Thursday, October 1, 2015

அத், 41 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

updated everyday

வசிகரப் 
பொய்கள்
அத்தியாயம் 41

காலண்டரில் நாள் தாள்கள் படபடத்து உயரே எழும்பிப் பறக்கின்றன அகாடின் வாத்தியம் போல.
வங்கி. கடந்தகாலம். மகா என்கிற மகா லெட்சுமி. முகம் மங்களகரமாய்ப் பொலிகிறது. நெற்றியில் குங்குமத்தின் மேல் சிறு விபூதி தீற்றியிருக்கிறாள். பட்டுப் புடவையில் பளிச்சென்று இருக்கிறாள். “ஆச்சர்யமான பொண்ணும்மா நீ. சுடிதார் போட்டால் நவீனப் பொண்ணா ஆயிர்றே. புடவை கட்டினால் அசல் தமிழ்ப் பொண்ணா ஆயிர்றே….‘ என்கிறார் கிருஷ்ணராஜ்.
“இன்னிக்கு உன் கொண்டாட்டத்தில் மகா, ஒரு விசேஷம் தெரியுதே…“ என்கிறான் ரமேஷ். “என்ன வித்தியாசம்?“ என்று கண் விரியச் சிரிக்கிறாள் மகா. “இல்லை. காலைலயே கோவில் கீவில்லாம் போயிருக்கே. ஸ்வாமிக்கு ஐஸ் வெச்சியா?“
மகா சிரிக்கிறாள். “லன்ச் அவர்ல அந்த சஸ்பென்சை உடைக்கிறேன்…“
“உனக்கு எதுவும் தெரியுமாடா?“ என ராமசாமி பக்கம் திரும்புகிறான் ரமேஷ்.
“தெரியல்லியே…“ என்கிறான் ராமசாமி சிரிக்காமல். “ஆனால் அதை நீ சிரிப்போட சொல்லி யிருக்கலாம்…“ என்கிறான் ரமேஷ். மகா தாண்டிப் போனதும், “உனக்குத் தெரியும் தானே?“
“என்னது?“
“உனக்கு விவரம் தெரியும்ன்றது எனக்குத் தெரியும்“ என்கிறான் ரமேஷ்.
“அது எதுக்கு உனக்கு? மதியம் வரை காத்திரு…“ என்கிறான் ராமசாமி.
“அது எங்களுக்கும் தெரியும்…“ என விரைத்தபடி எழுந்து போகிறான் ரமேஷ்.
மதிய நேரத்தில் ஸ்ரீநிவாஸ் திடீரென்று பாங்க் வருகிறான். மகா சிரித்தபடி அவனிடம் போகிறாள். அவன் கையில் கட்டுக் கட்டாய்ப் பத்திரிகைகள்.
“இதுதான் சஸ்பென்சா?“ என சிரிக்கிறான் ரமேஷ்.
மகாவும் ஸ்ரீநிவாசும் மேனேஜர் அறைக்குள் நுழைகிறார்கள். கூடவே ரமேஷும் ராமசாமியும் நுழைகிறார்கள். மகா முகம் மலர்ச்சியாய்க் காண்கிறது. ஸ்ரீநிவாஸ் ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்து அதில் மேனேஜர் பெயர் எழுதுகிறான். “அவசியம் வந்து சிறப்பா நடத்திக் குடுக்கணும் சார்“ என்று பணிவாய் முன் குனிந்து வேண்டிக் கொள்கிறான். ரமேஷும் ராமசாமியும் கை தட்டுகிறார்கள். ராமசாமியின் முகம் அத்தனை சுரத்தாக இல்லை.
“ரமேஷ்… கல்யாணத்தில் எதும் குறை வெச்சே உன்னை ஒரு வழி பண்ணிருவேன்…“ என்று ஒரு விரல் காட்டி மிரட்டலாய்ச் சிரிக்கிறாள் மகா. “ஆகா. அதுக்கென்ன மகா… ராது கல்யாணம் எப்பிடி நடத்தினோம்? அது மாதிரி இதுவும் எங்க பொறுப்பு தான்… என்னடா?“ என ராமசாமியை இடிக்கிறான் ரமேஷ்.
ராமசாமி தலையாட்டுகிறான்.
“சார்கிட்ட கேட்டால் நம்ம கல்யாணம் எப்பிடி நடந்ததுன்னே கூட விலா வாரியாச் சொல்லிருவார்…“ என ஸ்ரீநிவாசிடம் சொல்லிச் சிரிக்கிறாள் மகா.
“அப்பிடியா?“ என தோளைக் குலுக்குகிறான் ஸ்ரீநிவாஸ். “அதெப்பிடி?“
“அவர் மிஸ்டர் முக்காலம்… அவருக்கு நடந்தது, நடக்கறது, நடக்கப் போறது… முக்காலமும் தெரியும்“ என்கிறான் ரமேஷ்.
“எங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்?“ என்று கண் விரியக் கேட்கிறான் ஸ்ரீநிவாஸ். மகா விரலால் வாயைப் பொத்திச் சிரிக்கிறாள். “அது மகா கிட்டக் கேளுப்பா… எங்க கிட்ட கேட்டு என்ன புண்ணியம்?“ என்கிறான் ராமசாமி. மேனேஜர் சிரித்து “அதானே…“ என்கிறார். “ஒரு ஏ ஜோக் சொல்லவா?...“ என்றவர், “வேணாம். மேனேஜரா லெட்சணமா இருக்கேன்…“ என முடிக்கிறார்.
மத்தவர்களுக்குப் பத்திரிகை வைக்கப் போகிறார்கள். “மகா எப்பிடியும் அவன் கூடத் தான் வெளியே போயிச் சாப்பிடுவாள்…“ என்கிறான் ரமேஷ்.
“நாம சாப்பிடப் போகலாமா?“ என்று கேட்கிறார் மேனேஜர். “என்ன ராமு ஒரு மாதிரி இருக்கே போலுக்கே. உடம்பு சரியில்லையா?“ என விசாரிக்கிறார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். எதோ COUNT DOWN ஆரம்பிச்சிட்டா மாதிரி…“ என சொல்லும்போதே அவன் உதடு துடிக்கிறது. அவன் கையைப் பற்றி மெல்ல அழுத்துகிறான் ரமேஷ்.
“என்ன COUNT DOWN? அப்படின்னா என்ன?“ என்கிறார் மேனேஜர். பிறகு அவர் சிரிக்கிறார். “COUNT DOWN, ராக்கெட்லாம் பறக்க விடறதுக்கு முன்னாடி தயாரிப்பு வேலைகள் நடக்கும். 48 மணி நேரம்னு சொல்லி நேரத்தைக் குறைச்சி கணக்குப் பண்ணிக்கிட்டே வருவாங்க… அது மாதிரிச் சொல்றே?“
“ஒண்ணும் இல்ல சார். மகா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு? இப்பவே கல்யாணம் நெருங்கி வர்றா மாதிரி அவனுக்குத் தோணுது…“ என்கிறான் ரமேஷ்.
“கல்யாணம் ஆனால் மகா நம்மை விட்டு, ஐ மீன், நம்ம ஆபிசை விட்டுப் போயிருவா… அந்த வருத்தமா இவனே உனக்கு?“
“நம்மை விட்டுப் போயிருவான்ற வருத்தம்தான்“ என்கிறான் ராமசாமி. மீண்டும் அவன் உடல் குலுங்குகிறது. அவன் கையை அழுத்துகிறான் ரமேஷ்.
“நானும் ரமேஷும் வெளிய சாப்பிடப் போறோம் சார்…“
“அப்ப நான் இங்க என் சீட்லயே சாப்பிட்டுர்றேன்“ என்கிறார் மேனேஜர்.
“என்னடா நீ. அவர்கிட்ட என்ன பேசறதுன்னு இல்லியா? திடீர்னு COUNT DOWN  அது இதுன்னுட்டே…“
“என்னால அடக்க முடியல்ல ரமேஷ். இது நிசம்மாவே COUNT DOWN தான். பத்திரிகை குடுத்தாளா? இன்னும் நாலு நாள்… அவ்வளவுதான் அவள் ஆயுசு…“
“அதை நான் நம்ப விரும்பல்லடா. சாரி“ என முகம் திருப்பிக் கொள்கிறான் ரமேஷ்.
“நான் என்ன பண்ணட்டும். I KNOW HER FATE. எனக்கு அவள் முடிவு தெரியும்…. என்னால… அதை… தாங்க முடியல்லடா… எனக்கு மாத்திரம் ஏண்டா இத்தனை கஷ்டம் வருது வாழ்க்கையில். எனக்கு அந்த விஷயம் தெரியாமலேயே இருந்திருக்கக் கூடாதா?“
“உனக்குத் தெரிஞ்ச விஷயம். அதை நீ எனக்குச் சொல்லாமலாவது இருந்திருக்கலாம்.“
ராமசாமி அவனைப் பார்க்கத் தலையாட்டுகிறான். “இப்ப உன்னை நம்பறதா வேண்டாமான்னே எனக்குத் தெரியலடா…“ பேசாமல் மௌனமாக நிற்கிறான் ராமசாமி. “உன் காரியம்லாம் சில சமயம் ஒண்ணும் விளங்க மாட்டேங்குது…“
“எனக்கே வௌங்கலியே… இது எல்லாம் எப்ப எப்பிடி முடிவுக்கு வரும் தெரியல்ல. நான் பாம்புன்னு அடிக்கவும் முடியாமல் பழுதுன்னு தாண்டவும் முடியாமல் ஒவ்வொரு கட்டத்திலும் தவிக்கிறேன் ரமேஷ்.“
“அன்னிக்கு என்னடான்னா திடீர்னு என்னை அகர்வல் ரத்த வங்கிக்கு வரச் சொன்னே… என் ரத்தம் எடுத்துக்கிட்டே.“
“ஆமாம். அது ரொம்ப உபயோகமா இருந்தது.“
“அந்த மட்டுக்கு சந்தோஷம்…“
“இங்க பாரு. நான் சொல்கிற விஷயங்கள் நம்ப முடியாமல் இருந்தால், நான் சொல்லும்போது கேட்டுக்கிட்டு  அதை விட்டுரு…“
“சரி…“ என்று தலையாட்டுகிறான் ரமேஷ். “என்னால முடியணுமே…“
“சாப்பிடப் போகலாமா?“ என்கிறான் ராமசாமி. “உனக்குப் பசிக்கிறதா?“ என்று கேட்கிறான் ரமேஷ். “இல்ல. பசியாவது கிசியாவது? என்னால் சாப்பிட முடியாது…“ என்கிறான் ராமசாமி. “என்னாலும்…“ என்கிறான் ரமேஷ்.
“COUNT DOWN. மகா. பயங்கரமான வார்த்தை. சாவை நோக்கி மெல்ல மெல்ல அவள் அடியெடுத்து வைக்கிறாள்… என்ன பயங்கரமான கற்பனை“ என்கிறான் ரமேஷ்.
“எனக்கு அப்பிடியே ஞாபகம் இருக்குடா… விபத்து…“‘
“வேணாம்…வேணாம்…“ என்கிறான் ரமேஷ்.
“உனக்கு தான் தொலைபேசியில் சேதி வரும். நீதான் எடுப்பே….“
“அன்னிக்கு நீ எழுந்து போனியே…. அது மாதிரி நானும் எழுந்து போயிறவா ராமு?“
“அவள் காலம் முடிஞ்ச பின்… வருது சேதி. நீ அதைக் கேட்க… இருந்தால் என்ன இல்லாட்டா என்ன ரமேஷ்?“ என்கிறான் ராமசாமி. திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறான் ரமேஷ்.

ராமசாமி மனதில் அந்த விபத்து ஆரம்பிக்கு முன் அவனிடம் மகா பேசிவிட்டுச் செல்லும் காட்சி - மாமனார் மாமியாரைப் ரிசீவ் பண்ண விமான நிலையம் போகிறேன்... என்று சொல்வது, காட்சியாக வருகிறது.

“அந்த விபத்தைப் பத்திச் சொல்லு…“ என்கிறான் ரமேஷ் திடீரென்று.
“ஏன்?“
“இருக்கட்டும். இன்னும் எத்தனை நாள்?“
“நாலு நாள்…“
“சொல்லு…“
“என்ன சொல்லணும்?“
“உனக்கு அந்த விபத்து பத்தி… என்ன தெரியுதோ சொல்லு…“
“இன்னிக்குத் தேதி என்ன?“
“அக்டோபர் 1.“
“நாலாம் தேதி. அந்த விபத்து. ஆஸ்பத்திரி. மார்ச்சுவரி. நாங்க… மகாவோட அப்பா அம்மா… எல்லாருமா போலிசு கிட்ட கெஞ்சறோம். பாடி ஏற்கனவே ரொம்ப மோசமா சிதைஞ்சி போயிருக்கு… போஸ்ட்மார்ட்டம் வேணாம்னு சொல்லிப் பார்த்தோம்.“
“விபத்தைப் பத்திச் சொல்லு…“
“விபத்து நடந்து முடிஞ்ச பிறகு நான் அந்த ஸ்பாட்டுக்குப் போனேன்டா.“ ரமேஷ் தலையாட்டுகிறான். “அந்த பச்சை ஸ்கூட்டி பெப்… அது அப்படியே சப்பளிஞ்சு…“
“அது கூட மோதியது என்ன வண்டி?“
“ம்….“ என யோசிக்கிறான் ராமசாமி. “வெள்ளைக்கலர் ஐ டென்.“
“அது எப்பிடி உனக்குத் தெரியும்?“
“மகா வண்டி பக்கத்தில் கொஞ்சம் தள்ளி… அதுவும் நின்னுட்டு இருந்தது. அதுக்கு சின்ன நெளிசல் தான்…““
“வண்டி நம்பர் ஞாபகம் இருக்கா?“
“இல்ல…“
“உன்னை நம்பறேன் ராமு. இரு ஈஎஸ்பியோ, டெலிபதியோ... எதோ ஒண்ணு. உன்கிட்ட என்னவோ சக்தி இருக்குன்னு தெரியுது எனக்கு. யோசி. யோசி…“ ராமசாமி சிந்திக்கிறான். “திரும்ப அந்த நிகழ்ச்சியை மனசில் கொண்டு வா.“ அவன் தலையாட்டுகிறான். “விடாதே ராமு… அந்த இடம் இதுதான். சரியா… இதுதான் அந்த இடம்…“ ராமசாமி அந்தப் பொட்டலைப் பார்க்கிறான். “இங்க எங்க கெடக்கு மகா வண்டி?“
“அதோ அங்க…“
“அந்த ஐ டென்?“
சற்று தள்ளி காட்டுகிறான். “வேற எதுவும் அப்ப… நீ பார்த்தப்ப தெருவில் இருந்ததா? தரையில் விழுந்தாப் போல… அந்த மாதிரி?“ ராமசாமி யோசிக்கிறான். “இல்ல“ என்கிறான்.
“இப்ப அந்தக் காரைப் பார்க்கிறாய் இல்லியா?“
“பார்க்கிறேன்…“ என்கிறான் ராமசாமி. “அதையே உத்துப் பார்… அதன் நம்பர்? நீ கவனிச்சியா?“
“அப்ப கவனிச்சேன். இப்ப ஞாபகம் இல்லை.“
“சரி. அதை விடு. வேற அடையாளம்?...“
“இரு. எதோ ஒரு அடையாளம்… ஒரு வித்தியாசமான தன்மை அதில் இருந்தது.“
“என்ன அது? என்ன அது?“
“ஐயோ ஞாபகம் வரல்லியே…“ என துடிக்கிறான் ராமசாமி.
“விடாதே. விடாதே ராமு…“ என்று தூண்டுகிறான் ரமேஷ்.
“ஆ GOT IT.“
‘கமான் ராமு.“
“அந்தக் காரின் முகப்பில் ஒரு பெயர்…“
“வெரி குட்… “
“வித்தியாசமான பேர் அது…“
“என்ன அது?“
“ஐயோ வாய் கிட்டத்தில் இருக்குடா.“
“துப்பு அதை.“
“தெரியல்லியேடா…“ என குலுங்குகிறான் ராமசாமி. “விடாதே… என்ன மாதிரிப் பேர் அது?“
“முன்னே ஒரு டிராஃப்ட். பார்ட்டி… பையனோட பேர் சொன்னேன் நினைவு இருக்கா?“
“ஆமாம்… நல்லா நினைவு இருக்கு.“
“அவன் பேர் என்ன?“
“விஷ்வக்சேனன்.“
“கரெக்ட். வித்தியாசமான பேரா இருக்கேன்னு நான் நினைவில் குறிச்சிக்கிட்டேன். இல்லியா?“
“ஆமா.“
“அதைப்போல… இந்தக் காரிலும் ஒரு பேர்… என்ன அது? என்ன அது?“ சிறிது நேரம் அப்படியே மௌனமாய் இருக்கிறார்கள். “திடீர்னு அது முன்னாடி வரும்டா. கவலைப்படாதே…“
“வேற எதாவது பேசலாமா?“ என்கிறான் ராமசாமி. “வேணாம். இந்த அழுத்தத்தை விட வேண்டாம்னு படுது எனக்கு…“ அதுவும் சரிதான், என்கிறாப் போல ராமசாமி தலையாட்டுகிறான். “ரைட்“ என்கிறான் ரமேஷ். ராமசாமி யோசித்தபடியே நெற்றியைச் சுருக்கிக் கொள்கிறான். “ஒரு ஆணோட பேர். அதுல எழுதியிருக்கு. அந்தளவுக்கு நிச்சயம்.“
“ரைட்“ என்கிறான் ரமேஷ்.
ராமசாமி யோசிக்கிறான். “அது ஒரு மாதிரி வித்தியாசமான பேர். அதுவும் புரியுது…“ ரமேஷ் அவன் தோளைப் பற்றுகிறான். “ச்சே… டைரி இலலியேடா…“ என்கிறான் ராமசாமி. “என்ன டைரி?“
“இவள்… திலகா… என் டைரியை எரிச்சிட்டாள்.“
“அதுல என்ன இருக்கு?“
“இரண்டு வருஷத்துக்கு முந்தைய டைரியில் நான் எழுதி வெச்சிருப்பேன்…“
“விபத்து பத்தியா?“
“நிச்சயமா… எழுதாமல் எப்பிடி விட்டிருப்பேன்…“
ரமேஷ் அவனையே பார்க்கிறான். “அதுல நிச்சயம் அந்த காரின் எண் இருக்கும். இல்லாட்டி கூட அந்த வித்தியாசமான பேர்… எழுதாமல் விட்டிருக்காது…“
கரெக்ட்… இப்ப டைரி இல்லை. அதை விட்டுரு. நாம நினைவில் தான் தேடணும்.“
“ஹா“ என்கிறான் ராமசாமி. “இப்ப இந்தத் தகவல் எல்லாம் எதுக்குடா?“
“ஹ்ம்“ என்று பெருமூச்சு விடுகிறான் ரமேஷ். “தேவையா இல்லியா? எனக்கே தெரியவில்லை…“ என்கிறான். “விஷ்வக்சேனன். அதே மாதிரி…“ என நெற்றியில் அடித்துக் கொள்கிறான் ராமசாமி. “வித்தியாசமான பேர்… ஒரு மாதிரி கவர்ச்சியான பேர்…“
“கவர்ச்சியா?“
“ஆம்பளைகள்ல கவர்ச்சிகரமான பேர்?“
“ஆமாம். கவர்ச்சிக்கு இன்னொரு வார்த்தைடா…“
“விடாதே….“
“ம். சிகாமணி ஒரு வார்த்தை சொன்னான்…“
“என்ன அது?“
“அவன் என் கதையையே ஒரு சினிமா மாதிரி சொல்கிறான். நீ என்னை மிஸ்டர் முக்காலம்னு கூப்பிட்டியே?“
“ஆமாம்…“
“அதைப்போல என் சம்பவங்களைக் கேட்டுட்டு அவன் ஒரு தலைப்பு சொன்னான்… ம்… ஞாபகம் வந்திட்டது…“
“என்ன?“
“வசிகரப் பொய்கள்.“
“நல்லா இருக்கே? நாம பேசிக் கிட்டிருக்கறதே... வசிகரப் பொய்கள் தான்.“
“கவர்ச்சி… அதான். அதேதான்…“
“என்னடா? யுரேகா யுரேகா மாதிரிக் கத்தறே…“
“அந்தக் காரில் எழுதியிருந்த பெயர் வசிகரன்.“
“கவர்ச்சின்னால் வசிகரம் தான்…சரிதான். பிடிச்சிட்டியே கண்ணா.“
“இந்தத் தகவல் பயன்படுமா ரமேஷ்?“
“தெரியல்லியேடா…“
“COUNT DOWN ஆரம்பிச்சிட்டதுடா. எதாவது செய்யணும்.“
“நம்மளால என்ன செய்ய முடியும்? நினைச்சாலே நடுங்குதுடா…“ என்கிறான் ரமேஷ். “நான் அதைப் பார்த்தவன். நேரில் அனுபவிச்சவன்…“ என்கிறான் ராமசாமி. “இப்ப ரெண்டாவது தடவை…“

“இதை மாத்த முடியாதா?“

“ஏற்கனவே மாத்த நினைச்சி நான் தோத்திருக்கேன் ரமேஷ்...“
“ஐயோ. பேசாமல் நீ… எதிர்காலத்திலேயே இருந்திரேண்டா?“
“அதுவும் என்னால முடியும்னு தோணல்லே…“ என்கிறான் ராமசாமி. அப்போது மகா ஸ்கூட்டி பெப்பில் அவர்களைக் கடந்து போகிறாள். பின்னால் ஸ்ரீநிவாஸ் அமர்ந்திருக்கிறான். “டாடா“ காட்டிப் போகிறாள் மகா.
“அவ டாடா காட்டறதே என்னமோ மாதிரி இருக்குடா…“ என்கிறான் ராமசாமி.

“வசிகர பயங்கரமான பொய்கள்...“ என்கிறான் ரமேஷ்.

“அவை பொய்யாகவே இருந்திட்டால் நல்லது... உண்மையாக ஆகையில் தான் பயம்மா இருக்கு“ என்கிறான் ராமசாமி.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842

for bulk of 5 chapters pls visit
vasikarapoikalplus.blogspot.com



No comments:

Post a Comment