Sunday, October 4, 2015

அத். 44 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

Updated everyday

வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 44

க்டோபர் 03 என்று காட்டுகிறது நாட்காட்டி.
வங்கி. மேனஜேர் கிருஷ்ணராஜ் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்காய் இனிப்பு வழங்குகிறார். அவருக்குப் பதவி உயர்வோடு இட மாற்றம் வந்திருக்கிறது.
“என்ன சார்? உங்க பதவி உயர்வு… சேதி கன்ஃபர்ம் ஆயிட்டதா?“
“ஆமாப்பா“ என்றபடி ரமேஷிடம் இனிப்பை நீட்டுகிறார்.
“நல்ல விஷயம் சார்…“ என்று எடுத்துக் கொள்கிறான். “எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் சார்?“
“அது இன்னும் தெரியல்ல… ஆனால் இட மாற்றம் உறுதின்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசத்துக்கு உள்ள… நான் பையங்க படிப்பு இத்தியாதி ஏற்பாடுகளை யோசிச்சிப் பார்க்கறதுக்குன்னு தகவல் மாத்திரம் சொல்வாங்க… நமக்கு எந்த ஊரானா என்ன?“
“இப்படி பெட்டியைத் தூக்கித் தூக்கியே சாருக்கு ஏழு எட்டு மொழிகள் தெரிஞ்சாச்சி. இல்ல சார்?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
கிருஷ்ணராஜ் புன்னகைக்கிறார். “இதுநாள் வரை உங்க எல்லார் கிட்டேயும் ரொம்ப கண்டிப்பா நான் நடந்துக் கிட்டதா தோணலாம்… அதுக்குப் பலனும் கிடைக்காமல் இல்லை. நம்ம கிளை சிறந்த கிளைன்னு விருது வாங்கியது. ஆனாலும் மனசாறச் சொல்கிறேன். நீங்க எல்லாரும் அதுக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருந்தீங்க. இந்த மாதிரி ஒத்துழைப்பான கம்ப்பானியன்சை நான் சந்திச்சதே இல்லை…‘‘ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
“ஒவ்வொரு இடத்தில் வேலை மாற்றம் வரும் போதும் சார் இப்பிடித்தான் சொல்வீங்கன்னு நினைக்கிறேன்..“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“மகா எங்கே?“ என்று கேட்கிறான் ரமேஷ். “பத்திரிகை வைக்கன்னு ஸ்ரீநிவாஸ் கூட கிளம்பிப் போனாள்… கல்யாணம்னு வந்திட்டாலே எப்பிடி உற்சாகமா ஆயிர்றாங்க இந்தப் பெண்கள்…“ என்றபடியே திரும்பி ராமசாமியைப் பார்க்கிறான்.
அப்போது வாசலில் ஸ்கூட்டி பெப் வந்து நிற்கிறது. மகா மாத்திரம் தனியே வந்து இறங்குகிறாள். சுடிதாரில் ஓரங்களில் ஜரிகை பளபளக்கிறது. தலையை கேரள பாணியில் உலர்த்தி விட்டிருக்கிறாள். கை கால்களில் மருதாணிப் பூச்சு புது மெருகுடன். “இப்பவே அவளுக்குக் கல்யாணக் களை வந்திட்டதுய்யா…“ என்கிறான் ரமேஷ். “அநேகமா நாளை நாளைமறுநாள் லேர்ந்து அவள் லீவு போட்டுருவான்னு தோணுது.“
ராமசாமி மேசைமேல் இனிப்பு அப்படியே கடிக்கப் படாமல் முழுசாய் இருக்கிறது. மகா வந்ததும் ராமசாமி எழுந்து போகிறான். கிருஷ்ணராஜ் இனிப்பை எடுத்துக்கொண்டு மகாவிடம் வருகிறார். ராமசாமி எழுந்து போனதை ரமேஷ் கவனிக்கிறான். அவன் முகம் மாறுகிறது. அவனும் எழுந்து ராமசாமி போன திசையில் வெளியேறுகிறான்.
ராமசாமி உணவு அறையில் முதுகைக் காட்டியபடி. “என்னாச்சிடா?“ என அவன் முதுகைத் தொடுகிறான் ரமேஷ். ராமசாமி முதுகு குலுங்குகிறது. “COUNT DOWN மூடை விட்டு நீ வரணும் இவனே. பழைய காலத்தை நாம மாத்த முடியுமா?“
முடியாது என்கிறதாய் திரும்பிப் பாராமலேயே தலையாட்டுகிறான் ராமசாமி.
“பின்னே?“
“நான் ஒருத்தன்… இந்த வாரம் நான் வேலைக்கு, ‘இங்க‘ வந்திருக்கவே கூடாது.“
“ஏன் வந்தே?“
“அதான் எனக்கும் புரியல…“ என்றவன் சட்டென பிரகாசம் ஆகிறான். “இதுவும் விதியின் ஒரு கூறு தாண்டா. அது எப்பவும் மனுசனுக்கு எதாவது சங்கேதமான சேதி சொல்லிக்கிட்டே தான் இருக்கு. நாம தான் அதை கவனிக்காமல் விட்டுட்டு பின்னாடி வருத்தப் படுகிறோம்.“
“என்ன திடீர்னு?“
“எனக்கே தெரியல.“
“நான் ஏன் இப்பிடி கடந்த காலத்துக்கு வரணும் சொல்லு?“
“உனக்கே தெரியல. எனக்கு எப்பிடித் தெரியும்?“
“வாழ்க்கை அநேக வாய்ப்புகளால் ஆனது. WITHIN ALL PROBABILITIES AND POSSIBILITIES IT IS RUNNING.“
“ஆமாம். NOBODY KNOWS WHAT IS NEXT…“ என எடுத்துக் குடுக்கிறான் ரமேஷ்.
“நாளைக்கு…. அக்டோபர் 4. மாலை சுமார் 4 மணி அளவில்…“ என்கிற போதே ரமேஷ் அவனை கிட்ட வந்து பிடித்துக் கொள்கிறான். அழ வந்தவன் யாரோ வரும் சத்தம் கேட்டு நிறுத்திக் கொள்கிறான். அது மகா. “என்ன சார் ரெண்டு பேரும் இங்க நின்னுக்கிட்டிருக்கீங்க?“
“உன்னைப் பத்தி தான் பேசிட்டிருக்கம்…“ என்கிறான் ரமேஷ். “என்னைப் பத்தியா? என்ன?“ என புருவம் தூக்குகிறாள் மகா. ராமசாமி என்னவோ சொல்ல வருமுன் ரமேஷ், “உன் மாமனார் மாமியார் வந்தாச்சா?“ என்று இடை மறிக்கிறான்.
“நாளைக்கு மூணு மூணரை வாக்கில் வர்றாங்க… ஏர் போர்ட்டுக்குப் போகணும்…“ என்கிறாள் மகா. ராமசாமியின் முதுகு குலுங்குகிறது. அவனை மறைத்தபடி நின்று கொள்கிறான் ரமேஷ்.
“என்ன ராமு சார் பேசவே மாட்டேங்கறார்…“
“அதெல்லாம் இல்ல. எனக்கு… கொஞ்சம் உடம்பு சரியில்ல…“ என்று சமாளிக்கிறான் ராமசாமி.
மகா போகிறாள். “இல்ல ரமேஷ். இனியும் என்னால இங்க தாக்குப் பிடிக்க முடியாது…“ என்கிறான் ராமசாமி. “நான் வெளியே போகிறேன்…“
“பிரச்னையைத் தவிர்க்க முடியாது ராமு. நீதானே சொன்னே…“
“நான் அதுக்கு பயந்து விலகி ஓடறேன்றியா?“
“ஆமாம்“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ரமேஷ். “பரவால்ல…“ என பிடியை உருவிக் கொள்கிறான் ராமசாமி. “மேனேஜர் கேட்டால் யாரோ வந்து கூப்பிட்டாங்கன்னு நான் வெளியே போயிருக்கறதாச் சொல்லு…“
“இங்க பார். நான் சொல்றதைக் கேளுடா… இவன் ஒருத்தன் பாதி கனவுலயே பயந்து சாகறான்…“
ராமசாமி போகிறதையே பார்க்கிறான் ரமேஷ்.
சாலை. நடக்க முடியவில்லை அவனால். தள்ளாடுகிறது. அழுகை வருகிறது. அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நிற்கிறான். “என்ன சார்?“ என்று கேட்கிறான் அந்த மரத்தடி சோசியக்காரன். “ஒண்ணில்ல…“ என அவனைக் கைகாட்டி விலக்கிவிட்டுப் போகிறான். கொள்கையில்லாமல் நடந்து போகிறான்.
தெரு இயல்பான போக்குவரத்து நெரிசலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மனக் கண்ணில் ஒரு காட்சி. ஒரு கல்யாணப் பத்திரிகை.
மகாலெட்சமி WEDS ஸ்ரீநிவாஸ்.
சர்ரென்று அதன் மேல் இரத்தம் பீய்ச்சி அடிக்கிறது. அப்படியே நிற்கிறான் ராமசாமி. தலையை உதறிக் கொள்கிறான்.
மனசில் இன்னொரு காட்சி. மகா அவனிடம் சிரித்து வெட்கமாய்ப் பேசுதல். அவன் வங்கிக்கு வெளியே வந்து உற்சாகமாய் அவளை வழியனுப்புதல். அவள் ஸ்கூட்டி பெப் எடுத்தல்.
அப்படியே WHY SHOULD BOYS HAVE ALL THE FUN… என்கிற பாடல் காட்சியின் பதிவுகள்.
வாய்விட்டு WHY SHOULD SHE SUFFER ALL THE SIN? – என மனசில் சொல்லிக் கொள்கிறான் ராமசாமி.
சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் ஒலி. வரிசையாய்க் கார்கள் வாகனங்கள் நிற்கின்றன. யாரோ நாலாவது வரிசையில் இருந்து வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடுகிறான். “யாரோ வயசுப் பொண்ணுப்பா.. ஸ்பாட்ல ஆள் அவ்ட்…“ அந்த நாலாவது வரிசை ஆள் திரும்ப வந்து வாந்தி எடுக்கிறான். ராமசாமி அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். உவ்வே… என முயற்சி செய்கிறான். வாந்தி… வரவில்லை.
அது ஒரு நாற் சந்தி. அவன் மனசில் இன்னொரு காட்சி. விபத்து நடந்த இடம். இந்தப் பக்கம். மகாவின் ஸ்கூட்டி பெப் சப்பளிந்து மோசமாக உரு குலைந்து கிடக்கிறது. சாலையின் மறு ஓரம். அந்த ஐ டென் வண்டி. முகப்பில் பெயர். வித்தியாசமான பெயர். வசிகரன்.
இப்போது சட்டென அவன் சுற்று முற்றும் பார்க்கிறான்.
அந்த சந்திப்பில் வாகனங்கள் நிற்கின்றன.
முதல் வரிசை. நாலைந்து வாகனங்கள் தள்ளி ஒரு வாகனம். உற்றுப் பார்க்கிறான். அது ஒரு ஐ டென். ஆகா. சட்டென சுதாரித்து அதன் முகப்பைப் பார்க்கிறான். அதில்… ஆமாம். சந்தேகமே இல்லை! அந்தப் பெயர்.
வ சி க ர ன்.
“வசிகரா?“ என பைத்தியம் மாதிரி அந்த சந்திப்பில் மற்ற கார்களை மறித்துப் பாய்கிறான் ராமசாமி. அதற்குள் சிக்னல் விழுந்து கார்கள் கிளம்பி விட்டன. க்ரீச். க்ரீச். என வரிசையாய்க் கார்கள் அதிர்ந்து பிரேக் அடிக்கின்றன.
“ஏய்யா சாகறதுக்கு நல்ல நேரம் பார்த்தான்யா இவன்…“ என ஒரு குரல். போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. நாலாவது வரிசையில் இருந்து ஒருவன் ஓடிவருகிறான்.
மாலை ஐந்து மணி. வங்கிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மகா தான் எடுக்கிறாள்.
அவசர ஊர்தி. 108. பீய்ங் பீய்ங் என்று போக்குவரத்தைப் பிளந்து கொண்டு வருகிறது. வாகனங்கள் வழி விடுகின்றன. அடிபட்டுக் கிடக்கும் ராமசாமி. அப்படியே வந்து தூக்குகிறார்கள். “நினைவு இருக்காய்யா?“
“இல்ல. மயக்கமாத் தான் இருக்காரு…“
“தலைல அடி… கொஞ்சம் ரத்தம் போயிருக்கு.“
“தூக்கு.“
சற்று தள்ளி ஒரு கார். சிவப்பு வண்ணம். அவனை விபத்துக்கு உள்ளாக்கிய வாகனம் நிற்கிறது.
வாகனம் பரபரப்புடன் சாலைப் போக்குவரத்தைக் கிழித்தபடி போகிறது. தனியார் ஆஸ்த்திரி ஒன்று. அதன் வாசலில் ஆம்புலன்ஸ் நிற்க சிப்பந்திகள் ஓடி வருகிறார்கள். “நினைவு இருக்கா?“
“இல்ல…“
ஸ்ட்ரெட்சரில்  ராமசாமியை மாற்றுகிறார்கள். அப்படியே விறுவிறுவென்று உள்ளே போகிறது ஸ்ட்ரெட்சர். காத்திருக்கிற நோயாளிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
“என்னாச்சி?“
“இப்ப நின்னு உன் கிட்ட எல்லாம் சொல்லணுமாய்யா?‘ நகருங்க…“ என்றபடி ஸ்ட்ரெட்சரைத் தள்ளிப் போகிறார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறது ஸ்ட்ரெட்சர். வார்டு கதவுகள் சாத்திக் கொள்கின்றன. குரல்கள்.
“எதும் ஐடி கார்டோ செல்ஃபோனோ இருக்காய்யா?“
“செல்போன்ல டவர் இல்லை சார்.“
“ஐ டி கார்டு எதுவும்…“
ஸ்ட்ரெட்சர் போனபடி இருக்கிறது. “ஒரு பாங்க் ஐடி கார்டு சார்.“
“என்ன பாங்க்?“
“நேஷனல் பாங்க்.“
“அப்ப சரி. இவனை நல்லபடியா அட்டென்ட் பண்ணுவாங்க. எப்பிடியும் இனசூரன்ஸ் வெச்சி4ருப்பான். இல்லாட்டி கூட வங்கி பாத்துக்கும்…“
“வங்கிக்கு போன் போடுய்யா…“
ஐ சி யூ வில் டாக்டர் ராமசாமியை வாங்கிக் கொள்கிறார். அவன் முகத்தில் ரத்தம் வழிந்திருக்கிறது. “தலைல அடி பட்டிருக்கு… கபாலத்தில் விரிசல் இருக்கா பார்க்கணும்“ என்கிறார். வாசலில் எட்டிப் பார்க்கிற நபர்களை “கூட்டம் போடாதீங்க“ என வார்டுபாய் ஒதுக்குகிறான்.
“ஆபரேஷன் தியேட்டருக்கே எடுத்துக்கிட்டுப் போங்க“ என்கிறார் டாக்டர்.
“ஹலோ.. நேஷனல் பாங்க்கா?“ என ஒரு தொலைபேசி அழைப்பின் குரல்.
“எஸ்…“ என ஒரு பெண் குரல் எடுத்துப் பேசுகிறது.
தலையில் முடியைக் கத்தரித்து விடுகிறான் ஒரு உதவியாள். அடிபட்ட இடத்தை சோதிக்கிறார் டாக்டர்
தையல் போடப் படுகிறது.
நேரம் அரை மணி கழிகிறது.
ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான் ராமசாமி. தலையில் கட்டு.
ஐ சி யூ வுக்கு மாற்றப் படுகிறான்.
பக்கத்து பெட் பேஷன்ட் “என்னாச்சி?“ என நர்சைக் கேட்கிறார். “விபத்து“ என்கிறாள் நர்ஸ். “ஐயோ. எப்பிடி?“ என்கிறார் அவர்.
“தெரியல.“
“நினைவு இருக்கா?“
“மயக்கமாத் தான் கிடந்தாரு.“
“இப்ப நினைவு வந்திட்டதா?“
‘இப்ப செடேடிவ் குடுத்திருக்காங்க. மெல்லதான் நினைவு வரும்…“
“அப்பன்னா?...“ என அவர் மேலே பேசுமுன், “கொஞ்சம் தொணதொணக்காம இருக்கீங்களா?  என்கிறாள் நர்ஸ். பிறகு அவர் வாயை மூடிக் கொள்கிறார்.
ராமசாமி அப்படியே கண்மூடிப் படுத்திருக்கிறான். குளுக்கோஸ் ஏறுகிறது.  அவ்வப்போது வந்து நாடி பார்க்கிறார்கள். அருகே ஈ சி ஜி ஓடுகிறது. ஆக்சிஜன் முகமூடி ஒரு மணி நேரம் வைத்திருக்கிறார்கள். பெரிய டாக்டர் வந்து பார்க்கிறார். அவர் வேணாம், என்பது போல எதோ சொல்கிறார். ஆக்சிஜன் கொடுப்பது எடுக்கப் படுகிறது.
அப்படியே மெல்ல பொழுது சாய்ந்து இருள் சூழ்கிறது.
காலை விடிகிறது. “அந்தாளுக்கு இன்னும் நினைவு வரல்லியே…“ என்கிறார் அடுத்த பெட்காரர். நர்ஸ்  உதட்டைப் பிதுக்குகிறாள். “கடுமையான அடியா?“ என்கிறார் அவர். அவள் காதில் வாங்கிக் கொள்ளாமல் போகிறாள்.
மெல்ல வெளிச்சம் உக்கிரம் ஆகிறது. மாலை மணி 4 என்று காட்டுகிறது ஆஸ்பத்திரி கடிகாரம்.
மெல்ல கண் திறக்கிறான் ராமசாமி. அருகில் யாருமே இல்லை. மெல்ல தலையை அசைக்கப் பார்க்கிறான். தலை கனக்கிறது. தலையில் கட்டு போட்டிருக்கிறது. கையால் தலையைத் தொட்டுப் பார்க்க முயல்கிறான். கையில் குளுக்கோஸ் ஏறுவது தெரிகிறது. குழப்பமாகிறான். மெல்ல கஷ்டப்பட்டு தலையைத் திருப்புகிறான்.
பக்கத்துப் படுக்கை ஆசாமி திரும்பி இவனைப் பார்க்கிறார். “கண்ணைத் திறந்திட்டீங்களா?“
“இல்ல“ என தலையாட்டுகிறான்.
“இப்ப திறந்துக்கிட்டு தானே பேசறீங்க?“ என அவர் முகம் மாறுகிறது.
“பின்ன ஏன்யா கேக்கறே மூதேவி“ என்கிறான் ராமசாமி.
“நர்ஸ்?“ என்று கத்துகிறார் பக்கத்துப் படுக்கை ஆள்.
“யாரைக் கூப்பிடறே?“
“மூதேவியை… ச்சீ நர்சை“ என்கிறான் அவன். நர்ஸ் வருகிறாள்.
“சார் கண்ணைத் திறந்திட்டார்…“
“டி வி நியூஸ்ல சொல்லணுமா?“ என்கிறாள் அவன் பக்கமாக வந்தபடியே.
ராமசாமி அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “மொபைல்ல பேசிட்டிருந்தீங்களா?“
“ஆமாம்.“
“உங்க லவர் கூடவா?“
அவள் சிரிக்கிறாள்.
“எப்பிடி எனக்கு அடி பட்டது?“ என மெல்லக் கேட்கிறான்.
“நீயே அடி பட்டுக்கிட்டு வந்து படுத்துக்கிட்டு.. அவளைக் கேட்கிறியேய்யா?“
“எப்பவுமே.. விபத்துன்னால், அடிபட்ட அந்த நேரம்… அவங்களுக்கு ஞாபகம் இருக்காது“ என்கிறாள் நர்ஸ்.
“தலைல எப்பிடி அடி பட்டது?“ என்று கேட்கிறான் ராமசாமி.
அப்போது ஐ சி யூ சிறு சன்னல் வழியே மகா எட்டிப் பார்க்கிறாள். அவளைப் பார்த்து பலவீனமான புன்னகை ஒன்றை வீசுகிறான் ராமசாமி. அவள் வெளியே யாருக்கோ அவன் கண் விழித்து விட்ட தகவலைச் சொல்கிறாள். திடீரென ஞாபகம் வந்தாப் போல அவன் முகம் கலவரமாய் மாறுகிறது.
மகா திரும்ப எட்டிப் பார்க்கிறாள். அவளை தன் அருகே உள்ளே வரும்படி கண்ணால் அழைக்கிறான் ராமசாமி.
அவள் உள்ளே நுழையப் போகையில் நர்ஸ் தடுக்கிறாள். “அவர்தான் கூப்பிட்டாரு…“ என்கிறாள் மகா. நர்ஸ் அவனைப் பார்க்கிறாள். ராமசாமி நர்சிடம் அவளை அருகே வரச் சொல்லி கண்ணால் கேட்கிறான். “பெரிய டாக்டர் ரவுணட்ஸ் வர நேரம்….“
“ரவுண்ட்ஸ் ன்னால் எப்பிடி? தன்னைத் தானே சுத்திக்கிட்டே வருவாரா டாக்டர்?“ என்கிறான் பக்கத்துப் படுக்கைக் காரன்.
“இவருக்கு நினைவு திரும்பிட்டதுன்னு சொல்லியிருக்கேன். பார்க்க வந்திட்டே இருக்கார்…“ என்கிறாள் நர்ஸ். “ம். சீக்கிரம் பாத்திட்டுப் போங்க…“ என அனுமதி அளிக்கிறாள்.
“தாங்ஸ்“ என மகா உள்ளே வருகிறாள்.. கூட ஸ்ரீநிவாஸ். “ஆகா. ஒரு வழியா கண்ணைத் திறந்தீங்களா?“
“இன்னிக்குத் தேதி என்ன?“
“ஏன்?“
“சொல்லு மகா…“
“அக்டோபர் 04.“
“மணி என்ன?“
“நாலரை.“
“ஆகா…“ என வாய் நிறைய சிரிக்கிறான் ராமசாமி. “இவங்க அப்பா அம்மா வந்தாச்சா?“
“வந்திருப்பாங்க…“
“மகா.. நீ… நீங்க பார்க்கப் போகல்லியா?“
“எப்பிடி அன்க்கிள்… நேத்து இன்னிக்கு… ரெண்டு நாளா நீங்க கண்ணே திறக்கல்ல  உங்களை இந்த நிலைமையில விட்டுப் போக எப்பிடி முடியும்?“
“தேங்ஸ் மகா… நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல காரியம் பண்ணினே…“
“ஏன் அன்க்கிள்…“
“HA! ALTERNATE REALITY…“ என்கிறான் ராமசாமி. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான். “உண்மை பொய்யாகி விட்டது. பொய் வசிகரமாகி விட்டது…“ கண்ணில் நீர் வழியச் சிரிக்கிறான். அவன் கண்ணில் காட்சி விரிகிறது. மகா கழுத்தில் தாலி கட்டுகிறான் ஸ்ரீநிவாஸ். அட்சதைகள், மலர்கள் நாலாபுறமும் தூவப் படுகின்றன.
·       

(அடுத்த பகுதியோடு முடிக்கிறேன்)
91 97899 87842
for bulk 5 chaptes please visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment