நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய
நாவல்
பார்வை
தொலைத்தவர்கள்
யோசே சரமாகோ
(முன்கதை
நகரத்தில் பார்வை
இழப்பு ஒரு தொற்று போல் எங்கும் கொட்டம் அடித்துப் பரவுகிறிது. சில வாரங்களில் நகரம்
முழுதுமே குருடர்களாக நிரம்பி விட்டார்கள். முதற் கட்டமாக இப்படி நோயாளிகளை தனியே ஒரு
முகாமில் அகதிகளாகத் தனியே பராமரிப்பது நடக்கிறது. அவர்கள் அந்த வளாகத்தில். ஒரு தீவிபத்தில்
இருந்து தப்பித்து வெளியேறி அந்தக் கூட்டத்தில் ஒரு நபரின் வீட்டை அடைகிறார்கள். உடைகளும்
காலணிகளும் உடம்பும் மகா அழுக்கும், பிசுக்குமாய் அடைகிறார்கள். கீழ்ப்பகுதி அந்த வீட்டில்
இரவில் நடக்கிறது.)
*
வைகறைப் பொழுதில் மழை ஆரம்பித்தது.
காற்றின் எழுச்சியில் சன்னல்கள் படபடத்தன. ஒரே சமயம் ஆயிரக்கணக்கான சவுக்குகள் சொடுக்கப்
பட்டன. டாக்டரின் மனைவி விழித்துக் கொண்டாள். கண்ணைத் திறந்து, என்ன மழை, என முணுமுணுத்தபடி
திரும்ப மூடி... அறையில் இருட்டு இன்னும் கருமைவிலகி விடவில்லை. இன்னுங் கொஞ்ச நேரம்
தூங்கலாம். ஒரு நிமிஷம் கூட ஆகியிருக்காது. விலுக்கென உலுக்கியது அந்த ஞாபகம், நமக்கு
ஒரு வேலை இருக்கே?
எழுந்து உட்கார்ந்தாள். என்ன வேலை என்பது கூட சட்டென மூளையில் தட்டவில்லை.
ஆனால் மழை அவளை எழுந்துகொள்ளச் சொன்னது. என்ன வேணும் அதற்கு? ஏன் என்னை அது எழுப்புகிறது?
கணவனை உசுப்பிவிடாத கவனத்துடன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். விருந்தினர் அறையைக்
கடந்தாள். ஒரு நிமிடம் நின்று எல்லாரும் சோபாக்களில், உறங்குகிறார்களா என்று கவனித்தாள்.
பிறகு வராந்தாவில் சமையல் அறை வரை வந்தாள். காற்றின் ஒதுக்கத்தில் இந்தப் பகுதியில்
தான் மழை அதிக வேகமாய்ச் சுழன்றாடியது. தன் இரவுகவுனின் கை மறைத்த பகுதியால் கண்ணாடியைத்
துடைத்தபடி வெளியே பார்த்தாள்.
மொத்த வானமே ஒரேமேகம் போல இருட்டித் திரண்டிருந்தது. கன மழை. தாரை
தாரையாய் இறங்கிக் கொண்டிருந்தது. தாழ்வாரத் தரையில் அவர்கள் அவிழ்த்துப் போட்ட அழுக்கு
உடைகள். பிளாஸ்டிக் பையில் காலணிகளும் சுத்தம் செய்யப்படக் காத்திருந்தன. ஆ துவைத்தல்.
சட்டென உறக்கம் தூரப் போனது. இது... இதைத்தான் செய்ய நினைத்திருந்தேன்!
தாழ்வாரக் கதவைத் திறந்த ஜோரில், ஓரடி கூட வைத்திருக்க மாட்டாள், உச்சி
முதல் பாதம் வரை நனைந்து போனாள். அட அருவியால்ல கொட்டுது. இந்த மழைத் தண்ணியை வீணா
விட்டுர்றதா. கிடுகிடுவென்று சமையல் அறைக்கு வந்து, முடிந்த வரை சத்தம் தவிர்த்தாள்,
அண்டான் குண்டான் சட்டி சாமான் எல்லாத்தையும் கொண்டு வந்து தண்ணீர் பிடித்தாள்.
சொர்க்கத்தில் இருந்து வர்ஷிக்கும் மழை. வானமே பொத்துக்கிட்டு ஊத்துகிறாப்
போல. காற்று வேறு மழையைத் தலைகலைத்துக் கோதினாப் போல. மகா மழை. நகரத்தின் அத்தனை கூரைகளையும்
இரைச்சலாய்ப் பெரிய வாரியலால் பெருக்கித் தூர்க்கும் மழை. நிறைந்த பாத்திரங்களை வெளி
கைப்பிடிப் பக்கமாக வைத்துக் கொண்டாள். துணி அலசவும் காலணிகளைக் கழுவவும் பயன்படும்.
மழை விடாமல் அடிக்கட்டும், என முணுமுணுத்துக் கொண்டாள். சமையல் அறைக்குத் திரும்பவும்
போய் சோப்பு. சவுக்காரக் கட்டிகள். சுரண்டிக் கொடுக்கும் பிரஷ்ஷுகள். சிறிய அளவில்
பயன்பட்டால் கூட இருக்கட்டும். சுத்தப்படுத்த என்னென்ன பிரயோசனப் படுமோ தேடினாள். அந்த
ஒட்டுமொத்த அழுக்குக் கசம், ஆன்மாவின் கும்மிருட்டு அது, எல்லாவற்றையும் துடைத்தெறிவது
சவால் தான். ஆத்மா என்ன, தேகத்தின்... என்று மாற்றிச் சொல்லிக் கொண்டாள். எதுன்னா என்ன?
எல்லாம் ஒண்ணுதான்.
அது கண்டடைந்த தரிசனம் என்ற அளவில்,
ஒரு சமாதானம் போலவும், சொன்னதற்கும் யோசித்ததற்கும் பரிவர்த்தனைச் சிக்கல் எதுவும்
வேணாம், என்று நினைத்தாப் போல அவள்... இரவுகவுனைக் கழற்றினாள். மேலே தெறித்துச் சிதறும்
மழை. சில சமயம் அணைப்பு. சில அறைகளும். கவ்வலும் கடிகளும். துணிகளைத் துவைத்தவண்ணம்
தன்னையும் அப்படியே கழுவிக் கொண்டாள். அவளைச் சுற்றியும் ஆவேசமாய்ப் பெய்யும் மழையின்
சப்த தாண்டவம்.
இப்போது அவள் தனியே இல்லை என்பதையே அவள் கவனிக்கவில்லை. பால்கனிக்
கதவருகே அந்தக் கருப்புக் கண்ணாடிப் பெண். கூட முதல் குருடனின் பெண்டாட்டி. அவர்களை
எந்த சக்தி, உள்ளுணர்வு, அறிவு விழிப்பு, உள் குரல் எழுப்பியதோ தெரியாது. எப்படி அவர்கள்
இங்கே வரை தானே வந்தார்களோ அதுவும் ஆச்சர்யமே. இந்நேரம் அந்த விளக்க விளக்கெண்ணெய்
வேணாம். யூகம் நீங்கதான் பண்ணிக்கோங்களேன்?
டாக்டரின் மனைவி அவர்களைப் பார்த்தாள். வாங்க, நீங்களும் உதவி செய்யலாம்.
நாங்க எப்பிடி... எங்களுக்குப் பார்க்க முடியாதே... என்றாள் முதல் குருடனின் மனைவி.
அதப்பத்தி என்ன, கருப்புக் கண்ணாடிப் பெண் சொன்னாள். என்ன முடியுமோ செஞ்சி குடுப்போம்.
கடைசியா நான் ஒருதரம் துவைச்சி அலசிப் போட்டுர்றேன், என்றாள் டாக்டரின் மனைவி. சீக்கிரம்
வேலையப் பார்க்கலாம். வாங்க. இங்க நாம ஒருபெண், ரெண்டுகண்ணும் ஆறுகரமுமா இருக்கம்!
ஒருவேளை எதிர்க் கட்டடங்களில் திறக்கப்படாத சன்னல்களுக்கு அப்பால்
சில குருடர்கள், ஆண்கள், பெண்கள், இந்த மழையிசையைக் கேட்டுவிட்டு நெற்றி பதித்து சன்னல்கண்ணாடிகளை
மூச்சால் வருடியபடி, வானத்தின் கொடையான மழையை கடைசியாக எப்ப கண்டு கேட்டு அனுபவித்தோம்...
என நினைவு கூர்கிறார்களாய் இருக்கும். என்றாலும் அவர்களுக்கு இங்கே மூணு பெண்கள் பிறந்த
மேனியாய், என்ன பைத்தாரத் தனம், இது கிறுக்குத்தனம் அல்லாமல் வேறு என்ன, இந்த வேளைகெட்ட
வேளையில் கொட்டும் மழையில் நாலு பேர் வெளியே யிருந்து பார்க்கிற அளவில் வெளிமுற்றத்தில்,
துணியில்லாமல் துணிவோடு துணி துவைக்கிறார்களாமா? அவ்வளவு ஏன், யார் பார்ப்பாங்க, என்கிற
அலட்சியம் கூட இல்லை, என்ன மழை, என்னமா கொட்டி முழக்குது, கடவுளே, இதுல போயி இப்பிடிக்
காரியம் பண்றதா?
மழை நீர் அவர்களின் மார்பு நடுப் பள்ளத்தில் எப்படி விழுந்து புரண்டு
ஓடுகிறது. தொடையிடுக்குப் பூனை மயிர்களை அளைந்து தழைந்து நுழைந்து குகைக்குள் காணாமல்
போகிறது. தொடைகளை நனைத்து பளபளவென்று கீழ் இறங்கும் மழை. அவர்கள் அதைக் கொக்கரித்துக்
கொண்டாடுகிறார்கள். நம்ம தான் அதை தப்பு லொட்டு லொசுக்கு என்கிறோமா? நகரத்தின் ஆக அழகான
மகத்தான காட்சி தானா இது? ஊரில் தண்ணீர் இல்லை ஐயா. பொட்டுத் தண்ணீர் கிடையாது. எவ்வளவு
கொட்டுகிறது இதோ. அதை இவர்கள் எப்படி அனுபவிக்கிறார்கள்! மழை. அதை ரசிக்காதது பிழை.
முற்றத்தின் தரையில் இருந்து சோப்பு நுரை வேறு கிளம்பி வழிகிறது. அத்தோடு
புரள ஆசையைத் தூண்டுகிறது அது. நுரைத்த உற்சாகக் குமிழிகள். வழுக்கியபடி அது முடிவே
யில்லாமல் நகர்கிறது. சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட கலப்படம் அற்ற தண்ணீர். அதுவும்
இந்த ஊரில்! இந்த சமயத்தில்! ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்.
ஹா. நம்மைக் கடவுள் மாத்திரம் கவனித்துக் கொண்டிருக்கிறார். முதல்
குருடனின் பெண்டாட்டி சொன்னாள். எத்தனை ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கையாய் இது அமைந்திருக்கிறது.
இன்னமும் கடவுளுக்குக் கண் இருக்கிறதான அவளது நம்பிக்கை! வேடிக்கை. இருந்த உன்மத்தத்துக்கு
டாக்டரின் மனைவி கவித்துவமாகவே பதில் சொன்னாள். கடவுள் கூடப் பார்க்க இயலாது. வானம்
அப்படி மூடிக் கிடக்கிறது. ஹா ஹா நான் தான் உங்களைப் பார்க்கிறேன்! நாம திறந்து கிடக்கிறோம்.
நான் பார்க்கக் கண்றாவியா இருக்கேனா? கருப்புக் கண்ணாடிப் பெண் கேள்வி
போட்டாள். நீ கொஞ்சம் ஒல்லியா அழுக்கா இருக்கே, அவ்ளதான். ஆனால¢ உனக்கு
என்ன குறை? உன்னை அழகில்லைன்னு சொல்லவே முடியாது. நான்? முதல் குருடனின் பெண்டாட்டிக்குத்
தன்னைப் பற்றிய அழகுக்கவலை வந்திருந்தது இப்போது! நீங்களும் அழுக்காவும், மெலிந்தும்
தான் காணறீங்க, அத்தனை அம்சம்னு இல்லைன்னாலும், என்னை விட நீங்க அழகு, என்றாள் டாக்டரின்
மனைவி.
நீங்க அழகு, என்று டாக்டரின் மனைவியைப் பற்றி கருப்புக் கண்ணாடிப்
பெண். ஹா ஹா உனக்கு எப்படித் தெரியும்? நீ என்னைப் பார்த்ததே கிடையாது... என நகைக்கிறாள்
டாக்டரின் மனைவி. உங்களை நான் ரெண்டு தரம் கனவில் பார்த்திருக்கிறேன். கனவிலா? என்னையா?
எப்ப? ரெண்டாவது வாட்டி, நேற்று இரவு. வீட்டைப் பற்றிய கனவு வந்திருக்கிறது. நீ ஓரளவு
பாதுகாப்பா இருக்கிறதா அமைதி ஆயிட்டு வரதா அதுக்கு அர்த்தம். நாம பட்ட இத்தனை பாடுகளுக்கு
அப்புறமா இப்படி ஒரு அலை ஓய்ந்த நிலை சகஜமான விஷயம் தான். உன் கனவில் நாந்தான் இல்லம்.
என்னைப் பற்றி யோசனைக்கு உனக்கு என்னைப் பற்றிய அழகான முகம் கற்பனையில உருவாகி யிருக்கிறது...
என் முகம் உன் கற்பிதம். அதை அழகாப் படைச்சிக் கிட்டது நல்ல விஷயம்!
நீங்க அழகுன்னு தான் எனக்கும் இருக்கு. ஆனால் நான் கனவு கினவு எல்லாம்
காணல்ல. ஆகா. அதன் தாத்பர்யம் என்னன்றீங்க? அழகற்ற மனுசாளைப் பத்தி அழகா தோணுவதற்கு,
கண் பார்வை இல்லாம இருக்கணும் போலருக்கே! ஏன், நீங்க ஒண்ணும் குரூபி இல்லை. அதில்லை.
வயசுன்னு ஒண்ணு இருக்கில்லே? உங்க வயசு என்ன? கருப்புக் கண்ணாடிப் பெண் கேட்டாள். ஐம்பதை
நோக்கி... எங்க அம்மா வயசு. அவ... என்ன அவ?... அவங்க இந்த வயசிலும் அழகுதான்றியா? ஒரு
காலத்தில் அவள் அப்சரசா இருந்தாள். நீங்க எப்பத்தையும் விட இப்ப மகா அழகி, என்றாள்
முதல் குருடனின் பெண்டாட்டி.
அதாக்கும் வார்த்தைகளின் சமாச்சாரம். உங்களை அவை சுலபமா வழுக்கிவிட்டுரும்.
மேல மேல வார்த்தை கோபுரமாகி ஆளையே அமுக்கிரும். அதுபாட்டுக்கு பட்டமாய் காற்றில் திசை
தெரியாமல் திரியும். பாராட்டுன்றதே பட்டம் தர்றது தானே. ஒரு வார்த்தை அல்லது ஒரு பெயர்.
மூணு நாலுன்னு எடுப்பு எடுத்தால், இன்னொண்ணை இழுத்துக் கிட்டு நடனமாடும். தனித் தனியே
எளிய வார்த்தைகள் கூட்டுச் சேர்ந்து கும்மாளம் போட ஆரம்பிச்சிரும். செல்லப் பெயர்.
துணைக்கு வினைச்சொல் வினையெச்சம் பெயரெச்சம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், பண்புத்
தொகை, உருபும் பயனும் உடன்தொக்க தொகை, ஆகுபெயர், அன்மொழித் தொகை, உவமை, உருவகம், நிரல்நிறை.
மிகைநவிற்சி. இல்பொருள், தற்குறிப்பேற்றம், பொருள்கோள், வியங்கோள், இரட்டைக்கிளவி,
அடுக்குத் தொடர்... என எக்கச் சக்கமா கிளைத்துப்
பெருகும் வார்த்தைகள். ஒருபொருட் பன்மொழி., தேகத்தில் இருந்து கண்களில் இருந்து பீறிட்டு
குபீரிட்டு பெருக்கெடுத்து மேலே மேலே பரவசமாய் உயர்ந்தெழும். உடம்பே சிலிர்க்கும் அதன்
சொரிவில். தாள முடியாத அளவில், அவை வேறொரு பரிமாணமும் எடுக்கக் கூடும். உடைத்து விரித்து
எழும் சொற்கள் அல்லாமல், கவசம் போல உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவும் அவை, சொற்கள்...
பயன்படும்!
டாக்டரின் பெண்டாட்டிக்கு நரம்புகள் எஃகு போல். என்றாலும் சில இதமான,
புகழ் வார்த்தைகளில், அது செல்ல விளியோ, வினையெச்ச பெயரெச்ச பண்பு சார் விளித்தலோ...
இலக்கண முடிச்சுகள் அவை... சரக்குக்கு மேலே உறையில் அச்சடிக்கும் லேபிள்கள். இதோ இந்த
இரு நாரிமணிகள். இன்னும் பிறர். எத்தனை பெயர்கள். அவர்களும் அழுகிறார்கள். அந்த இருவரும்
இந்த மாதரசியை வாரித் தழுவிக் கொள்கிறார்கள். வார்த்தைக்காரி அல்ல, வாக்கியக்காரி அவள்.
மூன்று மெல்லியலார், வார்ஷிக்கிறது
மழை. இப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட கணங்கள் அப்படியே ரொம்ப நேரம் நீடிக்காது தான். ஒரு
மணி நேரத்துக்கும் மேலாக இந்த முப்பெருந் தேவியர் இங்கே தான் இருக்கிறார்கள். உடம்பே
ஜில்லிட்டு விட்டது, கருப்புக் கண்ணாடிப் பெண் சொன்னாள். துணிகளை முடிந்த அளவுக்கு
வெளுக்கச் செய்து விட்டார்கள். காலணிகள் பளீரென்று ஆகி யிருந்தன. இப்ப அவர்கள் குளிக்க
ஆரம்பிக்க வேண்டும். தலையை விரித்து அலசிக் கொண்டபடி ஒருத்தர் முதுகை ஒருத்தர் தேய்த்து
விட்டார்கள். தோட்டத்தில் கண்ணாமூச்சி ரே ரே, என ஆடுகிற சின்னப் பெண்களின் உற்சாகமும்
கீச்சென்ற சிரிப்பும்!
விடிந்தது. உலகத்தின் தோள்ப் பக்கம் இருந்து சூரியனின் முதல் ரச்மி.
மேகத்துக்குள் ஒளிந்து கொள்ளுமுன் ஒரு எட்டு எட்டிப் பார்க்கிறாப் போல. மழையின் ஆக்ரோஷம்
முன்னைப் போல இல்லை. வெறிக்க ஆரம்பித்திருந்தது. வண்ணாத்திப் (பூச்சிப்) பெண்கள் சமையல்
அறைக்குப் போகிறார்கள். துவாலைகளால் உடம்பை துடைத்து உலர்த்திக் கொள்கிறார்கள். குளியல்
அறையில் இருந்து டாக்டரின் மனைவி துண்டுகள் எடுத்து வந்து தந்திருந்தாள். அவர்கள் சருமமே
சோப் மணத்துக் கிடந்தது. அதான் சாமி வாழ்க்கை. வேட்டை என்றால், நாய் இல்லியா, பூனை,
இருக்கறதைப் பயன்படுத்து. தேய்த்த தேய்ப்பில் கண் சிமிட்டும் நேரத்திற்குள் முழு சோப்வுக்கட்டி,
கரைந்தே விட்டது!
இந்த வீடு. இதில் என்ன தான் இல்லை? அல்லது இருப்பதை வைத்து திருப்தியும்
ஆனந்தமும் அடைந்தார்களோ அவர்கள்? உடைகளுக்குள் புகுந்து கொண்டார்கள் அவர்கள். சொர்க்கபுரியாகத்
தெரிந்தது எல்லாம். இரவு உடையில் டாக்டரின் மனைவி சொட்டச் சொட்ட நனைந்திருந்தாள். பூப்போட்ட
வேறொரு உடைக்கு அவள் மாறினாள். பல வருடங்களாக அதை அவள் அணியாமல் வைத்திருந்த உடை அது.
அந்த உடையில் அவள்தான் அந்த மூணு தேவதைகளில் மகா அழகு எனப் பொலிந்தாள்.
***
storysankar@gmail.com
91 97899 87842