Thursday, October 22, 2015

தேநீர் நேரம்

அட்டை ஓவியம் / ஷ்யாம்
வசிகரப் 
பொய்கள் 2
எஸ். சங்கரநாராயணன்
தேநீர் நேரம்

ன் கதைப் பாணியில் இது தனிப்பட்டது தான்!
என்றாலும் இந்தக் கதைக்கு முன்னோடிகள் இல்லாமல் இல்லை. ரிப் வான் வின்க்கிள் கதை என்ன? அவன் உறங்கி எழுகிறான். உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள். அதுதானே? சாயல் இல்லாமல் குழந்தைகள் பிறந்து விடுமா என்ன? எந்தக் குழந்தையும் உலகத்தின் வகை மாதிரிகளுக்குள்ளே தானே அடங்க முடிகிறது, இல்லையா?
வசிகரப் பொய்கள், என ஒரு சிறுகதை நான் முன்பே எழுதியிருந்தேன். ஒரு சிறுகதைத் தொகுப்பில் அது இடம் பெற்று, அந்த நூலின் தலைப்பாகவும் அது அமைந்து, பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கியப் பரிசும் பெற்றது! இந்நிலையில் இந்த நாவலுக்கும் அதே தலைப்பே எப்படியோ என் மனசில் பெரு நிழலெனக் கவிந்தது. கதையிலும் அந்தத் தலைப்பை அங்கிகரிக்கிறாப்போல வசனங்களையும் இணைத்து கயிறாய் முறுக்கி விட்டேன். பதிப்பாளர் நினைவு படுத்தும் வரை, முன்பு இதே தலைப்பில் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்ததே நினைவில் இல்லை. ஆகவே, பொறுத்தருள்க.
இந்த நூல், வசிகரப் பொய்கள் 2, என அறியப் படுவதாக.
ஒரு நாவலை, திரைப்படம் பார்க்கிற அளவில் வடிவம் அமைத்துக் கொள்ள, சில காட்சிப்படுத்தல்களில் யதார்த்தம் தாண்டி செயல்பட நேர்கிறதை உணர்கிறேன். இதே நாவலில் வங்கியில் சம்பளத்தை உறையில் போட்டு கையில் தருவதான ஒரு சித்தரிப்பை இதற்கு உதாரணப் படுத்தலாம். ஏ டி எம்மில் தானே சம்பளம் எடுத்துக¢ கொள்வார்கள், என்று வாசகர் வாதிட முன்வரவும் கூடும். என்றாலும், திரைப்படத்தில் ஒரு ரசிகருக்கு, ஏ டி எம்மில் எடுக்கும்போது நாம் தர முடிகிற சுவாரஸ்யத்தை விட, நேரில் பெறும்போது, முகத்தில் ஆச்சர்யத்துடன் இரண்டாவது முறை அதே மாதத்துக்குச் சம்பளம் அவன் வாங்குகிறான், என்கிற காட்சி மேலதிகம் ருசிக்கும் என்பது என் துணிபு.
இன்று நேற்று நாளை, நாடு பாராட்டிய நல்ல திரைப்படம். அதன் விவாதத்தில், படத்தின் கதையமர்வில் விவாதிக்கப் பட்ட பல கதைகளில், என் இந்தக் கதையும் ஒன்று. இன்று நேற்று நாளை, வெளிவரட்டும் என நான் காத்திருந்தேன். படம் சிறப்பாக வெளியாகி கவனம் பெற்றது. பிறகு அதன் இயக்குநர் ஆர். ரவிக்குமார் சம்மதித்து பச்சைக்கொடி காட்ட, இதை நான் எழுதிப் பார்க்க உட்கார்ந்தேன். ஆச்சர்யகரமாக எந்தக் கூட்டுவிவாதமும் இல்லாமல் முழு அளவிலும் இதில் நானே சஞ்சரித்து மூழ்கி முத்து எடுத்தேன்.
இந்தக் கதையும் திரைக்கு வந்து, இன்று நேற்று நாளை திரைப்படம் போல சிறப்பு பெற வேண்டும். இது என் அவா.
கதையின் பிற்பகுதி தாதா பாத்திரம் 'சிட்டி லைட்ஸ்' சார்லி சாப்ளினின் பணக்கார சிநேகிதனின் சாயல் கொண்டு அமைகிறது.
இதில் வரும் மகா எனும் பெண் பாத்திரம் பற்றியும் சொல்ல இருக்கிறது. கௌரவக் கொலைகள் என்கிற அம்சத்தைச் சொல்லும் புனைவாக ஒரு கதை எழுத நினைத்திருந்தேன். காதலன், காதலி இருவரும் வேறு வேறு சாதி. காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு. அவளை அவளது உறவினர்கள் கொன்று விடுகிறார்கள். உலகமே இருண்டு போன நிலையில் கால் போன போக்கில் திரிகிறான் காதலன். நதிக்கரைப் பக்கம் ஓர் இரவு நேரம் அவன் தனியே படுத்துக் கிடக்கிறான். அப்போது அவளே, அவனது காதலி, ஆவியாக அவனுடன் திரும்ப வந்து உறவாடி, பழக ஆரம்பிக்கிறாள். பகலில் அவளை அவன் பார்க்க முடியாது. இரவானால், யாருமற்ற பொழுதில், நதிக்கரையில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் அவர்கள் காதல் வளர்ந்தோங்குகிறது.
நாலைந்து ஆண்டுகளாக இப்படி ஒரு கதை எழுத மனசில் வைத்திருந்தேன். அதுதான் வேறு வகை மேகமாக உரு திரண்டு, மகாவாக முளைத்திருக்கிறது. பொய்யோடு வசிகரம் இப்படியாய் இணைந்து கொண்டது!
இந்த நாவலை வழக்கமாக நான் எழுதும் நாவல் வடிவத்தில் அல்லாமல், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைக் கிளர்த்தும் விதத்திலேயே எழுதிப் பார்க்க முன்வந்தேன். இதன் 45 பகுதிகளையும், ஒரு பல்வலி நாள் தவிர, தினசரி நான் எழுதி, என் பிளாக்கில் அரங்கேற்றினேன்.
பத்து இருபது நண்பர்கள் தினசரி என்னுடன் இதை நான் எழுதிய சூட்டோடு கலந்துரையாடினார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தக் கதையின் போக்கு பற்றி, ஒன்லைன், தெரியாது. அவர்கள் நாவல் படரும் விதம் பற்றி, அவற்றின் ஈர்ப்பு பற்றியும், அது கொடிபற்றும் இடங்கள் பற்றிய தங்கள் அனுமானங்களையும் பரிமாறிக் கொண்டார்கள். இதன் சுவாரஸ்ய அம்சம் பற்றியும் அவர்களிடம் நான் கேட்டு ¢கொண்டே வந்தேன். எழுத்தாள நண்பர்கள், பேராசிரியர்கள், கல்லூரி, மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள், திரைப்படத் துறையாளர்கள்...
குறிப்பாக தோழி வர்த்தினி பர்வதா. அவருக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
திரைப்படம் பார்க்கிற உணர்வைக் கிளர்த்தக் கூடிய நாவல்கள் ஆங்கிலத்தில் வந்து விட்டன. பிற மொழிகளிலும் வரத் துவங்கி விட்டன. தமிழில் இதுவரை இப்படியொரு முயற்சி இல்லை. இதுவே முதலாவது. இனி இதைப் பின்பற்றி யாராவது முயலக் கூடும். அவர்கள் வாழ்க. நல்வாழ்த்துக்கள்.
 •
கதை
திரைக்கதை
வசனம்

எஸ். சங்கரநாராயணன்

No comments:

Post a Comment