Thursday, August 27, 2015

அத்தியாயம் 7 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப்
பொய்கள்

அத்தியாயம் 7
காலை அலுவலகம் கிளம்பும் நேரம். ராமசாமி சட்டையில் பட்டன் போட்டுக் கொண்டபடியே உள்ளே பார்க்கிறான். சிகாமணி நாளிதழைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ராசி பலன் பகுதியை அவன் மேய்கிறான்… “இன்று நாள் எப்படி?“ என உரக்க வாசிக்கிறான். “இதுல என்ன போட்டிருக்கோ அதைப் பாத்திட்டுப் போனால், அதும்படி நடக்குமா அத்தான்?“
“அதும்படி நடக்குமோ நடக்காதோ, இன்றைய நாளை முன்கூட்டி தெரிஞ்சிக்க என்கிட்ட வேற யோசனை இருக்கு…“
“அப்படியா?“
சட்டென பரண் மேல் ஏறி டைரியை எடுக்கிறான். இரண்டு வருடம் முந்தைய டைரி.
“என்ன தேடறீங்க அத்தான். பஞ்சாங்கமா?“
“எதுக்கு?“
“இன்றைய நாள் விசேஷம் பார்க்க…“
“அதைவிட துல்லியமான கணிப்பு இது….“
“எது?“
“என்னோட பழைய டைரி.“
“ஆரம்பிச்சிட்டீங்களா உங்க டைரி புராணத்தை…“ என முணுமுணுத்தபடியே சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை உள்ளே எடுத்துப் போகிறாள் திலகா. “டைரில எதையாவது எழுதறது. அதை பொழுது போகாமல் திரும்ப எடுத்து வாசிக்கிறது… அதுல என்ன சுவாரஸ்யம் இருக்குதோ?“
“அத்தானுக்கு இருக்கே. சில பேர் டைரின்னா, வந்த கடன், வாங்கிய கடன், வராத கடன்னு வெறும் கணக்கா எழுதி வைப்பான்… நீங்க என்ன எழுதுவீங்க அத்தான்?“
“அவன் உலகத்தை சந்தையாய்ப் பார்க்கிறவன். நான் அனுபவமாப் பார்க்கிறேன்.“ சத்தமாய் வாசிக்கிறான். “இன்று மழை பெய்து கொண்டிருந்ததால் நனைந்தபடி அலுவலகம் போக வேண்டியதாகி விட்டது.“ திரும்பி சிகாமணியிடம், “குடை எடுறா…“ என்கிறான்.
“குடையா? எதுக்கு?“
“மழை வரும்டா இன்னிக்கு.“
“வெளிய பாருங்க வெயில் பட்டையைக் கிளப்புது.“
“ஆனாலும் நான் மழைல நனையறாப்ல ஆயிரும்.“
“ரமணன் சொன்னாரா? அப்ப கண்டிப்பா வராது.“
“ரமணன் அறிக்கை இல்லை இது. ராமசாமி அறிக்கை. டைரில இருக்கே…“ அவனே போய் குடையை எடுத்துக் கொண்டு போகிறான். அவனை ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான் சிகாமணி.
ராமசாமி அறையை விட்டு வெளியேறுகிறான். “அக்கா, அத்தானுக்கு என்னமோ ஆயிட்டது… ஏன் இப்பிடி நடந்துக்கறார்னு தெரியல. வெயில் படு போடு போடுது. அவரானா மழை வரும்னு குடை எடுத்துக்கிட்டுக் கிளம்பறார்.“
“எனக்கு என்னவோ பயமா இருக்குடா. ஒரே வீட்ல உன்னையும், அவரையும் வெச்சிக்கிட்டு… ரெண்டு பைத்தியங்களை எப்படி சமாளிப்பேன்?“
“பழகிக்கோ அக்கா. வேற வழியில்லை. உன் நன்மைக்காக என்னவோ சொல்ல வந்தேன் பாரு. நீ என்னையே காலை வார்றே.“
“கவலைப்படாதே சிகா. விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடுன்னு பழமொழி. அவரு தானா என்கிட்ட விஷயத்தைச் சொல்வாருடா. என்கிட்டேயிருநிது அவரால எதையும் மறைக்க முடியாது.“
“அவர் உன்னைப் பார்த்து நின்னாரானால்… உனக்கு அவர் முதுகு தெரியாதே அக்கா… சினிமா ஸ்டைல் டயலாக் இது. ஹா ஹா.“
“நான் நிலைக் கண்ணாடி வழியா அவரைப் பார்த்துக்கிட்டே யிருப்பேன்டா. நான் யார்னு நினைச்சே? உன் அக்கா.“
“அடங் கொக்க மக்கா…“ என்கிறான் சிகாமணி.
லிஃப்ட். அது இறங்க இறங்க மெல்ல ஒரு குளிர் காற்று லிஃப்ட்டில் ஊடுருவுகிறது. குளிரில் நடுங்குகிறான் ராமசாமி. தெருவில் போகையில் நல்ல காற்றும் மழையும். நிறையப் பேர் வாகனங்களை நனையும்படி நிறுத்திவிட்டு கிடைத்த கூரையடியில் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பஸ் நிறுத்தம் மனிதர்களால் நிரம்பி வழிகிறது. கார் ஒன்று நடுவழியில் நின்று விட்டது. டிரைவர் அந்த மழையில் கீழே இறங்கி முன்பக்கம் திறந்து பார்க்கிறான்.
வங்கி. மேனேஜர் அறை. கிருஷ்ணராஜ் “வா ராமு. குட் மார்னிங்“ என்கிறார்.
ஆச்சர்யமாய் இருக்கிறது. கையெழுத்து போட்டுவிட்டு தன் இருக்கைக்கு வருகிறான். ரமேஷ் அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “மேனேஜர் ரொம்ப திட்டினாரா?“
“இல்லை.“
“அதுல விஷயம் இருக்குடா. அவருக்கு வேலை மாற்றல் வர்றது உறுதி ஆயிட்டது. போறபோது நல்ல பேர் வாங்கிக்கிட்டுப் போகலாம்னு பார்க்கறாரு அவர்.“
“நல்ல விஷயம் ஆச்சே. ரமேஷ். உன்னைக் கொஞ்சம் குழப்பவா?“
“காலைலியேவா?“
“நேத்து நான் வேலைக்கு வந்தேனா?“
“வந்தியே.“
“வந்தேன். ஆனால் நேத்து வேலைக்கு வந்தது நான் இல்லை…“
“அப்பன்னா?“
“ரெண்டு வருஷம் முந்தைய நான் அது…“
“அப்ப இப்ப என் முன்னால நிக்கிற நீ?“
“இதுவும் நான்தான். ரெண்டு வருஷம் முன்னாடி வந்திருக்கேன்…“ என ராமசாமி புன்னகை செய்கிறான்.
“முடியல்லடா…“ என்று பரிதாபமாகப் பார்க்கிறான் ரமேஷ். அவனே “சரி. ஒரு WILD GUESS. நீ நேத்து 2016ல இதே ஆபிஸ்ல வேலைக்கு வந்தியா?‘ ஆமாம்னு சொல்லிறாதே…“
“ஆமாம். ஆமாம்“ என அவன் கையைப் பிடித்துக் குலுக்குகிறான் ராமசாமி.
அப்போது ராதிகா அந்தப் பக்கம் வருகிறாள். அவனைப் பார்த்ததும் புன்னகை செய்கிறாள். “வாழ்த்துக்கள் ராதிகா“ என்கிறான் ராமசாமி.
“தேங்கஸ் சார். நீங்க போகும்போதே நல்லா வாழ்த்தி அனுப்பினீங்க சார்.“
“கவலையே வேணாம். கல்யாணம் ஜாம் ஜாம்னு ஜாம்பசார்ல நடக்கும். நாங்க வந்து நடத்தித் தர்றோம். என்ன உதவின்னாலும் கேட்கலாம் எங்க கிட்ட… என்னடா?“ என்று ரமேஷ் பக்கம் திரும்புகிறான்.
“நிச்சயமா“ என்கிறான் ரமேஷ். பிறகு ராமசாமியிடம் “சொல்லுடா. நாம போயி நிசம்மாவே நடத்தித்தந்தமா? நீ முக்காலமும் உணர்ந்தவன் ஆச்சே…“
“இன்னிக்கு நீ இந்த அளவு குழம்பினால் போதும் ரமேஷ்“ என்று சிரிக்கிறான்  ராமசாமி.
சிகாமணி ஒரு திரைப்பட கம்பெனி வாசல் போர்டு பார்த்துவிட்டு உள்ளே நுழைகிறான். தயாரிப்பாளர். இயக்குநர். ஒரு விநியோகஸ்தர் என மூவர் அமர்ந்திருக்கிறார்கள்.
“வித்தியாசமான கதையா இருக்கணும்ப்பா. அரைச்ச மாவையே அரைக்கக் கூடாது.“
“அப்படி ஆள் இல்ல சார் இந்த சிகாமணி. என் கதைகள் படமா வர ஆரம்பிச்சால், ஹாலிவுட்லேர்ந்தே நம்ம தமிழ்நாட்டுக்கு ரைட்ஸ் வாங்க கியூல வந்து நிப்பாங்க சார்.“
“அடேங்கப்பா. ஒரே ஒரு சீன் மாத்திரம் சொல்லு முதல்ல… கதையை அப்பறமாப் பார்ப்போம்.“
“ரயில்வே ஸ்டேஷன். எல்லாரும் ரயில் வர காத்திட்டிருக்காங்க. ரயில் வர்ற திசையை எல்லாரும் உத்து உத்துப் பாக்கறாங்க. ரயில் தூரத்தில் வர்றப்பவே கண்ணுல தெரியும்னு…“
மவரும் ஆவலாய் கவனிக்கிறார்கள்.
“நம்ம கதாநாயகன் மாத்திரம் எதிர்ப்பக்கமாப் பாத்திட்டிருக்கான்…“
“ஏன்?“
“அந்தக் கூட்டத்தில் ஒருத்தர் அவன்கிட்ட கேட்கறார். ரயில் எந்தப் பக்கம் வரும் சார்? – அந்தப் பக்கம் – பின்ன நீங்க இந்தப் பக்கமா உத்துப் பாத்துக்கிட்டிருக்கீங்க?... நான் ரயில்வே சிக்னலைப் பார்க்கறேம்ப்பா… என்கிறான் அவன். சிக்னல்ல பச்சை மாறினால், ரயில் வர்றது தன்னால தெரிஞ்சிருமே சார்.“
“பரவால்லியே.“
“படம் பார்க்கிற ஆடியன்ஸை சிந்திக்க வைக்கணும் சார். ஒவ்வொரு சீன்லயும் அதுல உள்ள ஒரு வித்தியாசமான ஒண்ணைக் கண்டுபிடிச்சி அதை ஆடியன்சுக்கு எடுத்துக் குடுக்கணும் சார்…“
“ஓகோ.“
“எத்தனையோ அருமையான குட்டிக் கதைகள் நம்ம கிட்ட புழங்கி வந்திருக்கு. அதையெல்லாம் திரும்ப எடுத்துவிட்டாலே நம்ம தமிழோட பெருமை உலகம் பூரா பரவும் சார்.“
“எங்க ஒரு கதை சொல்லு…“
“என் கதையா சார்?“
“இல்ல. உனக்குப் பிடிச்ச குட்டிக்கதை…“
“ஒரு வேட்டுவத் தலைவன். ராஜாவுக்கு ஒரு பழம் கொண்டு வருகிறான்.“
“அந்தப் பழத்தில் என்ன விசேஷம்?“
“இந்தப் பழத்தைத் தினனால் மரணமே வராது… உங்களுக்காக இதைக் கொண்டு வந்தேன்னு கொடுக்கிறான்.“
எல்லாரும் அவனையே பார்க்கிறார்கள்.
“ராஜா பக்கத்துல நின்னுட்டிருந்த காவலன் ஒருத்தன். அடடா, சாவே வராதாமே இதை சாப்பிட்டால்னு அவனுக்கு ஒரே பரவசம் ஆயிட்டது. அந்தப் பழத்தை ராஜா வாங்கிக்கொள்ளு முன்… சட்னு அதை தான் எடுத்து வாயில் போட்டு தின்னுட்டான்…“
எல்லாரும் சிரிப்புடன் அவனைப் பார்க்கிறார்கள்.
“ராஜாவுக்கானால் கோபமான கோபம். யாரங்கே? இவன் செய்தது ராஜ துரோகம். இவனைக் கொண்டு போய்க் கழுவில் ஏற்றுங்கள்னு உத்தரவு போட்டான்.“
மௌனம்.
“அப்ப அந்தக் காவலன் கடகடன்னு சிரித்தான். ஏன்டா சிரிக்கிறாய் அற்பப் பதரே, என்றான் ராஜா கோபமாய். நான் தின்றது மரணத்தையே ஜெயித்த பழம். உங்கள் தண்டனையால் என்னைக் கொல்ல முடியாது மகாராஜா… என்றான்.“
மௌனம்.
“ராஜாவுக்கு என்ன சொல்ல தெரியவில்லை. அதையும் தான் பாத்திறலாம். நிச்சயம் இந்த தண்டனையில் நீ சாகப் போகிறாய்… என்றான் ராஜா. அப்பதான் அந்தக் காவலன் ஒரு கேள்வி கேட்டான்…“
“என்ன கேள்வி?“
“அப்படி நான் செத்திட்டால், அந்தப் பழம் மரணத்தை ஜெயித்த பழம் அல்ல. அந்தமாதிரியான ஒரு சாதாரணப் பழத்தைத் தின்றதற்கா எனக்கு மரண தண்டனை? இது நியாயமா ராஜான்னு ஒரு போடு போட்டான்…“
“நல்லாருககே. அந்தக் காவலனின் புத்திசாலித்தனத்தை மெச்சி ராஜா அவனை விட்டுட்டானாக்கும்…“ என்ற தயாரிப்பாளர் “ஏ இந்தாளு கிட்ட விஷயம் இருக்கும் போலுக்கப்பா. நீ நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வா. உதவி இயக்குநர் மாதிரி எங்கயாவது ஒட்டிக்கோ. போகப் போகப் பார்க்கலாம்.“
உற்சாகமாக வெளியே வருகிறான் சிகாமணி. வெளியே இருந்து அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.
“லவ்வா?“ என்கிறான் கிறக்கமாய்.
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டது…“
“அப்ப ஒன் சைட் லவ்.“
“யாருக்கு?“
“எனக்கு…“ என்றபடி வெளியேறுகிறான் சிகாமணி.
ராமசாமி அலுவலகம் முடிந்து வெளியே வந்தவன், அடாடா, என்று திரும்ப உள்ளே போய்க் குடையை எடுத்துக் கொண்டு வருகிறான். வழியில் ஒரு பர்ஸ் கிடக்கிறது. குனிந்து எடுக்கிறான். உள்ளே நிறையப் பணம் இருக்கிறது. அதில் ஒரு முகவரியும் கிடைக்கிறது.
அதை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கலாமா, என யோசிக்கிறான். கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான். அப்படியே பர்சைத் தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்கிறான்.
பஸ் நிறுத்தத்தில் நிற்கிறான். பக்கத்து டீக்கடையில் நாளிதழ்கள் தொங்குகின்றன. தலைப்புச் செய்தியாக போஸ்டர் வாசிக்கிறான். பிளஸ் டூ தேர்வு முடிவுகள்…
அதற்குள் பஸ் வருகிறது. ஓடிப் போய் ஏறுகிறான்.
“அத்தான் ஒரு நல்ல சேதி“ என அவன் வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் ஒடி வருகிறான் சிகாமணி.
“நீ சேதியைச் சொல்லு. நல்லதா கெட்டதான்னு நாங்க தீர்மானிச்சிக்கறோம்…“
“ஒரு கம்பெனியில் என்னை வரச் சொல்லி யிருக்காங்க.“
“வேலைக்கு எதும் எழுதிப் போட்டியா? நல்ல விஷயம் ஆச்சே.“
“இல்ல அத்தான். சினிமா கம்பெனில…“
“அதானே. நீ உருப்பிட்டுருவியோன்னு நினைச்சேன்…“
“அவங்க எல்லார்த்துக்குமே என்னைப் பிடிச்சிட்டது அத்தான். நீங்க சொல்வீங்களே. அதுல ஒரு குட்டிக்கதையைச் சொன்னேன்…“
“எவனாவது காபிரைட் கேஸ் போடாமல் பாத்துக்கோ.“
“நீங்க போடாமல் இருந்தால் சரி. நாளைக்கு ஒரு குட்டிக்கதை சொல்லுங்க அத்தான்…“
“அவர் இப்பதான் வந்திருக்கார்டா. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.“
“அடேடே இது கனவா நினைவா? இது நம்ம வீடுதானா? திலகாவே டபுள் ஆக்ட் குடுக்கறாளா?“
“டபுள் ஆக்ஷன் கதை ஒண்ணு. நாளைக்கு அவங்க கிட்ட சொல்லப்போறேன் அத்தான்.“
“அப்பிடியா?“ என்றபடியே காபியை வாங்கிக் கொள்கிறான்.
“அண்ணன் தம்பி ரெண்டு பேர்.“
“மொத்தம் மூணு பேரா?“
“இது பழைய ஜோக் அத்தான். கேளுங்க. அண்ணனும் தம்பியும் அச்சு அசலா ஒரே மாதிரி இருப்பாங்க.“
“டபுள் ஆக்ஷன் ஆச்சே.“
“அண்ணன் நல்லவன். தம்பி கெட்டவன். எல்லாரும் அண்ணனைப் பாராட்டிப் பேசறாங்க. இவனைத் திட்டித் தீர்க்கறாங்க. எப்பிடி இருக்கு அத்தான்?“
“காபி தானே? சூப்பர்.“
திலகா சிரிக்கிறாள். ராமசாமி அவளைப் பார்த்து, “கதையை விட காபி தேவலைன்னு சொன்னேன்“ என்கிறான்.
சிகாமணி கதையைத் தொடர்கிறான். “எல்லாரும் அண்ணனைப் பாராட்டிப் பேசறாங்க. அந்த ஆத்திரத்தில் தம்பி அண்ணனையே கொன்னுர்றான்.“
“ஐயோ.“
“இன்னும் ஐயோ ஸ்கொயர் வெச்சிருக்கேன் அத்தான்.“
“கொன்னுட்டு தம்பிதான் செத்துட்டதா அவனே அண்ணனா நாடகம் ஆடறான்.“
“டிவிஸ்ட்டு?“
“மகா டிவிஸ்ட் ஆச்சே…“
“இதுவரை இன்டஸ்ட்ரி காணாத டிவிஸ்ட்டு இல்லியா? அப்பறம் என்னாவுது?“
“எல்லாரும் இந்தக் கெட்டவனை, தம்பியை, அண்ணன்னு நினைச்சி பாராட்டிப் பேசப் பேச, தானே இவன் நல்லவனா மாறுகிறான்…“
“ஆண்டவா. தமிழ் இனட்ஸ்ட்ரியைக் காப்பாத்து…“ என எழுந்து போகிறான் ராமசாமி.

தொடர்கிறேன்
91 97899 87842



1 comment:

  1. அருமையாக எழுதி வருகிறீர்கள் .....பாராட்டுகள் .

    ReplyDelete