்த அக்கா ராணி… நல்லாப் பாடறாப்பா. எனக்கும் ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தாப்பா…“
“எங்க பாடு?“
சேவைக் கரங்களில் பாடப்படும் பிரார்த்தனைப் பாடலின் முதல் இரண்டு வபரிகளைப் பாடுகிறான் கோகுல். “அடி என் தங்கமே. சூப்பரா இருக்கு“ என்கிறான் ராமசாமி. “நீ வேணா அவங்க கூட போயி விளையாடிட்டு வா… போ“ என அவனை இறக்கி விடுகிறான். அவன் போனதும் கண்ணைத் துடைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“என்னாச்சி அத்தான்? வரும்போதே ஒரு மாதிரி MOODY யா வந்தீங்க?“
ராமசாமி அவர்கள் இருவரையும் பார்க்கிறான். “சரி. ஒரு வழியா நீங்க என் வாழ்க்கைல நடக்கறதை யெல்லாம் நம்ப ஆரம்பிச்சிட்டீங்க…இல்லியா?“
“வேற வழி?“ என்று சிரிக்கிறாள் திலகா. “ஆனால் அப்படியெல்லாம் நடக்கறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்ங்க… ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்லாம் நடக்குதுல்ல உங்க வாழ்க்கைல. நான் என்ன? துணி துவைக்க, இஸ்திரி போட, கோகுலைக் கொண்டு விட… இவ்வளவுதான் என் வாழ்க்கை.“
“அப்பிடிச் சொல்லாதே என் கண்ணே. கண்மணியே. கட்டிக் கரும்பே . குடும்பத்தை நீ பாத்துக்கறே. வேலைக்குப் போயி சம்பாதிக்கணும்னு நீ வெளியே ஓடல்ல. அதுனால நான் வெளில நிம்மதியா வேலைக்குப் போயிட்டு வரேன். நீயும் ஓடி நானும் ஒடிட்டிருந்தால் கோகுல் பாடு திண்டாடிறாதா?“
“அதெல்லாம் இல்லை. ரெண்டு பேரும் வேலைக்குப் போய்க்கிட்டே வேற எத்தனையோ பேர் குழந்தையை வளக்கல்லியா? அதுங்கல்லாம் பாசமா வளர்றது இல்லியா? அப்பிடியும் இருக்கத்தான் இருக்கு.“
“அப்ப என்னாகும்? நீ இதுமாதிரி அலுப்பா வருவே. நான் உனக்கு காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வருவேன்…“
“ஏன் வந்தா என்ன?“ என்கிறாள் திலகா.
“இல்ல. அத்தான் என்னவோ சொல்ல வந்தார்…. சொல்லுங்க“ என்கிறான் சிகாமணி.
ராமசாமி சுதாரிக்கிறான். “சொல்றியே தவிர. திலகா… நீ இன்னும் நான் கடந்த காலத்துக்குப் போயிட்டு வரேன்னு நம்பல…“
“எதை வெச்சிச் சொல்றீங்க?“
ராமசாமி மேசையில் அமர்ந்து கெட்டித் தாள் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு படம் வரைய ஆரம்பிக்கிறான். “வர வர டைரி எழுதறதை விட்டுட்டு படம் வரையறதுல இறங்கிட்டாப்ல இருக்கு நீங்க…“ என்கிறாள் திலகா.
“டைரியோ, படம் வரையறதோ… ஒரு விதமான அவ்ட்லெட். வென்ட்டிலேஷன் தாண்டி. மனசை அதுல ஓரளவு கரைச்சிக்க முடியுது அதில். சிலாட்கள் வாய்விட்டுப் பாடுவான். விசில் அடிப்பான்.“
“இந்த லிஃப்ட் விஷயம்… அத்தான்… எனக்கு ஒரு சந்தேகம்…“
கை பாட்டுக்கு வரைந்து கொண்டிருக்கிறது. “சொல்லு“ என்கிறான் ராமசாமி.
“நீங்க லிஃப்ட்ல போறீங்க.“
“ஆமாம்.“
“மைனஸ் 1 காட்டுது. அதாவது உங்களுக்கு மட்டும்.“
“ஆமாம்.“
“அதுல போயி மைனஸ் 1 அழுத்தி இறங்கினால்… ரெண்டு வருஷம் முந்தி உங்களை அது கொண்டு விடுது.“
திரும்பி அவனைப் பார்க்கிறான் ராமசாமி. “சரிதான். அதுக்கு என்ன?“ என்கிறான்.
“இப்ப சப்போஸ் நீங்க லிஃப்ட்ல ஏறி, மைனஸ் 1ம் அழுத்தி …“
“சொல்லு.“
“கரெண்ட் கடடோ… எதுவோ? லிஃப்ட் பாதில. நிக்குது.“
“ஓகோ.“
“அப்ப நீங்க… நிகழ்காலத்தில் இருப்பீங்களா கடந்த காலத்தில், இருப்பீங்களா?“
ராமசாமி அவனைப் பார்க்கிறான்.
“ரெண்டு வருஷம் முந்தியா அல்லது பாதி வழி, அதுனால ஒரு வருஷம்ன்றா மாதிரிப் போயிருவீங்களா?“
“அடேய் உன் அறிவை இன்ஷ்யூர் பண்ணணும் சிகாமணி.“ என்கிறான் ராமசாமி. “இதுவரை நடக்கல்ல. என்றாலும் கரெண்ட் கட் ஆனால் நான் இறந்த காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்கு வரவே முடியாதுன்னு கூட எனக்கு பயம் உண்டுடா.“
“அது சின்ன விஷயம் அத்தான். திரும்ப கரெண்ட் வந்தால், நீங்களும் வந்திறலாம்….“

ராமசாமி அவனையே பார்க்கிறான். “நான் திரும்ப நிகழ்காலத்துக்கு லிஃப்ட்ல வரேன் பாருடா... அப்ப கூட கரன்ட் கட் ஆனால் நான் எங்க இருப்பேன்? கடந்த காலத்துலயா? நிகழ்காலத்துலயா?“ என்று சிரிக்கிறான். “ஏன்டா நல்ல விஷயங்கள் யோசிக்க மாட்டீங்களா?“
ராமசாமி கை பாட்டுக்கு வரைந்தபடி இருக்கிறது. திலகா அருகே வந்து அந்தப் படத்தைப் பார்த்தவள், “ஹா“ என்கிறாள்.
“ஹா இல்லடி. இது மகா. எங்க ஆபிஸ் மகா லெட்சுமி.“
சிகாமணி வந்து அவனும் படத்தைப் பார்க்கிறான்.
“இவளை எனக்குத் தெரியும். ஞாபகம் இருக்கு“ என்கிறான் சிகாமணி.
திலகா கேட்கிறாள். “இவளை எதுக்கு இப்ப ஞாபகம் வந்தது உங்களுக்கு?“
“இதான் சொன்னேன் திலக். நீங்க ரெண்டு பேருமே நான் அந்தக் காலத்துக்குப் போயிட்டு வர்றதைப் பத்தி இதுவரை நம்பாத அளவிலேயே எடுத்துப் பேசிட்டு வரீங்க… நான்? நான் அனுபவிக்கிறேன்…“
“அப்டின்னா?“
“இந்த மகா… உனக்குத் தெரியுமே திலக்? மகா கதை என்னாச்சி?“
“பாவம்ங்க. அவள் ஒருவிபத்தில்….“
“கரெக்ட். நீ மகாவை மறந்திட்டே. நானும் மறந்திருந்தேன். ஆனால்…“
“ஆனால் என்னங்க?“
“தினசரி மகாவை நான் அலுவலகத்தில் பார்க்கிறேன்…“
“ஹா“ என திலகா நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறாள்.
“புரியுதுங்க. உங்க பிரச்னை…“
“என்ன புரியுது?“
“சிரிச்சி அழகா வளைய வர்றா மகா. எனக்கு அவளைப் பழக்கம் உண்டே. அவள் ஒரு விபத்தில் சாகப் போகிறாள்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும்…“
“ஆமாம். அவளுக்குக் கூட தெரியாது இது.“
“ஆமாங்க.“
“அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு…“
சிகாமணி அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். “பயங்கரமான சிச்சுவேஷன் அத்தான்.“
“இது சினிமா இல்லடா. வாழ்க்கை.“ சட்டென முகத்தை சகஜமாக்கிக் கொள்ளப் பார்க்கிறான். “ஆனால் சில நல்ல விஷயங்களும் அதுனால நடக்குதே. இல்லியா?“ என்கிறான் சிறு புன்னகையுடன்.
“அதான். ரமேஷ் அப்பாவின் உயில் பத்தி உங்களால தெரிஞ்சிக்க முடிஞ்சது. அந்த கணபதி சாரோட குழந்தை கிடைச்சது…“ என்கிறான் சிகாமணி.
“முதல்ல பழைய காலத்துக்குப் போகும் போது எனக்கு பயமா இருந்தது. அங்கியே மாட்டிக்குவேனோன்னு இருந்தது. திரும்பி வர முடிஞ்சதுன்னு ஆயிட்டதும், அதில் ஒரு சுவாரஸ்யம் வந்தது. அப்பறம் அந்த நிகழ்ச்சிகளில் ஒரு ஈர்ப்பு வந்தது. டைரி பார்த்து அல்லது பழைய பேப்பர் பார்த்து அந்த நாளை முன்கூட்டியே தெரிஞ்சிக்க முடியுமான்னு பார்த்தேன்… அதெல்லாம் நல்லாதான் போயிட்டிருந்தது.“
திலகா அவனைப் பார்க்கிறாள். “நல்லதை மாத்திரம் எடுத்துக்க முடியாதா?“
“எப்பிடி முடியும் திலக். பழைய காலம்னால் நல்ல விஷயம் மாத்திரம் நாம சந்திக்கறதுன்றது இல்லை. எல்லா அனுபவங்களும் கிடைக்கும்… இன்னிக்கு அப்பா பேசினார் என் கூட.“
“அப்பாவா?“
தலையாட்டுகிறான். “பயப்படாதே. பயமா இருக்கா?- இருந்தால் வேணாம்.“
“அக்கா. அவர் சொல்றதைக் கேட்கலாம் முதல்ல…“
“நீதானே பாரதியார் பாடல் கோகுலுக்குச் சொல்லிக் குடுத்தே?“
“என்ன பாட்டு?“
“அச்சம் இல்லை. அச்சம் இல்லை…“
“இப்ப எனக்கே கரண்ட் போனாப்ல இருக்குங்க.“
“சரி. விட்டுறலாம்…“ என்று நகர்கிறான் ராமசாமி. “நான் பேசலையேன்னு வருத்தப் படாதீங்க. அது போதும்.“
“இல்ல. நீங்க என்ன சொல்ல வரீங்க? அதைச் சொல்லுங்க போதும்“ என்கிறான் சிகாமணி.
“நீங்க மைனஸ் 1 அழுத்தினால் பழைய காலத்துக்குப் போறீங்க. அதானே விஷயம்?“ என்கிறாள் திலகா.
“ஆமாம்.“
“பேசாமல் நிகழ்காலத்திலேயே இருங்களேன்? ஏன் மைனஸ் 1 அழுத்தணும். பழைய நிகழ்வுகளோட மல்லுக் கட்டணும்?“
“கரெக்ட்“ என்கிறான் சிகாமணி.
“அதுல சில அழகான விஷயங்கள் எனக்கு நடந்திருக்கு. இந்த நிகழ்ச்சிகளோட சூட்சமத்தினை, பிடியை நான் எட்டிப் பிடிக்க ஆசைப்படறேன்… இதை எப்பிடி நான் புரிஞ்சிக்கணும். இதை எப்படி சாதகமா நான் பயன்படுத்தணும்னு யோசிக்கிறேன்.. கடந்த காலத்தை நான் மாத்த நினைச்சேன். அது முடியாமல் போயிட்டது. அது முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன் நான். ஆனால் அந்த அனுபவங்கள் முன்னைவிடவும் காத்திரமா எனக்குப் பதிவாகிற போது அதைப் பயன்படுத்திக்க முடியுமான்னு நான் பார்க்கிறேன்… அந்த அளவு எனக்கு அதில் திருப்தி. அது வேண்டியும் இருக்கு.“
“பயமா இல்லியா?“
“எதுக்கு பயப்படணும்? இது ஒரு விசேஷ அனுபவம். அதை அப்படியே தூக்கி வெச்சிட்டு கண்ணை மூடிக்க என்னால முடியாது“ என்கிறான். “ஒரு விஷயம்…“
“என்ன?“ என்கிறான் சிகாமணி.
“அன்னிக்கு, எங்க கல்யாண நாள் அன்னிக்கு, திடீர்னு என்னவோ தோணித்து… நான் பழைய காலத்தில், இங்கியே வந்தேன்…“
“எப்பிடி அத்தான்? லிஃப்ட்ல வந்தால் நிகழ்காலத்துக்கு வந்திருவீங்களே?“
“பாயிண்ட்“ என புன்னகை செய்கிறான் ராமசாமி. “திரும்ப வரும்போது நான் மாடியேறி வந்தேன். காலம் இடையே கட் ஆகல்ல…“
“இனட்ரஸ்டிங் அத்தான்.‘ சொல்லுங்க.“
“அன்னிக்கு எங்க அப்பாவை ரெண்டாந் தரம் பார்த்தேன்…“ என்றபடியே சுவரைப் பார்க்கிறான். அங்கே அப்பா படத்தில் மாலை போட்டிருக்கிறது. மினுக் மினுக் என சீரியல் பல்ப். “அதெல்லாம் யாருக்கும் கிடைக்காத பெரிய அனுபவம் இல்லியா?“
“இப்ப என்ன பிரச்னை?“
“மகாவைத் தான்டி என்னால முகத்தைப் பார்க்கவே முடியல்ல…“
“இன்னிக்கு என்ன பிரசனை? என்று கேட்கிறாள் திலகா.
“இன்னிக்கு மகா புதுசா வண்டி டெலிவரி எடுத்தாள்…“
“அதாவது ரெண்டு வருஷம் முந்தி.“
“அதுக்கென்ன?“ என்கிறான் சிகாமணி புரியாமல்.
“அதுலதான் அவளுக்கு விபத்து நடந்ததுடா…“ என்றபடியே அவன் வரைநத மகா படத்தைப் பார்க்கிறான்.
“பேசாமல் சொல்றதைக் கேளுங்க. பழைய காலத்துக்கு நீங்க போகவே வேணாம்…“ என்கிறாள் திலகா.
“சரியாத்தான் சொல்றே…“ என்கிறான் ராமசாமி. மனசில் திடீரென்று கிருஷ்ணன் வருகிறான். புன்னகை வருகிறது. கிருஷ்ணன் “சார் என் காதலை நீங்கதான் சார் சேர்த்து வைக்கணும்… நான் உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்…“ என்கிறான். “வரேன் சிருஷ்ணா“ என்று சத்தமாய்ப் பேசிவிடுகிறான் ராமசாமி.
“கிருஷ்ணனா?“
“என்னது?“ என்று திடுக்கிட்டு விழிக்கிறான் ராமசாமி. “நான் என்ன சொன்னேன்?“
“யாரது கிருஷ்ணன்?“ என்று கேட்கிறாள் திலகா.
“அது ஒண்ணும் இல்லை. எனக்கு பழைய காலத்தில் சின்னச் சின்ன வேலைகள் வரும்னுதான் தோணுது…“ என்கிறான் ராமசாமி. அப்போது கோகுல் கதவைத் திறந்து கொண்டு உற்சாகமாக உள்ளே வருகிறான். அவன் கையில் பொம்மை. உயர்த்தி பொம்மையைப் பிடித்தபடி “அச்சம் இல்லை. அச்சம் இல்லை“ என்கிற போது சட்டென கரெண்ட் கட் ஆகிறது. கவிகிறது இருட்டு. இருட்டிலேயே “அம்மா?“ என கோகுலின் அலறல் கேட்கிறது.
·       
தொ ட ர் கி ற து
91 97899 87842

(for bulk updation of chapters please visit
vasikarapoikalplus.blogspot.com
Updated every Tuesday & Friday)


No comments:

Post a Comment