Tuesday, August 18, 2015

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத்தியாயம் 1

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்

*
அத்தியாயம் 1
*
 காய்கறி மார்க்கெட் பரபரப்பாய் இருக்கிறது. வரிசையான கடைகள். வாகனங்கள், மனிதர்கள் வழியை அடைத்தபடி நடந்து போகிறார்கள். ஒரு சரக்கு வண்டி ஊடே கடக்கிறது. ஆ அள்ளு. பிஞ்சுக் கத்திரி. போனா வராது பொழுது விடிஞ்சா கிடைக்காது, என ஒரு வியாபாரக் குரல்.
“வணக்கம் சார். வாங்க வாங்க. உங்களைத் தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்…“ என்கிறான் கடைக்காரன். ராமசாமி புன்னகை செய்தபடியே கடையை நோக்கி வருகிறான். கூட மகன்.
“யாரு? உங்க பையனா? உன் பேர் என்னப்பா?“
“கோகுல்.“
கெட்டிக்காரப் பையன்… என்ன படிக்கறே?“
”மூணாங் கிளாஸ்.”
பேசியபடியே வெண்டைக்காயை நிறுத்து ராமசாமியின் கூடையில் போடுகிறான் கடைக்காரன். “உங்களுக்காகவே தனியா பொறுக்கி எடுத்து வெச்சிருந்தேன் சார்.“
“நான் நேத்தே உன் கனவுல வந்திட்டேன் போலருக்கு. யாரு ஏமாளி, தலைல கட்டலாம்னு நீ தேடிட்டு இருக்கியாக்கும்?“
கடைக்காரன் சிரிக்கிறான். “உங்க வேலையைக் குறைக்கலாம்னு தான். சார் தமாஷா பேசறீங்க. பேங்க் ஆபிசர் ஆச்சே. உங்களை ஏமாத்த முடியுமா? பல சோலிக்காரர் நீங்க. வந்தமா வாங்கினமா போனமான்னு இருக்க வேணாமா?. அதான்…“
“நாட்ல பாதிப்பேர், உங்களை ஏமாத்த முடியுமா?...ன்னு சொல்லியே… ஏமாத்திர்றாங்க.“
பையனுக்கு ஒரு கேரட் தருகிறான் கடைக்காரன். கடித்தபடியே கூட வரும் மகன். வீடு நோக்கித் திரும்புகிறார்கள். கடந்து போகும் ஒரு சைக்கிள், மணி அடித்து எச்சரிக்கிறது. நின்று கவனித்து பிறகு போகிறார்கள்.
தூரத்தில் இருந்தே அவர்களின் அடுக்ககம் தெரிகிறது. எட்டுமாடிக் குடியிருப்பு. முகப்புக்கு வந்து மின்தூக்கிப் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராமசாமியின் கூடையில் தொங்கியபடி கறிவேப்பிலை கொத்துமல்லி நீட்டித் தெரிகிறது. கூட அன்றைய நாளிதழ்.
மின்தூக்கி கதவு திறக்கிறது. பூஜ்யம் முதல் எட்டு வரை அதில் எண்கள் இரு வரிசைகளாகத் தெரிகின்றன. “அப்பா தூக்கி விடு. நான் அழுத்தறேன்.“ கோகுலை அவன் தூக்கி விடுகிறான். ஏழாவது மாடி பொத்தானை கோகுல் அழுத்துகிறான். மின்தூக்கி மேலே கிளம்புகிறது.
“ஏம்ப்பா அம்மா உன்னைத் திட்டிட்டே இருக்காங்க?“
“அது அவ சுபாவம்டா மகனே.“
“அம்மாகிட்ட திட்டு வாங்கறா மாதிரியே ஏம்ப்பா நீயும் நடந்துக்கறே?“ பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “அது என் தலை எழுத்துடா மகனே.“
மின்தூக்கி நிற்க வெளியே வருகிறார்கள். பொது வழியில் பக்கத்து பிளாட்காரர். நடுத்தர வயது “என்ன, மார்க்கெட் போயிட்டு வராப்லியா?“
வீட்டுக்குள்ளே இருந்து சிகாமணி வருகிறான். ராமசாமியின் மனைவி திலகாவின் தம்பி. “எப்பிடி சார் கரெக்டா கண்டுபிடிச்சீங்க? சூப்பர் சார் நீங்க“ என ஆச்சர்யம் போலக் கேட்டு கேலி செய்கிறான். ராமசாமியின் கையில் இருந்த கூடையை வாங்கிக் கொள்கிறான். அதை அக்காவிடம் தந்துவிட்டு நாளிதழின் சினிமா விளம்பரப் பக்கத்தைப் பார்க்கிறான் சிகாமணி.
“இந்தக் கரிசனத்துக்கெல்லாம் குறைச்சல் இல்லை. சும்மா சினிமாக்கதை எழுதறேன், டைரக்சன் பண்ணப் போறேன்னு வெட்டியாப் பொழுது போக்கறதுக்கு, ஏண்டா, காலைல இந்த மாதிரி உதவியெல்லாம் நீ செய்யலாம் இல்லே?”
“எங்க தலைவர் அப்துல் ரகுமான் சொல்லியிருக்கிறார்…“
“யாரு?“
“கவிஞர்.“
சொல்லு. என்ன சொல்லியிருக்கிறார்?“
“சிற்பிகள் அம்மி கொத்தக் கூடாது.“
“அட அது. சினிமாவுக்கு நான் வர மாட்டேன்னு அவர் சொன்னதுடா… நீ வீட்டு வேலைக்கு உதவி செய்டான்னா கதை விடறே?“
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறமா பாத்துக்கலாம்…“ என்றபடியே உள்ளே போகிறான் சிகாமணி. “இன்னிக்குப் புதுசா ஒரு கதை யோசிச்சேன் அத்தான். இதுவரை யாருமே பண்ணாத சப்ஜெக்ட்“
“அவ்வளவு மோசமாவா யோசிச்சே? உனக்கு அதுக்கெல்லாம் காலைல நேரம் இருக்கு. எங்களுக்கு இல்லியே?“ என்றபடி சட்டையைக் கழற்றுகிறான் ராமசாமி. முதுகுக்குப் பின்னால் இருந்து குரல். திலகா காய்கறிக் கூடையை சோதிக்கிறாள். “இன்னிக்கும் வெண்டைக்காய் தானா? இது தவிர உங்களுக்கு வேற காயே தெரியாதா?“
ராமசாமி திரும்பாமல், “வெண்டைக்காய் அத்தனையும் மூளைடி“ என்கிறான். “மண்ணாங்கட்டி“ என்று முணுமுணுக்கிறாள் திலகா. மகன் கோகுல் அப்பாவைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “அத்தனையும் முத்தல். உங்களை நல்லா ஏமாத்தி யிருக்கிறான் கடைக்காரன். தனியா உங்களுக்காகவே எடுத்து வெச்சிருக்கான் போலருக்கு…“ கோகுல் சிரித்தல். “அத்தனையும் உங்களுக்கே போடறேன். அப்பவாவது மூளை வேலை செய்யுதான்னு பாப்பம்.“
“இப்படி ஆட்கள் தான் அக்கா திடுதிப்னு எதாவது சாதிப்பார்கள்…“ என்கிறான் சிகாமணி. திரும்பி ராமசாமியைப் பார்த்து, “அத்தான் ஒரு நூறு ரூபா கொடுத்திட்டுப் போங்க.“
”நூறு ரூபாயா? எதுக்கு?“
“திருப்பித் தந்திருவேன் அத்தான். கவலைப் படாதீங்க…“
“நல்லாத் தந்தே போ. என்ன செலவுடா உனக்கு?“
“ரோஜா புரொடக்சன்ஸ்ல புதுப்படம் ஆரம்பிக்கறாங்க. போயி உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்கலாம்னு பார்க்கிறேன்.“
“உங்க அக்காவை எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தப்ப, கூட உன்னையும் அனுப்பி வெச்சிட்டார் உங்க அப்பா. கட்டுச்சாதத்து கூட பெருச்சாளியையும் அனுப்பி வெச்சா மாதிரி. அன்னிலேர்ந்து நீயும் கம்பெனி கம்பெனியா சினிமா சான்ஸ் கேட்டு அலையறே…“
“தடைக் கற்கள் எனக்கு படிக் கற்கள். எனக்கு ஒரு காலம் வரும் அத்தான். அப்ப எல்லாருமே மூக்குல விரல் வைக்கப் போறீங்க…“
“அதுக்கு ஒரு காலம் வரணும்ன்றது இல்லை. சளி பிடிச்சாலே எல்லாரும் மூக்குல வெரல் வைப்பான்…“
சாப்பாட்டு மேசை. வங்கிக்குக் கிளம்பத் தயார் உடையில் ராமசாமி. சட்டை பட்டன் போட்டுக் கொண்டபடி மேசைக்கு வருகிறான். கண்ணாடியில் தன் அழகைப் பார்த்தபடி சிகாமணி. இருவரும் சாப்பிட உட்கார்கிறார்கள். இருவருக்கும் தட்டில் இட்லி பரிமாறுகிறாள் திலகா.
“இந்த முறை எப்பிடியும் கம்பெனியில் சேர்ந்துருவேன் அத்தான். அதுக்காகவே அவங்க கிட்ட சொல்ல ஒரு புது சீன் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். சொல்லவா?“
“வேணாம்.“
“ரொம்பப் புதுசா இருக்கும் அத்தான். கேட்டுப்பாருங்க…“ அவன் கேட்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்கிறான். “ஒரு காதலன் காதலி அத்தான்.“
“ரொம்பப் புதுசா இருக்கே?“
“கேளுங்க. கடற்கரைல சந்திக்கறாங்க…“
“இது அதைவிடப் புதுசு.“
“‘அப்ப ஒரு முறுக்கு விற்கிற பையன் பக்கத்தில் வருகிறான். அவளோ எனக்கு சுண்டல்தான் வேணும்னுர்றா. ஒரு படத்தில் ரஜினி கிட்ட மீனா பட்டாம்பூச்சியைப் பிடிச்சித் தான்னு கேப்பா இல்லியா?“
“பட்டாம்பூச்சியை சுண்டலா ஆக்கிட்டியா?“
“அது பெரிய படம் அத்தான். இது லோ பட்ஜெட் இல்லியா? கேளுங்க. சஸ்பென்ஸ் என்னாலயே தாள முடியல்ல. இப்பதான் டிவிஸ்ட். காதலன் சுண்டல் விற்கிற ஆளைத் தேடி இருட்டில் போகிறான். போறானா…?“
“தொட்டுக்க சுண்டல்… ச்சீ மிளகாய்ப் பொடி போடவா?“ என இடைமறிக்கும் திலகா.
“காதலன் திரும்பி வர்றான், அப்பதான் டிவிஸ்ட்…“
“என்னாச்சி?“
“இருட்டுல… காதலி பக்கத்துல… ஹி ஹி வேற யாரோ உட்கார்ந்திருக்கிறான்… எப்பிடி?“ என சிரிக்கிறான் சிகாமணி,
“இனிமே இவன் கூட எனக்குத் தட்டு வைக்காதே“ என ராமசாமி எழுந்து போகிறான். சிகாமணி முகம் மாறி அவனையே பார்க்கிறான்.
அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது. மதிய உணவு. கைக்குட்டை. பர்ஸ் எல்லாம் மனைவியிடம் இருந்து வாங்கிக் கொண்டு கிளம்புகிறான். “என்ன பண்ணினாலும் கிளம்ப லேட் ஆயிருது. உன் தம்பி என் வாழ்க்கைலயே பெரிய டிவிஸ்ட்டுடி“ என பரபரப்புடன் வெளியே போகிறான் ராமசாமி.
மின்தூக்கிக்குக் காத்திருக்கும் ராமசாமி. உள்ளே சிகாமணியும், திலகாவும். வெளியே குரல்.. பக்கத்து வீட்டுக்காரர். “என்ன ஆபிசுக்கா?“ சிகாமணி உள்ளறையில் அக்காவிடம், “நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு அபார மூளைக்கா… எப்பிடி ஒவ்வொண்ணையும் சரியாச் சொல்றார் பாரு.“
மின்தூக்கி. எட்டு முதல் பூஜ்யம் வரை எண்கள். பூஜ்யத்தை அழுத்துதல். நேரமாகிவிட்ட பதட்டத்துடன் பார்க்கிங் பக்கம் வேகமாகப் போகிறான். ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்புகிறான். கிளம்ப மறுக்கிறது. உர்ர்ரென்று நின்று விடுகிறது. எரிச்சலுடன் அதை விட்டுவிட்டு வெளியே பரபரப்பாகப் போகிறான்.
வங்கி. மின் விசிறி சுழல்கிறது. அதன் பின்பக்கமாக கடிகாரம். மணி ஒன்பதே முக்கால். வங்கி மேலாளர் அறை. அங்கேதான் வருகைப் பதிவேடு. அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறான். மேலாளர் மேசையில் அவர் பெயர் கே. ராமகிருஷ்ணன் என எழுதிய பலகை. மேலாளர் கோபமாக அவனைப் பார்க்கிறார். தன் கைக்கடிகாரத்தை அவனைப் பார்க்கக் காட்டுகிறார். “இப்ப மணி என்னய்யா?“
“எட்டரை.“
“என்னய்யா உளர்றே?“
“உங்க கடிகாரம் ஓடல்ல சார்.“ தன் கடிகாரத்தைப் பார்க்கிறார். “ஓ.“ அவனைத் திரும்பப் பார்க்கிறார். “ஏன் லேட்டு?“
“என் கடிகாரமும் ஓடல்ல சார்.“
“அடிக்கடி லேட்டா வர்றே நீ?“
“கடிகாரத்தை மாத்திர்றேன் சார்.“
“இல்லாட்டி, நான் உன்னையே வேறு ஆபிசுக்கு மாத்திருவேன்.“
“சாரி சார். தேங்ஸ் சார்.“ வெளியே வருகிறான். முதுகுக்குப் பின் மேலாளர், “லாக்கர் திறக்க நிறையப் பேர் காத்திட்டிருக்காங்க. என்னன்னு பாரு“ என்கிறார். “இதோ உடனே பாத்திர்லாம் சார்…“ என அவன் குரல் மாத்திரம் அறைக்கு வெளியே கேட்கிறது.
தன் இருக்கைக்குத் திரும்பும்போது பக்கத்து இருக்கை ரமேஷ் புன்னகை செய்கிறான். “என்ன, மேனேஜர் நல்லா டோஸ் விட்டாரா?“ என்று கேட்கிறான். “அந்த அளவுக்குக் கூட அவர் கோபப் படாட்டி அவர் தலைல மொளகா அரைச்சிருவாங்க. இவரு எவ்வளவோ பரவால்ல. இவருக்கு முந்தி இருந்தாரே கிருஷ்ணராஜ். அந்தாள் மகா லொள்ளு.“
“குலைச்சிட்டே இருப்பார்.“
“நாய்ப் பிறவி. அவர்கிட்ட யாருமே நல்ல பேர் வாங்க முடியாது.“
காத்திருக்கிற நபரிடம் ஒரு லெட்ஜரை நீட்டி, “லாக்கர்ல எதும் எடுக்கணுமா?“ என்று விசாரிக்கிறான்.
“ஆமா சார்.“
“இதுல கையெழுத்துப் போடுங்க…“
அவர் குனிந்து கையெழுத்து போடுகிறார். “இவ்ள லேட்டா வரீங்களே? அரை மணியா காத்திருக்கிறேன்“ என வாடிக்கையாளர் குறைப்படுகிறார்.
“எட்டரை டு பத்து ராகு காலம். அதன்பிறகு லாக்கரைத் திறந்தா உங்களுக்கு தான் சார் நல்லது.“
வாடிக்கையாளர் ஆச்சர்யமாய் “அப்படியா நல்லதாப் போச்சு“ என்கிறார். “இப்ப நான் திறக்கலாமா?“
“நான்  வந்திட்டாலே உங்களுக்கு நல்ல காலம் தான். வாங்க.“ இருவருமாக லாக்கர்கள் இருக்கும் அறைக்குப் போகிறார்கள். போகிற வழியில் பெரிய அம்பேத்கார் படம். எப்பவோ அவருக்குப் போட்ட மாலை சருகாய் ஆடுகிறது. தூரத்தில் இருந்தே அவருக்கு லாக்கரை ‘தன்-சாவி‘யால் பாதி திறந்து விடுவது தெரிகிறது. இனி அவரது சாவியால் மீதி திறக்க வேண்டும்.
அவரைத் தனியே விட்டுவிட்டு வெளியே வருகிறான் ராமசாமி.
குடி நீர் கேன் போட்டுவிட்டுப் போகிறான் பையன் ஒருவன்.
வேலை செய்தபடியே பணம் கொடுக்கும் கவுன்ட்டர் பக்கம் காத்திருக்கும் நபர்களை நோட்டம் விடுகிறான் ராமசாமி. ஒரு பெண்மணி. அவளுடன் கூட கிட்டத்தட்ட ரெண்டு வயசுக் குழந்தை. பையன் அவளை “வாம்மா வீட்டுக்குப் போகலாம்…“ என தொந்தரவு செய்கிறான். “பேசாம வீட்டுல இருன்னா இருக்கியா? வரேன் வரேன்னு என்னோட கிளம்பறே. வெளியே வந்தால் வீட்டுக்குப் போலாம்னு பிடுங்கறே…“ என்கிறாள் அந்தப் பெண்.
பியூன் வந்து வேறொரு லெட்ஜரை ராமசாமி மேசையில் வைததுவிட்டுச் செல்கிறான். “ஒரு ஐந்நூறு ரூபாய் இருந்தா தாங்க சார். நாளைக்குத் தர்றேன்…“
“ஒரே நாள்ல என்ன ஐந்நூறு செலவு. அதையும் ஒரே நாள்ல எப்பிடி திருப்பித தருவே நீ?“ என்றபடியே சட்டைப் பையில் இருந்து எடுக்கிறான் ராமசாமி.
“தேங்ஸ் சார். தாத்தா…“
“தாத்தா செத்திட்டார்னு போன வாரம் லீவு போட்டியேடா நீ அநியாயமா நல்லா இருக்கற தாத்தாவை வம்புக்கு இழுக்காதே.“
பியூன் சிரித்தபடி போகிறான்.
வாடிக்கையாளர்களில் ஒருவர். “சார் இந்த சலான் நிரப்பித் தரீங்களா?“
“வாங்க“ என நிரப்பித் தருகிறான்.
“ஐய இதைவிட என் கையெழுத்தே தேவலை. நானே எழுதியிருப்பேன் சார்“ என அவன் வாங்கிப் போகிறான்.
“தேவைதான். உதவி செஞ்சதுக்கு எப்பிடிச் சொல்லிட்டுப் போறார் பாருப்பா“ என்கிறான் ராமசாமி நண்பன் ரமேஷிடம்.
“உன் கையெழுத்து, நீ போடற நம்பர் எதுவுமே யாருக்குமே விளங்கல்லியேப்பா… ஆனால் கையெழுத்து நல்லா இல்லாதவங்களுக்கு எல்லாம் தலை எழுத்து நல்லா இருக்கும்னு சொல்வாங்க.“
“அதுவேற. அது யாரோ கையெழுத்து நல்லா இல்லாதவன் தனக்குத் தானே ஆறுதலுக்குக் கட்டிவிட்ட கதைடா. பொழுது போயி பொழுது வந்தால் மாற்றமே இல்லாத வாழ்க்கை தான் தெரியுது. கம்யூனிஸ்டுகள் கிட்ட கேளு. மாறும் என்பது தவிர எல்லாமே மாறும்பாங்க…“
“ஆனா கொண்ட கொள்கையை விட்டு கம்யூனிஸ்டுகள் மாறவே மாட்டாங்க“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
லாக்கர் அறைக்குப் போனவர் திரும்பி வருகிறார். “ஒரு கல்யாணம். அதான் நகை தேவைப்படுது என் மனைவிக்கு…“ என்கிறார்.
“திரும்பி வந்த நேரத்தைப் பதிவு செய்துட்டுப் போங்க…“
வந்து குனிந்து கையெழுத்து - நேரம் இடுகிறார். “தேங்ஸ் சார்.“
“வெல்கம்.“
அவர் போனதும், ராமசாமி ரமேஷிடம், “போற ஆளைப் பார்த்து வெல்- come னு சொல்றது சரியாப் படல்ல. வெல்- go னு சொல்லலாமா?“
“இந்த ஆட்டத்துக்கு நான் வரல்ல“ என்கிறான் ரமேஷ்.
*
வீட்டில் இருந்து ராமசாமிக்கு அலைபேசி அழைப்பு. இவ வேற, திடீர்னு அவளுக்கு நான் ஆபிஸ்ல தான் இருக்கேனான்னு அடிக்கடி சந்தேகம் வந்துரும்… என்று சொல்லியபடியே எடுக்கிறான்.
எதிரே வாடிக்கையாளர், “யார் சார் உங்க மனைவியா?“ என ஆவலாய் விசாரிக்கிறார். கடுப்புடன் எழுந்து போகிறான். “என்ன விஷயம் திலகா?“
“வரும்போது மறக்காமல் காபிப் பொடி வாங்கிட்டு வாங்க.“
“மறக்காம அதான் நீ ஆபிஸ் நேரத்தில் போன் பண்ணணுமா? என்னை ஆபிஸ்ல எல்லாரும் கேலி பண்றாங்க.“
“என்னன்னு?“
“அவரு எல்லாமே அந்தம்மா சொன்னாதான் செய்வாருன்னு…“
“சொன்னாக் கூட நீங்க செய்யறது இல்லை. உங்களுக்கு எதுக்கும் நேரம் இல்லை. ஆனால் என் கூட சண்டை போட மாத்திரம் நேரம் இருக்கு. நான் வெச்சிர்றேன்.“
அழைப்பு துண்டிக்கப் படுகிறது. எப்பவுமே சட்னு எதாவது சொல்லிட்டு வெச்சிர்றா இவ… என்றபடி தன் இருக்கைக்குத் திரும்புகிறான். எதிரில் இன்னும் அந்த வாடிக்கையாளர். அவர் எதோ சொல்ல வருமுன் அவருக்கு அழைப்பு. அவனைப் பார்த்துவிட்டு, “இது என் ஒய்ஃப் சார்“ என எழுந்து போகிறார்.
மாலை வீடு திரும்புதல். வழியில் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக் கடை. “ரமணி. வண்டில எதோ கோளாறு. காலைல கிளம்பாமல் படுத்தி விட்டது. வந்து எடுத்திட்டுப் போறியா?“
“பையனை அனுப்பறேன் சார்.“
வீடு திரும்புகிறான். மின்தூக்கி. பூஜ்யம் முதல் எட்டு வரை பொத்தான்கள். மாடி யேறுதல். வெளியே வருகிறான். பக்கத்து அடுக்ககக்காரர் வெளியே காத்திருக்கிறார். சிகாமணி அதே சமயம் இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வருகிறான். சிகாமணி அவரிடம், “ஆமாம். ஆபிஸ் விட்டுத்தான் வர்றாரு“ என்கிறான். அவர் சிரித்தல். “தம்பி ரொம்ப புத்திசாலி“ என்கிறார்.
உள்ளே நுழைந்ததுமே பையை வாங்கிப் பார்க்கிறாள் திலகா.
“என்ன பார்க்கறே?“
“காபிப்பொடி…“
“மறந்திட்டது“ என அசடு வழிகிறான். “கிளம்பும்போதே வண்டி ரிப்பேர். மெக்கானிக் கடைல எடுத்துட்டுப் போகச் சொல்ல ஞாபகம் இருந்தது. இது… விட்டுட்டது.“
“சொன்னால் கோபம் மட்டும் வருது.“
“சரி. ரொம்ப டயர்டா இருக்கு. காப்பி போடு…“ என்று சொல்ல வந்தவன், சமாளித்து “வேணடாம். இட்ஸ் ஆல்ரைட்“ என்கிறான்.
“இட்ஸ் ஆல் ராங்“ என்கிறாள் திலகா.
வீடு. இரவு. வாயில் சோறு வாங்கிக் கொண்டே மகன் கோகுல் வீட்டுப் பாடம் எழுதுகிறான். டி.வி.யில் ஜெயலலிதா என்னவோ பேசுகிறார். சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான்.
ராமசாமி எப்பவுமே அன்றைய நாளின் முடிவில் டைரி எழுதும் பழக்கம் உள்ளவன். போய் தன் டைரியை எடுத்து வந்து மேசையில், சிகாமணி அருகே அமர்கிறான்.
பின்னால் அவன் மனைவியின் குரல். “ரொம்ப முக்கியமா எதும் நடந்தால் டைரி எழுதலாம். அப்படி தினசரி எழுத என்ன இருக்கு?“ என்றபடி ஒருவாய் கோகுலுக்கு ஊட்டுகிறாள்.
“அது ஒரு பழகிகம்டி. இன்றைய நாள் காலைலேர்ந்து ராத்திரி வரை எப்பிடிப் போச்சுன்னு திரும்பி ஒருதடவை யோசித்துப் பார்க்கறது நல்ல பழக்கம் இல்லியா?“
“அப்ப ஆபிஸ் விட்டு கிளம்பும்போது ஒரு நிமிஷம் யோசிச்சி காபிப் பொடி வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்லே?“ என பழிப்பு காட்டுகிறாள் திலகா.
“பாயின்ட்“என்கிறான் சிகாமணி. “அத்தான் உங்க கையெழுத்து தான் சரி கிடையாது. ஆனால் படம் ரொம்ப ஜோரா வரையறீங்க.“
“அப்பா, நீ வரைஞ்சு கொடுத்த பிராஜக்ட் சூப்பர்னு மிஸ் சொன்னாங்க.“
ராமசாமி திரும்பி கோகுலைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். அவன் பின்னால் சுவரில், அவன் மனைவி திலகாவை அவன் வரைந்த படம்.
(தொடர்கிறேன்.)
91 97899 87842


2 comments:

  1. அருமையாய்ப் போகுது ! ( வசீகரம் இல்லையோ?)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பொய்கள் ஆரம்பிக்கவில்லையே? நன்றி.

      Delete