Tuesday, August 25, 2015

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத்தியாயம் 5



வசிகரப் 

பொய்கள்

எஸ்.. சங்கரநாராயணன்


அத்தியாயம் 5
குளித்து விட்டு ஈரத் துண்டோடு வந்து ராமசாமி துணி அலமாரியைத் திறக்கிறான். சமையல் அறைப் பக்கமாகப் பார்த்து “திலக், டிபன் ரெடியா?“ என்று ஒரு குரல் கொடுக்கிறான். தலையில் ஈரத் துண்டோடு திலகா. அவளைப் பார்த்ததும், “தலைக்குக் குளிச்சியா? என்ன விசேஷம்?“ என்று கேட்கிறான்.
“தெரியாத மாதிரி கேட்கறீங்க?“
“ஏன்? என்ன?“
“விசேஷம் இன்னிக்கு இல்லை.“
“பின்னே?“
“நேத்திக்கு…“
“ஓகோ. ஓகோகோ.“ சிரிக்கிறான்.
“அடேய் என் ஆம்பளை படுவா… சிரிக்கவேற செய்யறியா?“ என அவளும் சிரிக்கிறாள்.
“தேங்க் யூ திலக்.“ என்கிறான்.
“பிளஷர் இஸ் மைன்….“
“அவர்ஸ்.“
கையைத் தூக்கி பவுடர் அடித்துக் கொள்கிறான். வாயில் என்னவோ பாடல். சொர்க்கமே என்றாலும்… அது பான்ட்ஸ் பௌடர் போலாகுமா?
“தினசரி லேட்டாப் போறதா மேனேஜர் கிருஷ்ணராஜ் திட்டறார். இன்னிக்காவது சரியாகப் போக முடியுமா பார்க்கிறேன்.“
“கிருஷ்ணராஜா?“ என்கிறாள் திலகா.
“ஏன்?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “அவர் மாற்றலாகிப் போயி வருஷக் கணக்காறதே…“ என்கிறாள் திலகா. “ஆமாம்“ என அசடு வழிகிறான் ராமசாமி. பிறகு சிரியசாகிறான்.
“இல்லைன்னும் பதில் சொல்லலாம் இதுக்கு.“
“அப்டின்னா? என்ன சொல்ல வரீங்க?“
“அதைத்தான் நேத்தே சொல்ல வந்தேன். நீ கேட்கல்ல.“
“இப்ப சொல்லுங்க.“
அவன் ஆரம்பிக்க வருகிறான். அப்போது வாசல் கதவு தட்டப் படுகிறது. கையில் காகிதத்துடன் சிகாமணி உள்ளே வருகிறான்.
“மாடில உட்கார்ந்து கதை எழுதிட்டு வரியா“ என்று கேட்கிறான் ராமசாமி. “அந்த, குழந்தை தொலைஞ்சி போன கதை தான் அத்தான்.“
“கோமாவில் இருந்து அந்தத் தகப்பன் எழுந்துட்டானா?“
“கிளைமாக்ஸ்ல தான் எழுந்திருப்பார். நடக்கிறது எல்லாமே அவருக்கு விளங்கும். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் அப்படியே கிடந்த படுக்கையாக் கிடப்பாரு…“
“அந்த காரக்டர்ல நடிச்சவருக்கு இந்த வருடம் சிறந்த நடிகர் அவார்ட் கிடைக்கும்டா.“
“தேங்ஸ் அத்தான்.“
“அவருக்கு லவ்வு கிவ்வு உண்டா கதையில்?“
“ம். அவர் கனவில்….“
“அடப்பாவி. நீங்க விட்டால் சாமியார் கதையிலேயே லவ் சாங், கனவில் வெச்சிருவீங்க.“
“நல்ல ஐடியா. சாமியாரையே எத்தனை படங்கள்ல வில்லனா கடைசில ஆக்கிர்றோம். சனங்க எதிர்பாராத கிளைமேக்ஸ் வேணும். அதான் சினிமால முக்கியம்.“
“சினிமான்னாலே கோமா, பிளட் கான்சர்னு அவசரத்துக்கு எடுத்து விட்டுர்றீங்களேடா.“
“அப்பதான் கதைல கிரிப் கிடைக்கும். முடிவுலயும் நல்ல டிவிஸ்ட் வைக்கலாம்.“
“சாமர்செட் மாம் கதைல வராத டிவிஸ்ட்டாடா? ஒரு சின்னக் கதை…“
“சொல்லுங்க.“
“முதலாளி ஒரு வேலைக்காரனை எதோ சாமான் வாங்கிவர பஜாருக்கு அனுப்பறார். அங்க அவனுக்கு நேர் எதிரா எமன் வந்து நிக்கறான்…“
“ஐயோ.“
“வேலைக்காரன் பதறியோடி திரும்ப முதலாளிகிட்ட வர்றான். ஐயா நான் எமனைப் பாத்திட்டேன். அவன் என்கிட்ட என்னவோ சொல்ல வந்தாப்ல இருந்தது. பயந்துபோய் நான் ஓடிவந்திட்டேன்…னு நடுங்கினான்.“
சிகாமணி தலையாட்டுகிறான்.
“முதலாளி அவனை ஆறுதல் படுத்தினார். கவலைப்படாதே. உனக்கு நிறையப் பணம் தரேன். அதை வெச்சிக்கிட்டு நீ உடனே திருநெல்வேலிக்குப் போ. உங்க ஊருக்குப் போயி ஒளிஞ்சிக்கோ… அப்டின்னாரு. அவனும் பணத்தை வாங்கிட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு உடனே ரயில் ஏறிட்டான்.“
“சரி.“
“முதலாளிக்கு எமனைப் பார்க்க ஆசையாயிட்டது. அவர் கிளம்பி பஜார்ப் பக்கமாப் போனார். அங்கே அவர் எமனை சந்திச்சார்….“
“யார் கதை அத்தான் இது?“
“சாமர்செட் மாம். கேளு கதையை. அவர் எமன் கிட்ட கேட்டார். என் வேலைக்காரனை நீ பாத்தியாமே? ஆமாம். அவனை இங்க பார்த்தது எனக்கு ஆச்சர்யமாயிட்டது. இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கே. நாளைக்கு சாயந்தரம் நான் உன்னை திருநெல்வேலியில சந்திக்கறதா தானே விதின்னு கேட்க நினைச்சேன்- அப்டின்னானாம் எமன்.“
“சூப்பர் அத்தான்.“
“இதை சினிமாவுல எடுப்பியா?“
“எடுக்கலாமே.“
“எப்பிடி?“
“அவன் முதலாளியைப் பார்க்க நேரா ஓடி வரக் கூடாது அத்தான். வர்ற வழில எதிரே வர்ற சைக்கிளைத் தள்ளி விட்டுட்டு… ஒரு பொண்ணு மேலே மோதிட்டு… மாடிப்படியில குடத்தில் தண்ணி கொண்டு வர்ற ஒருத்தியோட குடத்தைத் தட்டிவிட்டு… குடம்  மாடிப்படியில உருளணும்… அப்பதான் எஃபெக்டிவ்வா இருக்கும்.“
“கதைல கூட வராத, நம்ப முடியாத அநேக விஷயங்கள் நம்ம வாழ்க்கையிலேயே நடக்குதுடா…“
அருகில் கிடக்கும் நாளிதழை எடுத்துப் புரட்டுகிறான் சிகாமணி.
“நேத்து பேப்பர்ல பாத்தியா? ஒரு தோப்புக்குள்ளேர்ந்து குழந்தையோட சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கு. ஊரே பேய் பேய்னு பயந்திட்டது…“
“அப்படியா? அப்பறம் என்னாச்சி?“
“தோட்டக்காரன் மரத்தடில செல்ஃபோனை விட்டுட்டுப் போயிருக்கான். அதுல ரிங் டோன் எதுன்றே? அதான் குழந்தையோட சிரிப்புச் சத்தம். அது அப்பறந்தான் தெரிஞ்சது…“
சிகாமணி “நல்லா இருக்கு. என் கதையிலேயே வைக்கலாம் போலருக்கே“ என்கிறான்.
“எப்பிடி?“
“அப்பா கோமாவில் படுத்திருக்கிறார். அவரை எழுப்ப என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்க்கறாங்க. அவரோட குழந்தையோட குரலை ரெகார்டு பண்ணி, அப்பா எழுந்திருப்பா, அப்பா எழுந்திருப்பா…ன்னு போட்டு அவர் பக்கத்தில் சத்தமா வைக்கறாங்க.“
“அஞ்சலி படம் மாதிரியா?...“
“அஞ்சலி படத்தில் அந்தக் குழந்தையை மத்த குழந்தை, ஏந்துரு அஞ்சலி, ஏந்துரு…ன்னு திரும்பத் திரும்ப எழுப்பும். படம் முடிஞ்சிட்டதுன்னு தியேட்டர்ல எல்லாரும் எழுந்துருவாங்க.“
“இங்க, கோமால கெடக்கிற பேஷன்ட் தவிர, பக்கத்து பெட், எதிர் பெட்னு எல்லாரும் எழுந்துர்றாங்க. அவர் மாத்திரம் அப்படியே கெடக்காரு… அதானே?“
“தேசிய விருது கிடைக்குமா அத்தான்?“
“உன்கிட்டப் போயி பேசிட்டிருக்கேன் பாரு. என்னைச் சொல்லணும். திலகா? டிபன் ரெடியா?“
“வரலாம்…“ என்கிறாள் திலகா. எழுந்து போகிறான் ராமசாமி.
சிகாமணி நாளிதழைப் பிரித்து சினிமா செய்திகள் வாசிக்கிறான். “நடிகை இம்சிகா ரகசியத் திருமணம். ஏற்கனவே ரகசியம் இல்லாமல் ஒரு கல்யாணம் பண்ணிட்டதாலே இது ரகசியத் திருமணம் போலருக்கு…“
அவனிடம் இருந்து நாளிதழை வாங்கி தன் பையில் வைத்துக் கொள்கிறான் ராமசாமி. “இன்றைய பேப்பரை இன்னும் நீங்க வாசிக்கலையா அத்தான்?“
“வாசிச்சாச்சு.“
“பின்ன எதுக்கு ஆபிசுக்கு எடுத்திட்டுப் போறீங்க?“
“அதுல ஒரு வேடிக்கை பண்ணலாம்னு பார்க்கிறேன்…“ என்று வெளியே கிளம்புகிறான்.
வங்கிக்குள் நுழைகிறபோதே முதல் சந்தோஷம். கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான் ராமசாமி. அலுவலகம் துவங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது. மணி 09,20. உற்சாகமாக மேனேஜர் அறைக்குள் நுழைகிறான்.
அவர் மேசையில் அன்றைய நாளிதழ் இருக்கிறது. புன்னகை செய்து கொள்கிறான்.
மேனேஜர் கிருஷ்ணராஜ் “என்னய்யா திருந்திட்டியா? சீக்கிரமே வந்தாச்சு?“ என்றவர் முன்னே குனிந்து “வீட்ல எதும் பிரச்னைன்னு சீக்கிரமே வந்திட்டியா?“என சிரிக்கிறார். “ஜஸ்ட் KIDDING. நான் ரொம்ப கடுமையா நடந்துக்கறேன்னு எல்லாரும் ஃபீல் பண்றீங்க. இல்லியா?“
“இல்… ஆமா சார்.“
மேசையில் கிடக்கிற நாளிதழையே பார்க்கிறான் ராமசாமி. கை தன்னைப்போல தன் பையில் இருக்கிற நாளிதழை நிமிண்டுகிறது. மனசின் குரல். பழைய, ரெண்டு வருஷம் முந்தைய பேப்பரை எடுத்திட்டு, இந்தப் பேப்பரை வைக்கிறேன். அவர் கண்டுபிடிக்கிறாரா பார்ப்போம்…
ஒரு நல்ல சேதி.“ என்கிறார் மேனேஜர்.
“என்ன சார்? உங்களுக்கு மாற்றல்… வந்திட்டதா?“
“அது உங்களுக்கு வேணா நல்ல சேதி. எனக்கு என்ன?“
“சாரி சார். கெட்ட சேதி என்ன? சொல்லுங்க…“ அவர் முகம் மாறுகிறதைப் பார்த்துவிட்டு, ‘’KIDDING’’ என்கிறான்.
“நம்ம சென்னையின் சிறந்த கிளைன்னு அவார்டு வாங்கியிருக்கோம். அது எப்பிடி வந்தது? என்னோட அட்மின்ஸ்ட்ரேஷன்னால தானே?“
“அப்பிடியா வெரி குட் சார். வாழ்த்துக்கள் சார்.“
அவர் தன் மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து அண்ணாந்து குடிக்கிறார். சட்டென தன் பைக்குள் இருந்த நாளிதழை எடுத்து மேசையில் இருந்த ரெண்டு வருடம் முந்தைய ‘அன்றைய‘ நாளிதழை மாற்றி வைக்கிறான்.
“என்ன?“ என்கிறார் மேனேஜர்.
“ஒண்ணில்லியே…“
அவர் நாளிதழை வாசிக்கக் காத்திருக்கிறான். அவர் தொடர்ந்து தன் புகழ்  பாட ஆரம்பிக்கிறார். “மொதல்ல ஒரு அப்பா தன் மகன்கிட்ட கடுமையா நடந்துக்கறா மாதிரிதான் பையனுக்குத் தோணும். போகப்போகத் தான் தெரியும்…“
“அப்பாவுக்கே தான் நடந்துக்கறது தப்புன்னு…“
அவர் முறைக்கிறார். “சாரி சார்.“
“எல்லாத்தையும் சொல்லிட்டு ஒரு சாரி சொல்லிர்றே… இப்பவே இந்த ஆட்டம் ஆடறீங்களே? நான் ஸ்ட்ரிக்டா இல்லாட்டி?“
“இன்னிக்கு என்ன தலைப்புச் செய்தி சார்?“ என்கிறான் அடக்க மாட்டாமல். பேப்பரை எடுத்துப் பாரேண்டா, என்கிறான் மனதுக்குள்.
“ஹெஹ்ஹே“ என அவர் சிரிக்கிறார். “நாமதான் சென்னையின் சிறந்த கிளை. இதைவிட என்ன தலைப்புச் செய்தி?“ என்கிறார்.
“HEADLINE சரி NECKLINE என்ன சார்?“
“அது… இனிமேதான் பேப்பர் படிக்கணும்… வேலைநேரம் ஆரம்பிச்சாச்சி.“ ஆனால் அவர் நாளிதழைப் பிரிக்கிறார். “பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு. பாகிஸ்தானில் குண்டு வெடிக்காத நாள் உண்டா ராமு?“
“இல்லை சார்.“
“சரி. நீ போ உன்  வேலைக்கு…“ என நாளிதழை மூடிவிட்டு எதற்கோ எழுந்து போகிறார். தன்னிடம் உள்ள பழைய பேப்பரை எடுத்து தலைப்புச் செய்தி வாசிக்கிறான் ராமசாமி. அதே தலைப்புச் செய்தி.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு.
“பாகிஸ்தானில் குண்டு வெடிக்காத நாளே இல்லை“ என தனக்குள் சொல்கிறான் ராமசாமி. நாளிதழை திரும்ப மாற்றி வைத்து விட்டு வெளியே வருகிறான்.
இரவில் வீட்டில் கோகுல் வீட்டுப்பாடம் அம்மாவிடம் வாசித்துக் காட்டுகிறான். ராமசாமி உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, “இருடா. அப்பாவுக்குக் காபி கொடுத்துட்டு வரேன்“ என திலகா உள்ளே போகிறாள்.
“சம்பள நாள்னா எல்லாம் நல்லபடியா நடக்கும்“ என்கிறான் ராமசாமி. “பிராகிரஸ் ரிப்போர்ட் வந்ததாடா?“
“இன்னும் வரலப்பா.“
“உனக்கு என்னடா நல்ல மார்க் வாங்குவே. என் பிள்ளையாச்சே…“ என்கிறான். அம்மா முறைப்பதைப் பார்ததுவிட்டு, “யார் டியூஷன்? திலகாவாச்சே“ என்கிறான். கோகுல் வந்து அவன் மடியில் அமர்ந்து கொள்கிறான்.
காபியை வாங்கிக் கொள்கிறான். “எங்க உன் அருமைத் தம்பி?“
“கடைக்கு அனுப்பினேன்.“
‘அவன் தரும் சம்பளத்தை வாங்கி அப்படியே உள்ளே கொண்டு போகப் போனவள், என்ன தோன்றியதோ அங்கேயே எண்ணுகிறாள்.
“என்னங்க சம்பளம் குறையறாப்ல இருக்கே?“
“ஆகா, ரெண்டு வருஷத்துக்கு முந்தைய சம்பளம்டி இது.“
“என்ன உளர்றீங்க? எதும் ஏடாகூடம் பண்ணி ரெண்டு இன்கிரிமென்ட் கட்டாயிட்டதா?“
என்ன சொல்ல தெரியாமல் அவன் விழிக்கிறான்.
“யாருக்காவது கடன் கிடன் குடுத்தீங்களா?“
“திலகா. நீ ஜீனியஸ்“ என்கிறான் ராமசாமி. “உன்கிட்ட ஒரு சௌகர்யம்டி. கேள்வியை சடார்னு நீ கேட்டருவே. நான் பதிலை யோசிக்கறதுக்குள்ள… சரியான பதிலை, அழகா நீயே சொல்லிருவே…“
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.“
“நீ பதில் சொல்றதைச் சொல்றியா?“
“அவன் கேட்டான். இவன் கேட்டான்னு இப்பிடி கேட்டவனுக்கெல்லாம் கடன் கொடுத்தால்…“
“கேட்காதவனுக்குக் குடுக்க மாட்டேன்“ என ராமசாமி சிரிக்கிறான்.
“நீ படிக்க வாடா. எப்படா எழுந்து ஓடலாம்னு இருக்கான் இவன். அப்பனை மாதிரியே, ஒரே ஏமாத்து பேர்வழி…“
அவன் உள்ளே போகிறான். முதுகுப் பக்கம் இருந்து அவள் குரல். “எப்ப திரும்பக் கிடைக்கும்.“
“சிக்கிரமே…“
“பாக்கலாம் உங்க சாமர்த்தியத்தை.“
அவளுக்குத் தெரியாமல் வலிப்பு காட்டி நகைக்கிறான் ராமசாமி.
(தொடர்கிறேன்)

91 97899 87842

No comments:

Post a Comment