Friday, August 21, 2015

அத்தியாயம் 2

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் 
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
அத்தியாயம் 2 

ராமசாமி கண்ணாடி பார்த்து பவுடர் போட்டுக் கொண்டே பேசுகிறான். சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். “நேத்து எதோ சினிமா கம்பெனிக்குப் போனியே என்னடா ஆச்சி?“
“செமத்தியா ஒரு காமெடி சொன்னேன். சே, அவங்களுக்கு ரசனையே இல்லை அத்தான்…“
“நீ காமெடியைச் சொல்லு. ரசனையை நாங்க பாத்துக்கறோம்…“
“ஒரு ஜவுளிக்கடை அத்தான். ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்னு விளம்பரம் போட்டிருக்காங்க.“
“சரி.“
“நம்ம ஆள் போயி ஒண்ணை எடுக்கிறான். இதுக்கு எது இலவசம்?-னு கேட்கிறான். இதுன்னு ஒரு சட்டையைக் காட்டறாங்க. அதை முதல்ல எடுத்துக்கறான். பிறகு அதுக்கு இது இலவசம்னு சொல்லி ரெண்டையும் கேட்கிறான்… ஹி ஹி!”
“இதுவரை யாருமே யோசிக்காத காமெடி இல்லியா?“
“ஆமாம் அத்தான்.“
“போடா சனிக்குப் பொறந்தவனே. கரகாட்டக்காரன் காமெடியை உல்ட்டா பண்ணிட்டு கதை விடறே நீ.“
“அதான் அத்தான் சினிமா! கரகாட்டக்காரன் கதையே உல்ட்டான்றாங்க.“
“உன்கிட்ட விஷயம் இருக்கோ இல்லியோ. நல்லாப் பேசறே. மெக்கானிக் ரமணி வருவான். இல்லை ஆள் அனுப்புவான். ஸ்கூட்டர் ரிப்பர். என்னனு பார்க்கச் சொல்லு. வீட்லதானே இருப்பே?“
“இருப்பேன் அத்தான். இப்ப ஒரு கதை எழுதிட்டிருக்கேன். ஒரு திருவிழால அப்பா அம்மா குழந்தையைத் தொலைச்சிர்றாங்க. நல்லா விறுவிறுப்பா போயிட்டிருக்கு. ஒரு புது கிளைமாக்ஸ்…“
“இதுவரை சினிமா இன்டஸ்ட்ரியே பார்க்காதது… இல்லியா?“
“எப்பிடி அத்தான் கரெக்டா சொல்றீங்க?“
“உன் கதை எல்லாமே அப்பிடித்தானே? நீ அப்பிடித்தானே சொல்றே? இனியும் அதை இன்டஸ்ட்ரி பாக்காம இருந்தால், இன்டஸ்ட்ரிக்கு நல்லது…“ என கிளம்புகிறான்.
“இப்ப கரெக்டா பக்கத்து வீட்டு கணபதி வாசலுக்கு வந்து, என்ன ஆபிஸ் கிளம்பியாச்சா?...ன்னு கேப்பார் பாருங்க“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
“பாவம்டா அவரு. நல்ல மனுசன். நம்ம பிளாட்டுக்கு வர்றதுக்கு முன்னால, மூணு நாலு வருஷம் முந்தின்னு வெய்யி…  அவரும் அவர் சம்சாரமும் கடற்கரைக்குப் போயிருந்தப்ப… அந்தக் கூட்டத்தில்… அவங்க குழந்தை தொலைஞ்சி போச்சு. “
“ஐயோ. நம்ம கதையை ஏற்கனவே யாரோ வாழ்க்கைல காப்பி அடிச்சாப் போல இருக்கே. குழந்தையோட பீச்சுக்குப் போயிட்டு, கவலையோட திரும்பி வந்தாங்களா?“
“அந்த துக்கத்துலேர்ந்து அவங்க ரெண்டு பேரும் அதைத் தாண்டி வந்ததே பெரிய விஷயம். அந்தம்மா பாவம் ரொம்ப நொந்து போயி, அதுலேர்ந்து யாரிட்டயும் சரியா பேசறது கிடையாது. அவர் வேற மாதிரி ஆயிட்டாரு. யார்கூடயாவது அவருக்கு எதாவது பேசிட்டே இருக்கணும்னு அவர் ஆசைப்படறாரு. அதுக்காக நீ அவர்கிட்ட போயி உன் சினிமாக் கதையெல்லாம் எடுத்து விட்றாதே. அப்பறம் அவருக்குப் பேசற ஆசையே போயிரும்…“
“ஆனால் இந்த சிச்சுவேஷனே அருமை அத்தான். கடற்கரை. கூட்டம். ஒரு தம்பதி. குழந்தை தொலைந்து போகிறது. ஆண் குழந்தையா பெண் குழந்தையா அத்தான்?“
“பொண்ணு.“
“அப்பதான் நல்லா இருக்கும். வீட்ல வந்து படுத்திருக்காங்க. அம்மான்னு குழந்தை கூப்பிடறாப்ல ஒரு குரல். விறுவிறுன்னு அவள் எழுந்து ஓடோடிவந்து கதவைத் திறந்து பார்க்கறாங்க. வாசல்ல யாருமே இல்லை. வயலின் பிழிஞ்சிர்றேன் அத்தான். பி. சுசிலா பாட்டு ஒண்ணு கூட வைக்கலாம். கண்ணே கண்மணியே என் உயிருக்கு நெல்மணியே… எப்பிடி அத்தான்? “
“தாகூர் குழந்தைகளைப் பத்தி அருமையாச் சொல்லியருக்கார்டா.“
“யாரு?“
“ரவிந்தரநாத் தாகூர். குழந்தையைத் தூக்கிக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது.“
“சூப்பர்.“
“இப்ப நீ எழுதிட்டிருந்த கதையும் குழந்தை தொலைஞ்சி போற கதையா?““
“அது வேற கதை. அதுல இப்படி குழந்தை காணாமல் போன ஒருத்தர்… அந்த ஷாக்ல கோமாவுல படுத்திர்றாரு…“
“ஐயோ.“
“அப்பதான் கதைல நல்ல ஈர்ப்பு கிடைக்கும் அத்தான்.“
“ஒருத்தர் கோமாவுல படுத்திருக்கார். அப்ப அவர்மனைவி காணாமல் போயிர்றா. உடனே அவர் கோமாவுல இருந்து எழுந்துர்றாருன்னு எழுதுடா. புதுசா இருக்கும்…“ என்கிறான் ராமசாமி. “உங்க அக்கா கோவிலுக்குப் போயிருக்கா. சாமியை பயமுறுத்தாமல் இருக்கணும். கதவைச் சாத்திக்க. மெக்கானிக் வருவான். அவனை கவனி….“ என்றபடியே கிளம்புகிறான் ராமசாமி.

அப்புறம்தான் அந்த ஆச்சர்யமான விஷயம் நடக்கிறது.
ராமசாமி வெளியே வருகிறான். பக்கத்து பிளாட்காரர் வெளியே இல்லை. தாண்டிப் போகிறான். அவர் வீட்டு வாசலில் அன்றைய நாளிதழ். போடப்பட்டு எடுக்கப் படாமல் கிடக்கிறது. எடுத்து கதவு அளி வழியாக உள்ளே போட்டுவிட்டு மின்தூக்கிக்கு வருகிறான்.
உள்ளே போய் நின்று பொத்தான்களைப் பார்க்கிறான் ராமசாமி. பூஜ்யம் முதல் எட்டுவரை காட்டும் மின்தூக்கி. அதில் புதிதாய் இப்போது ‘மைனஸ் 1‘ காட்டுகிறது!
மைனஸ் 1. அதிர்ச்சி அடைகிறான் ராமசாமி. அவன் தலையில் திடீரென்று பல்பு ஒன்று எரிகிறது. கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி, நட்சத்திரங்கள் தெறிக்கின்றன. கண்ணை ஒருமுறை உருட்டிப் பார்க்கிறான்.
சந்தேகமே இல்லை. மைனஸ் 1 காட்டுகிறது பொத்தான்.
உடல் நடுங்குகிறது. மைனஸ் 1 எண்ணைத் தொடப் போகிறான். பயமாய் இருக்கிறது. கை உதறுகிறது. திரும்ப பூஜ்யத்துக்கு நகரும் கை. சட்டென என்ன தோன்றியதோ, மைனஸ் 1 பொத்தானை அழுத்துகிறான்.
லிஃப்ட் இறங்குகிறது. மைனஸ் 1 தளத்தில் அவனை வெளியே விட்டுவிடுகிறது. ஒரு குகைவழி போன்ற இருட்டான இடம். பதறிப்போய் அவன் திரும்ப லிஃப்ட்டைப் பார்க்கிறான். லிஃப்ட் அங்கே இல்லை. லிஃப்ட் பொத்தானை அழுத்த தேடுகிறான். ஒரே இருட்டாய்க் கிடக்கிறது.
ஹலோ… என இருளில் கத்துகிறான். ஹலோ, யாராவது இருக்கீங்களா?
பதில் இல்லை. ஹலோ நான் எங்க இருக்கேன்? அதற்கும் பதில் இல்லாத மௌனம்.
ஹ்ம். எனக்கு நானேதான் பதில் சொல்லிக்கணும் போலருக்கே.
அந்த இருளில் கண்ணால்தேடி கையால் துழாவிப் பார்க்கிறான். தூரத்தில் வெளிச்சம் புள்ளிபோல் தெரிகிறது. மெல்ல அதை நோக்கித் தடுமாறிப் போகிறான். கிட்டே போகப் போக வெளிச்சம் பிரகாசம் அடைகிறது.
அது ஒரு சந்துக்குக் கொண்டு விடுகிறது. அத்தோடு பிரதான சாலைக்கு வருகிறான். அவ்ளதான்… என தலையை உதறிக் கொள்கிறான். ஊர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தாண்டிப் போகையில் பிளாட்பார மரத்தடியில் சோசியக்காரன் ஒருவன். சந்தனம் குங்குமம் பூசிய அமர்க்களமான முகம். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்… என அவன் எதிரே பலகை. இவன் பார்ப்பதைப் பார்த்ததும், புன்னகை செய்கிறான் அவன். “சோசியம் பார்க்கறீங்களா சார்?“
புன்னகையுடன் அவனைத் தாண்டிப் போகிறான் ராமசாமி. திரும்ப தான் வந்த சந்தை ஒருமுறை பார்க்கிறான். அதிலேயே திரும்பிப் போனால் என்ன, என யோசிக்கிறான். கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான். தலையை உதறி மறுத்துக் கொள்கிறான். திரும்பி சாலையில் நடக்கிறான். டவுண் பஸ் வருகிறது.
கண்டக்டர் 4,50 டிக்கெட் தருகிறான். அவனுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. 50 பைசா வழக்கொழிந்து கொள்ளைக்காலம் ஆகிறதே. அதைவிட ஆச்சர்யம், டிக்கெட் விலையும் குறைவு.
“பசார் தெருவுக்கு டிக்கெட் சார். கம்மியான டிக்கெட் குடுத்திருக்கீங்க“ என திரும்பவும் கண்டக்டரிம் கேட்கிறான். “அதுக்குதான் டிக்கெட் குடுத்திருக்கிறேன்“ என்கிறான் கண்டக்டர். திரும்ப மீதி சில்லரை 50 காசைத் தந்துவிட்டுப் போகிறான்.
ராமசாமி அவனை ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான்.
வங்கிக்கு வருகிறான் ராமசாமி. அங்கே அவனுக்கு முதல் அதிர்ச்சி. வாசலில் செக்யூரிட்டியைப் பார்க்கிறான். அவன் இறந்து போனவன். எப்படி இப்போது உயிரோடு வந்தான்?
“வணக்கம் சார்.“
“ஏம்ப்பா நீ எப்பிடி உயிரோட வந்தே?“
“என்ன சார்?“
“ஒண்ணில்ல. தீர்க்காயுசா இருப்பா“ என்றபடி உள்ளே போகிறான்.
உள்ளே பழைய மேனேஜர் இருக்கிறார். அவர் மேசையில் பெயர்ப் பலகை. எஸ். கிருஷ்ணராஜ். “என்ன சார் திரும்ப டிரான்ஸ்ஃபர்ல வந்திட்டீங்களா?“ என்று கேட்கிறான்.
“நான் இங்கியே தான் இருக்கேன். நீதான்  டிரான்ஸ்ஃபர்ல போகப் போறே…“
“ஒருநாளைப் போல லேட்டா வரே?“
“இன்னிக்கு எனக்கு என்னவோ எல்லமே சரியா இலலை சார்.“
“உன்னால எங்களுக்கு தான் எல்லாமே தப்பா ஆகுது. இங்க பாரு, மூணும் எட்டும் ஒரே மாதிரி எழுதறே நீ. நேத்து டே புக் டேலி ஆகாமல் ஒருமணி நேரம் மண்டைய உடைச்சிட்டிருந்தோம்.“
“சாரி சார். டாக்டர் செலவை வேணா நான் குடுத்திர்றேன்…“
“எதுக்கு?“
“என்னாலதானே உங்க மண்டை உடைஞ்சது.“
“ஜோக்கா?“
“சாரி சார்.“
“மாணவர்களுக்கு நம்ம வங்கி கல்விக்கடன் கொடுத்திருக்கு இல்லியா? அதோட ஸ்டேட்மென்ட் கேட்டாங்களே. ரெடி பண்ணிட்டியா?“
“இதோ பாத்திர்றேன் சார்.“ என வெளியே வருகிறான்.
வழியில் ஒருவர் நிற்கிறார். “என்ன வேணும்?“
“மேனேஜரைப் பார்க்கணும் சார்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“போய்ப் பாருங்க.“
“அவர் நல்ல மூடுல இருக்காரா சார்?“
“அவரை நல்ல மூடுல நீங்க என்ன, நாங்களே பார்க்க முடியாது. போய்ப் பாருங்க.“
ராமசாமி தன் இருக்கைக்குப் போகிறான். அவன் நண்பன் ரமேஷ் வருகிறான். “என்னடா ஆச்சி உனக்கு?“
“இன்னிக்கு நடக்கிறது ஒண்ணுமே புரியலடா எனக்கு.“
“ஏன்?“
அப்போது அங்கே அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ராதிகா வருகிறாள். அவளும் இங்கேயிருந்து, திருமணமானபின் ஊர் மாற்றல் வாங்கிப் போனவள் தான்.
“என்ன சார் அப்பிடிப் பார்க்கறீங்க?“ என ராதிகா ஆச்சர்யப் படுகிறாள்.
“இல்ல. நீ கல்யாணம் ஆகி பெங்களூர் போகல்லியா?“
“என்னை சார் விளையாடறீங்க? எனக்கு செவ்வாய் தோஷ ஜாதகம்னு கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கே சார்.“
“சனி வக்ர கதியில, அதாவது பின்னோக்கி சுத்துதா எனக்கு?“ என்கிறான் ராமசாமி.
ராதிகா போனதும் அப்படியே வேலை செய்யாமல் குழப்பமாய் உட்கார்கிறான். தனக்குள்ளே, இங்க நடக்கிறதையெல்லாம் பார்க்கிற போது, எனக்கே கல்யாணம் ஆயிருச்சா இல்லையான்னு யாரையாவது கேட்கணும் போல இருக்கு…
அப்படியே தன் செல்ஃபோனை எடுத்து மனைவிக்குப் பேச முயல்கிறான். தொடர்பு எல்லைக்கு வெளியே. நாட் ரீச்சபிள், என்று வருகிறது. ஆகா, எத்தனை அருமையான நாள், என்று சத்தமாய்ச் சொல்கிறான்.
பக்கத்து இருக்கை ரமேஷ், “என்னடா இது? மொபைல் புதுசா இருக்கே? எப்ப வாங்கினே?“ என்கிறான்.
“இது என் மொபைலா என்னன்னே சந்தேகமா இருக்குடா…“
“என்ன சொல்றே நீ?“
“அது சரி. மேனேஜர் வேற மாணவர்களின் கல்விக்கடன் ஸ்டேட்மென்ட் எடுக்கச்சொல்றாரு. அந்த வேலையே புரியல.“
அப்போது வங்கியில் பணம் எடுக்க ஒரு பெண் வருகிறாள். வயிற்றுப் பிள்ளைக்காரி. ஆகா இவளை நேற்று பார்த்திருக்கிறேன், என சட்டென நினைவு வருகிறது.
“டேய் ரமேஷ் இவளை நான் நேத்து நம்ம பாங்க்ல பாத்தேன்.“
“அதுக்கென்ன?“
“அதுல ஒரு விசேஷம் உண்டு.“
“என்ன?“
“நேத்து இவ இவள்பையன் கூட வந்திருந்நதாள்.“
“இவளா? சான்ஸே இல்லை.“
“ஏன்?“
“இவ முழுகாமல் இருக்காளே. ஒருவேளை வேற குழந்தையோட வந்திருப்பாளோ?“
““நேத்து இவள் இப்படி வயித்தைத் தள்ளிக்கிட்டு வரல்லியே…“ என்கிறான் ராமசாமி. சட்டென யோசனை வந்தா மாதிரி கேட்கிறான். “ரமேஷ் இன்னிக்கு என்ன தேதி?“
“பதினஞ்சு.“
“சரிதான்.“
“மாதம்?“
“பிப்ரவரி.“
“அதுவும் சரிதான்…“
ரமேஷ் எழுந்து போகிறான். அவனிடம் அவனைநிறுத்தி ராமசாமி கேட்கிறான். “வருஷம்?“
“அடச் சே. 2014. ஏண்டா?“
“இல்லடா இது 2016 ஆச்சே…“
“ச். நல்லாதானே இருந்தே நீ? யாராவது டிராஃப்ட் கேட்டால் வருஷம் தப்பா போட்டிறாதே… இது 2014 தான்…“ என எழுந்து போகிறான்.
பியூன் ஒரு லெட்ஜரை எடுத்துக் கொண்டு வருகிறான். “நேத்து ஒரு ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கினியே ரத்தினம்?“
“நானா?“
“ஆமா.“
“உங்ககிட்டியா?“
“ஏன்?“
“நான் நேத்து வேலைக்கே வரல்லே சார்…“
“அப்பிடியா?“ என்றவன் நிறுத்தி, “இது எந்த வருஷம் ரத்தினம்?“ என்று கேட்கிறான். “2014 தான் சார். அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?“
அவனுக்கு ஆடுத்த இருக்கையில் ரமேஷ் மேசைத் தொலைபேசி ஒலிக்கிறது. ரமேஷ் எடுத்துப் பேசியபடி “ராமு உனக்குதான்…“ என அழைக்கிறான்.
மதுரையில் இருந்து அவன் மாமனார். “மாப்ளே எப்பிடி இருக்கீங்க?“
“சொல்லுங்க மாமா.“
“அதான் மாப்ளே, திலகாவை ஊருக்கு அனுப்பிட்டு ஜாலியா இருந்தீஙகளா ரெண்டு நாளா?“
“திலகாவா? மதுரைக்கு வந்திருக்காளா?“
”ஏம் மாப்ளே, நீங்கதான் வந்து ரயில் ஏத்திவிட்டதாச் சொன்னாளே? உங்களுக்குள்ள எதும் மனஸ்தாபமா மாப்ளே?“
“நீங்களா எதும் இடைல கலாட்டா பண்ணாமல் இருந்தா சரி மாமா. ஆமாமா மறந்துட்டேன்..“ என அசடு வழிகிறான். “சரி. திலகா சௌக்கியமா?“ என்று கேட்கிறான்.
“இன்னிக்கு பாண்டியன்ல ஏத்தி விடறேன் மாப்ளே. நாளைக்குக் காலைல எக்மோர் வந்து அழைச்சிட்டுப் போங்க.“
“சரி“ என தொலைபேசியை வைக்கிறான்.
ஆமாம். இது 2014 தான், என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
மனசில் காட்சிகள், லிஃப்ட். மைனஸ் 1. இருள் வழி. எல்லாம் தெரிகிறது.

(தொடர்கிறேன்)
91 97899 87842


No comments:

Post a Comment